போதைப்பொருளால் தள்ளாடும் பாலிவுட்.. விசாரணை வளையத்தில் தீபிகா உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்கள்

போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நடிகை தீபிகா படுககோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபர்த்திக்கு
போதைப்பொருள் கும்பலுடன்
தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான ரியா உள்ளிட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகைகள் ரகுல்பிரீத் சிங், நடிகை சாரா அலிகான், பேஷன் டிசைனர் சிமான் கம்பாட்டா ஆகியோருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என தகவல் வெளியானது.

இதற்கிடையே நேற்று முன்தினம் சுஷாந்த் சிங்கின் மேலாளர் ஜெயா ஷாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தும் மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் திறன் மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துருவ் சிட்கோபேகருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியானது.

இதனிடையே, தனது மேலாளரிடம் போதைப் பொருள் கேட்டு தீபிகா படுகோனே மேற்கொண்ட வாட்ஸ்ஆப் சாட்டிங் வெளியானது.

அதில், தனது மேலாளர் கரிஷ்மாவிடம் போதைப் பொருள் இருக்கிறதா என தீபிகா கேட்பதும், அதற்கு தனது வீட்டில் அவை இருப்பதாகவும், ஆனால் தற்போது தாம் பாந்த்ராவில் இருப்பதாக கரிஷ்மா பதிலளிக்கும் விவரங்கள் உள்ளன.

மேலும் உடனடியாக வேண்டுமெனில் அமித் என்பவரிடம் கேட்பதாக கரிஷ்மா கூறுவதும், அதற்கு தீபிகா தயவு செய்து கேள் என பதில் கூறும் விவரங்களும் இருக்கின்றன.

அதனடிப்படையில், தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு, 3 நாட்களில் விசாரணைக்கு ஆஜராகுமாறு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Exit mobile version