இந்திய அரசின் நடவடிக்கை சீன நிறுவனங்களின், அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது- சீன தூதரகம்

இந்திய அரசின் நடவடிக்கை சீன நிறுவனங்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும், சர்வதேச முதலீட்டாளர்களை காக்கும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என டெல்லியில் சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இந்திய அரசின் நடவடிக்கை சீன நிறுவனங்களின், அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது- சீன தூதரகம்

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவில் சீனா அரசிற்கு  எதிரான மனநிலை நிலவிவருகிறது. இதைதொடர்ந்து, இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், யுசி புரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று இதுக்குறித்து டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலங்களாக இந்திய அரசின் நடவடிக்கை சீன நிறுவனங்களின் நலன் மற்றும் அடிப்படை உரிமையை பறிக்கிறது. இதோடு சர்வதேச முதலீட்டாளர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலனை காக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது.

எனவே சீன நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அயல்நாட்டு ஒத்துழைப்பை மேற்கொள்ளும்போது சீன நிறுவனங்கள் சர்வதேச விதிகள் மற்றும் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று சீன அரசாங்கம் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version