கர்நாடகாவில் மயானம் இல்லாத மாவட்ட ஆட்சியரின் கிராமம்; ஆற்றை கடந்து சென்று சடலங்களை அடக்கம் செய்யும் அவலம்

கர்நாடகவில் சாம்ராஜ் மாவட்டத்தின் உள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளாக மயானம் இல்லாமல், சடலங்களோடு ஆற்றினை கடந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் நீடித்துவருகிறது.
கர்நாடகாவில் மயானம் இல்லாத மாவட்ட ஆட்சியரின் கிராமம்; ஆற்றை கடந்து சென்று சடலங்களை அடக்கம் செய்யும் அவலம்

கோவில்கள், பள்ளிகள் இல்லாத இடத்தில் வாழக்கூடாது என்பார்கள். ஆனால் தற்போதைய சூழலில் உயிரிழந்த பிறகு தனக்காக இடம் இல்லாத அதாவது மயானம் இல்லாத இடத்தில் வாழவே கூடாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆம் ஒருவர் கிராமத்தில் இறந்துவிட்டால், அவருக்கான இறுதிச்சடங்கினை செய்ய அங்கு இடம் கிடையாது என்றால் எவ்வளவு மனவேதனை உறவினர்கள் அடைவார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப்பட்ட இக்கிராமம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் மாவட்டத்தில் உள்ள மாம்பலியில் தான்.

இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக மயானம் கிடையாது. இக்கிராமத்தில் யாராவது ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்வது என்பது தலைப்போகின்ற காரியமாக இருக்கும். இங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக கிராம மக்கள் அங்குள்ள ஆற்றினை கடந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்கு சென்றாக வேண்டும். அதிலும் மழைக்காலங்களில் ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், வேறு வழியில்லாமல் கிராம மக்கள் தற்காலிக மரப்பாலம் அமைத்து சடலங்களை எடுத்துச் செல்கின்றனர்.

கிராமத்தினர் தங்கள் ஊருக்கு என மயானம் வேண்டும் என கோரிக்கை வைக்க அரசும் கிராமத்தை ஒட்டிய பகுதியில், ஒரு சிறு பகுதி நிலத்தை மாயானத்திற்கென ஒதுக்கியது. ஆனால் சில அரசியல்வாதிகள் அது தங்களுக்குச் சொந்தமான நிலம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர, கிராம மக்கள் ஆற்றை கடந்து இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவலநிலை தொடர்ந்து வருகிறது.

மாவட்ட ஆட்சியரின் கிராமத்தில் அவலம்:

மாம்பலி கிராமத்தில் மற்றொரு வேதனையான விஷயம் என்னவென்றால், சாம்ராஜ் மாவட்டத்தின் ஆட்சியர் ரவி இக்கிராமத்தை சேர்ந்தவர் என்பது தான்.ஆட்சி நிர்வாகப்பொறுப்பில் உள்ள இவர் மக்களின் கோரிக்கையை இனிமேலாவது கருத்தில் கொண்டு, விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே பலரது குரலாக உள்ளது.

Exit mobile version