ஓலா,உபர் போன்ற வாடகை கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு சிறப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது.
வாடகை கார் நிறுவனங்களான உபர்,ஓலா போன்ற நிறுவனங்களை வழிநடத்தும் வகையில் மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. வாடகை கார் நிறுவனங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு ஏற்ப சவாரி கட்டணம் மற்றும் ஓட்டுனர்களின் சம்பள தொகையை நிர்ணயித்து வந்தது.இது மக்கள் மற்றும் ஓட்டுனர்களின் இடையே அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தியது.இந்தநிலையில் இதற்கு ஒரு முடிவு கொண்டு வரும் வகையில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வாடகை கார் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது.
- பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்கான கட்டணத்தை அடிப்படை கட்டணமாக இந்நிறுவனங்கள் வசூலித்துக்கொள்ளலாம்.
- அதிக சவாரிகள் உள்ள நேரத்தில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை 1.5 மடங்கு வரை உயர்த்திக்கொள்ளலாம் எனவும், சவாரிகள் குறைவான மற்ற நேரங்களில் அடிப்படை கட்டணத்திலிருந்து 50 சதவீதம் வரை இந்த கட்டணங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.
- சம்மந்தப்பட்ட அந்த நிறுவனங்கள் அதிகபட்சம் 20% கமிஷன் மட்டுமே பெற்றுக்கொண்டு மீதத்தொகை 80 % ஓட்டுநருக்கு வழங்கவேண்டும் .
- பெரிய நிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான வசதிகள் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களுக்காக மாநில அரசு 2% தொகையை வசூலித்துக்கொள்ளலாம்
- அந்த நிறுவனங்களில் ஓட்டுநராக வருபவரிடம், சரியான அடையாள அட்டை, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், KYC உடன் கூடிய வங்கிக் கணக்கு அல்லது ஜன் தன் கணக்கு ஆகியவற்றை ஓட்டுநர் வைத்திருக்க வேண்டும்.
- ஓட்டுநருக்குக் குறைந்தபட்சம் இரண்டு வருட ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்.அல்லது புதிதாக வருபவருக்கு அந்த நிறுவனங்கள் 15 நாட்கள் பயிற்சி கொடுக்க வேண்டும்.
- ஓட்டுநர் மீதான வரலாறு, காவல்துறை சரிபார்ப்பு ஆகியவை செய்யப்பட வேண்டும். *பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கார் ஓட்டுநர் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணிக்கவில்லை எனில் அந்நிறுவனங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தல்,மற்றும் ஓட்டுநரை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டும்.
*சக பயணிகளுடன் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும்(ஷேரிங் கார்) முறையில், பெண் ஒருவர் பயணிக்க வேண்டுமானால், அவர் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.
*ஷேரிங் காரில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால்,அந்த கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு.