பழைய அரசு பேருந்துகள்…இப்ப நவீன பெண்கள் கழிப்பறை!!… எங்க-னு தெரியுமா??

அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பழைய பேருந்துகளை, பெண்களுக்கான கழிப்பறைகளாக மாற்றும் திட்டத்தை, கர்நாடக மாநில அரசு கையிலெடுத்துள்ளது. அரசின் இம்முயற்சிக்கு, வரவேற்புகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

கர்நாடக போக்குவரத்துத்துறை, பழைய மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பேருந்துகளை, பயனுள்ள வகையில் பெண்களுக்கான கழிப்பறைகளாக மாற்றும் திட்டம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக, மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தின் முதல் பகுதியில், கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ள பேருந்துகள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் லஷ்மண் நேற்று தொடக்கி வைத்தார்.

அதில் பெண்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை பேருந்து, மூன்று இந்திய மற்றும் இரண்டு மேற்கத்திய கழிவறைகளை உள்ளடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் தூய்மைபடுத்தும் இயந்திரம் மற்றும் எரியூட்டியும் உள்ளது. இது முற்றிலும் சூரிய சக்தியின் உதவியுடன் இயங்கக் கூடிய ஒன்றாகும். மேலும் இதில் சோலார் சென்சார் விளக்குகள், வாஷ் பேசின், குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் இடம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவும், ஒரு தனி இடத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், ஒரு பேருந்துக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக அரசு எடுத்துள்ள இந்த புதிய முயற்சி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Exit mobile version