தமிழகத்தில் அதிகரித்த டெங்கு பாதிப்பு… சுகாதார குழுவினரை ஆய்விற்கு அனுப்பிய மத்திய அரசு!!

டெங்கு பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மத்திய குழுவை அனுப்பி வைத்தது; டெங்குவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரதுறையுடன் இணைந்து மத்திய குழு செயல்படும் என விளக்கம்.

டெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்து கொண்டே வரும் சூழலில் “டெங்கு” பாதிப்பு என்பது மீண்டும் சுகாதாரத்துறையை கவலை அடைய செய்து இருக்கிறது. சமீபத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவிய மத்திய சுகாதாரத்துறை குழுக்களுடன் ஆலோசனை ஒன்றை மேற்கொண்டார். ஆலோசனையின் போது டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறையின் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு , கேரளா, பஞ்சாப் ,ஹரியானா, ராஜஸ்தான் ,உத்திர பிரதேசம் ,உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறையின் 9 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து டெங்கு பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள், மருந்து இருப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்வார்கள்.மேலும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் ஆலோசித்து டெங்குவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற் கொள்வார்கள்.

மத்திய சுகாதாரத்துறை தகவலின் படி 1,16,991 பேர் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 86 சதவீதம் பேர் குறிப்பிட்ட 9 மாநிலங்களில் இருந்து மட்டும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நாடுமுழுவதும் இப்போதைய சூழலில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு இருந்தாலும் கூட தமிழகம், கேரளம்,டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் தான் அதிகப்படியான பாதிப்புகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே குறிப்பிட்ட 9 மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுகாதார குழுவை அனுப்பி வைத்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version