மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த கேரள இளைஞர் ஒருவர் உயிர்இழந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்து அனைவரின் மனதிலும் நிலைத்துள்ளார்

கேரளாவை சேர்ந்த அனுஜித் என்ற இளைஞர் 2010-ஆம் ஆண்டு, ஐடிஐ மாணவனாக இருந்தபோது ரயில் தண்டவாளம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, ரயில் தண்டவாளம் பழுதடைந்துள்ளதைப் கண்ட அவர், தனது கையிலிருந்த சிகப்பு பையை தூக்கிப் பிடித்தபடி அரைமணி நேரம் வெகு தூரம் ஓடியிருக்கிறார். இதனைக் கண்ட ரயில் ஓட்டுனர் ஆபத்தைப் புரிந்து கொண்டு ரயிலை நிறுத்தினார். இதன் காரணமாக எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற முடிந்தது. அனுஜித்தின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், ஓட்டுனராக பணிபுரிந்து வந்த அனுஜித். ஊரடங்கு காரணமாக கொட்டாரக்கரையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ்மேனாக பணி செய்து வந்திருக்கிறார். இந்த மாதம் 14-ஆம் தேதி அவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஜித் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்தபோது, அவரது உறுப்புக்களை தானம் அளிக்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதனையடுத்து, முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் விரைவாக ஆலோசனை நடத்தப்பட்டு, அனுஜித்தின் இதயம், சிறுநீரகங்கள், கண்கள், கை எலும்புகள், சிறுகுடல் உள்ளிட்ட உறுப்புகள் 8 பேருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. உயிருடன் இருந்தபோது, ரயில் பயணிகளின் உயிர் காத்த அனுஜித் இறந்த பின்னும் 8 பேரில் வாழ்க்கையில் ஒளி ஏற்றி அனைவரின் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ளார்.