சாத்தான்குளம் தந்தை மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காணொலிக் காட்சி மூலமாக ஆஜர் படுத்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் காவலர்கள் முத்துராஜ் முருகன் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை. மேலும் காணொலி காட்சி வாயிலாகவும் ஆஜர் படுத்தப்படவில்லை. இதனையடுத்து அனைவருக்குமான காவல் ஆனது சென்னை உயர்நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டது.
காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தாததை கவனத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் தங்களது காவலை நீட்டித்து சரியானது அல்ல என கூறி அந்த உத்தரவுக்கு எதிராக சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா காலம் என்பதால் போதுமானவரை காணொலி காட்சி வாயிலாக விசாரணைகளை நடத்த ஏற்கனவே நாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறோம் என்றும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் இனி எதிர்வரும் காலத்தில் தேவைப்படும் பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தலாம் எனவும் அதனை சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
மேலும், மனுதாரருக்கு எதிர்காலத்தில் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கினர். இதனை அடுத்து வழக்கின் விசாரணையானது முடித்து வைக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.