மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட ஓடிடி தளங்கள்.. தணிக்கை வருமா?

இணையதளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அனைத்தையும் மத்திய அரசின் தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஓடிடி எனப்படும் ஆன்லைன் தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு சமயத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்கள் அபரிவிதமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. திரையரங்குகளில் மட்டும் திரைப்படம் மட்டுமே வெளியாகி வந்து கொண்டிருந்தன. தற்போது, சிறிய பட்ஜெட் முதல் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை ஓடிடி தளத்தில் வெளியாக தொடங்கியுள்ளன.

அதேசமயம், திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. ஆனால், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு தணிக்கை அவசியம் இல்லாததால், நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களில் அதிகப்படியான வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம்பெறுகின்றன. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஓடிடி தளங்களுக்கு தணிக்கை அவசியம் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில், ஓடிடி இயங்கு தளங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள் ஆகியவை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது, ஓடிடி தளங்களுக்கான கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரத்தை அமைச்சகம் பெறுவதாகவும், இந்த புதிய நடவடிக்கை குறித்து ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசின் உத்தரவு காரணமாக ஆன்லைன் செய்திகளுக்கும் விதிமுறைகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version