கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தேர்வுகளை ரத்து செய்வதுக் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக மாணவர்களின் கடந்தகால செயல்திறன் மற்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க யு.ஜி.சி.க்கு உத்தரவிட வேண்டும் என்றும், மாணவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர். சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணை முடிந்த நிலையில், இதுக்குறித்ததான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, இன்று அளித்துள்ள தீர்ப்பில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் தேர்வுகள் நடத்தாமல், மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கக்கூடாது எனவும், தேர்வுகளை நடத்த முடியவில்லை எனில் மாநில அரசுகள் யு.ஜி.சி.யை தான் அணுக வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.