நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் கசிவு, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை 5 லட்ச ரூபாய் அபராதத்துடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள்கள் கசிவு ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று. இது தொடர்பாக மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிலர் கைது செய்யப்பட்டு ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை மேற்கோள் காட்டி இத்தகைய முறைகேடுகளால் நியாயமாக தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிட கோரி நீட் தேர்வு எழுதிய சலோனி என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது என்ன மாதிரியான மனு? லட்சக்கணக்கானவர்கள் இந்த தேர்வை எழுதி உள்ள நிலையில் வெறும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்யவண்டும் என கேட்கிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இத்தகைய மனுவை தந்ததற்காக ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிப்பது ஆகவும் இந்த ஐந்து லட்ச ரூபாயும் மனுதாரர் தரத் தேவையில்லை இத்தகைய மனுக்களை தாக்கல் செய்ய ஒருவர் அணுகும் பொழுது உரிய அறிவுரை வழங்காத வழக்கறிஞர் இதனை செலுத்த வேண்டும் கட்டாயமாக இந்த ஐந்து லட்ச ரூபாயை மனுதாரரிடம் இருந்து வசூலிக்க கூடாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பிறகு வழக்கறிஞர் சார்பில் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த பொழுது இந்த ஒரு முறை மட்டும் ரத்து செய்வதாகவும் அடுத்த முறை இதே மாதிரி வழக்கு தொடர்ந்தால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். பின்னர், வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று 5 லட்சம் அபராதம் என்ற உத்தரவை மட்டும் திரும்ப பெற்று கொண்டனர்.