கருப்பு நாயும் டைகர் பிஸ்கட்டும் – எஃப்.எம் பொனவெஞ்சர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 73 கருப்பு நாயும் டைகர் பிஸ்கட்டும் – எஃப்.எம் பொனவெஞ்சர்

ஒரு நாள் காலை அந்த கருப்பு நாய் எங்கள் தெருவிற்கு வந்து இருந்தது.

என் அப்பா சொல்வார் “பூனை பழகிய வீட்டை விட்டு போகாது. நாய் பழகிய ஆட்களை விட்டு போகாதென்று”

ஆனால் ஒவ்வொரு முறையும் கார்பரேஷன் நாய் பிடிப்போர் வந்து போகும் பொழுதெல்லாம் எங்கள் தெருவில் ஒரு கலக்கல் நடக்கிறது. புதிய புதிய நாய் முகங்கள் தெருவில் தென் படும். பழைய நாய் முகங்கள் சிறிது காணாமல் போய் இருக்கும்.

அப்படி தான் அந்த கருப்பு நாய் அன்று காலை எங்கள் தெருவிற்கு வந்து இருந்தது. காலையில் பால் வாங்க முருகன் கடைக்கு சென்ற பொழுது அந்த ஒல்லி கருப்பு நாய் என் கூடவே கடைக்கு வந்தது. அந்த ஒல்லி நாய் என் கூடவே என் மெய்காப்பாளன் மாதிரி நடந்து வந்தது எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

பால முருகன் தனது குறுநாவல் தொகுப்பு ஆலமரத்தில் சொல்வார்,”நாய் பிறவி ஒரு கடன் தீர்க்கற மாதிரி பிறவி அது’ என்று.

 என்னமோ தெரியவில்லை எனக்கு அந்த நாய் மேல் நிறையவே பாசம் பிறந்து விட்டது. அன்பு என்று சொல்ல எனக்கு தோன்றவில்லை. அன்பு என்பது மீராவிற்கு மட்டுமே உண்டான வார்த்தையாக எனக்கு தோன்றியது. அந்த அன்பை இன்னொரு உயிருடன் அது நாயாக இருந்தால் கூட பகிர்ந்து கொள்ள எனக்கு மனது வரவில்லை.

எனது நாலாம் வகுப்பு ஆசிரியர் சொன்னது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருந்தது. ”ஒரு தேன் கூட்டில் ஆயிரக்கணக்கான அடிமை தேனிக்கள் இருக்கும். ஆயிரக்கணக்கான அடிமை தேனிக்கள் இருந்தாலும் ஒரு கூட்டிற்கு ஒரு ராணி தேனி தான்”. என்னுடைய தேன் கூட்டின் ஒரே ராணி தேனி மீரா மட்டும் தான்.

முருகன் கடைக்கு போய் – கடை நடக்கும் தூரம் தான் – ஆவின் ஆரஞ்சு பால் வாங்கி கொண்டேன். வீடு திரும்ப கால் எடுத்து வைத்தால் காலில் அந்த கருப்பு நாய் தட்டியது. விலங்குகள் தன் பாசத்தை உராய்வின் மூலம் தான் வெளிப்படுத்துமாம். நாய் தன் மூக்கை நம் மேல் உரசி அதன் பாசத்தை வெளிப்படுத்துமாம். அந்த கருப்பு நாயும் தன் பாசத்தை தன் மூக்கை என் காலில் உரசி வெளிப்படுத்தியது.

அந்த நாயின் மேல் எனக்கு பாசம் பிறந்திருந்தாலும் அதன் அண்மை எனக்கு கொஞ்சம் பயத்தையும் கொடுத்தது.

பயத்தை சிறிது கட்டுப்படுத்திக் கொண்டு அந்த கருப்பு ஒல்லி நாயின் நெருங்கிய உரசலின் நட்பிற்கு பதில் நட்பு காண்பிக்க விரும்பினேன் நான்.
 

நாய்களுக்கு இனிப்பு ஆகாதாம்.. ஞாபக மறதி இருக்குமாம்.

எது எப்படி இருந்தால் எனக்கு என்ன என்று தோன்றினாலும் ஒரு டைகர் பிஸ்கட் பாக்கெட் வாங்கினேன். பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கட்டை உடைத்து முதல் பாதியை வாயில் போட்டு ருசி பார்த்தேன். மன்னர்கள் காலத்தில் மன்னன் உணவு சாப்பிடு முன் அடிமை ஒருவன் அந்த சாப்பாட்டை சாப்பிடுவது பழக்கமாக இருந்திருக்கிறது. அது ஏனோ எனக்கு நினைவில் தோன்ற மீதி பாதியை அந்த நாய்க்கு போட்டேன்.

அந்த நாய்க்கு ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டுமே… என் மனைவி சொல்வாள் நாய்க்கு என்ன பெயர். நாயை நாய் என்று அழைக்க வேண்டியது தானே.

எனக்கு முதலில் தோன்றிய பெயர் குரு. குரு நல்ல பெயர். ஆம் குரு தான். குரு என்று அழைத்து இன்னொரு பிஸ்கட் துண்டை தூக்கி எறிந்தால் லபக்கென்று கவ்விக் கொண்ட அந்த குரு ஒரு பெட்டை நாயாக இருந்தது.

குரு என்ற சொல் ஒரு பொதுவான பெயராக இருந்தாலும் அந்த பெயர் எனக்கு அந்த கருப்பு பெட்டை நாய்க்கு சரியான பெயராக படவில்லை.

மீராவிடம் கேட்டால் டக்கென்று ஏதாவது ஒரு பெயர் வைப்பாள்.

என் மூத்த பெண்ணிற்கு லாஸ்யா என்று பெயர் வைத்தவள் மீரா தான்.

”லாஸ்யா என்ற பெயருக்கு யாராவது அர்த்தம் கேட்டால் முழிக்காதீர்கள். லாஸ்யா என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. நாட்டிய அபினயங்களில் சந்தோஷத்தை அர்த்தம் செய்வது அது.” என்று எனக்கு வகுப்பு எடுத்திருந்தாள் மீரா. என் சமஸ்கிருத அறிவுக்கண்ணை திறந்தவள் அவள் தான்.

பால் பாக்கட்டின் ஜில்லிப்பு கையை வருத்தியது. வேகமாக நடந்தேன்

அந்த நாயும் என் கூடவே ஓடிவந்து வீட்டின் கேட் அருகில் நின்று விட்டது.

யானை பிடிப்பவர்கள் குட்டி யானையை ஒரு இரும்பு சங்கிலி கொண்டு கட்டி போடுவார்கள். அந்த குட்டி யானையும் அந்த சங்கிலியை தகர்க்க முயன்று தோற்றுப் போகும். குட்டி யானை அந்த சங்கிலியை உடைக்கும் முயற்சியை கை விட்டு விடும். அந்த குட்டி வளர்ந்த பிறகும் அதே சங்கிலியில் தான் கட்டி போடுவார்கள். அந்த பெரிய யானை இப்பொழுதும் நினைக்குமாம் அந்த சங்கிலியை தகர்க்க முடியாது என்று.

அதே போல் அந்த நாயும் பழகி விட்டது வீட்டிற்க்கு வெளியிலேயே நின்று. கேட் திறந்து இருக்கும் போதும் உள்ளே நுழைய முயற்சி செய்யாது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இந்தியா ஆசியா கோப்பையில் தோல்வி  அடைந்திருந்தது .

அந்த நாய் கேட்டின் வெளியே இருக்கிறதா என்று எட்டி பார்த்தேன். இருந்தது.

என்னை பா்த்ததும் எழுந்து நின்று வால் ஆட்டியது. ஐந்து ரூபாய் டைகர் பிஸ்கட்.

அன்று மதியம் சாப்பாட்டில் அவித்த முட்டை இருந்தது.சென்னியப்பன் டாக்டர் என் 45 வயதில் சொல்லி இருந்தார்.

” இனி மேல் வருடம் இரண்டுமுறை மட்டன் .. மாதம் இரண்டு முறை சிக்கன். வாரம் இரண்டு முறை அவித்த முட்டை. அதுவும் வெள்ளை கரு மட்டும் ‘

டாக்டர் சொல் மீராதவள் மீரா.

இன்று எனக்கு அது சாதகம் ஆனது.மஞ்சள் கருவை சிறிது சாதம் கலந்து வெளியில் கொண்டு வந்து வீட்டிற்க்கு எதிரில் இருக்கும் வேப்ப மரத்தடியில் இட்டேன்.

எங்கிருந்தோ வந்த வேறு இரண்டு நாய்கள் அந்த சாப்பாட்டை கபளீகரம் செய்ய பெயர் வைக்க படாதிருந்த அந்த கருப்பு நாய் என்னை பரிதாபமாக பார்த்தது.

நாய்களிடம் அதிக பழக்கம் இல்லாத நானும் அந்த நாயை பரிதாபமாக பார்த்தேன்.என் இயலாமையை. உணர்ந்து கொண்ட அந்த நாய் மீண்டும் கேட் அருகில் படுத்துக் கொண்டது.

இரவு ஒரே நாய்கள் சப்தம்.

ஏதோ ஒரு நாய் மட்டும் ஊளையிட்டு கொண்டே இருநதது. பாவம் ஒரு நாய் சண்டையில் தோற்றிருந்தது போல் என்று யோசித்துக் கொண்டே உறங்கி போனேன்.

அடுத்த நாள் காலை முருகன் கடைக்கு பால் வாங்க போகும் பொழுது தான் கவனித்தேன் அந்த கருப்பு நாய் காது எல்லாம் ஒரே இரத்தம். இது தான் கடி வாங்கியிருக்கும் போல் இருக்கிறது என்று யோசித்த நான் அன்றும் ஒரு டைகர் பிஸ்கட் வாங்கினேன்.

கடைக்காரர் கேட்டார்”. என்ன சார் புது பிரெண்டா?””

“ஆமாம் முருகன் “

அந்த கடைக்காரர் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லோருக்கும் முருகன் தான்.ஆண்களுக்கு முருகன். பெண்களுக்கு அண்ணாச்சி. சிறுவர்களுக்கு முருகன் அன்ங்கிள்.

 பிஸ்கட்டை உடைத்து போட்டுக் கொண்டே என் புது பாதுகவலனுடன் வீட்டை அடைந்தேன்.

அன்று மதியம் சாப்பாட்டில் வேண்டும் என்றே ஒரு கவளம் கூட மிச்சம் வைத்தேன்.

Once bitten twice shy. ஒரு முறை கடி பட்டவன் இரண்டாம் முறை ஜாக்கிரதையாக இருப்பானாம்.

இன்று கேட்டை திறக்கும் முன் கையில் ஒரு குச்சி எடுத்துக் கொண்டேன்.

குச்சியுடன் என்னை பார்த்த அந்த கருப்பு நாய் முதலில் சிறிது மிரண்டாலும் உடன் சுதாரித்துக் கொண்டது.குச்சியுடன் இருந்த என்னை கண்ட மற்ற நாய்கள் தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருக்க கருப்பு நாய் ஃபுல் மீல்ஸ் வாலை ஆட்டிக் கொண்டே சாப்பிட்டு முடித்தது.

இது தினமும் நடந்து கொண்டிருக்க ஒரு நாள் எனக்கு வெளியூர் செல்லும் வேலை வந்தது.

மீராவிடம் கெஞ்சி கெஞ்சி கேட்டு கொண்டிருந்தேன் ” அந்த நாயை மறந்து விடாதேம்மா'”

கிளம்பும் பொழுது வெளியில் வந்து பெயர் வைக்கப் படாதிருந்த அந்த நாயிடமும் சொல்லிக் கொண்டு தான் கிளம்பினேன்.

மீரா அந்த நாய்க்கு பெயர் வைக்க மறுத்து விட்டிருந்தாள்.

“தெரு நாய்க்கெல்லாம் நான் பெயர் வைக்க மாட்டேங்க “

இரண்டு நாள் கழித்து திரும்பிய நான் வரும் வழியில் ஆட்டோவை நிறுத்தி ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொண்டு வந்தால் அந்த நாயை அதன் இடத்தில் காணோம்.

ஊர் விஷயங்களை எல்லாம் பேசி முடித்த பின் சாப்பிடும் பொழுது மீரா சொன்னாள்’.யேங்க ! ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நேற்று கார்பரேஷன் வண்டி வந்திருந்தது . அந்த கருப்பு நாயை பிடிச்சுட்டு போய்ட்டாங்க “

மனம் வலித்தது.

நானே என்னை தேற்றிக் கொண்டேன். பரவாய் இல்லை. ஓரிரு நாட்களில் சரியாகி விடும்.

ஆனால் அன்று முடிவு செய்தேன்” இனி டைகர் பிஸ்கட் வாங்க மாட்டேன்” என்று

*********************

Exit mobile version