ரிஷி மூலம் – பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 46 ரிஷி மூலம் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

விநாயகர் படத்தருகில் நின்று கண்களை மூடிக்கொண்டு “விநாயகப்பெருமானே இன்று நான் நடிக்கும் படக்காட்சியில், எந்தவித ஆபத்தும் வரக்கூடாது. படத்தில் நடித்தற்கான சம்பளமும் உடனே கிடைக்க வேண்டும்” என்று சினிமா கதாநாயகனுக்கு டூப் போடும் நடிகர் கிருஷ்ணன் வேண்டிக்கொண்டான். இன்று கொடைக்கானலில் உள்ள பெரிய பங்களாவில் பத்து மணிக்கு படபிடிப்பு.  அவன் ஏழு மணிக்கே கிளம்பி விட்டான். அவன் தங்கியிருக்கும் இடத்திலிருந்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும்.  அவன் பத்து நிமிடங்கள் லேட்டாகப் போனால்கூட இயக்குனரும் தயாரிப்பாளரும் அவனைத் திட்டித் தீர்த்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

      கிருஷ்ணன் படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து கஷ்டப்பட்டு நடித்துக் கொடுப்பான்.  ஆனால் அந்தப் படத்தில் கதாநாயகன் தன்னோட உடலை அலட்டிக்கொள்ளாமல் நடிப்பதற்கும், அவனுக்காக டூப் போடும் கிருஷ்ணன் சண்டைக்காட்சிகளில் நடித்ததற்கும் சேர்த்து மக்களிடம் கைதட்டலும் பெயரும் புகழும் வாங்கி விடுவான். சூட்டிங் ஸ்பாட்டிலும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களை  இயக்குனர்,  தயாரிப்பாளர் நன்கு  கவனிப்பார்கள். டூப் நடிகர் கிருஷ்ணனை யாருமே கண்டு கொள்வதில்லை. இது கிருஷ்ணனுக்கு வருத்தமாக இருந்தாலும்,  வயிற்றுப் பிழைப்புக்காக சினிமாவில் டூப் போட்டு நடித்துக் கொண்டிருந்தான்.

               கிருஷ்ணன் ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதற்கு சென்னையில் உள்ள பல ஸ்டூடியோக்களுக்கு ஏறி இறங்கி இருக்கிறான். அவன்  இயக்குனர் தயாரிப்பாளர்களை சந்தித்து சான்ஸ் கேட்கும்போது, சிலபேர் ‘சான்ஸ் வரும்போது சொல்லி அனுப்புறேன்’. என்று கூறி விடுவார்கள்.

      ஒருமுறை கிருஷ்ணன் யார் யார் காலிலே விழுந்து கஷ்டப்பட்டு சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று, அப்போது பிரபலமாக இருந்த இயக்குனரிடம் சான்ஸ் கேட்டு நின்றான்.  அந்த இயக்குனர் அவனை ஏற இறங்கப் பார்த்தார். உதவி இயக்குனரை அழைத்து ‘’ஏம்ப்பா இவன் நம்ம படத்தில் நடிக்கும் சந்திரன்போல் இருக்கான்ல்ல. அந்த  நடிகருக்கு சண்டைக்காட்சிகளில் இவனை டூப் நடிகனாகப் போட்டுடலாம்ன்னு நெனைக்கிறேன்’’ என்று கூறினார். இயக்குனர் பேசியதை வைத்து படத்தில் சான்ஸ் கிடைக்கும் என்று கிருஷ்ணன் நம்பினான்.

          “ உன் பேர் என்ன சொன்னே ஓ கிருஷ்ணன்.  என் படத்தில் நடிக்கும் ஹீரோ சந்திரனுக்கு டூப் போட்டு நடிக்க உனக்குச் சம்மதமா” என்று கேட்டார்.  கிருஷ்ணன்  வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்தான். அன்று சந்திரன் நடிகருக்காக டூப் போட்டவன்தான் தொடர்ந்து கிருஷ்ணன் டூப் நடிகனாகவே சினிமா உலகில் முத்திரைக் குத்தப்பட்டான். அவன் உயிருக்கு ஆபத்தான சண்டைக்காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்து வந்தாலும், ஊதியத்தை தயாரிப்பாளரிடம் இயக்குனரிடம் வாங்குவதற்கு தெரு நாய்போல் அலைந்து கொண்டிருப்பான்.

      இன்று சந்திரன் நடிக்கும் படம் ‘ஊர் சுற்றும் மைனர்’. கொடைக்கானலில் உள்ள பெரிய பங்களாவில் சூட்டிங். அந்தப் படத்தில்  சந்திரன் ஹீரோயினைக் காப்பாற்ற  வில்லனோடு சண்டை போடும் காட்சியில் பங்களாவின் உயரத்தில் இருந்து உருண்டு புரண்டு கீழே குதிக்க வேண்டும். பங்களாவின் மேல்மாடியில் கதாநாயகன் உருண்டு புரளும் சண்டைக் காட்சியில் கதாநாயகனுக்குப் பதில் கிருஷ்ணன் கீழே குதித்தான். காட்சி நல்லபடியாக அமைந்தது. கிருஷ்ணனுக்கு கீழே விழும்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்கக்கூட முடியவில்லை.

      கிருஷ்ணன் கால்முறிவு சரியானபின் படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை கேட்டு வாங்குவதற்கு, தயாரிப்பாளர் ராமநாதன் பங்களாவுக்குச் சென்றான்.  ராமநாதன் அவனை மணிக்கணக்காக காக்க வைத்து பிறகு அழைத்தார்.  கொடைக்கானலில் ‘ஊர் சுற்றும் மைனர்’ படத்தில் நடித்த ஹீரோ சந்திரனுக்கு டூப் போட்டு நடித்தற்கு இன்னும் தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறினான்.

 “கிருஷ்ணன் என்னப்பா சொல்றே அந்தப் படம் ரீலீஸ்யாகிவிட்டது. அந்தப்படத்தில் நடிச்சங்கவளுக்கெல்லாம் பணம்  கொடுத்து செட்டில் செய்துட்டேனே. இப்ப வந்து பணம் கொடுக்கல்லேன்னு கேட்கிறாயே.  வாங்கிட்டு மறுபடியும் வந்து என்கிட்ட கேட்கிறாயா?” என்று கோபத்துடன் கத்தினார்.

      “அய்யா நான் கொடைக்கானலே படக்காட்சியில் நடிக்கும்போது கீழே விழுந்து  கால் எலும்பு உடைந்திட்டது. கால் சரியாக  ரெண்டு மாசங்களுக்கு மேலாகிட்டது. அந்தப்படபிடிப்புக்கு பின்னர், உங்களை இப்பத்தான் பார்க்கறேன். சம்பளப்பணம் எதுவும் இன்னிக்கி வரை  வாங்கல. குடும்பம் கஷ்டமான நிலையில் இருக்கு.  தயவுசெய்து படத்தில் நடிச்சத்துக்காக பேசியபடி பணத்தைக் கொடுங்க ஐயா.” என்று கிருஷ்ணன் கெஞ்சினான்.

      “என்னப்பா கிருஷ்ணன் கீறல் விழுந்த ரிக்காடுபோல் சொன்னதையே சொல்லிட்டு இருக்கே. அந்தப் படத்தில் நடித்த அத்தனைப்பேருக்கும் பணமெல்லாம் கொடுத்துட்டேன். என்னை இது சம்பந்தமாக தொந்தரவு செய்யாதே” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

        இவற்றையெல்லாம் அந்தப் படத்தில் நடித்த சிரிப்பு நடிகர் கதிர்வேலு கேட்டுக் கொண்டு இருந்தான். கிருஷ்ணன் அந்தப் படத்தில் நடித்த விபரமும் கீழே விழுந்தபோது அவன் கால் முறிவு ஏற்பட்ட விபரமும் கதிர்வேலுவுக்கு நன்கு தெரியும். கதிர்வேலால் ராமநாதனிடம் அதனை எடுத்துக் கூறமுடியவில்லை. அடுத்த படத்தில் அவனுக்குச் சான்ஸ் கிடைக்காதே என்ற சுயநலம்தான். ராமநாதனிடமிருந்து சம்பளத்தை வாங்க முடியாது என கிருஷ்ணன் முடிவு செய்து தன் தலைவிதியை எண்ணி அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டான்.

      அவன் விரக்தியுடன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த கதிர்வேலுவுக்கு மனசாட்சி உறுத்தியது. எந்தவிதத்திலாவது அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கதிர்வேலு நினைத்தான். அவன் மனதில் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. ராமநாதன் பங்களாவில் கிருஷ்ணனுக்கு நடந்ததை பற்றி அப்போது பிரபலமான நடிகர் வைரமணியிடம் தெரிவித்தால், கிருஷ்ணனுக்கு நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டான்.

கதிர்வேலு வைரமணியிடம் கிருஷ்ணனுக்கு ராமநாதன் பங்களாவில் நேர்ந்த அவமானம், அவனுக்குரிய ஊதியம் கிடைக்காதது பற்றி விளக்கினான்.   “அண்ணன் நீங்கதான் கிருஷ்ணனுக்கு ஊதியம் கிடைக்க வழி செய்யணும்” என வேண்டினான்.

      “கதிர்வேலு என்கிட்ட சொல்லிட்டேலே ராமநாதனிடம் எப்படி அந்த பணத்தை வாங்கி கிருஷ்ணனிடம் சேர்ப்பிக்கறேன்னு  மட்டும் பொறுத்திருந்து பார். நீ இதுபற்றி யாரிடமும் ஒண்ணும் கூறவேண்டாம்” என்று வைரமணி உறுதி கூறினான்.

      அன்று ஞாயிற்றுக்கிழமை. தயாரிப்பாளர் ராமநாதன், நடிகர் வைரமணி வீட்டுக்கு, மகள் திருமண அழைப்பிதழுடன் சென்றார். அவர் வரும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று வைரமணி தனது உதவியாளரிடம் கூறியிருந்தான்.   அதன்படி உதவியாளர் ராமநாதனை இரண்டு மணி நேரம் காக்க வைத்து “ஐயாவை நீங்க இப்ப பார்க்க முடியாது” எனக் கூறி அனுப்பி விட்டான்.

        வைரமணியை சந்தித்து மகள் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்கு மீண்டும் ராமநாதன் வைரமணியின்  உதவியாளரை அணுகினார். அவரை இரண்டு மணி நேரம் காக்க வைத்து வைரமணியை சந்திக்க அனுமதி அளித்தான்.

      ராமநாதன் வைரமணியைப் பார்த்தவுடன் தலைகுனிந்து, இருகரம் கூப்பி பழத்தட்டில் திருமணப்பத்திரிகையை வைத்து கொடுத்தார். வைரமணி ஒன்றும் தெரியாதவன்போல் சிரித்துக்கொண்டே “என்ன மிஸ்டர் ராமநாதன் என்ன விஷயம்” என்று கேட்டான்.

      ராமநாதன்“ஐயா என்னோட மகளுக்கு வருகிற வெள்ளிக்கிழமை கல்யாணம் வைத்திருக்கேன்”. என்று கூறினார். அவர் கொடுத்த அழைப்பிதழை வைரமணி எடுத்துப் படித்தவன் “என்ன ராமநாதன் மாரேஜ் என் தலைமையில் நடைபெறுவதாக போட்டிருக்கு. தலைமையேற்று நடத்துதற்கு  எப்ப என்கிட்ட பெர்மிஷன் கேட்டீங்க.

என்கிட்ட கேட்காமல் என்னோட தலைமையில் என்று நீங்க எப்படி இன்வெட்டேஷன்ல போடலாம்.”

      “கேட்காமல் பத்திரிகையில் போட்டது தப்புதான். மன்னிச்சிடுங்க. என்னோட மகள் கல்யாணத்துக்கு வந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கறேன்.” 

      “சரி பரவாயில்லை மிஸ்டர் ராமநாதன்.  சுப காரியமாக இருப்பதால் கண்டிப்பா மாரேஜ்க்கு வரேன்.  மிஸ்டர் ராமநாதன் ஒரு கண்டிசன் நான் மாரேஜ்க்கு வரணும்னா பணம் வாங்காமல் எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லே. உங்களுக்குத் தெரிந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்”.

“அய்யா நீங்க மகள் கல்யாணத்துக்கு வர்றேன்னு சொன்னதே பெரிய விஷயம். அதற்கு பணம் எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்குங்க” என்றார்.

“சரி! உங்க மகள் மாரேஜ்க்கு வரேன். அதற்கு முப்பதாயிரம்  செக்காக அல்ல ரெடி கேஸாக வேணும்” என்று வைரமணி கண்டிப்புடன் கேட்டான்.

ராமநாதன் மறுத்துப் பேசாமல் லெதர்பேக்லிருந்து ரூபாய் முப்பதாயிரம் எடுத்து, தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தார். அவர் வைரமணியை, கல்யாணத்துக்கு வரும்படி இருகரம் கூப்பி மீண்டும் அழைப்பு விடுத்து விடை பெற்றார்.

 அன்று வெள்ளிக்கிழமை. ராமநாதன் வீட்டுத் திருமண விழா களை கட்டியது. திருமண மண்டபம் நடிகர் நடிகைகள் இசை அமைப்பாளர்கள்  என கூட்டம்  நிரம்பி வழிந்தது. மகள் திருமணத்திற்காக பணத்தை தண்ணீர்போல் வாரி இறைத்திருந்தார்.  வைரமணி வருகைக்காக ஆளுயர ரோஜா மாலையுடன் மண்டபத்தின் வாசலில் காத்திருந்தார். வைரமணி காரிலிருந்து இறங்கியவுடன் ராமநாதன் ஓடிச்சென்று, மாலையைப்போட்டு வரவேற்றார். ராமநாதன் வைரமணியின் அருகில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது வைரமணி தன்னோட உதவியாளரைப் பார்த்தார். உதவியாளர் புரிந்து கொண்டு ஒரு கவரை எடுத்து வைரமணியிடம் கொடுத்தார். அந்தக் கவரை வைரமணி வாங்கி  ராமநாதனிடம் அமைதியாகக் கொடுத்தான்.

வைரமணி “ என்ன கவர் என்று பார்க்கிறீங்களா? மிஸ்டர் ராமநாதன். இது நீங்க எனக்கு கொடுத்த முப்பதாயிரம்ந்தான். வேறொன்றுமில்லை வாங்கிக்கொள்ளுங்க.” என்றான்.

ராமநாதன் “ஐயா எதுக்கு இதை என்கிட்ட திருப்பிக் கொடுக்கிறீங்க.” என்று கேட்டார்.

“பொறுங்கள் மிஸ்டர் ராமநாதன். அவசரப்படாதீங்க“ என்ற வைரமணி, உதவியாளர் பக்கம் திரும்பி டூப் நடிகர் கிருஷ்ணனை வரும்படும்படி கூறினார். சிறிது நேரத்தில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு கிருஷ்ணன் வைரமணியின் முன்பாக பணிவாக வந்து நின்றான். கிருஷ்ணனைப் பார்த்தவுடன் ராமநாதன் திகைத்து நின்றார்.

‘’மிஸ்டர் ராமநாதன் நான் உங்ககிட்ட இப்ப கொடுத்த முப்பதாயிரத்தை உங்க கையால் கிருஷ்ணன்கிட்ட கொடுங்க.” என்று கூறினான்.

ராமநாதன் அந்தக் கவரை கிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு ஒன்றும் புரியாமல் நின்றார். “என்ன ராமநாதன் இந்தப் பணத்தை கிருஷ்ணனிடம் ஏன் கொடுக்கச் சொன்னேன்னு உங்களுக்கு இப்ப  நல்லா புரிஞ்சுருக்கும்ன்னு நான் நினைக்கிறேன். மிஸ்டர் ராமநாதன் நான் நல்லது செய்யணும்ன்னு நினைத்துட்டால் இந்த நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் பார்ப்பதில்லை.” என்றான்.

“எனக்கு நல்லா புரிந்துட்டது அய்யா. நான் கிருஷ்ணன்கிட்ட நடந்துகொண்டது போல் இனிமேல் யாரையும் அவமானப்படுத்தி பேசவோ நடந்துக்கவோ மாட்டேன்.   மறந்தும் கிருஷ்ணனைபோல் உள்ளவங்களிடம் பணம் கொடுக்காமல் ஏமாத்தவும் மாட்டேன்“ என்று செய்த தவறை உணர்ந்து கூறினார்.

கவரை வாங்கியவுடன் கிளம்பிய கிருஷ்ணனை வைரமணி  தடுத்து நிறுத்தி “என்ன கிருஷ்ணன் பணத்தை வாங்கிட்டு நீ ஒண்ணும் சொல்லாமல் போனால் எப்படி? ராமநாதனுக்கு நன்றி சொல்லிட்டு போப்பா“ என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

 கிருஷ்ணன் “நன்றி அய்யா”என்று ராமநாதனைப் பார்த்து கூறிவிட்டு  வைரமணியை பார்த்து கண்ணீர் மல்க இருகரம் கூப்பி கண்களாலே நன்றி கூறிச் சென்றான்.   

******************

Exit mobile version