ஐதராபாத்: தலைவர்களை ஏமாற்றிய வாக்காளர்கள்.. மக்களுக்கு இவ்வளவு வெறுப்பா?

பரபரப்பான சூழலில் நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல், எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகியுள்ளன.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.

பாஜக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த தேர்தலின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தற்போதைய சூழலில், ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் மிகப்பெரிய கவுரவத் தேர்தலாக உருவெடுத்துள்ளது. பாஜக எத்தனை இடங்களில் வென்றுவிடும் என்று பார்க்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி சவால் விடுத்ததை தொடர்ந்து , நடந்த பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்துவது அதிகரித்தது.

பரபரப்பான சூழலில் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதில், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி, திரை நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.

ஆனால், மாலை 5 மணி வரையில், மொத்தமுள்ள 150 வார்டுகளில் 74 லட்சம் வாக்களர்களை கொண்ட ஐதராபாத் மாநகராட்சியில், 35.8% வாக்குகள் மட்டுமே பதிவாகின. தேர்தல் நேர முடிவில் மொத்தமாகவே வெறும் 40%-க்கும் குறைவாகவே வாக்குப்பதிவு நிகழ்ந்து இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ள நிலையில், இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Exit mobile version