ஜே.இ.இ. மெயின் தேர்வு : 3 நாளில் மட்டும் 1.14 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’…

கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே நடைபெற்று வரும் ஜே.இ.இ. தேர்வில், முதல் மூன்று நாட்களில் மட்டும், 1.14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

கொரோனா தொற்று அச்சத்துக்கு இடையே, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், ஜெ.இ.இ. மெயின் தேர்வுகள் துவங்கியது. இந்த தேர்வு வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், முதல் மூன்று நாட்கள் நடந்த தேர்வில், 1,14,563 பேர், அதாவது 25 சதவீகிதம் பேர், கொரோனா அச்சத்தின் காரணமாக, தேர்வை எழுதவில்லை என தெரியவந்துள்ளது.

இந்தத் தேர்வானது, ஒருநாளைக்கு 2 முறை என மொத்தம் 12 கட்டங்களாக, 660 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வை எழுத மொத்தமாக 9,53,473 பேர் பதிவு செய்திருந்த நிலையில், முதல் மூன்று நாட்களில் மட்டும், 4,58,521 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில் 1,14,563 பேர் தேர்வை எழுதவில்லை.

செப்டம்பர் 3-ஆம் தேதி வரை தேர்வெழுதியவர்கள் விவரத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, “ தேர்வு தொடங்கிய முதல் நாளான செப்டம்பர் 1-ஆம் தேதி 1,12,247 பேர் தேர்வு எழுதவிருந்த நிலையில், அதில் 61,366 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 50,881 பேர் தேர்வு எழுத வரவில்லை. முதல் நாளில் 54.67 சதவீதம் பேர் தேர்வு எழுதி இருக்கின்றனர். 2-ஆம் தேதி நடைபெற்ற தேர்வை எழுத 1,74,350 பேர் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 1,41,372 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; 32,978 பேர் தேர்வு எழுத வரவில்லை. இரண்டாம் நாளில் 81 சதவீதம் பேர் தேர்வு எழுதி இருக்கின்றனர் 3-ஆம் தேதி, 30,704 பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும், மொத்தமாக கடந்த 3 நாட்களில் 1,14,563 பேர் தேர்வெழுதவில்லை. மூன்றாம் நாளில் 82 சதவீதம் பேர் தேர்வு எழுதி இருக்கின்றனர் ” என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் தேர்வு மையங்கள், 570-ல் இருந்து 660-ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது. தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கும் விதமாக, ஒவ்வொரு அறையிலும், தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டப் பிறகு தான், தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு அறையிலும் சானிடைசர் மற்றும் மாஸ்க் அனைவருக்கும் வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், தேர்வர்கள் உள்ளே வருவதற்கும், வெளியே போவதற்கும் என்று தனி தனியே நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டு இருந்தது. ஹால் டிக்கெட்டுக்கு பதில், பார்கோட் சரிப்பாக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டும், மாணவர்களின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version