தீர்வு – சந்துரு மாணிக்கவாசகம்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 21தீர்வு – சந்துரு மாணிக்கவாசகம்

நேற்று மாலை முதலே ரத்தினத்தின் மனம் பாரமாகியிருந்தது.

காலை கடை திறந்ததுமுதல் எப்பொழுதும் போலல்லாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களை லேசான தடுமாற்றத்துடனே எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தான். ’ரெண்டுமூணு நாள்ல கார்ப்பரேஷன் ஆளுங்க வருவாங்க போலருக்கு. இன்னும் உறுதியா ஒண்ணும் தெரியல’ என நேற்று மாலை பொன்ராஜ் சொல்லிவிட்டுச் சென்றிருந்த செய்திதான் அவனுக்குள் அத்தனை கலக்கத்தை உண்டாக்கிவிட்டிருந்தது.

ஏற்கனவே, சில வருடங்களுக்கு முன் நண்பன் ஒருவனின் வற்புறுத்தலால் அனுபவமில்லா தொழில் ஒன்றில் சில லட்சங்களை முதலீடு செய்து, கடனாளியாகி, குடும்பத்துடன் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவித்துக் கடந்து வந்திருந்த ரத்தினம், சில மாதங்களுக்கு முன்புதான் இந்த மளிகைக்கடையை துவக்கியிருந்தான்.

எவரும் இவனை நம்பி பணம் கொடுக்கத் தயாராக இல்லாதநிலையில், இவனது குணநலன்களைப் பற்றியும் சூழ்நிலையால் கடனாளியானவன் என்பதையும் நன்கு அறிந்திருந்த பொன்னுசாமியின் சிபாரிசு மூலம் சில லட்சங்களை கடனாகப் பெற்றுத்தான் இந்தக்கடையை ஆரம்பித்திருந்தான்.

மளிகை வியாபாரத்தைப் பொறுத்தவரை, ஒருவேளை பெரிய அளவில் லாபம் வராமல் போனாலும்கூட, சரியான இடத்தில் கடையைப் போட்டால் நிச்சயமாக நஷ்டத்திற்கு வாய்ப்பில்லை என்பது நன்றாகவே தெரிந்திருந்தது ரத்தினத்திற்கு.

புதிதாக உருவெடுத்திருந்த அந்த புறநகர்ப்பகுதியின் பிரதான சாலையில் சற்றே பெரிய கடையாக ஒன்றைப் பிடித்திருந்தான். யார் வந்து எந்தப்பொருள் கேட்டாலும் இல்லையென்று திருப்பி அனுப்பிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டுமென்ற உறுதியான எண்ணத்துடன், பாரிமுனையிலிருந்தும் கோயம்பேட்டிலிருந்தும் ஏறத்தாழ அனைத்துப் பொருட்களையும் கொண்டு வந்து இறக்கி கடையை அடைத்து வைத்திருந்தான். அவன் வைத்திருந்த பொருட்களுக்காகவும் ரத்தினத்தின் தன்மையான பேச்சிற்காகவும் குறிப்பிட்ட அளவில் வாடிக்கையாளர்கள் கிடைக்கத் துவங்கியிருந்தனர்.

இந்த நிலையில்தான் நீதிமன்றத்தின் திடீர் உத்தரவு அவனை உலுக்கிவிட்டிருந்தது. இந்தப் பகுதி முழுவதும் நீர்நிலையின்மீது ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாக தெளிவான ஆதாரங்களுடன் சமூக ஆர்வலர் ஒருவர் அடையாளம் காட்ட, வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பியிருந்தது நீதிமன்றம்.

இதுகுறித்த செய்தி வரத்துவங்கியதுமே உடைந்து போனான் ரத்தினம். இருப்பினும், நிச்சயமாக இப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்களும் பங்களாவாசிகளும் ஒன்றுசேர்ந்து இடைக்காலத் தடை எதையாவது வாங்கிவிடுவார்களென ஒரு ஓரத்தில் நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தான். அப்படி தடை கிடைத்துவிட்டால், வழக்கு இன்னும் சில வருடங்கள் இழுத்துச் செல்லும், கடனை ஓரளவுக்காவது அடைத்துவிட்டு வேறொரு இடத்திற்கு கடையை மாற்றிக்கொள்ளலாம் என கணக்கு போட்டுக் கொண்டிருந்தான். ஆனால், நீதிமன்றம் இப்படி அனைத்து வழக்குகளையும் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்துவிட்டு, நடவடிக்கையில் இறங்குமென அவன் எதிர்பார்க்கவில்லை.

கடனைத் திரும்ப கட்டத் துவங்கியிருக்கும் ஆரம்பநிலையிலேயே பெரும் கேள்விக்குறியோடும் பயத்தோடும் நின்றுகொண்டிருந்தான் ரத்தினம்.

அவனது மனைவி ராணிக்கோ ரத்தினத்தின் நிலை குறித்த கவலையோடு குழந்தைகளுக்கான உணவு மற்றும் கல்வி குறித்த கவலையும் சேர்ந்துகொண்டன. பிறந்த வீட்டு வாசலுக்குச் சென்று நிற்காத நிலை வேண்டுமே என கடவுளர்களை வேண்டத் துவங்கியிருந்தாள்.

“முன்னபின்ன தெரியாத ஆளுக்கெல்லாம் நான் பணம் குடுத்தது கெடையாது. பொன்னுச்சாமி உன் கேரக்டரைப் பத்தி அவ்ளோ ஸ்ட்ராங்கா சொன்னதுனாலதான் நம்பிக் குடுத்தேன். இப்ப வந்து ‘திடீர்னு கடையை காலி பண்ணப் போறாங்க, இடிக்கப் போறாங்க’ன்னு காரணம் சொல்லிகிட்டிருந்தா என்னய்யா அர்த்தம்? கடையை போடறதுக்கு முன்னாலயே எல்லாத்தையும் சரியா விசாரிச்சுட்டு போட்றதில்லையா?”

“எதிர்பாக்கலண்ணேன். இப்பவும், நீங்க குடுத்த பணத்துக்கு எந்தப் பிரச்சனையும் இல்லண்ணேன். குடுத்துருக்கற அட்வான்ஸ் அப்புடியேதான் இருக்கு. அதை வாங்கி புதுசா பாக்கப்போற கடைக்கு குடுத்துருவேன். புதுசா செலவு பண்ணி பொருளுங்களும் எதுவும் வாங்கவேண்டிய வேலை இல்லண்ணேன்”

“அதெல்லாம் சரி. ஆனா, அடுத்ததா ஒரு கடை புடிச்சு, வியாபாரம் பிக்-அப் ஆனதுக்கப்பறம்தான் காசு கட்டமுடியும்னு சொல்றியே, அதான் எப்புடின்னு கேக்கறேன்? நான் ஒரு கணக்கு போட்டுதானே ஒவ்வொருத்தனுக்கும் குடுத்துகிட்டிருக்கேன். திடீர்னு நாலு எடத்துல இப்புடி மாட்டிகிச்சுன்னா என் நிலமை என்னாவும் சொல்லு?”

ரத்தினம் பதிலின்றி அமைதியாக நின்றிருந்தான்.

“பொன்னுச்சாமிக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“இன்னும் சொல்லலண்ணேன்.”

“அப்போ ஒண்ணு பண்ணு. பொன்னுகிட்ட ஒரு தடவை பேசிட்டு, அப்புடியே அவரையும் கூட்டிட்டு வா. என்ன ஏதுன்னு முடிவு பண்ணுவோம்.”

பிரச்சனைகளை புரிந்துகொண்டு ஒப்புக்கொள்வார் என நினைத்துச் சென்றவனை பெரும் ஏமாற்றமும் கவலையும் ஆக்கிரமித்துக் கொண்டது. தன்மீது நம்பிக்கை வைத்த பொன்னுசாமியிடமும் நெளியவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதை எண்ணி மனம் கலங்கியது.

“அந்தாளுகிட்ட கை நீட்றதுக்கு முன்னாலேயே தெளிவா சொல்லித்தானே ரத்தினம் கூட்டிட்டு போனேன், தலையே போனாலும் மாசாமாசம் பணத்தைக் கட்டியாகணும்னு? இப்ப நீ எது சொன்னாலும் அந்தாளு மண்டையில ஏறாது. காசு வருமா வராதான்னு மட்டும்தான் பார்ப்பான் அவன்”

“நீங்க கொஞ்சம் வந்து பேசுனீங்கன்னா அவரு ஒத்துக்குவாருன்னு தோணுதுண்ணேன். உங்களைதான் கூட்டிட்டு வரச் சொன்னாரு”

“பேசறதைப் பத்தி ஒண்ணும் இல்ல ரத்தினம். அவனைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். பேசி வேலைக்கி ஆவாதுங்கறதைதான் சொல்றேன். சரி வா. உன்னோட நப்பாசையையும் பாத்துடுவோம்”

“பொன்னு, என்னப்பா இது, காசு வாங்குன வேகத்துல இப்புடி வந்து தலையை சொறிஞ்சுகிட்டு நிக்கிறாப்ள?”

“என்ன பண்ணச் சொல்றீங்க. மேல இருக்கவன் போடற கணக்கு தெரியாம நாம ஒரு கணக்கு போட்டுகிட்டிருக்கோம். நல்லபடியா யாவாரம் பண்ணனும், முன்னுக்கு வரணும்னு நெனைச்சுதானே ஒவ்வொருத்தனும் கடையை போடறான்? கவர்மெண்ட்டும் கோர்ட்டும் இப்புடி மாறி மாறி ஏதாச்சும் பண்ணுச்சுன்னா நாம என்னதான் பண்றது?”

“தப்பான எடம்னு தெரிஞ்சே கட்டடத்தை கட்ட வேண்டியது. இடிக்க வரும்போது ரோட்ல படுத்து உருளவேண்டியது. சரி விடு, நமக்கெதுக்கு இப்ப அந்த பஞ்சாயத்தெல்லாம்.. என்ன பண்ணலாம்னு சொல்லு பொன்னுச்சாமி.”

“பிரச்சனையை சொல்லிட்டேன்னு சொன்னாப்ள. இதுக்கப்பறம் நீங்கதான் முடிவு பண்ணனும்.”

சிறிதுநேரம் யோசிப்பதுபோல் தாடையை தேய்த்துவிட்டு, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த விஷயத்தைச் சொன்னார்.

“முடிவு என்ன முடிவு.. ஒண்ணு, முடிஞ்சா வேற எங்கேயாச்சும் வட்டிக்கு வாங்கி மாசாமாசம் கட்ட வேண்டியதை கரெக்டா கட்டிடச் சொல்லு. இல்லேன்னா, பாக்கி வைக்கறதையெல்லாம் அசல்ல சேர்த்துக்கறேன். பின்னால மாசாமாசம் கட்டும்போது அதுக்கும் சேர்த்துதான் வட்டி கட்டணும்”

’என்ன சொல்ற?’ என்பது போல் ரத்தினத்தைத் திரும்பிப் பார்த்தார் பொன்னுசாமி. அவனோ அமைதியாய் கை கட்டி நின்றுகொண்டிருந்தான். அவனது மனநிலை தெரிந்திருந்ததால் பொன்னுசாமி பதில் கேட்டு அழுத்தமெதுவும் கொடுக்கவில்லை. அவரே பதில் சொன்னார்.

“புதுசா போற எடத்துல யாவாரம் எப்புடி இருக்குமோ என்னமோ. வருமானம் எப்புடின்னு தெரியாம உங்க கண்டிஷனுக்கு ஒத்துக்கறதுக்கும் கொஞ்சம் யோசனையாதான் இருக்கு.”

“எதாச்சும் ஒரு பக்கம் வந்துதானே ஆவணும்? காசை வச்சு பொழப்பை ஓட்றவன் நான். என்கிட்ட வந்து, குடுக்கறது கஷ்டம்னு மொட்டையா சொன்னா எப்புடி பொன்னு? ஆளுக்கொருபக்கமா எறங்கி வந்துதானே ஆகணும்? இப்ப கட்ட முடியாதுங்கறதை நான் ஒத்துக்கறேன். அதுக்கு என்ன பண்ணனுமோ அதை ரத்தினமும் பண்ணிதானே ஆவணும்?”

“சரிண்ணேன். சேர்த்தே கட்டிர்றேன்.” – ரத்தினம் முடிவுக்கு வந்தான்.

“இப்போதைக்கி தாண்டி வரணும்கறதுக்காக எதுவும் சொல்லாத ரத்தினம். எல்லாத்தையும் நல்லா யோசிச்சுக்கோ. அப்பறம் வேற எதுவும் பஞ்சாயத்தாயிடக்கூடாது”

“இல்லண்ணேன். என்னால இப்ப வேற எங்கேயும் போயி கடனுக்கு நிக்கமுடியாதுன்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். அதோட, நாலாபக்கமும் கையை நீட்டிட்டு ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிகிட்டிருக்கறதுக்கு இங்கேயே சேர்த்து கட்டிக்கறது நல்லதுன்னு நெனைக்கறேன்”

கோபம் கொப்பளிக்க நின்றிருந்த ரத்தினத்தை ஆசுவாசப்படுத்த முயன்றுகொண்டிருந்தார், இடத்தின் உரிமையாளர்.

“எல்லா அப்ரூவலும் இருக்குன்னு சொல்லி பேப்பருங்களை காட்டுனதுனாலதான் கையில இருந்த காசு எல்லாத்தையும் யோசிக்காம போட்டு இந்த எடத்தை வாங்கிக் கட்டினேன். இப்புடி ஒரு ஃபிராடுத்தனம் பண்ணுவானுங்கன்னு எதிர்ப்பாக்கலையேப்பா”

“அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்? நீங்க அட்வான்ஸை திருப்பிக் குடுத்தாதானே என்னால அடுத்த கடையை பாத்து ஏற்பாடு பண்ணமுடியும்?”

”இப்பதானே வந்துருக்க, அதுக்குள்ள கடையை எங்க காலி பண்ணப் போறேன்னு நினைச்சு, பணத்தையெல்லாம் என் கடைசி பொண்ணு கல்யாணத்துல செலவு பண்ணிட்டு வெறும் கையோட உக்காந்துருக்கேன். போற வழி தெரியாம நிக்கறவன்கிட்ட வந்து அட்வான்ஸை குடு, அட்வான்ஸை குடுன்னு அடம்புடிச்சா, நான் எங்க போறது சொல்லு?”

”இப்ப என்ன சார்..? காசை திருப்பிக் குடுக்கமுடியாதுன்னு சொல்றீங்களா?”

“அப்புடியெல்லாம் மனசாட்சி இல்லாம பேசற ஆளு இல்ல தம்பி நான். நீ காலி பண்ணும்போது அடுத்து வர்றவன்கிட்ட வாங்கி குடுத்துக்கலாம்கற நம்பிக்கையிலதாம்ப்பா செலவு பண்ணினேன். இப்புடி எடமே இல்லாம போவும்னு யாருக்குப்பா தெரியும் சொல்லு?”

எந்தப் பிடியும் கொடுக்காமல் சமாளிக்கும் உரிமையாளரிடம் எப்படி பேசுவது, அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல், அப்படியே கடை வாசலில் அமர்ந்து முகத்தைக் கவிழ்த்துக்கொண்டான். அவரது புலம்பலிலும் இயலாமையிலும் தவறொன்றும் தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும், வட்டிக்கு கொடுத்தவனும் பொன்னுசாமியும் கண்முன்னே வந்து நிற்பதை தடுக்கமுடியவில்லை. நீண்டநேரம் யோசித்தபடியே அமர்ந்திருந்தவனுக்கு வழி எதுவும் புலப்படவில்லை. மெதுவாக எழுந்தவன், கடைக்குள் சென்றான். ஷட்டரை முழுவதுமாக இறக்கினான்.

நீதிபதியின் கையிலிருந்த ஆண்ட்ராய்ட் ஃபோனில் ரத்தினத்தின் வாட்ஸ்-அப் வீடியோ ஓடிக்கொண்டிருந்தது.

”அதிகாரிங்கள்லாம் என் சாவுக்கப்பறமாச்சும் கொஞ்சம் யோசிச்சு வேலை செய்வீங்களா? லஞ்சம் வாங்கிகிட்டு எந்த எடத்துக்கு வேணும்னாலும் அப்ரூவல் குடுக்கறது, ‘தைரியமா கட்டு. பின்னால பாத்துக்கலாம்’னு பில்டருங்களுக்கு தைரியம் குடுக்கறது.. இந்தமாதிரி வேலையையெல்லாம் தயவுசெஞ்சு நிறுத்திக்கங்க. உங்களால பாதிக்கப்படற மக்களோட பிரச்சனைங்களையும் வேதனையையும் நீங்கள்லாம் எப்பதான் புரிஞ்சுக்கப் போறீங்க? அனுமதியில்லாத எடத்துல ஒருத்தன் முதல் செங்கல்லை வைக்கறப்பவே கிளம்பி வந்து தூக்கி எறிஞ்சீங்கன்னா இப்புடியான பிரச்சனைங்கள்லாம் வருமா?”

“அதேமாதிரி, கோர்ட்டும் இந்த அதிகாரிங்களையெல்லாம் எப்புடி கண்டுக்காம சும்மா விடுதுங்கறதும் எனக்குப் புரியல. இவ்வளவு பெரிய ஏரியா ஒண்ணை உருவாக விட்டுட்டு, அதுக்கப்பறம் யாரோ ஒருத்தர் வந்து கேஸ் போடும்போது, ‘ஆக்கிரமிப்பை உடனடியா எடுக்கலன்னா பாரபட்சம் இல்லாம நடவடிக்கை எடுப்போம்’னு மிரட்டறீங்களே. நியாயமா இது? காசை வாங்கிகிட்டு கட்றதை வேடிக்கைப் பாத்துகிட்டிருந்த முக்கியமான அதிகாரிங்க, கரண்ட் குடுத்த அதிகாரிங்க, இவ்வளவு பெரிய ஏரியா உருவாகறதுக்கு காரணமா இருந்த அத்தனை அதிகாரிங்கன்னு எத்தனையோ பேர் இருந்தும் அவங்களுக்கெல்லாம் ஏன் தண்டனை குடுத்து பேப்பர்ல ஃபோட்டோவை போடமாட்டேங்கறீங்க? இவங்களுக்கெல்லாம் என்னைக்கி பயத்தை உண்டாக்கப் போறீங்க? இவங்க எல்லாரும் சம்பாதிக்கறதுக்காக இஷ்டத்துக்கு தப்பு பண்ணி, என் குடும்பத்தை இன்னைக்கி அனாதையா தெருவுல நிக்க விட்டுட்டாங்க. என் சாவுலயாச்சும் இதுக்கெல்லாம் ஏதாச்சும் தீர்வு கிடைக்குமான்னு யோசிச்சுகிட்டே போறேன்”

கனத்த மனதுடனும் உறுத்தலுடனும் தனது இருக்கையிலிருந்து எழுந்த நீதிபதி, யோசித்தபடியே நடக்கத் துவங்கினார்.

————————–*******————————–

Exit mobile version