தீர்வு தேடு- ராஜேந்திரன் அபிலாஷ்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 66 தீர்வு தேடு- ராஜேந்திரன் அபிலாஷ்

எல்லா சந்தர்ப்பத்திலும் மந்திரி இப்படி செய்ய மாட்டான். என்னால் தீர்மானம் எடுக்க முடியவில்லை என்று தானே கேட்டேன். இன்றைக்கு வரட்டும் அவனை வைத்து கொள்கிறேன்.

                                                      மந்திரி புதிதாக திருமணம் ஆகியவன் தான் இருந்தாலும் அவசரம் என்பதால்தான் இரவில் அழைத்து வரும்படி தூதுவனை அனுப்பினேன். ஆனால் அவனோ உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டான். மாலை இங்கிருந்து செல்லும் போது நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தான். நான் போதும் என்று சொன்னதும் எனக்கு வைத்த பால் கொழுக்கட்டையையும் சேர்த்து இலக்குவாக உள் தள்ளினான். அதுவே அவன் நல்ல ஆரோக்கியமாக உள்ளது என்பதை பறை சாற்றியது. மந்திரி உடன் நண்பனாக பழகியது என்னுடைய தப்பு தான்.

                                                                                                            எனக்கு இருக்கும் பிரச்சனைக்கு அவன் இருந்தாலாவது பல யோசனைகளை முன் வைப்பான். அவை அனைத்தும் மோசமாக இருந்தாலும் ஒன்றிரண்டு ஓரளவு நல்லதாக இருக்கும்.

இரவு உணவாக வேறு பால் சோறு காத்திருக்கிறது. சாப்பிட செல்லும்படி நினைப்பு தட்டிக் கொண்டிருக்கிறது.

                                                                                    இவள் சகுந்தலை வேறு இரவு உணவை முடித்திருக்க மாட்டாள். என்ன தான் இந்த நாட்டின் மகாராஜாவின் மனைவி என்றாலும் இவ்வளவு பிடிவாதம் இருக்கக்கூடாது. பெண்ணுக்கு அழகே அடக்கம் தான். பாடாய் படுத்தி எடுக்கிறாள். அவளை நான் திருமணம் செய்ததில் இருந்து  மகிழ்ச்சியாக இருந்த நாட்களை எண்ணிப் பார்க்க கைவிரல்களே போதும். அப்படிப் பார்த்தாலும் ஒரு கைக்கு வேலை இல்லை.

நாட்டு மக்களுக்கு நல்ல ஆட்சி புரிந்து எந்த ஒரு பிரச்சனைகளும் வந்து விட கூடாது என்று நெஞ்சில் நிறுத்தி ஆட்சி  புரிந்து வரும் மன்னன் நான். எனக்கு தெரிந்து என் நாட்டுக்கு எந்த குறையும் வர விடுவதில்லை.

                                                                                                                                                 அண்டை நாடான செங்கமல புரம் மீது எனக்கு ஒரு கண் இருப்பது அந்த மந்திரிக்கு நன்றாக தெரியும். ஆனால் அந்த நாட்டு இளவரசி மீது எனக்கு ஒரு கண் இருந்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நிகழ்காலம் அல்ல இது இறந்த காலம். இருந்தது இப்போது அல்ல. இப்போது நான் ஏகபத்தினி விரதன். எல்லாக் கண்களும் என் மனைவி மீது மட்டும் தான் உள்ளன. என்ன ஒரு சிரமம் அவளைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

   என்னுடைய தந்தைக்கு ஒரே மனைவி ஒரே மகன். அவர் இந்த நாட்டை கட்டியெழுப்பிய விதமே என்னை என்று நிம்மதியாக இந்த சிம்மாசனத்தில் அமர வைக்கிறது. அவர் கட்டி வைத்தது இந்த நாட்டை மட்டுமல்ல எனக்கு ஒரு திருமணம் தான். என்னுடைய பழைய காதலை விட்டு மனம் மாறிவிட்டேன் இந்த புது மண வாழ்க்கைக்கு. ஆனால் செல்லச் சண்டையில் ஆரம்பித்த என்னுடைய இல்லற வாழ்க்கை இப்போது வாயை திறந்தால் அது மட்டும் தான் அதாவது சண்டை மட்டும் தான் வந்து கொண்டிருக்கிறது.

அவளுக்கு தன்னுடன் நேரத்தை செலவிட வில்லை எனும் பிரச்சனை. எல்லா நேரமும் அவளுடனேயே இருக்க வேண்டும் என்ற ஆசை. எனக்கு நேரம் போதவில்லை. ஆகவே தினமும் வாக்குவாதம். அவள் சண்டை பிடிக்க வேண்டுமென்று நினைத்தால் என்ன செய்தாலும் சண்டை பிடிப்பாள். அந்த தன்மை இவளுக்கு மட்டும் தானா இல்லை எல்லா பெண்களுக்கும் அந்த குணம் உண்டா என்று தான் தெரியவில்லை.

என்னுடைய நாடு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் இந்த மந்திரியுடன் தான் கலந்து யோசிப்பேன். அண்மைய சில நாட்களாக இந்த அமைச்சரவையில் பேச்சு நாட்டில் நிலவும் வறட்சி பற்றி தான் ஒரு நாள் வரும் போதும் ஒவ்வொரு பிரச்சினைகளை காவி வருவான். ஆனால் இப்போது சில வாரமாக பேச்சு தண்ணீர் பிரச்சினை தான். மழை என்னுடைய மண்ணை முத்தமிட்டு பல மாதங்களாகின்றன. நாட்டில் வறட்சி மக்களை வாட்டி எடுக்கிறது. என்னுடைய அரண்மனை அதைப்பற்றி கொஞ்சமும் உணர்ந்து இருக்காது. நாட்டிற்குள் சென்று பார்த்தால் மட்டுமே அது புரியும் என்கிறான் இந்த மந்திரி. இந்த மந்திரி பல தடவை என்னை நக்கல் சொற்களால் அடித்து விடுவான். நான் இங்கே சொகுசு வாழ்க்கை வாழ்வதாக குத்திக் காட்டிப் பேசுவான். அவனுக்கு குசும்பு அதிகம். இருந்தாலும் அவனுக்கு பேசுவதற்கு முழு அனுமதி கொடுத்துள்ளேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக தான் செங்கமலபுர தூதுவன் வந்தான். வந்த நாளிலிருந்து இன்று வரை எனக்கு தூக்கம் இல்லை. என்ன சங்கதி காவி வந்தான் என்று தான் பிரச்சனை.

உண்மையில் அவன் வந்தது ஒரு நல்ல முடிவா இல்லை பிரச்சனையா என்று எனக்குத் தீர்வு எடுக்க முடியவில்லை. தீர்வுக்குள் ஒரு பிரச்சினையை ஒளித்து வைத்தது போல் இருக்கிறது. செங்கமலபுர மன்னனும் நல்லவன் தான். இல்லையேல் எனது நாட்டின் வறட்சிக்கு தீர்வாக ஒரு யோசனையை அவன் தூதுவனிடம் சொல்லி அனுப்பி இருப்பானா?

எனக்கும் அவன் நாட்டில் ஓடும் யுக்ர நதியை எனது நாட்டிற்குள் விடுவதில் பெரிய ஆனந்தம் தான். ஆனால் அதில் தானே எனக்கு தனிப்பட்ட சார்ந்த ஒரு பிரச்சனை உள்ளது.

செங்கமல புர இளவரசியை அழகில் அடித்து விட முடியாது. பார்க்க பார்க்கவே நேரங்கள் ஓடுவது தெரியாது. எனது பட்டாபிஷேகம் அன்றுதான் அவள் எனது நாட்டிற்குள் வந்திருந்தாள். அன்றே எனக்கு கிடைத்த பட்டத்தை விட அவளின் அழகிய புருவத்தின் விட்டத்தை அளப்பதில் தான் நேரத்தை செலவிட்டேன்.

அன்றுதான் கண்களால் காதலை பரிமாற தொடங்கினோம். பின்பு கடிதங்களாக பரிமாறினோம். நேரில் சந்தித்தோம். இவ்வாறான அழகிய நாட்கள் அது. அவளுக்கு ஆண் சகோதரர்கள் இல்லாததால் தந்தைக்குப் பிறகு அவளே பட்டத்திற்கு உரியவள் ஆகவே இரண்டு நாட்டை இணைக்கப்போவதாக கூட நிறையவே பேசினோம்.

அந்த நிலத்தை அவளின் பிறந்த தினத்திற்காக நானே வாங்கி பரிசளித்தேன். இரண்டு ஊர் எல்லையிலும் ஒரு பெரிய நிலம் அது. திருமணத்திற்கு பிறகு அவ்விடத்தில் தான் இருவரும் பாரிய மாளிகை கட்டி குடியேற முடிவு எடுத்திருந்தோம். அதுதான் இங்கு பிரச்சனை.

நான் எனது செங்கோலை இந்த நாட்டின் நிலை நிறுத்தவே முடி சூடினேன். ஆகவே என் நாட்டின் வறட்சியானது கண்ணுக்குள் திரவமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த நாட்டுக்காரன் அவனாய் உணர்ந்து உதவும் தருவாயில் உள்ளான். அந்த நதியினை எமது நாட்டின் பக்கம் திருப்பினால் நிச்சயம் எனது நாட்டைப் பிடித்துள்ள வறட்சி எனும் பீடை இல்லாது ஒழியும்.

வைக்கோல் கட்டு ஒன்றை சாப்பிட ஆசையாக வரும் பசுமாட்டை விடாமல் தடுத்து நிற்கும் நாய் போல நிற்கிறேன். எந்த பயனும் இல்லாமல் நாம் இருவரும் வாங்கிய நிலத்தை நான் காத்து நிற்கிறேன். அவன் நாட்டிலிருந்து என் நாட்டிற்கு நதியை கொண்டுவருவதில் இடையூறாக இருப்பதும் அவளும் நானும் வாங்கிய நிலம் தான். கண்டிப்பாக அந்த இடத்தில் தான் நதி அணை கட்ட வேண்டும். அந்த இடம் மனதில் காதலை உணர்த்துகிறது. இந்த விடயத்தை நான் வேறு யாரிடமும் சொல்ல முடியாது. நதியை இணைக்காமல் விட்டால் தன் நிலத்துக்காக இந்த ஊரை வறட்சியில் விட்டான் என ஊரே என் முகத்திலும் எச்சில் உமிழும்.

என்னுடைய ஆசை மனைவி அதை இணைக்க வில்லை என்றால் இவ்வளவு கொடியவனா என்று சண்டை போடுவாள். அவளிடம் இந்த பிரச்சினை எதையும் கூறமுடியாது அவளுக்கு தெரிந்தால் பின்பு கதை முடிந்தது.

வைக்கோல் கட்டை காத்து நிற்கும் நாய்க்கு பசுவை உண்ண விடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. தான் உன்ன விட்டால் தனது எஜமான் நஷ்டமடைந்து விடுவானோ என்ற எண்ணம் தான் தன்னை நம்பி விட்டு காவலுக்கு வைத்த எஜமானின் மனதை காயப்படுத்த கூடாது என்ற எண்ணத்தால் தான் அந்த நாய் அந்தப் பசுவை உன்ன விடுவதில்லை. என் நிலையும் இப்போது அது தான்.

இப்படி இந்த பிரச்சனை தொண்டையில் சிக்கிய மீன் முள்ளை போல வலித்துக் கொண்டு இருக்கிறது. கடிகார முட்கள் 12 மணியை நோக்கி நடக்கிறது. தூக்கம் வருவதாக இல்லை.

இப்போது இல்லாத மந்திரி எப்போதும் தேவை இல்லை. தேவையே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் அந்த மூக்கை நுழைப்பான் நாளை விரட்டும் அவன்மீது ஒட்டுமொத்த கோபத்தையும் கொட்டி விட வேண்டியதுதான்.

இந்த வாழ்க்கை சில பாடங்களை நன்றாக புகட்டி விடும்.எந்த இடங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் முக்கியமாகிறது. நல்ல விதத்தில் செல்லும் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போடும்.

என்னுடைய மனைவி என்னுடன் நட்பு ரீதியாக சிறந்த முறையில் இருப்பாள் ஆக இருந்தால் என்னுடைய எல்லா பிரச்சினையும் அவளிடம் கூறி நல்ல முடிவை பெற்றுக் கொள்வேன். ஆனால் அவள் என்னிடம் எந்த நேரமும் சண்டையிடும் சண்டை கோழியாக வருகிறாள்.

நாளை ஏதாவது ஒரு முடிவினை நான் எடுத்தே ஆகவேண்டும். இனியும் பொறுமை சாதிக்க இயலாது. எனது நாட்டு மக்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன். இதை சார்ந்து தான் எனது முடிவு கட்டாயம் இருக்கும். இல்லாத காதலை போற்றுவதை விட எனது நாட்டு மக்களுக்கு நல்ல ஆட்சி செய்வதுதான் எனது இலக்கு.

படுக்கையறை செல்ல நான் விரும்பவில்லை இப்போது இந்த நிலவுலகில் கண்ணயர விரும்புகிறேன். நாளைக்கு நான் எடுக்கப்போகும் முடிவை எண்ணி என்னுடைய மூளை தலைக்குள் ருத்ர தாண்டவம் ஆடுகிறது.

தென்றல் காற்று மெதுவாக என்னைத் தொட்டு செல்ல அழகான நிலாவை ரசித்தபடி கண்களை மூடி இருந்தேன். என் மூளை தன் இயக்கத்தை நிறுத்தி ஓய்வெடுக்க முயல்கிறது. ஆனால் முடியவில்லை. என்றைக்கும் இல்லாத வண்ணம் என்னை நுளம்புகள் தொந்தரவு செய்கிறது. ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சினைகள் இதில் இது வேறு. அதையும் தாண்டி சில நுளம்புகள் என்னை சுவை பார்க்கிறது. இதெல்லாம் எனக்கு ஒரு புதுவித உணர்வாக மாறுகிறது அதைத் தாண்டி யாரோ ஒரு பெண்ணின் குரல் வேறு.

இது என்னுடைய அரண்மனையில் பழமையான நடக்கும் நிகழ்வுகள் அல்ல. ஒருவேளை பேய் பிசாசாக இருக்குமோ இல்லையெனில் கனவா என வியப்படைய வைக்கிறது.

திடீரென எனது மனைவி என்னை தட்டி எழுப்புவது போல உணர்வு… எழும்புங்க நேத்து குமார் அண்ணைக்கு பஞ்சர் போட்ட காசு வாங்கினீங்களா இல்லையா? பையனுக்கு புத்தகம் வாங்கி கொடுக்க வேணும். கரண்ட் பில் கட்ட வேணும். வீட்டு வாடகை கொடுக்க வேணும். இப்படி ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு.  உங்களால மட்டும் எப்படி அதைப் பற்றி ஜோசிக்காம ஒன்பது மணி வரைக்கும் நல்லா தூங்க முடியுது. எழும்புங்க இருக்கிற பிரச்சினை ஏதோ ஒரு தீர்வை பாருங்க??

கண்ணை மெதுவாக விழித்தபோது மேலே இருக்கும் மின்விசிறி தனது இயக்கத்தை மிக மிக மெதுவாக ஆற்றிக் கொண்டிருந்தது. அப்போதுதான் எனது நிகழ்காலம் நினைவிற்கு வந்தது. கண்களைத் துடைத்தபடி எனது பஞ்சர் கடைக்கு செல்ல  புறப்பட்டேன்.

******

Exit mobile version