தலைநகர் டெல்லியில் வாரச் சந்தைகள் இனி வழக்கம்போல செயல்படும் என்றும் திரையரங்குகள் அக்டோபர் 15 முதல் திறக்கப்படும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அங்கு, தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அவர்களில் சுமார் 95% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது டெல்லி மாநில அரசு.
அந்தவகையில் மாநிலத்தில் வாரச்சந்தை களை இனி வழக்கம்போல் திறக்கலாம் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுவரை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒவ்வொரு மண்டலத்திலும் இரண்டு சந்தைகளை மட்டுமே அரசு அனுமதித்தது. இந்த சந்தைகள் மூலம் பெரும்பாலும் ஏழை மக்கள் பயன் அடைவார்கள் என்பதால் கட்டுப்பாடுகளை தற்போது நீங்கியுள்ளது.
அதேபோல் அக்டோபர் 15 முதல் அரசு வழிகாட்டுதல்படி திரையரங்குகள் டெல்லியில் செயல்பட உள்ளன. ஒரு இருக்கை விட்டு ஒருவர் என அரங்கில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். டெல்லி பள்ளிகள் அக்டோபர் 31 வரை கிடையாது என முன்னதாகத் துணை முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.