ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல்…குரல் எழுப்பும் இந்தியா!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக இன்று நடைபெறும் SCO கூட்டத்தில் இந்தியா குரல் எழுப்பும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

இந்தியா உலகின் பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தாலும் “SCO” (Shanghai Cooperation Organisation) எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியாவின் செயல்பாடு கவனிக்க கூடிய வகையில் அமையும்!. காரணம் இந்தியாவின் எல்லைகளை பகிர்ந்து கொள்ள கூடிய அனைத்து நாடுகளுமே இந்த கூட்டமைப்பில் உள்ளார்கள். அப்படி, கூட்டமைப்பில் உள்ள 8 நாடுகள் ( சீனா , இந்தியா , ரஷ்யா , தாஜிகிஸ்தான் , கஜகஸ்த்தான் , கிர்கிஸ்தான் , பாகிஸ்தான் , உஸ்பெகிஸ்தான் ) ஒவ்வொரு வருடமும் இந்த கூட்டத்தை நடத்த வேண்டும்; ஆனால் இந்தியா கடந்த 2017ம் ஆண்டு முதல் இக்கூட்டமைப்பில் இணைந்ததால் இதுவரை இந்தியா இக்கூட்டத்தை நடத்தவில்லை. இந்நிலையில், இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21வது கூட்டத்தை தஜிகிஸ்தான் 3வது முறையாக ( ஏற்கனவே, 2008 & 2014 ) ஏற்று நடத்துகிறது. இக்கூட்டத்தில் இந்தியா உட்பட 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இக்கூட்டம் அமைக்கப்பட்டதன் காரணமே அரசியல் , பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசித்து கொள்ள என்பதால் இன்று நடைபெறவுள்ள கூட்டத்திலும் அவை குறித்தான ஆலோசனைகளே பெரும்பாலும் நடைபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியா இம்முறை பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களை பற்றி இக்கூட்டத்தில் அதிகம் விவாதிக்க உள்ளதாக ஒரு சில தகவல்கள் தெரிவிக்கிறது. அதாவது, 21வது கூட்டத்தை ஏற்று நடத்தும் தஜிகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் எல்லைகளை பகிர்ந்து கொள்வதால் ஆப்கான் நிலவரங்கள் தொடர்பாகவும், உறுப்பு நாடாக பாகிஸ்தானும் உள்ள காரணத்தினால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியா குரல் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை தவிர ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை ஆதரிப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் நிச்சயம் விவாதிக்கப்படும், காரணம் இக்கூட்டத்தில் பார்வையாளராக இருக்கும் ஆப்கானிஸ்தான் தரப்பில் யாரேனும் கலந்து கொள்ளும் பட்சத்தில் அவை குறித்து பேசுவதற்கான சாத்தியகூறுகள் எழும் என சொல்லப்படுகிறது.

இந்திய குழுவுக்கு தலைமையேற்று பேசவுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத அச்சுறுத்தல் , கொரோனா பெருந்தொற்று நிலைமை , நாகரீகங்கள் தொடர்பாக கூட்டத்தில் பேசுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version