கருணை அடிப்படையில் வேலைபெற தந்தையைக் கொன்ற மகன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கருணை அடிப்படையில் வேலை பெற தந்தையை கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கார் மாவட்டத்திலுள்ள பார்ககானா பகுதியில் மத்திய நிலக்கரி புலங்கள் லிமிடெட் அமைந்துள்ளது. இங்கு தலைமை பாதுகாவலராக வேலை செய்து வந்தவர் கிருஷ்ணா ராம்(55). இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அவர் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவரின் உடலுக்கு பக்கத்தில் ஒரு மொபைல் போனும், ஒரு சிறிய கத்தியும் கைப்பற்றினர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இந்நிலையில், அவர்கள் நடத்திய விசாரணையின் முடிவில் கருணை அடிப்படையில் வேலை பெற ஆசைப்பட்டு கிருஷ்ணா ராமின் மூத்த மகன்தான் அவரை கொலை செய்ததை கண்டறிந்தனர்.

இதையடுத்து, போலீஸார் கிருஷ்ணா ராமின் மகனை கைது செய்து நடத்திய விசாரணையில் மத்திய நிலக்கரி புலங்கள் லிமிடெடில் ஒருவர் வேலையில் இருக்கும்போது இறந்து விட்டால் கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு அங்கு வேலை அளிக்கப்படும் என்ற சலுகை உள்ளதால் மத்திய அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையை தான் கழுத்தறுத்து கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். வேலைக்கு ஆசைப்பட்டு பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : குறுக்கு வழியில் டோக்லாமை நெருங்கும் சீனா; காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்

Exit mobile version