சட்டென்று கயல்விழியின் கண்களில் அவன் உருவம் பட்டு மறைந்தது. மீண்டும் அந்த இடத்தைப் பார்த்தாள். இப்போது இல்லை. தன் தோழிகளுடன் பேசிக்கொண்டு சென்றாலும் தற்செயலாக அவள் போகும் இடங்கள், அவள் பார்வை படும் இடங்களில் எல்லாம் அவனை அடிக்கடிப் பார்த்தாள்.
எப்போதும் தன்னை இரு கண்கள் பின்தொடர்வதை அவளால் உணர முடிந்தது.
அவன் அவளைச் சுற்றிச் சுற்றி வருவதைப் போல உணர்ந்தாள். அவள் கண் படும் இடங்களில் எல்லாம் அவன் இருப்பது போல் தோன்றியது. சில நாட்களில் அவனைக் காணாத போது அவளது கயல்விழிகள் அனிச்சையாக அவனைத் தேடின.
ஒரு நாள் கணிணிப் பயிற்சி மையத்திற்குச் சென்று தனியாக வீடு திரும்பும் வழியில் நான்கைந்து பேர் அவள் பின்னாலேயே கேலி பேசிக்கொண்டே வந்தார்கள்.
யாருமற்ற ஒரு திருப்பத்தில் அவர்கள் அவளைச் சூழ்ந்து வம்பு செய்வது போல் வரவே அவளுக்குப் பயம் தோன்றியது. அப்போது அங்கே அவன் வரவே அவள் அவனருகே ஓடி அவன் பின்னால் பாதுகாப்பாக நின்றாள்.
அவன் அவர்களிடம், “இவங்க எனக்கு வேண்டப்பட்டவங்க ப்ரோ. இவங்ககிட்டே எதுவும் வம்பு வேண்டாம்.” என்று சொல்ல அவர்கள் விலகிச் சென்றனர்.
“சரியான நேரத்தில வந்து காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி. பை தி பை நான் கயல்விழி!”
“நான் ராகவ்! அவங்கவங்க பொருளைக் காப்பாத்திக்கிறது அவங்கவங்க கடமைதான்! உங்களைக் காப்பாத்தறது என் கடமை.”
அந்தச் சமயத்தில் கயல்விழி அவனைப் பார்த்த பார்வையின் ஒரு ஓரத்தில் தென்பட்ட உணர்வைக் காதல் என்று எடுத்துக் கொள்ளலாமா?
******
“அதோ அந்தப் பொண்ணுங்க மத்தியில ஐஸ் பிங்க் ட்ரெஸ் போட்டுட்டுப் போற அந்தப் பொண்ணுதாண்டா…! பொதுவா நிறத்துக்கும் அழகுக்கும் எங்களவங்க பொண்ணுங்களைத்தான் உதாரணமா சொல்லுவாங்க. ஆனா, இவ அவங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடற மாதிரி அழகுடா. அவ கண்ணை மட்டுமே இன்னிக்கெல்லாம் பாத்துக்கிட்டிருக்கலாம்.
நான் முடிவே பண்ணிட்டேன். கட்டுனா இவளைத்தாண்டா கட்டுவேன்.”
“ஏண்டா ராகவ்! உங்களவங்கள்ல இல்லாத அழகிகளாடா? நாங்கள்லாம் அவங்களை சைட் அடிச்சா நீ இவளைப் பாத்துட்டிருக்கே. இவ வேற ஜாதியா இருந்தா என்ன பண்ணுவே? உங்க வீட்டுல சம்மதிப்பாங்களா?”
“நான் எங்க வீட்டுல எப்பிடியாவது சம்மதம் வாங்கிடுவேன். ஆனா இவளோட சம்மதம் கிடைக்கணுமே. இன்னும் இவ என்னைப் பத்தி என்ன நினைக்கிறான்னே தெரியலையேடா.”
“உனக்கென்னடா.. நீயும் ஹீரோ மாதிரிதான் இருக்கே. நல்ல வசதி. நீ புரொபோஸ் பண்ணிப் பாரு. பட்சி மசியும்னுதான் நெனைக்கிறேன்.”
“அது மட்டும் நடந்தா ஒனக்கு ட்ரீட் தான்!”
******
அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போதே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சற்று வேகமாக எட்டி நடை போட்டாள்.
சட்டென்று மழை பிடித்துக் கொள்ள, வேகமாகப் பேருந்து நிறுத்தக் கூரைக்காக ஓடியதில் ஈரம் வழுக்கி நடு ரோட்டில் விழப்போனவளை இரண்டு வலிமையான கரங்கள் தாங்கிப் பிடித்தன.
சுதாரித்து நின்று, அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரருக்கு நன்றி சொல்ல நிமிர்ந்த போது அந்த இடத்தில் நின்றவனைப் பார்த்த பார்வையில் நன்றியுடன் கூடவே இழையோடிய அந்த உணர்வுக்குப் பெயர் தான் காதலா?
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு நாள் கடலலையில் கால் நனைத்து ஒரு சிறுமியின் குதூகலத்துடன் நின்ற அவளிடம் அவன் நேரடியாகக் கேட்க, அவள் சம்மதத்துக்கு அறிகுறியாக கன்னம் சிவக்க முகத்தைக் குனிந்து புன்னகையுடன் ஓடிவிட்டாள்.
ராகவ் வீட்டில் அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்த போது அவன் எதற்கும் பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தான். தனது ஒரே மகனின் இந்த நழுவலுக்குக் காரணத்தை அவன் தாய் அவனிடம் மிகவும் வற்புறுத்திக் கேட்கையில் மெதுவாகக் கயல்விழியைப் பற்றிக் கூறினான்.
“ராகவ்! நம்ம தகுதிக்கு நம்ம ஜாதியிலேயே ‘நீ, நான்’ னு போட்டி போட்டுக்கிட்டுப் பொண்ணு குடுக்க வரிசையில நிக்கும் போது நீ ஏம்ப்பா இப்படி யாரோ ஒரு வேத்து ஜாதிப் பொண்ணு பின்னால போறே?”
“கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது கயல்விழியோடதான் நடக்கணும். இல்லன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்.”
ஒரே மகனின் பிடிவாதத்திற்கு முன் பெற்றோரின் பிடிவாதம் தோற்றது.
கயல்விழியின் வீட்டிலும் ஜாதிப் பிரச்சினை காரணமாக திருமணத்திற்கு மிகுந்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்ப்பைக் கயல்விழியின் பிடிவாதம் வென்றது.
கடைசியில் தங்களது ஒரே மகளின் விருப்பத்திற்குப் பெற்றோர் இணங்க வேண்டியதாயிற்று.
இந்த மகிழ்ச்சியான செய்தியை ராகவ்வும் கயல்விழியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளச் சந்தித்த அந்தச் சந்தோஷத் தருணத்தில் ராகவ் கூறினான்:
“கயல்விழி! எங்க முறைப்படி தான் கல்யாணம் நடக்கணும் னு அம்மா சொல்றாங்க.”
“சரி ராகவ். எந்த முறையில் நடந்தா என்ன? நாம இணையப் போறோமே. அது போதும்.”
இன்னொரு நாள், கயல்விழி தனது அலுவலகத்தில் இருந்தபோது ராகவ் அலைபேசியில் அழைத்து, அன்று மாலை அந்தப் புகழ்பெற்ற உணவகத்துக்கு வரச் சொன்னான்.
கயல்விழியும் அங்கு சென்றாள். இருவரும் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தபோது ராகவ் மெதுவாகப் பேசினான்.
“கயல் விழி! எங்க கல்யாணத்துல பொண்ணு வீட்டுல இந்த இந்த முறைகளும் சீர்களும் செய்யணும்னு அம்மா கண்டிப்பா சொல்லிட்டாங்க. இல்லைனா எங்கள் சொந்தக்காரங்க மத்தியில மதிப்பா இருக்காதாம்”
என்று ஒரு பட்டியலை ஒப்புவித்தான்.
அவள் தனது பெற்றோரிடம் கூற, அவள் கல்யாணத்துக்கு என்று சேர்த்து வைத்ததைக் கொண்டு சமாளித்து விடலாம் என்று ஒத்துக் கொண்டார்கள்.
கயல்விழி இதை ராகவ் விடம் கூற, அவன் அவளுடைய கையைப் பிடித்துக் குலுக்கித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் கழித்து கயல்விழி வீட்டில் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளுடைய கைபேசி அழைத்தது. ராகவ் தான்!
“கயல்! சாயந்திரம் பீச்சில் பாக்கலாம். ஒரு சமாச்சாரம் சொல்லணும்.”
“சரி. வர்றேன்.”
மாலை கடற்கரையில்..
“கயல் விழி! எங்கப்பாகிட்ட அவர் பிரெண்ட்ஸ் எல்லாம், ‘ஒங்க பையனுக்கு ஏதாவது குறை இருக்கா? ஏன் வேற ஜாதியில, அதுவும் வரதட்சனை வாங்காம கல்யாணம் பண்றீங்க? உங்க அந்தஸ்துக்கு உங்க பையனுக்கு வரதட்சணையோட பொண்ணு தர நாங்கள்லாம் காத்திருக்கோம்’ னு கேக்குறாங்களாம். எங்கப்பா உங்க வீட்டுல எவ்வளவு செய்வாங்கன்னு கேக்கச் சொன்னாரு.”
கயல்விழி சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
“என்ன கயல்! உங்க வீட்டுல வேற யாருக்கோவா குடுக்கப் போறாங்க? நீ ஒரே பொண்ணு தானே? உனக்குச் செய்யாமே வேற யாருக்குச் செய்யப் போறாங்க?”
“சரி, ராகவ். நான் அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்.”
அடுத்த வாரத்தில் ஒரு நாள்..
“கேக்க மறந்துட்டேன் கயல்விழி! நீங்க அசைவம் சாப்பிடறவங்களா? நாங்க சைவம். ரொம்ப ஆர்த்தடாக்ஸ். நீ எங்க வீட்டுக்கு வந்துட்டா சைவம் மட்டும் தான் சாப்பிடணும் னு எங்க அப்பா அம்மா சொல்லச் சொன்னாங்க.”
கயல்விழி அமைதி காத்தாள்.
மற்றொரு நாள் கயல்விழியைக் கடற்கரைக்கு வரச் சொல்லி இருந்தான் ராகவ். கயல்விழிக்கு முன்பாகவே வந்து காத்திருந்தான்.
“நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கணும் னு கோயிலுக்குப் போயிட்டு வந்தேன், ராகவ்! இந்தா பிரசாதம்.”
“கயல்விழி! நீ இதுவரை எந்தச் சாமியைக் கும்பிட்டிருந்தாலும் எங்க வீட்டுக்கு வந்தப்புறம் எங்க சாமியைத்தான் கும்பிடணும். எங்க பழக்க வழக்கங்களைத்தான் ஃபாலோ பண்ணனும் னு அம்மா சொன்னாங்க.”
கயல்விழி நடுக்கடலைப் போல் அமைதி காத்தாள்.
கடற்கரைக் காற்று வேகமாக வீசியதில் அவளது அழகிய சுருண்ட முடிக் கற்றைகள் நெற்றியிலும் கன்னங்களிலும் புரண்டு விளையாடின.
தூரத்தில் சில படகுகள் கடலில் அசைந்து கொண்டிருந்தன. கடலலைகள் ஓயாமல் கரையில் வந்து வந்து மோதிக் கொண்டிருந்தன. அவற்றுக்கு ஏது முடிவு?
கயல்விழி எழுந்தாள்.
“ஏன் கயல் அதுக்குள்ள எழுந்துட்டே? இன்னும் கொஞ்ச நேரம் நாம பேசிட்டுப் போகலாமே?”
கயல்விழி எதுவும் பேசாமல் குனிந்து தன் செருப்புக்களை எடுத்து அதிலிருந்த மணலைத் தட்டிவிட்டு அணிய ஆரம்பித்தாள்.
“என்ன கயல் அதுக்குள்ளே கிளம்பறே?”
“ஏன், என்னோட இருக்கறதுக்கு உனக்கு உன் அம்மா அப்பா குடுத்த நேரம் இன்னும் முடியலையா ராகவ்?”
“என்ன கயல் இப்படிப் பேசுறே? உன் அழகான கயல்விழிகளுக்காகவே நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா? என் பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டுப் பாரு.”
“ஓ.. என்னைச் சுத்திச் சுத்தி வந்தியே அதைச் சொல்றியா? அப்போ உன் அப்பா அம்மாகிட்ட என் கண்ணு மட்டுமே போதும்னு சொல்ல வேண்டியதுதானே? அவங்ககிட்ட கேட்டுட்டு வந்து என்னை லவ் பண்ண வேண்டியதுதானேடா?
நான் காதல் கல்யாணம் பண்ணப்போறதைத் தெரிஞ்சுகிட்ட எங்க சொந்தக்காரங்களும், அப்பா அம்மாவோட நண்பர்களும், “ஒனக்கென்னப்பா, ஒனக்குப் பைசா செலவில்லாம ஒம் பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிக்கப் போறா’ன்னு பேசிக்கிட்டிருக்காங்க.
ஆனா இங்கே நிலைமை நேர்மாறாப் போயிட்டிருக்கறது அவங்களுக்குத் தெரியாது.
முதல்ல கல்யாணம் உங்க முறைப்படின்னு சொன்னே. எந்த முறையா இருந்தா என்ன, நாம இணையறதுதானே முக்கியம் னு ஒத்துக் கிட்டேன்.
அடுத்து சீர் வரிசை, முறைமைகள். வரதட்சணை, உங்க வீட்டுப் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், அடிப்படையான சாப்பாட்டுப் பழக்கம், சாமி கூட இதுவரை நான் கும்பிட்ட சாமி இல்லாம நீங்க கும்பிடற சாமியத்தான் கும்பிடணும்…
இதெல்லாத்தையும் நீ லவ் புரபோஸ் பண்றதுக்கு முன்னாலேயே ஏன்டா கேக்கலை? கேட்டிருந்தா அப்பவே என் செருப்போட அளவு உனக்குத் தெரிஞ்சிருக்கும்!
காதல்னு வழிஞ்சிட்டு,
கல்யாணம்ங்கற பேர்ல என்னென்ன நிபந்தனைகள்?
அத்தனை மண்ணாங்கட்டி சமரசங்களும் பொண்ணுங்களுக்கு மட்டும்தானா?
உன்னைப் போல ஆம்பளைங்களுக்கு லவ் பண்ணுன பொண்ணும் வேணும். அதே சமயம் அம்மா கேட்டாங்க, அப்பா கேட்டாங்க, ஆட்டுக்குட்டி கேட்டுதுன்னு அவ மூலமா வர்ற எல்லா வரவுகளும் வேணும்.
நீ எந்தக் காலத்தில இருக்கே? ஒரு பொண்ணு காதலிச்சிட்டா
அவ எல்லாத்தையும், எல்லாத்திலேயும் விட்டுக் குடுத்துட்டு அடிமை வாழ்க்கை வாழணும் னு நீ எதிர்பாத்தா ஏமாந்துதான் போவே!
நல்லவேளை! கல்யாணத்துக்கு முன்னாடியே உன் சுயரூபம் தெரிஞ்சது. மறுபடி என் கண்ணு முன்னாடி வந்துடாதே! குட் பை!”
அவள் உதறிவிட்டுப் போன மண் துகள்கள் தனது கண்ணில் விழுந்து விடாமல் இருக்கக் கண்களை மூடினான் ராகவ். அவன் கண் திறந்து பார்க்கையில் அவள் வெகு தூரம் சென்றிருந்தாள்.
******