அழகு டோப்பா – இரா. சாரதி

brown hair isolated

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 28 அழகு டோப்பா – இரா. சாரதி

அழகு டோப்பா’ என்று பெயரிடப்பட்டிருந்தது அந்தக்கடை. கூடவே ஏகப்பட்ட ஒரு வரி விளம்பரங்கள்

                        ‘சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய கடை’

                        ‘முடியில்லாமைக்கு ‘முடி’வு இங்கே’

                        ‘அழகு செய்ய விரும்பு’

                        ‘ஸ்டெப் இன் பால்ட்

                        ஸ்டெப் அவுட் போல்ட்’

                        ‘ஜீரோ மெயிண்டனன்ஸ்’

                        ‘மனிதர்களை மன்னர்களாக மாற்றும் இடம்’

                        ‘கிரீடம் (டோப்பா) வைக்கும் இடம்’

                        ‘பக்கா டோப்பா’

            ‘பக்கா டோப்பா’ என்ற வாக்கியத்தைப் பார்த்ததும் அப்பக்கமாகச் சென்ற ஒரு இளைஞன் கடையினுள் நுழைந்தான். ஒல்லியான தேகம், முழுக்கை சட்டை, வழுக்கைக்கும் மொட்டைக்கும் இடையிலான தலை (ஆங்காங்கே சில முடிகள்), ஜீன்ஸ் எனத் தோற்றம். மாற்றம் தேடி வந்துள்ளான்.

            கடை முழுக்க ரப்பர் தலைகளும், அவை மீது டோப்பாக்களும் இருந்தன. கடையின் முதலாளி சற்று பருமனாக இருந்தார்.  அரைக்கை சட்டையின் பாதி பேண்டின் உள்ளே. வெளியே தள்ளும் கோழிமுட்டை கண்கள். அக்கண்களை மேலும் பெரியதாக்கி நெருப்புக்கோழி முட்டை போல காட்டியது அந்த மூக்கு கண்ணாடி. தலைமுடியை அழுத்தி பதித்து சீவியிருந்தார்.

            ‘வாப்பா, டோப்பா வேணுமா?’

            ‘ஆமா சார்’

“இந்த வயசிலேயே முடி போச்சா… ” உற்றுப் பார்த்தவர் Òபூச்சி அடிச்சிருச்சா, டோப்பா வாங்கிக்கோ பட்டாம்பூச்சியா பறந்து போ”, கைகளை விரித்து அசைத்தவாறு சிரித்தார்.

            “சார், ஒரு நல்ல டோப்பா வேணும்”

            “இங்க இருக்கிறதெல்லாம் நல்ல டோப்பாதான்பா”

            “சார், ஒரு நல்ல டோப்பா குடுங்க சார்”

            ‘இவன் ரொம்ப சந்தேகப்படுறான்’, என மனதிற்குள் கூறியவாறு ஒரு டோப்பாவை தேர்ந்தெடுத்து தன் தலைமுடியை அழுத்தி ஜாக்கிரதையாக அதன்மேலே டோப்பாவை வைத்தார். டோப்பா ரஜினி காந்தை நினவுபடுத்தியது.  கடைக்காரர் இருப்பை ஆட்டியவாறு இளைஞனை நோக்கி பாடியவாறு வந்தார்.

                        “ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

                        அடி என்னடி உன் மனசுல இருக்கு

                        சந்தேகம் வரலாமா

                        என்னப்பா, இது சூப்பர் ஸ்டார் டோப்பா. வேணுமா? ”

            கடைக்காரரின் செய்கையைப் பார்த்து இளைஞன் ‘ஆ’ என ஆச்சரியத்தில் பதிலளிக்காமல் இருந்தான்.

            “இது வேணாமா” எனக் கூறியவாறு அந்த டோப்பாவைக் கழற்றி மற்றொரு டோப்பாவை மீண்டும் ஜாக்கிரதையாகத் தன் தலைமீது வைத்து, மூக்கு கண்ணாடியைக் கழற்றி கறுப்புக் கண்ணாடியை அணிந்தார்.

            “தூங்காதே தம்பி தூங்காதே. . . . இது பிக்பாஸ். இது எப்படி? ”

            கண்ணாடி மாறியதால் சற்று நிலை தடுமாறினார்.  இளைஞன் கடைக்காரரின் செயல்களைக் கண்கள் மிளிர பார்த்தான். பிரமிப்பில் பதில் இல்லை.

            “இதுவும் வேணாமா…… ம் இப்ப பாரு” என மற்றொரு மாடலுக்கு மாறினார். உடனே குதித்தவாறு வாசலில் யாரையோ கூப்பிடுவது போல செய்கை செய்தார்.

                        “மிஸ்டர் சந்திரமௌலி! மிஸ்டர் சந்திரமௌலி!”

                        தொடர்ந்தார் “இது நவரசநாயகன்”

            கனமான நபர் குதித்து குதித்து கூப்பாடு போடுவதைப் பார்த்த இளைஞன் அடிவயிற்றில் கை வைத்து குனிந்து விழுந்து விழுந்து சிரிக்கலானான். இவனது சிரிப்பைப் பார்த்து கடைக்காரர் குஷியானார்.

            “இதுவும் வேணாமா….. ” என இளைஞனின் பதிலுக்குக் காத்திராமல் மற்றொரு மாடலுக்குத் தாவினார்.

            “இது கரண்ட் டிரண்ட் மாடல்….. ஆர்…. இ…..எம்….ஓ…. ரெமோ, ராம்ப் வாக் மாடல்” என ‘அன்னியன்’ ரெமோ போல நடந்துவந்து இருவிரல்களால் தன் உதட்டின் மீது தடவி ஒரு முத்தத்தைத் தெளித்தார்.

            மறுபடியும் இளைஞன் விழுந்து விழுந்து தாங்க முடியாமல் சிரித்தான்.

            “….ம் …. ஓகே பேபி? நோ, இதோ இந்த தொப்பியைப் பார். பங்க் வச்ச தொப்பி மாட்டிக்கோ. பின்னே பாக்கும்போது கேரளத் தைலம் தேய்த்த ஒரு அழகான பொண்ணுன்னு நினைச்சி நாலு காலேஜ் பசங்க வருவானுங்க. முன்னாடி பாத்ததும் புஸ்ஸ்ஸுன்னு போயிருவானுங்க, பாவம். ஹா ஹா ஹா….. ஹெய் ஃபைவ் தட்டு” என்று கண்ணடித்தவாறு இளைஞனின் கைகளில் தட்டினார்.”

            சிரிபொலி நீண்டது.

            “சொல்லுபா எது வேணும்?’’

            “இதெல்லாம் என்ன விலை?’’

            கடைக்காரர் ஒவ்வொரு டோப்பாவைக் குறிப்பிட்டவாறு கூறலானார்.

            “இது ஏழாயிரத்து ஐநூறு, சூப்பர் ஸ்டார்ல…. இது ஆறாயிரம்… இது ஐந்தாயிரம்’’

            சிரித்துக் கொண்டிருந்த இளைஞன் சீரியஸாக மாறினான்.

            “சார், ஆயிரம் ரூபாய்க்கு எதாவது டோப்பா இருந்த குடுங்க சார்”

            “ஆயிரம் ரூபாய்க்கா?’’

            கடைக்காரர் கண்களை சுருக்கினார். தொடர்ந்தார், “ஆயிரம் ரூபாய்க்குன்னா பழசுதான் வரும் மூணுமாசம் தான்பா வரும்’’

            “போதும் சார், ரெண்டு மாசம் வந்தா போதும்”

            “ஸ்ஸ்ஸ்’’ எனக் கடைக்காரர் தலையைக் கவிழ்த்தார்.

            இளைஞன் விரக்தியில் சின்னதாக முணுமுணுத்தான்.

            “ரெண்டு மாசம்தான் உயிரோடு இருப்பேன். அதுபோதும்,” கடைக்காரர் கண்கள் விரிய நிமிர்ந்தார்.

            “என்ன சொன்னே? என்ன சொன்னே?’’

            “ஆமா சார், நான் ஒரு கேன்சர் பேஷண்ட். ரெண்டு மாசம்தான் உயிரோடிருப்பேன்னு டாக்டர் சொல்லிட்டார். ரொம்ப வயசான அப்பா, அம்மாவை காப்பாத்தணும். இருக்கிற ரெண்டு மாசத்துல ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனில வேலைக்கு போகலாமுன்னு இருக்கேன். அதான் டோப்பா ரெண்டு மாசம் வந்தா போதும் சார்’’

            கடைக்காரரின் கண்களில் கண்ணீர் சுரந்தது. அவரது கருணைக் கசிசைப் பார்த்ததும் அவன் புன்னகையுடன் கூறலானான்.

            “அப்புறம் நீங்க நினைக்கிற மாதிரி நான் ஆம்பளை இல்ல. நான் பொம்பளை’’

            “என்னது?”

            அவர் அதிர்ச்சியில் ஆந்தை கண்களாக பார்த்தார். பின்பு கழுகு கண்களாக அவனின் உடலமைப்பை அளந்தார். அவரது கணக்கீட்டை பார்த்து புன்னகை விரிய கூறினாள்.

            “எனக்கு மார்பக கேன்சர் சார்…. அதான் ரெண்டத்தையும் எடுத்துட்டாங்க’’

            “அப்போ இந்த ஆம்பள குரல்?’’

            “சார், கேன்சர் செல்ஸ் எல்லா இடத்துக்கும் பரவிடுச்சு. அதுல ரெண்டு வாய்ஸ் பாக்ஸில் செட்டிலாகிடுச்சு. அதான் குரல் ஆம்பளை மாதிரி மாறிடுச்சு’’

            கடைக்காரர் அவளின் நிலைமையைப் புரிந்துகொண்டார்.

            “கவலைப்படாதேம்மா. காட் இஸ் கிரேட்’’

            “சார், என்னை பொறுத்தவரைக்கும் நீங்க தான் கிரேட்.’’

            “நானா? …. என்னமா நீ. உன் அப்பா அம்மா தான்மா முதல்லே’’

            “சார், அவங்க என் கூடவே இருக்கிறவங்க. அதனாலே எனக்காக அழுவாங்க ஆனா நீங்க? யாருன்னே தெரியாத எனக்காக கண்ணீர் சிந்துறீங்க. பாட்டு பாடி மிமிக்ரி பண்ணி என்னை குஷிபடுத்துறீங்க. அதனால யு ஆர் த கிரேட்’’

            “சரிம்மா, நான் உனக்கு எதாவது பண்ணணும்மா… ம் இந்த ஆயிரம் ரூபாய் டோப்பாவை ஃப்ரீயா எடுத்துக்கோ’’

            “அதெல்லாம் வேணாம் சார்’’

            “இல்லம்மா நான் உனக்கு ஏதாவது பண்ணனும்மா’’

            “ம்ம், வேணும்ன்னா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’’ ஆசையோடு அவள் கேட்க, அவர் திகைத்தார்.

            “ஏன் மேடத்தை கேட்கணுமா?’’ என்று கடைக்காரர் தன் மனைவியோடு காட்சியளித்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி சிரித்தவாறு கேட்டாள்.

            அவளது சின்ன வயசும், விளையாட்டுத்தன்மையுடன் கூடிய பொறுப்புணர்ச்சி அவரை ஏதோ செய்தது.

            “இருந்தாலும் உனக்கு நான் ஏதாவது பண்ணி ஆகணும்’’

            “ஒண்ணும் பண்ண முடியாது சார்’

            “இதோ இந்த டோப்பாவை வச்சுக்கோ,’’ என படக்கென்று தான் அணிந்திருந்த டோப்பாவை கழற்றி நீட்டினார். புன்னகைத்தார். அவரது வழுக்கைத் தலையை பார்த்ததும் அவள் கலகல என சிரித்தாள்.

            இருவரும் சிரித்தவாறு ஹய் ஃபைய் தட்டிக் கொண்டனர். பின்பு அவள் கூறினாள்.

            “சார், உங்களோடு ஒரு செல்பி எடுத்துக்கலாமா?’’          

            “ம் தாராளமாம்மா’’

            “சார் முதல்ல டோப்பாவை மாட்டுங்க. அதான் உங்களுக்கு அழகோ அழகு’’

            அவரும் டோப்பாவை மாட்டிக்கொள்ள, இருவரும் செல்பி எடுக்க முகங்களை அருகில் கொண்டு வந்தனர். செல் கேமராவைப் பார்த்தனர். வெகு அருகில் இருப்பதால், கடைக்காரர் கடைக்கண் பார்வையாக அவளை பாவமாக பரிதாபமாகப் பார்த்தார். அவள் கேமராவைப் பார்த்தபடி கூறினாள்.

            “சார், கேமராவை பாருங்க சார் சிரிங்க, நீங்க வேற’’

            இவர் உடனே கேமராவைப் பார்க்க புகைப்படம் ‘க்ளிக்’ என்று பதிவு செய்யப்பட்டது….

            திவு செய்யப்பட்ட அந்தப் புகைப்படத்தை தன் செல்போன் மூலம் காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த டோப்பா மனிதர். எதிரே ஒரு டாக்டர் ஆர்வமாக டோப்பா மனிதர் கூறும் நினைவுகளை கேட்டுக் கொண்டிருந்தார்.

            “டாக்டர், அந்த பெண்ணை நான் அதுக்கப்புறம் பார்த்ததேயில்லை. அந்த பெண்ணோட பேர், விலாசம் ஏன் போன் நம்பர் கூட தெரியாது. எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் அந்த பெண் நல்லாயிருக்கணும் டாக்டர்’’

            டோப்பா மனிதர் கடைசி வரியைக் கூறும்பொழுது கண்களை மூடினார். கண்ணீர் துளிகள் சொட்டின. சொற்கள் தொடர்ந்தன.

            “டாக்டர், ஆனா அந்த பெண் வந்த அந்த தேதி மட்டும் ஞாபகம் இருக்கு. அதான் அந்த தேதியில வருசா வருசம் இந்த கேன்சர் ஆஸ்பத்திரிக்கு வந்து பேஷண்ட்சுக்கு இனிப்பு வழங்கி, இந்த மிமிக்ரி ஜோக்ஸ் சொல்லி ஹய் ஃபைய் தட்டி குஷிபடுத்திக்கிட்டு இருக்கேன்.  அப்படியே கீமோ தெரபியின் பக்க விளைவா வர்ற முடிகொட்டுதலை மறைக்க டோப்பா செஞ்சு ப்ரீயா கொடுக்கிறேன் டாக்டர்.’’

            “யூ ஆர் எ கிரேட் மேன், டோப்பா சார்’

            “டாக்டர், இன்னிக்கு ரெண்டு டோப்பா அளவு எடுத்திருக்கேன். ரெண்டு நாளில் ஃப்ரீயா கொடுத்திடுறேன்.  வர்றேன் டாக்டர்’’

            டோப்பா மனிதர் விடைபெற்றார்.  ‘செய்யும் பணியே பகவான்’ என்பர். ஆனால் அந்த பகவானே பணி செய்தால் ஏழைகளிடம் பணம் வாங்குவாரா? இல்லை. அதுபோலதான் இந்த டோப்பா மனிதர். இயலாதவர்களுக்கு, உரியவர்களுக்கு டோப்பா இலவசமாக கொடுத்தல் நன்று. இந்த மனிதரின் டோப்பா அழகோ அழகு! –   

முற்றும்    –

Exit mobile version