எங்கோ பாடல் ஒலிக்கிறது
“மலரே குறிஞ்சி மலரே..”
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்.
கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைச் சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ? ”
இவளும் குறிஞ்சி மலர் போன்றவள் தான். இவள் பெயர் அலர் மேல் வள்ளி…
இவள் அத்தான் பெயர் குமரன் …குமார் என்றே அனைவரும் அழைப்பார்கள்.
வள்ளிக்கு குமரன் என்று நிச்சியம் பண்ணி ரொம்ப நாட்கள் ஆகி விட்டன-
அவள் அந்த நாளை நினைவு கூர்ந்தாள்.
குமார் யூ எஸ் கிளம்பு முன் இவளிடம் பேசியவை.
“ஏய் செல்லம் நல்ல பேர் ஒண்ணு சொல்லேன்.”
“என் இதுவே நல்லா தானே இருக்கு?”
“ எது செல்லமா ? இப்படிக் கூப்பிட்டா எனக்கு ப்ராகாஷ் ராஜ் தான் ஞாபகத்துக்கு வரும் “
“இப்போ பெயர் சூட்டு விழாவுக்கு அவசரம் என்ன ?”
“நான் எம்.எஸ் முடிச்சு வரும்போது உன்னை என் பிரண்ட்ஸ்ஸுக்கு அறிமுகப் படுத்த வேண்டாமா ? அலர் மேல் வள்ளின்னு சொன்னா பாவம் அவங்க மூச்சு முட்டி திணறிடுவாங்க…”
“எல்லா ஆம்பிளைகளும் கூப்பிடற மாதிரி என்னை “ ஏய்ன்னு” அறிமுகப் படுத்தேன்..”
“கிண்டலா ?சரி நல்ல தமிழ் பேர் சொல்லு.”
“தேன் மொழி”
“ ரொம்பத் தித்திப்பு.”
“நிறை மதி “
“அப்போ குறை மதி யாரு ?”
பூவழகி ,பூங்கோதை, புதுமைச் செல்வி….”
“வேறெ பேர் ?சுத்தத் தமிழ்..”
“பைந்தமிழ்ச் செல்வி… யாழினி..”
“சுத்தம்…. பேசாம வள்ளியாவே இரு ..ஏன் தெய்வயானை வந்துடுவாளோன்னு பயமா?”
“ சீ வாயை கழுவு..”
“நான் காலையிலேயே பல் விளக்கிட்டேன்..”
இருவரும் சிரித்தார்கள்..அது தான் கடைசிச் சிரிப்பு.
தனது பயணப் பெட்டியில் நினைவுகளை நிரப்பிக் கொண்டு தான் கிளம்பினான்.
ஆரம்பத்தில் லேப்டாப்பில் பேசிக் கொண்டார்கள்… மெயிலில் கடிதப் போக்குவரத்து…. நேரம் கிடைத்த போது ஸ்கைப்.. குமார் தன் கல்லூரி வளாகத்தை , நண்பர்கள் கூட்டத்தை ,தான் சுற்றிப் பார்த்த இடங்களைப் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தான்.
“நீ வந்த பிறகு நாம் இருவருமாக நயாகரா போவோம்.” என்று ஒரு நோட்டும் அனுப்பி இருந்தான். .இவளது புகைப்பட போல்டர் முழுவதும் அவன் அனுப்பிய படங்கள்.அன்றைய கனவில் நயாகராவில் மூழ்கியவள் தான் இவள்.
இவள் கண் விழித்தபோது அவன் காணாமல் போயிருந்தான்.
மெயில் வருவது நின்று போனது. இவள் அனுப்பிய மெயில்கள் இவளுக்கே திரும்பி வந்தன. படிப்பு மும்மரமோ ? ஐ டி மாற்றி விட்டானோ ?
இவள் காத்திருக்க ஆரம்பித்தாள்.
காத்திருத்தல் என்பது சோம்பிக் கிடப்பதல்ல. நம்பிக்கையின் அசைக்க முடியாத இரும்புச் சங்கிலி. காத்திருத்தல் ஒரு தவம் குறிஞ்சிப் பூவின் காத்திருத்தல் பன்னிரண்டு ஆண்டுகள். மகாமாங்கம் வர பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் நடந்து விடுவதில்லை. நடை வர காத்திருக்க வேண்டும். கரு உருவானவுடன் குழந்தை பிறந்து விடுவதில்லை. கர்ப்பக் காலம் காத்திருத்தல் அவசியம்.
எத்தனை எத்தனை தவங்கள்.. கூட்டு புழு பட்டாம் பூச்சியாகக் காத்திருக்கும் மோனத் தவம், தான் இழந்த அரசைத் திரும்பப் பெற ராமனும் பாண்டவர்களும் காத்திருந்த காலம் ..இதற்கு ஒப்பிட்டால் இவள் காத்திருப்புக்கள் அற்பம் தான்.
இவள் காத்திருப்பாள் . அடுத்த பிறவி வரை கூடக் காத்திருப்பாள்.
.இவள் நம்பிக்கை இழக்க மாட்டாள் .துயரமும் சூழ்நிலையும் நம்பிக்கைக் காட்டாற்றின் பயணத்தை நிறுத்தி விட முடியாது
காலத்தின் பதிலுக்காகக் காத்திருந்தாள். ..பதில் வந்தது…
“கொரானா “ என்கிற தொற்றாக…….? கொத்துக் கொத்தாக மனிதர்கள் சாவு.
தினம் தினம் மரணச் செய்திகள். பகவான் கல்கி அவதாரம் எடுப்பதற்குப் பதிலாக ராஷச அவதாரம் எடுத்து விட்டாரா ? மனிதர்களைத் திருத்தும் வழி தெரியாமல் தன்னைத் தானே சிறைப் படுத்திக் கொண்டு மனிதர்களையும் சிறைப் படுத்துகிறாரா ?
இயற்கை வளத்தை சூறையாடிய மனிதனை, அடுத்தவன் பணத்திற்குப் பேராசைப் பட்ட மனிதனை காமத்திலும் குடியிலும் தன் பண்பை இழந்த மனிதனை, காமத்தை மட்டுமே கற்றுக் கொடுத்த சில திரைப்படங்களில் தன்னை இழந்த மனிதனை ,வன்முறையையும் , பழி வாங்குதலையும் முறையற்ற உறவுகளையும் சொல்லித் தரும் சின்னத் திரை தொடர்களில் மூழ்கிய பெண்களைத் திருத்த வழி தெரியாமல் ஆண்டவன் கற்றுத் தந்த புதுப் பாடமா இது ?
உயிர் பயம் காரணமாக மனிதன் மனித நேயத்தைக் கற்க ஆரம்பிக்க வேண்டி கடவுள் குறுக்கு வழி பாடத்தைக் கற்பிக்க கையாண்ட புதிய வழி முறையா இது ? இயற்கை சீர்பட்ட அதிசயம், நதி நீர் தூய்மை அடைந்த ஆச்சர்யம்….காற்றின் மாசு விலக்கப் பட்ட அதிசயம் நடந்தது நிஜம்.
நதியின் கடைசிச் சொட்டு தண்ணீர் தீரும் வரை, நிழல் தரும் கடைசி மரம் வெட்டப்படும் வரை மனிதனுக்குப் புரிந்த உண்மை பணத்தை மட்டும் உண்டு உயிர் வாழ முடியாது என்பது.
எங்கெங்கோ விசாரித்தும் எந்த விபரமும் தெரியவில்லை. ஒரு வேளை இந்த வைரஸ் தொற்றால் முகம் தெரியாமல் புதைக்கப் பட்டவர்களின் கூட்டத்தில் குமாரும் சேர்ந்து விட்டானோ ? இவள் திகைத்தாள்.ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை.
தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட தீயைத் தீண்டி உணர்ந்து கொண்டவள் இவள். அந்த சூடு மிச்சமிருந்தது.
அன்று….?
இவள் அலை பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு.. அன்நோன் நம்பர்…
“ நான் அலெக்ஸ் பேசுகிறேன். நான் உங்கள் காதலர் குமாரின் நண்பன்…”
“பகீர்” எ ன்றது மனம்.
“நான் சொல்றதை பதட்டப்படாம கேளுங்க”
ஆங்கிலதில் பேசினான். நிச்சியம் இவன் கூறப் போகும் செய்தி நல்லதாக இருக்காது என்றே தோன்றியது.
“நான் யூ எஸ்ஸில் குமாருடன் அபார்மெண்டை ஷேர் செய்து கொண்டவன். என் பெயர் சார்லஸ் .எனக்கு ஒரு தங்கை ,ஸ்டெல்லா..தாயில்லாத பெண் என்று ரொம்பச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டேன் .அவள் கேட்டதெல்லாம் கிடைத்தது.ஆனால் அவள் குமாரைக் கேட்டபோது……?”
இவள் திகைத்தாள்.. தங்கைக்கு அவள் விரும்பியதைத் தந்தவன் தன்னிடம் பாவ மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறானா ? எதுவானாலும் சரி குமார் உயிருடன் இருப்பதே ஒரு நற்செய்தி தான்….
சார்லஸ் தொடர்ந்தான்.
குமாரின் மீது கொண்ட நட்பின் காரணமாகத் தன் பெயரை கூட சார்லஸ் குமார் என்று மாற்றிக் கொண்டானாம். ஆனால்….?
சார்லஸ் , குமார் மூலம் பல இந்தியப் புராண கதைகளைக் கேட்டறிந்தவன்.
அதில் துரியோதனன் கர்ணன் நட்பு இவனுக்கு மிகப் பிடித்த கதை தவிர குமார் சார்லஸுக்கு நிறைய உதவி செய்திருக்கிறான். அபார்ட்மெண்ட் வாடகை கொடுத்திருக்கிறான்.. யூனிவர்சிடி டெர்ம் பீஸ் கட்டி இருக்கிறான் . தன் காரைக் கூட இவனுக்குக் கொடுத்திருக்கிறான் .இவனால் நட்புக்கு பதில் என்ன தர முடியும்?
கேட்டதைத் தர இவன் கிருஷ்ண பரமாத்மா இல்லை. ஆனால் நட்பைத் தர இவனால் சுதாமாவாக குசேலனாக இருக்க முடியும்….தன் பெயரைக் கூட சார்லஸ் குமார் என்று மாற்றிக் கொண்டது இதனால் தான்…… ஆனால் தன் தங்கையின் அதி மீறிய உரிமைப் போராட்டம் இவன் எரிச்சலை ஏற்படுத்தியது நிஜம்.
என்ன செய்வது?
“யெஸ் மேடம் .. ஸ்டெல்லாவை என்னால் மாற்ற முடியாது என் நண்பனை இழக்க முடியாது..அதனால் அதனால் “பிக்னிக் “ என்று போன இடத்தில் என் தங்கையை நானே நானே கொன்று விட திட்டம் போட்டேன்..
ஆனால் நடந்தது வேறு. ஸ்டெல்லா மரித்துப் போனாள் காரணம்…? தற்கொலை..
தன் மரணத்தைத் தானே பதிவு செய்து அதை எனக்கு அனுப்பி இருந்தாள்.
செல்பி எடுத்த போது கால் வழுக்கி தவறி விழுந்ததாக கதை சொல்லி அனைவரையும் நம்ப வைத்தேன்.
ஸ்டெல்லா எனக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தி…..
“அண்ணா என்னை மன்னித்து விடு.குமாருக்கு ஒரு காதலி இந்தியாவில் காத்திருக்கிறாள்.அவனுக்குத் தெரியாமல் அவன் லேப்டாப்பைத் திறந்தபோது இவன் காதலி எழுதிய காதல் மெயில்கள் குமார் அனுப்பிய பதில் காதல் சொட்டும் கடிதங்கள்..நான் இனி உன்னைத் தொந்திரவு செய்ய மாட்டேன்.நான் உங்கள் அனைவரையும் பிக்னிக் அழைத்தது இதற்காகத் தான்.”
..அது ஒரு மலை உச்சியில் இருந்த பிக்னிக் ஸ்பாட் கீழே பெரிய பள்ளத் தாக்கு… வழுக்கி விழுவதாக பாவனை காட்டிய .ஸ்டெல்லாவைப் பிடிக்கப் போன குமார் கால் தடுக்கி தடுமாறி கீழே வீழ்ந்து மயங்கினான்…………. அதெல்லாம் பெரிய கதை..குமார் மாதக் கணக்கில் மருத்துவ மனையில் இருந்தான். .
ஊனமான தன்னை காதலிக்குப் பரிசாகத் தர அவன் விரும்பவில்லை.
இதற்குள் இந்த கோரானா வைரஸ் குழப்பம் ..நாங்கள் மீண்டு வர… க்ளியரன்ஸ் கிடைத்து க்வாரண்டைன் முடிந்து இந்தியா வர இத்தனை மாதங்கள் ஆகி விட்டன…”
“குமார்.. குமார்…”
“அவர் பத்திரமா இருக்கார்..ஆனா கீழே மலைச் சரிவிலே விழுந்ததிலே கால் மட்டும் உடைஞ்சு…. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வரார்..அவராலே முன் மாதிரி நடக்க முடியாது…. செயற்கைக் கால் தான்.”
“குமார் எங்கே …?”
“……. அதோ டாக்ஸியிலே குமார் உட்கார்ந்திருக்கார்….நாங்க ரெண்டு பேருமாத் தான் வந்தோம்… உங்க மனநிலை தெரிஞ்சுட்டு வர குமார் தான் என்னை முதல்ல போகச் சொன்னார்…” அவன் முடிக்கவில்லை…..
இவள் வாசலுக்கு ஓடுகிறாள்….என்றும் இவள் மனநிலை கடலைத் தேடி ஓடும் நதி தான்…….
இவள் காத்திருப்புக்கள் வீணாகவில்லை . காத்திருந்த சபரிக்கு ராமர் தரிசனம் கிடைத்த மாதிரி , கல்லாய் காத்திருந்த அகலிகைக்கு சாபவிமோசனம் கிட்டியமாதிரி
இவள் காத்திருப்புக்களுக்கும் பலன் கிடைத்தது உண்மை
குறிஞ்சிகள் அடிக்கடி பூப்பதில்லை.
*********************************************************************************************