மகாராஷ்டிராவில் அரசு பேருந்து 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) பேருந்து ஏழு வாகனங்களை மோதியதில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர் . இந்த சம்பவம் நாசிக் பகுதியில் பெரும் பரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

புனே மாவட்டத்தில் உள்ள ராஜ்குருநகரில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து நாசிக் நோக்கி சென்றுகொண்டிருந்தது. காலை 11.45 மணியளவில் பால்ஸ் கிராமத்திற்கு அருகே வந்தபோது, திடீரென பேருந்தின் பிரேக் பழுதாகி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சின்னாரில் இருந்து வந்த மற்றொரு அரசு பேருந்து மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு சிறிய ரக கார் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர். அதோடு மோதிய வேகத்தில் அவர்களின் பைக்குகள் தீப்பிடித்ததால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பைக்குள் இருந்து ராஜ்குருநகரில் இருந்து வந்த பேருந்துக்கு தீ பரவியது. தீப்பற்றி எரிந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த அப்பகுதி மக்கள் 43 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். நாசிக் சாலை தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும், ஷிங்காடா தலாவ் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு மீட்பு வேனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

தீப்பிடித்த பேருந்தில் இருந்த சில பயணிகள் லேசான காயங்களுடன் நாசிக் மாநகராட்சியின் பைட்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த இருவரின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், விபத்து குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மாநில கட்டுப்பாட்டில் உள்ள எம்எஸ்ஆர்டிசி நியமித்தது. குழு ஓரிரு நாட்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் குறித்து நடத்துனர்கள், ஓட்டுநர்கள், பேருந்து பயணிகள், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் பிறரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேக் செயலிழந்ததால் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி செயல்படவில்லை.

எனவே விபத்து நடந்த போது அதன் சரியான வேகத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரம், பஸ் பைக்குகள் மீது மோதியதில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருக்கலாம். உராய்வில் இருந்து தீப்பொறி பற்றியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version