உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அண்ணாமலையார் திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைத்துள்ள ஆயிரம் தூண்கள் கொண்ட 1000 கால் மண்டபம் பக்தர்களின் பயன்பாட்டிற்காக முதல் முறையாக இன்று திறக்கப்பட்டது.
சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன், கோவில் இணை ஆனையர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலையார் திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள 1000 கால் மண்டபம் அண்ணாமலையார் கோயில் தோன்றிய காலம் முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே அதாவது ஆணி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே திறந்து விழாக்கள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், முதல் முறையாக பக்தர்களின் பயன்பாட்டிற்காக 1000 கால் மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ள 1000 கால் மண்டபத்தில் கலை நயம் மிக்க ஒவ்வொரு தூண்களிலும் பல்வேறு வடிவங்களில் ஆன கல் சிற்பங்கள், ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளது.