கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வீடியோ கால்; உற்சாகத்துடன் வாழ்த்துகளை சொன்ன சரத்குமார், ராதிகா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி அசத்தலாக பந்து வீசி, சமீபத்தில் தாயகம் திரும்பியிருந்தான் சேலத்தை சேர்ந்த நடராஜன்.

தொடர் முடிந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், தைப்பூசத்தன்று பழனி சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன், நேர்த்திக் கடனாக மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார்.

தொடர்ச்சியாக பலரும் தங்களின் பாராட்டுகளை அவருக்கு தெரிவித்து வரும் நிலையில், இன்றைய தினம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமாரும், அவர் மனைவி ராதிகா சரத்குமாரும் வீடியோகாலில் பேசி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதை, சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில், சரத்குமார் நடராஜனிடம், ‘சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நடராஜனை முன்னுதாரணம் காட்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “சேலத்துல வாழப்பாடி பக்கம்தான் நாங்க இருந்தோம். அங்கிருந்து வந்து உங்களை நேர்ல பார்க்கலாம்னு இருந்தோம். ஆனா அந்த நேரத்துல, நீங்க ஊரில் இல்லைன்னும் பழனிக்குப் போயிருப்பதாவும் தகவல் வந்துச்சு. அதான் பார்க்க முடில.

இப்போலாம் நிறைய இடத்துல உங்களப் பத்தி பேசறேன் நடராஜ். உங்களை குறிப்பிட்டு பேச காரணம், இங்க நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாக்கூட இன்னொருத்தர் முன்னோக்கி வருவதுக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்த நபர் நீங்க!

‘திறமையிருந்தா, முதலமைச்சரா யார் வேணா ஆகலாம்’ ன்னு பேசும்போது, திறமைக்கும் வெற்றிக்குமான உதாரணமா உங்களை சொல்வேன். ‘நடராஜன் கிட்ட திறமை இருந்தது வந்தாரு. திறமை இருக்கறவங்கள்ளாம் வரலாம்’ அப்டீன்னு குறிப்பிடுவேன்.

இங்கிலாந்தோட ஃபர்ஸ்ட் 2 டெஸ்ட்டுக்கு நீங்க இல்லை இல்லையா? இட்ஸ் ஓகே. உங்களுக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு. விஷ் யு ஆல் த பெஸ்ட் நடராஜ். நான் வரேன், வீட்டுக்கு ஒருநாள் வரோம். சென்னைக்கு வந்தா வாங்க” என்று கூறியுள்ளார்.

இத்துடன் வீடியோவுக்கான கேப்ஷனாக, ‘நடராஜ், சேலத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார் அவர்.

இங்கிலாந்துக்கு எதிராக வரும் பிப்.5ம் தேதி சென்னையில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் இல்லை, முதல் 2 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடினமான ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு எந்த வீரருக்கும் ஓய்வு தேவைப்படுவது இயல்புதான் என்ற அடிப்படையில் நடராஜனுக்கு இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version