கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்க இந்தியா ஆதரவு

மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்து, கஞ்சாவை நீக்க இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 53 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட, இந்த ஆணையத்தின் 63வது ஆண்டுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது. கஞ்சாவை குறைவான ஆபத்து கொண்ட பட்டியலுக்கு மாற்றுவதற்கு உலக சுகாதார மையம் வழங்கிய பரிந்துரைகளையும் போதை மருந்துகளுக்கான ஆணையம் பரிசீலித்துள்ளது. கஞ்சாவை பட்டியல் மாற்றம் செய்வது குறித்த வாக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

எனினும், கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஆதரவாக, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 27 நாடுகள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து 25 நாடுகள் வாக்களித்துள்ளன. ஏற்கெனவே பெரும்பான்மையை எட்டிவிட்ட நிலையில், ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவுக்கு ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. உக்ரைன் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. கஞ்சாவை மருத்துவத் துறையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version