அனைத்துக் கட்சி கூட்டத்தில் இவர்களுக்கு தடை: மத்திய அரசின் செயல் நியாயமா?

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், 10 க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் பேச அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்திக்கான பணிகள் திவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா மற்றும் தடுப்பூசிகள் விநியோகம் என்ற தலைப்பில் டிசம்பர் 4 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், தடுப்பூசி விநியோகம் தொடர்பாக எதிர்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, ​​நாடாளுமன்றத்தில் 10 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் மட்டுமே பேச அனுமதிக்கப்படும். சிறிய கட்சிகள் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அனைத்து கட்சிக் கூட்டத்தில் 10 எம்.பி. களுக்குள் இருக்கும் கட்சிகள் தங்கள் கருத்தை பதிவு செய்ய முடியாது.  பல மாநில கட்சிகள் தங்கள் கருத்தை பதிவு செய்யும் வாய்ப்பை இழந்து உள்ளன.

குறிப்பாக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிரோமணி அகாலிதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளான  சிபிஐ (எம்) மற்றும் சிபிஐ ஆகியவை இதில் அடங்கும். இதன் மூலம் எதிர்கட்சிகளின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதாக, மத்திய அரசின் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

Exit mobile version