மதம் காரணமாக யாரும் பின்னுக்கு தள்ளப்படமாட்டார்கள் என அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் மோடி உரையாற்றினார்.
டெல்லி :
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் நினைவாக ஒரு தபால் தலையையும் அவர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியது :
“நாட்டின் மீது அக்கறையுள்ள ஒருவரின் முதல் மற்றும் முக்கிய கடமை, சாதி, இனம், மதம் என எந்த பாகுபாடின்றி, அனைத்து மக்களின் நலனுக்கு பணியாற்றுவதே என சர் சையத் கூறியதை நினைவுகூர்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகள் உறுதி செய்யப்படும் பாதையில் நாடு முன்னேறி வருகிறது; ஒருவரின் மதம் காரணமாக யாரும் பின்னுக்கு தள்ளப்படமாட்டார்கள்.
Read more – ஜனவரி, பிப்ரவரியில் சிபிஎஸ்சி தேர்வு நடத்தப்படாது : மத்திய அமைச்சர் பொக்ரியால் தகவல்
40 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகள், எந்தவித பாகுபாடும் இன்றி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு, எந்தவித பாகுபாடின்றி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 8 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், எந்தவித பாகுபாடின்றி, கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர். சுமார் 50 கோடி மக்கள், எந்தவித பாகுபாடின்றி, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். நாட்டின் வளங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானவை. இதன் பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்த புரிதலுடன்தான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
புதிய இந்தியாவின் தொலைநோக்கு தேசத்தின், சமூகத்தின் வளர்ச்சியை ஓர் அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது என்று கருதுகிறது. தவறாக வழிநடத்தும் பிரசாரத்துக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும், ஒருவரின் மனதில் நாட்டு நலன்தான் முக்கியமாக இருக்க வேண்டும். அரசியல் காத்திருக்க முடியும்; ஆனால், ஏழைகள் காத்திருக்க முடியாது. நாம் நேரத்தை வீணடிக்க முடியாது. தற்சார்பு இந்தியாவுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தேசிய இலக்குகளை அடைவதற்கு, அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.