மகாராஷ்டிர மாநிலத்தின் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

மகாராஷ்டிர மாநிலத்தில் மஹத் என்ற பகுதியில், 5 மாடிக் குடியிருப்புக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில், தலைநகர் மும்பையிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராய்காட் மாவட்டம், மஹத் என்ற பகுதியில், தாரிக் கார்டன் என்ற 5 மாடிக் குடியிருப்பு கட்டிடம், நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல் 3 மாடிகள் இடிந்து விழ தொடங்கிய சில நிமிடங்களிலேயே, கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும், அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும், நவீன இயந்திரங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 47 வீடுகள் உள்ளதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில், இதுவரை சுமார் 25 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாகவும், மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரோடு புதைந்து இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், “என் எண்ணங்கள் தங்கள் அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் என்.டி.ஆர்.எப் குழுக்கள் செய்து தரும்” என்று அவர் பதிவிட்டுள்ளார். 


மேலும் இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், “மகாராஷ்டிர விபத்தை அறிந்து நான் வேதனை அடைகிறேன். இறந்தவரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு விரைவில் உதவி வழங்குமாறு, மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினரும் கைகோர்த்துள்ளார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version