போட்டோஷுட் விபரீதம்.. திருமணத்திற்கு சில தினங்களே உள்ள நிலையில் உயிரிழந்த ஜோடி

திருமணத்திற்கு சில தினங்களே உள்ள நிலையில் போட்டோஷூட் எடுக்கச் சென்ற ஜோடி, பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நாட்களில் திருமணத்திற்கு முன்னதாக விதவிதமாக போட்டோஷுட் எடுப்பது என்பது வடிக்கையாகி விட்டது. வித்தியாசமான லொகேஷன்கள், புதுவித கோணத்தில் எடுக்கப்படும் இதுபோன்ற திருமணத்திற்கு முந்தைய போட்டோஷுட்கள் பல அவ்வப்போது இணையத்தை கலக்குவதும் உண்டு. ஆனால், கர்நாடகாவில் இந்த போட்டோஷுட்டால் ஒரு இளம் ஜோடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரைச் சேர்ந்த சந்துரு-சசிகலா ஜோடிக்கு, நவம்பர் 22-ம் தேதி திருமணம் நடத்த இருவீட்டார் தரப்பிலும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், திருணத்திற்கு முந்தைய போட்டோஷூட் எடுக்கத் திட்டமிட்ட இந்த ஜோடி, மைசூரு அரண்மனை, காவிரி ஆறு உள்ளிட்ட இடங்களை தேர்வு செய்து புகைப்படக் கலைஞர்களுடன் அங்கு சென்றுள்ளனர்.

அதன்படி, மைசூரு அரண்மனையில் புகைப்படங்களை எடுத்து முடித்த பிறகு, தாலக்காடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புகைப்படங்களை எடுக்க அந்த ஜோடி சென்றுள்ளது.

அங்கு ஒரு பாறை மீது ஏறி நின்று புகைப்படங்களை எடுக்க முடிவு செய்து, சந்துரு பாறை மீது ஏறி நின்றுகொள்ள, அவரைத்தொடர்ந்து சசிகலா ஏற முற்பட்டுள்ளார். ஆனால், அவர் உயரமான ஹீல்ஸ் காலணி அணிந்திருந்ததால் நிலை தடுமாறியுள்ளார். அவரை சந்துரு பிடிக்க முயன்ற போது இருவரும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர்.

ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரின் 4 மணி நேர தீவிர முயற்சிக்குப் பிறகு இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். திருமணத்திற்கு தயாரான ஜோடி இப்படி உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இந்த போட்டோஷூட் நடைபெற்றதே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

Exit mobile version