பகுதிநேர நியாயங்கள்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 32 பகுதிநேர நியாயங்கள்

“நிலைமை முன்ன மாதிரி இல்ல ஸார். இதுல நிறையா ரூல்ஸ் இருக்கு. நீங்க சொல்ற மாதிரியெல்லாம் பண்ண முடியாது ஸார்” என்பதை வெவ்வேறு தொனியில் கடந்த இரண்டு மாதங்களாக கேட்டு வருகிறேன். வாழ்க்கை வெறுக்கவில்லை, ஆனால் விரக்தியாக இருக்கிறது. சிறுவயதில் நாவல்பழம் என்றால் நாங்கள் கூடும் இடம் ஊர் தாலுகா அலுவலகம் தான். அந்த அலுவலக வளாகத்தில்தான் பிரமாண்டமான நாவல்மரம் இருக்கிறது. காலாண்டு விடுமுறையும் நாவல்மரத்தில் பழம் காய்க்கும் பருவமும் கூடி வரும். காலையில் உற்சாகமாக கிளம்பும் எங்கள் கூட்டம் மதியம் பை நிறைய பழங்களுடன் வருவோம். அந்த வளாகமும், அலுவலகமும் எந்த ஒரு நெருடலும் தந்ததில்லை. இப்போது அங்கு வரும்போதெல்லாம் அவதியாக இருக்கிறது.

அறுபதை தாண்டிய எழுத்தாளன் எனக்கு வாழ்வின் லட்சியம் என்று எதுவுமே இருந்ததில்லை. எழுத்து ஒன்றே குறிக்கோளாய் இருந்தது. கையெழுத்து பிரதி முதல் கால் கோடி வரை அச்சாகும் பத்திரிக்கை முதற்கொண்டு எழுதிவிட்டேன். எப்படி எழுதினாலும் என்னை அறிந்தோர் சொற்பமே. சினிமாவில் நொடிப்பொழுதில் தலைகாட்டி செல்லும் துணை நடிகர்களுக்கு இருக்கும் புகழ் கூட நாளொன்ன்றுக்கு பக்கம்பக்கமாக எழுதும் எழுத்தாளர்களுக்கு இருந்ததில்லை. இருப்பினும் ஒரு காலத்தில் அரசின் கல்விமுறை குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்று அப்போதைய முதல்வராக இருந்தவரின் கவனத்துக்கு சென்றது. மறுநாள் என்னை நேரில் அழைத்து பாராட்டினார். அடுத்த ஆறாவது மாதத்தில் அரசு அறிவித்த கலைமாமணி பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றது. எழுத்தால் நான் தொட்ட ஒரே உச்சபட்ச தருணம் இது ஒன்றே. புனைவு, அபுனைவு என்று எழுதிக் களைத்துப் போன நான் ஒருகட்டத்தில் எதுவும் எழுதாமல் அமைதியாக இருந்துவிட்டேன். அந்த அமைதிக்காலத்தில் தான் என்னைவிட பதினெட்டு வயது மூத்தவரான என் தந்தை இறந்து போனார்.

அவர் இறந்து போனால் என்ன நடக்குமோ அதுதான் நடந்து கொண்டிருந்தது. அதையும் மீறி எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அது எங்கள் பூர்வீக சொத்து குறித்த பத்திரம். இன்னும் சொல்லப்போனால் அப்பாவின் மரணத்தை என் மனைவியை விட நான் அதிகம் எதிர்பார்த்தேன். அவர் உயிரோடு இருக்கும் வரை வீட்டை விற்க அனுமதிக்கமாட்டார். வீடு என்பது கௌரவம் சார்ந்த ஒன்றாக கருதுவார். வீட்டை விற்பது கவுரவத்தை விற்பதற்கு சமம் என்பார். இன்றைய மார்க்கெட் நிலவரத்தில் எங்கள் கவுரவம் சென்ட் ஏழு முதல் எட்டு லட்சம் வரை விலை போகும். எட்டே கால் சென்ட் இருக்கும் இடத்தை விற்றாலொழிய என் மூன்று மகள்களுக்கும் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. என் அப்பா எனக்கு செய்த சகாயம் நான் அவருக்கு ஒரே மகன். ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்திருந்தால் கௌரவம் துண்டாப்பட்டிருக்கும்.

இந்த சூழலில் அப்பா இறந்த கையோடு வீட்டு பத்திரத்தை தேடிய எனக்கு அந்த கணத்திலிருந்து தொடங்கியது சோதனை. வீடு விற்பனை என்ற தகவலை இந்த உலகத்திற்கு அறிவிக்கும் முன்பாக வீட்டை தரகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அது மகளுக்கு வரன் பார்க்கும் தரகர், வீடு விற்பனை செய்யும் புரோக்கர் என்று இனம்காண முடியாத அளவிற்கு இருந்தது. சிலர் இரண்டு விவகாரங்களையும் கவனிக்கும் புரோக்கர்களாக இருந்தனர். இதுகுறித்து எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருந்தது, நம் சொத்திற்கு இவ்வளவு போட்டியா என்று.

ஊரின் ரைஸ்மில் ஓனர் எங்கள் விலைக்கு கட்டுப்பட்டு வீட்டை வாங்க சம்மதித்து வீட்டு பத்திரம் மற்றும் துணை ஆவணங்களை வாங்கி சென்றவர், சென்ற வேகத்தில் திரும்பினார். பத்திரத்தில் புல எண் உட்பட நிறைய குழப்பம் இருப்பதாகவும் பட்டா வேறு யாரோ ஒருவர் பெயரில் இருப்பதால் வீட்டை விற்பதில் வாங்குவதில் பிரச்சனை ஏற்படும் என்று கூறி பின்வாங்கினார். விற்பனை முடிந்து பணத்தை எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம் என்ற அதிதீவிர யோசனையில் இருந்த எனக்கு அவர் கூறிய வார்த்தை கலகத்தை ஏற்படுத்தியது.

கடந்த இரண்டு மாதத்தில் யார் யாரையோ பார்த்து நேரமும் காலமும் மிச்சமானதே ஒழிய வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எல்லாம் ஆரம்ப இடத்திலேயே நின்றது. ஒரு எழுத்தாளனுக்கு வாழ்வென்பது நான்கு சுவர்களுக்குள் தான். அவனது உலகம் குறுகியது. ஆனால் அதன் பரப்பு பிரபஞ்சம் தாண்டியது. நிஜவாழ்வில் கிடைக்கும் அவமான, குற்ற உணர்வுகளுக்கு கதைமாந்தர்களை வைத்து வடிகால் தேடும் விசித்திரகுணம் வாய்ந்தவர்கள். அவர்கள் நிர்மாணித்து வைத்திருக்கும் உலகத்திற்கு அவர்கள்தான் தீர்ப்பு எழுதவேண்டும். புறஉலக சூழ்நிலை அவர்களை கிஞ்சித்தும் பாதிக்காது. அவர்களின் நண்பர்கள் எல்லாம் கதைக்குள் இருப்பவர்கள். எனிலும் வெள்ளத்தில் வீடு முழ்கும் போது மேல் ஓட்டை பிரித்தாவது வெளியே வந்துவிட வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் தான் ஒரு மனிதரை பார்க்க தாலுகா அலுவலகத்தில் நின்று கொண்டிருக்கிறேன். கையில் மஞ்சள்ப்பை அது நிறைய வீட்டு ஆவண நகல்கள். எப்படியும் ஆயிரம் நகல் எடுத்திருப்பேன். இன்றைய தேதியில் எங்கள் ஊர் ஆனந்தம் டெக்ஸ்டைல்ஸ் ஆடித்தள்ளுபடி நோட்டீசை விட அதிக பிரதிகள் எடுக்கபட்டது என் வீட்டுப் பத்திரம் தான். ஊரில் இருக்கும் எல்லா புரோக்கர்களிடமும் தலா ஒரு பிரதி இருந்தே ஆகவேண்டும்.  

வாழ்நாளில் எந்தக்கவலையும் இல்லாமல் எந்த நாவல் மரத்தை சுற்றிசுற்றி வந்தேனோ அந்த மரநிழலில் தான் ஆயிரம் கவலைகளோடு நிற்கிறேன். மூத்தவளுக்கு பார்த்த வரன் எல்லா பொருத்தமும் கூடி வந்தும் எனக்கு பணப்பொருத்தம் இல்லாததால் தடைப்பட்டு நிற்கிறது. யாருக்காக காத்திருந்தேனோ அவர் தன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாத அந்தக்காலத்து லூனா போன்ற வாகனத்தில் வந்திறங்கினார். இதுபோன்ற இருசக்கரத்தை வைத்து ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன் என்பது இப்போது தேவையில்லா ஒன்று.

வந்தவர் எனை ஏற இறங்க பார்த்தார். பார்ப்பதற்கு தெலுங்கு சினிமாகுணசித்திர நடிகர் போல இருந்தார். வெள்ளை சட்டை அதில் ஆளுங்கட்சியின் நான்காவது கட்ட தலைவரின் புகைப்படம். அதற்கு கீழே முதல்வர் படம் வெள்ளை சட்டை மீறி அப்பட்டமாக வெளியே தெரிந்தது. அது அப்படி தெரியவேண்டும் என்பதற்காகவே செய்வது. இவரை இதற்கு முன்பாக பார்த்ததில்லை. முகத்தில் கரடுமுரடு தாடி. குரல் உடைந்து போய் அதுவும் கரடுமுரடாக இருந்தது.  இவர் வாழ்வில் நிறைய பேசியிருக்க வேண்டும் ஆகையால் தான் குரல் இப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். பின்பு பான்மசாலா ஒன்றை அப்படியே வாயில் கொட்டி என் அனுமானத்தை பொய்யாக்கினார். பின்பு என்னிடம் இருந்த ஆவண பிரதிகளை அவசரமாக திருப்பி திருப்பி பார்த்தார். அவரது செய்கை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வழக்கு ஒன்றில் வாதாடும் எதிர்தரப்பு வழக்கறிஞர் போலிருந்தது. இவரும் ஒரு புரோக்கர். தாலுகா அலுவலக ஊழியர்களுக்கும் கையில் காகிதங்களோடு யாரை அணுகுவது என்று விளங்காத பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுபவர்.

கீரைக்கட்டுக்கு போகும் ஆடு போல அவர் பின்னால் நடந்தேன். கடந்த இரண்டு மாதமாக அரசு விடுமுறை தவிர மற்ற எல்லா நாட்களிலும் அலுவலகம் வந்திருக்கிறேன். என்னோடு வரும் ஆட்கள்தான் மாறியிருக்கிறார்கள் தவிர நான் அப்படியேதான் இருக்கிறேன். சென்றவர் நான் வழக்கமாக பார்த்து வெறுத்து வரும் ஊழியரை சந்தித்து காதில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்தான் பட்டா மாறுதல் அளிக்கும் அதிகாரி. இவர் பரிந்துரை செய்தால் ஆவணம் எளிதில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று வேலை முடிந்துவிடும். என் முதல் கவிதை தொகுப்பு வெளியாகிய போது ஏற்பட்ட படபடப்பை விட நாலு மடங்கு அதிகமாக இருந்தது. புரோக்கர் கூறியதை காதில் வாங்கிய அதிகாரி என்னை முறைப்பதை போல பார்த்தார். சட்டென்று நான் கலைமாமணி விருது வாங்கியவன் என்பதை பகிரங்கமாக அறிவித்தால் ஏதேனும் மரியாதை கிடைக்குமோ என்னவோ என்றிருந்தது.

“நிலைமை முன்ன மாதிரி இல்ல ஸார். இதுல நிறையா ரூல்ஸ் இருக்கு. நீங்க சொல்ற மாதிரியெல்லாம் பண்ண முடியாது ஸார்” என்றார் மீண்டும். புரோக்கரும் என்னை ஏமாற்றமாக பார்த்தார். பட்டா மாறுதல் கோரி அளித்த விண்ணப்பதை ஏற்க மறுத்த டவுன் சர்வேயர் வெட்டிக்கொலை. எழுத்தாளர் வெறிச்செயல் என்றெல்லாம் மனதில் தினத்தந்தி செய்திகள் ஓடி மறைந்தது.

ஸார், இதுல வேற எதோ விஷயம் இருக்குன்னு நினைக்கிறேன். நான் சொன்னா உடனே செஞ்சு கொடுக்குற மனுஷன் இன்னைக்கு முடியவே முடியாதுன்னு சொல்றார். ஒரு ஒருவாரம் வெயிட் பண்ணுங்க என்னென்னு விசாரிச்சு சொல்றேன் என்று கிளம்பினார். எனக்குதான் போக முடியாமல் நாவல்மர நிழலில் அமர்ந்தேன். இதுவரை உதவி என்று எந்தக் கதவையும் தட்டியதில்லை. அது குறித்த கர்வம் நிறையவே உண்டு. இனி அந்த கர்வம் எதற்கும் உதவாது என்ற முடிவுடன் மெதுவாக எழுந்து வீட்டுக்கு நடந்தேன்.

எழுத்தாளர் சங்கத்தில் அதிதீவிரமாக செயல்பட்ட போது பெருநகர கமிஷனர் ஒருவரை தெரியும். எந்த உதவி என்றாலும் கேட்குமாறு கூறியிருக்கிறார். அப்போது இருந்த கொழுப்பு அடைப்பில், எனக்கு தேவைப்படாது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் என்று கூறியதாக ஞாபகம். இப்போது எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் வீடு பக்கத்தில் இருக்கும் கிராமம்தான். நாளை முதல் வேலையாக அவரை சந்திக்க வேண்டும். கௌரவம் பார்த்தது போதும் என்று தோன்றியது. நமக்காக குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?

விடிந்தும் விடியாததுமாய் கிளம்பினேன். நல்ல வேலையாக அது ஞாயிற்றுக்கிழமை. எப்படிப்பட்ட ஜில்லா கலெக்டரும் வீட்டில்தான் இருக்க வேண்டும். அப்பொழுதே கமிஷனராக இருந்தவர் இன்று அதைவிட பெரிய பதவியில் இருக்க வேண்டும். யார் கண்டது, என்னை அலைக்கழித்த அந்த ஊழியரை போனில் பிடித்து நெம்பி எடுக்கும் திறன்கொண்ட பதவியில் கூட இருக்கலாம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஊரில் இருந்து வெறும் எட்டு மையில் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்திற்கு இப்போதுதான் வருகிறேன். வண்டியை நிறுத்திவிட்டு ஒரு டீக்கடையில் விசாரித்தேன். பதறியபடி அவரது வீட்டுக்கு அழைத்து செல்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் டீ குடித்துக்கொண்டிருந்தவர் கிளாஸை வாயில் இருந்து எடுப்பதை கூட கடினமான பணியாக கருதியிருக்கக் கூடும். அப்படியே கையில் படம் வரைந்து காட்டினார். நேராய் போய் முதல் வலது திரும்ப வேண்டும் என்பது மட்டும் புரிந்தது.

வண்டியோடு விலாசம் கண்டுபிடிப்பது காரில் கறவை மாடு மேய்ப்பது போன்ற கடுமையான பணி. போகிற பாதை சரியா தவறா என்பது கூட அறியாமல் பயணிப்பது விவரிக்க முடியாத அவஸ்தை. என்ன பெரிய அவஸ்தை? மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூட யோக்கியதை இல்லாமல் பூர்வீக சொத்தை ஏப்பம் விட துடிக்கிறேனே, அதை விடவா? இருக்கும் நிலத்தை விற்க முடியாமல் மாதக்கணக்கில் தாலுகா அலுவலகம் நடக்கிறேனே அதை விடவா? பல எண்ணக்குமுறலோடு முகவரி குழப்பமும் வந்து சேர்ந்தது. ஒரு கிராமத்தில் விலாசம் தேடி அலைவது நான் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும். இனி பயனில்லை என்று பார்க்க விபரமாய் தெரிந்த ஒருவரிடம் மீண்டும் பாதை விசாரித்தேன். அவரா? என்று ஆச்சரியமாய் கேட்டான். எனக்கு பயம் வந்துவிட்டது. ஆள் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்று. அந்தக் கேள்வியை கேட்டப்பிடிக்காமல் கை காட்டிய திசை நோக்கி நடந்தேன்.

பெரிய கதவு போட்ட வீடு. வண்டியை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன். ஆள் அரவமில்லாமல் அது கிராமத்துக்குள் இன்னொரு கிராமம் போலிருந்தது. பாதையின் நீளம் அப்படி. யாருங்க வேணும்? என்று வெகுதூரத்திலிருந்து ஒருவர் கேட்டார். அதை ஒரே வார்த்தையில் எப்படி சொல்வது? அதுவும் உரக்கக் கத்திக்கொண்டு? கமிஷனர பாக்கணும் சக்தியை திரட்டிக்கொண்டு கத்தினேன். என் பதிலை எதிர்பாராமல் எதையோ கரைத்துக்கொண்டிருக்கும் மும்மரத்தில் இருந்தார். நல்லவேளையாக எதிர்பட்ட பெண்மணி கமிஷனரின் மனைவி என்பதை யூகிக்க முடிந்தது. வேகமாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். வரவேற்று உள்ளே உட்கார வைப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்னை மாடிக்கு அழைத்துச் சென்றது சூழ்நிலை அசாதாரணம் என்றது.

அவர் கை காட்டிய அறையில் கமிஷனர் பொட்டலம் போல சுருண்டு கிடந்தார். அறையின் உள்ளே சிறுநீர் துர்நாற்றம். உண்மையில் இப்போது அவருக்கு தான் உதவி தேவை. பக்கவாதத்தில் கழுத்துக்கு கீழ் செயல்பாடுகள் இல்லை என்று அவரது மனைவி கூறினார். கண் விழித்து பார்த்த அவரிடம் எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. என்னை அடையாளம் தெரிகிறது என்பது அவரது வேதனை கலந்த புன்முறுவல் சொன்னது. நலம் விசாரித்துவிட்டு விஷயத்தை கூறினேன். பதிலுக்கு அவர் எதோ கூறினார். அவர் சொன்னதில் பத்து சதவீதம் மட்டுமே விளங்கியது. வார்த்தைகளை எடுத்துக்கோர்த்து பார்த்ததில் அவரும் அதைத்தான் கேட்டார். ஆம், வீட்டு ஆவணத்தின் நகல் பிரதி. ஊருக்கே கொடுத்தோம். இவருக்கு கொடுப்பதில் தவறில்லை என்பதால் இவருக்கும் ஒரு பிரதி. அதைக்கூட வாங்க முடியாதவராக இருந்தார். அருகில் இருந்த அலமாரியில் மாத்திரை பைகளுக்கு அருகில் வைத்தேன்.

வாழ்க்கை நாளுக்கு நாள் சலிப்பாகவும் கையறுநிலை நோக்கி போவதை போல இருந்தது. ஒரு அரசு அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்க தயாராக இருந்தும் ஒரு வேலை ஆகாதது விந்தையிலும் விந்தை. சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய ஒரு எழுத்தாளன் தன் சூழ்நிலைக்காக எல்லா குறுக்குவழியையும் பயன்படுத்துவது இன்னும் அவமானம். நடைமுறை உலகத்திற்கு தானும் மாறியது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்தாளன், தனித்துவமிக்கவன் எனும் கர்வத்தில் இருந்த நான் இப்போது சாலையில் செல்லும் ஒரு சராசரி மனிதனாகி போனது சோகம். எப்படிப்பட்ட சிறப்புமிக்க மனிதனாக இருந்தாலும் அதிகாரம் இல்லையென்றால் அரசு இயந்திரம் முன்பு மூர்ச்சையாகி சக்கையாகிதான் வெளியே வர முடியும். ஒருகாலத்தில் நான் எழுதிய காலச்சக்கரம் எனும் நாவலில் கதையின் நாயகன் தான் நினைத்த மாத்திரத்தில் இறந்தகாலம், எதிர்காலம் செல்லலாம். அதைப்போல ஒரு இரண்டு வருடம் முன்னோக்கி பயணிக்க வேண்டும். அப்பொழுதாவது இந்த பிரச்சனை ஒழிந்ததா என்பதை பார்க்கவேண்டும். வீட்டுக்கு செல்லும் வழியில் தான் தாலுகா அலுவலகம் இருந்தது. நாவல் மரத்தின் கீழ் ஒரு மூதாட்டி மஞ்சள் பையுடன் நின்று கொண்டிருந்ததை பார்க்கும் போதே மனம் கனத்துவிட்டது. முன்பு கண்ணில் காணும் காட்சிகள் யாவும் கதையாக விரியும். இப்போது அதுவே பெரும் துயரமாக மாறியிருக்கிறது.

எனக்கு திருமணமான புதிதில் மனைவியிடம் நான் எழுதப்போகும் கதையை முன்கூட்டியே சொல்லிவிடுவேன். கருத்துக்காக அல்ல, எப்படிப்பட்ட ஒரு மகத்தான சிந்தனாவாதியை நீ கணவனாக அடைந்திருக்கிறாய் என்பதை உணரச் செய்யும் அற்பமான முயற்சிதான் அது. திருமணமாகி இரண்டு வருடத்தில் என் அற்பத்தனமான யுக்தியை அறிந்து கொண்ட அவள் கதை சொல்ல ஆரம்பித்தாலே எதிர்கால நிலைகுறித்து கூறி கலக்கமடைய செய்வாள். அதுமுதல் கதை சொல்வதை நிறுத்திவிட்டேன். கடந்த இரண்டு மாதமாக அனுதினமும் தாலுகா அலுவலம் சென்றுவிட்டு சோர்வாக வரும் என்னை பார்த்து நல்ல கதை ஏதேனும் சொல்ல மாட்டாரா என ஏங்க ஆரம்பித்துவிட்டாள். என்னிடம் கதைகளுக்கா பஞ்சம், வழக்கம் போல நம்பிக்கை தரும்  ஒரு தாலுகா கதையா சொல்லி முடித்தேன். அவள் நம்பிக்கையுடன் எனக்காக காபி தயார் செய்ய சமையலறை சென்ற பொழுது எனக்கே கண்கள் கலங்கியது.

இப்போது அந்த புரோக்கர் சொன்ன ஒருவாரத்தை நோக்கிதான் நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் கனவில் வருவாய்த்துறை அமைச்சர் என் வீட்டுக்கே வந்து பட்டா மாறுதல் செய்த ஆணையை வழங்கி நடந்த தாமத, தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்தார். நானும் அரசு நிர்வாகம் மீது கோபமில்லை, கொஞ்சம் வருத்தம்தான் இருக்கிறது என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியெல்லாம் கொடுத்தேன்.

இதற்கிடையில் நீண்ட நாட்களாக எழுதி பரணில் போட்டு வைத்த நாவலை சரி செய்யும் பணியில் இருந்தேன். நாவல் இறுதி வடிவத்திற்கு தயாராகிவிட்டது. எவ்வளவு முயன்றும் தலைப்பு தான் முடிவாகாமல் இழுத்தடித்து. சில நேரங்களில் தலைப்பு ஒட்டுமொத்த நாவலின் அடிநாதத்தை சிதைத்துவிடும். இது பல பெரிய எழுத்தாளார்களுக்கும் நிகழ்ந்துள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு எழுத்தாளராக மாறியிருக்கிறேன். அதன் நீட்சியாக ஒரு பதிப்பகம் எனது நாவலை ஒரு நல்ல விலை கொடுத்து வாங்க சம்மதித்து இருந்தது. நாவலில் சில திருத்தும் செய்து கேட்டார்கள். பழைய ஆளாக இருந்திருந்தால் சிங்கமென கர்ஜித்து இருப்பேன். என் குழந்தையை குறை சொல்ல நீ யார்? என்று கலகம் செய்திருப்பேன். இரண்டு மாத வாழ்வு பல படிப்பினையை கொடுத்துள்ளது. அந்த படிப்பினை நல்லதா கெட்டதா என்றெல்லாம் அறிய முயலவில்லை நான்.

அவ்வப்போது வீடு, பட்டா, தாலுகா அலுவலகம், நாவல்மரம் குறித்த சிந்தனை வந்து இடது பக்க மார்பில் வலியாக வந்து பிசையும். புரோக்கர் கூறிய ஒருவாரம் போய் இரண்டு நாட்களாகிவிட்டது. அவருக்கு போன் செய்யலாமா அல்லது நேரில் சென்று பார்க்கலாமா? என்ற யோசனையில் இருந்த எனக்கு அலைபேசி ஒலித்தது. புதிய எண். என் அலோவை சட்டை செய்யாமல் அவசரமாக தாலுகா அலுவலகம் வருமாறு அழைத்தார்கள். அழைத்தது யாரென்று கேட்க திராணியற்று மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல உடனே வருகிறேன் என்றேன். மீண்டும் பரபரப்பு, மீண்டும் இடது பக்க வலி. அடுத்த ஏழாவது நிமிடத்தில் அலுவலக வளாக நாவல் மரத்தில் இருசக்கரத்தை செலுத்திவிட்டு உள்ளே இருந்த எழுத்தாளனை மறந்து ஓடினேன்.

நீங்கதான் பட்டா மாறுதல் கேட்டீங்களா? என்றார் வழக்கமாக கேள்வி கேட்கும் அதிகாரியை விட இரண்டுபடி மேல்நிலை அதிகாரி ஒருவர். ஆமாம் என்று தலையாட்டினேன்.   என்னிடம் இருந்த நகலை வாங்கிப்பார்த்தார். என் கைகள் வியர்வையில் அந்த நகலை நனைத்திருந்தது. நேரடியாக விஷயத்துக்கு வந்தார். கமிஷனரை எப்படி தெரியும்? என் நண்பர் என்றேன். இடைப்பட்ட நாட்களில் எதோ நல்லது நடந்திருக்க வேண்டும். உங்களுக்கு ஒருவாரத்தில் பட்டா உங்க பெயரில் மாறிவிடும் என்றார். ஆனந்தக்கண்ணீர் வரும் முன்பே அவசரமாக அப்புறப்படுத்தினேன். பேசிக்கொண்டிருக்கும் போது அந்த புரோக்கரும் அவசரமாக உள்ளே வந்தார். அந்த அவசரம் நிகழ்த்து கொண்டிருக்கும் அற்புதங்களுக்கு நானும் ஒரு காரணம் என்று சொன்னது.

மேலதிகாரி சென்றதும் புரோக்கருடன் அந்த சர்வேயரும் சேர்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். தெரிவித்த வாழ்த்துக்கு கட்டணமாக கொஞ்சம் பணம் கேட்டார்கள். இருந்த மகிழ்ச்சியில் மளிகை சாமான் வாங்க வைத்திருந்த பணத்தை அப்படியே கொடுத்தேன். வாக்களித்தபடி கமிஷனர் உதவிவிட்டார். இப்பொழுதே அவரை சென்று பார்க்க வேண்டும் போல இருந்தது. மனைவியிடம் விஷயத்தை சொன்னேன். மகிழ்ந்தாள் அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

அலுவலகத்திற்கு வெளியே வந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நாவல் மரம் பழைய உணர்வை கொடுத்தது. வண்டியை கிளப்பும் முன் அலைபேசி ஒலித்தது. அது என் நாவலை வெளியிடும் பதிப்பகத்தின் அலுவலக இலக்கம். என்ன ஸார் தலைப்பு முடிவு செஞ்சாச்சா? கவர் பேஜ் டிசைனுக்கு அனுப்பனும் என்றார் அந்த மேலாளர். தலைப்பு ரெடியா இருக்கு எழுதிக்கங்க என்றேன், “

பகுதிநேர நியாயங்கள்!”

*****************************

Exit mobile version