காலை பொழுதின் ரம்மியத்தில் தன்னை தொலைத்து கண்மூடி நின்ற நன்விழி தன் அழகு நேத்திரங்களை மெல்ல திறந்தாள். செம்பியூர் கிராமத்தின் அழகை கண்களால் பருகியவாறு பின்பக்கம் சென்று மாட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கன்னுக்குட்டியை அவிழ்த்து விட்டாள். அது ஓடி சென்று தன் தாயின் மூலம் பசியாறும் காட்சியை கன்னத்தில் கை வைத்து ரசித்தவளை முறைத்தாள் அல்லி. “ அடியே விழி இப்படியே ரசிச்சுட்டு இருந்தா நாம சீக்கிரம் பட்டணத்துக்கு போய் சேர முடியாது ஒழுங்கா போய் குளிச்சிட்டு வா “ வேப்பங்குச்சியில் பல் தேய்த்தவாறு கடிய, நாக்கை கடித்து ஓட்டம் பிடித்தாள் விழி.
நன்விழி, அல்லி இருவரும் செம்பியூர் கிராமத்தில் முதல் முதலாய் பட்டம் பெற்ற பெண்கள். அக்கிராமத்தில் ஆண்களே சிலர் இன்னும் கல்வி கற்காமல் இருக்கும் போது பலரின் எதிர்ப்பையும் மீறி பிடிவாதத்துடன் கல்வி கற்றனர். தங்கள் லட்சியம்தனை அடைய பட்டணத்தை நோக்கி பயணிக்க போகின்றனர். சுற்றார், சொந்தங்கள் பலர் அவர்களை திட்டி “ பெண்களுக்கு எதுக்கு கல்வி… சோறு ஆக்குனோமா புள்ளை குட்டியை பாத்தோமானு இருக்காம பிடிவாதமா எங்கள மீறி படிச்சதே தப்பு இதுல பட்டணத்துக்கு வேற போக போறீங்களோ “ கோவத்துடன் கத்தி அடித்து கெஞ்சி என்ன செய்தும் தங்கள் முடிவில் மாற்றமின்றி இருந்தனர். இறுதியில் இவர்களின் பிடிவாதமே வென்றது. இவர்களின் இச்செயலால் அவமானம் ஏற்பட்டதாகக் கருதிய அவர்களின் பெற்றோர் கோபத்துடன் இனி அவர்கள் தங்கள் பிள்ளையே இல்லை என்று கூறினர்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு துணையாய் இருப்பதை காட்டிலும் தடையாக இல்லாமல் இருந்தாலே பலரின் ஆசை லட்சியம் நிறைவேறும். இங்கு தடையாய் தன் சொந்தங்களே இருப்பதை எண்ணி வருந்திய போதிலும் தங்கள் பாதையில் செல்ல முயற்சித்தனர். இதோ இன்று தங்கள் கனவை நிறைவேற்ற புறப்பட்டு விட்டனர். அல்லி தன் வீட்டினரை சிறிது கூட கண்டுகொள்ளாமல் தன் பாட்டிற்கு துணிமணிகளை அடுக்கி தேவையான சிலவற்றை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு நன்விழி வீட்டிற்கு வந்தாள். அங்கு அவளும் அதேபோல் தயாராகி வர, இருவரும் செம்பியூரை விட்டு வெளியேறினர். என்ன தான் கோபம் இருப்பினும் நல்லபடியாக இருக்க வேண்டும் என இருவரின் தாயுள்ளம் வேண்டியது.
சென்னை மாநகரம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்ற பலகையை கண்டு சிரித்து கைகோர்த்து உற்சாகத்துடன் சென்றனர். இருவருக்கும் பிஎச்டி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது கனவு, கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தன் உறவினர் சென்னை பாரத் பல்கலைக்கழகம்தனில் பணியாற்றிகிறார் என்ற தகவலுடன் அவரின் விலாசத்தையும் தந்துள்ளார்.
தங்கள் கிராமத்தை தவிர்த்து வேறெங்கும் சென்றிடாத பெண்களுக்கு சென்னை வேறு கிரகம் போலே தோன்றியது. எறும்பு போல் உலவும் மக்கள் கூட்டம், வண்டிகளின் இரைச்சல், பார்க்கும் இடம் யாவும் விதவிதமான கடைகள் என அனைத்தும் புதிய சூழலை கண்டு ஒருவித பயம் உண்டானாலும் அதனை ஓரம்கட்டி ஆட்டோ ஒன்றில் ஏறினர். “ எங்கம்மா போனும் “ மீட்டர் சரிசெய்து வினவினார் ஓட்டுனர். “ அண்ணா இந்த விலாசத்துக்கு போனும் “ ஆசிரியர் கொடுத்த இடம்தனை காட்டி கூற, அவரும் அதனை வாங்கி பார்த்து வண்டியை எடுத்தார். செல்லும் வழியாவும் வேடிக்கை பார்த்தவாறு சிரிப்புடன் பேசிக் கொண்டு வந்தனர். மெரினா கடற்கரையை ஒட்டி வந்த சமயம் கண்களை விரித்து இமைக்க மறந்து கடலை கண்டனர். இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே கண்டுள்ள கடலை நேரில் காண மகிழ்ச்சி தாளவில்லை.
மகிலன் எம்எஸ்சி., எம்ஃபில்., பிஎச்டி., என்ற பலகையை கடந்து கேட்டின் உள்ளே நுழைந்தனர். காலிங் பெல்லை அழுத்திவிட்டு நிற்க, நாற்பத்தைந்து வயதை ஒத்த ஒருவர் கதவை திறந்தார். தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து இருவரையும் கேள்வியாக கண்டு “ யார்மா நீங்க என்ன வேணும் “ என்றார்.
“ வணக்கம் சார் என் பேரு நன்விழி இவ அல்லி நாங்க செம்பியூர் கிராமத்துல இருந்து வரோம் “
“ அட நீங்களா உள்ள வாங்க மா உங்க மேம் ஏற்கனவே நீங்க வரப் போறதை பத்தி சொன்னாங்க “ அவர்களை உட்கார கூறி அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார்.
“ எங்க மேம்க்கு நீங்க என்ன உறவு சார் “ வாய் துடுக்காய் கேள்வி கேட்ட அல்லியின் கையில் கிள்ளினாள் நன்விழி.
சிரிப்புடன் “ எனக்கு அவங்க சித்தப்பா பொண்ணு மா “ என்று கூறி மணியை கண்டார். மாலை ஆறு மணி என்று காட்ட “ சரிமா நீங்க டிராவல் பண்ணி வந்தது அலுப்பா இருக்கும் ஏற்கனவே உங்களுக்கு ரூம் ரெடி பண்ணிட்டேன் வாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என் மனைவி கோவிலுக்கு போயிருக்கா அவ வந்தோட்டி உங்களை அறிமுகம் படுத்தறேன் “ இருவரையும் அவர்களுக்கென்று ஒதுக்கிய அறையில் விட்டுவிட்டு சென்றார். அறையை கண்களை விரித்து சுற்றி சுற்றி பார்க்கும் அல்லியை கண்டு கேலியாய் “ போதும் டி ரூமை கண்ணாலையே முழுங்கிடாத “
“ போடி எருமை …. சரி நா பஸ்ட் குளிச்சிட்டு வரேன் வேர்த்து ஊத்துது என்னா வெயிலு “
“ ஆமா டி இங்க இப்படி வெயிலா இருக்கும்னு நினைக்கல நம்ப ஊர் வெயில் காலத்துலையும் குளிர்ச்சியா இருக்கும்ல “
“ ம்ம் இருக்கும் தான் ஆனா அந்த ஊர் மனுசங்க மனசு அப்டி இல்லையே வெப்பமால இருக்கு “ சலுபாய் கூறி தன் உடமைகளை எடுத்துக் கொண்டு குளியலறையில் நுழைந்தாள்.
சிறிது நேரம் கழித்து மகிழன் தன் துணைவி மாதவியை அறிமுகம் படுத்தினார். அவரும் இருவரையும் நலம் விசாரித்து பேசினார். நேரம் ஆக இரவு உணவு சமைக்க அடுக்குகளுக்குள் நுழைய இவர்களும் அவருக்கு உதவினர். அடுத்த நாள் இருவரையும் பாரத் பல்கலைக்கழகமிற்கு அழைத்து சென்று அங்கு சுற்றி காட்டினார். பின் அவர்களை தனியாய் விட்டு அவர் மற்றும் ஓர் அறைக்கு சென்றார். அங்கு இருவரின் சான்றிதழ்களை சமர்பித்து கரஸில் பிஎச்டி சேர்த்து இருவரையும் பல்கலைக்கழகத்தின் சேர்மேனிடம் அறிமுகம் செய்துவிட்டு அவர்களுடனே சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார் “ நாளைல இருந்து நீங்க உங்க ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம் உங்க தலைப்பு என்ன “
“ சார் இப்ப தான் கொரோனா தாக்கம் குறைஞ்சு சாதாரண வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிட்டு இருக்காங்க, ஊரடங்கால கூலி தொழிலாளர்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்காங்க அவங்க நிலையை கஷ்டத்தை தெரிஞ்சு மறுபடியும் ஊரடங்கு வந்தா அவங்களுக்கு அரசாங்கம் எப்டி உதவி செய்யலாங்கற வழியை சொல்றது தான் எங்க ஆராய்ச்சி “ சுருக்கமாய் கூறினாள் நன்விழி.
“ சூப்பர் மா நடைமுறையில் நடக்கிறதை ப்ராஜெக்ட்டா பண்றது நல்லது உங்க ஐடியா நல்லா இருக்கு நீங்க நாளைக்கே ஆரம்பிங்க எந்த உதவியா இருந்தாலும் தாராளமா என் கிட்ட கேளுங்கள் “ மென்மையாய் சிரித்து “ இப்ப எனக்கு க்ளாஸ் இருக்கு நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க “ கூறிவிட்டு அவர் செல்ல, இருவரும் மகிழ்ச்சியுடன் இனி தங்கள் கனவு நிறைவேற போகிறதென்ற பூரிப்பில் குதித்து கொண்டு ஓடினர். நாட்கள் செல்ல தங்கள் ஆராய்ச்சியில் படிப்படியாக வேலைகளை செய்து முடித்தனர். நேரடியாக கூலி தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கு மகிழன் அவரின் உதவியுடன் சென்று அவர்களிடம் அவர்கள் தினந்தோறும் கடந்து வரும் கஷ்டம் அவர்கள் நிலையை கேட்டு தெரிந்து மனதால் வேதனை அடைந்தனர்.
ஆராய்ச்சியின் கடைசி கட்டம் தங்கள் பரிந்துரை பற்றி மகிழனிடம் கூறினர் “ முதல் பரிந்துரை 1- அத்தியாவசிய தேவைகள் அதாவது உணவு, தேவையான பொருட்கள், மருத்துவம் சார்ந்த பொருட்கள் எல்லாம் விலை குறைவாகவோ அல்லது இலவசமாகவோ முடிந்தளவு வழங்க வேண்டும், 2- போதுமான மருத்துவ வசதிகள் மற்றும் சுத்தமான தண்ணீர், சுகாதார வசதிகள் இவற்றை குறைந்த விலையில் வழங்க வேண்டும், 3- அத்தியாவசிய தேவைக்காக வெளியே போகவேண்டும் என்ற சூழ்நிலையில் காவல்துறையினர் அவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ கூடாது, 4- ஊரடங்கு முடிந்தவுடன் அவர்களுக்கு அவர்களின் திறமையை கருத்தில் கொண்டு வேலை தரவேண்டும், 5- வேலை நேரத்தில் சிறிது நேரமாவது அவர்களின் ஓய்விற்கு நேரம் ஒதுக்க வேண்டும் “ நன்விழி தங்கள் பரிந்துரையை கூறிவிட்டு நிமிர்ந்து பார்க்க, மெச்சும் பார்வையில் இருவரையும் கண்டார் மகிழன்.
“ மிகவும் நன்றாக உள்ளது “ தூய தமிழில் கூற, மூவரும் சிரித்தனர். பின் அடுத்தடுத்த நாட்களில் முழுதாய் தங்கள் ஆராய்ச்சியை முடித்து ஒருவித பதற்றம் மனதில் தோன்ற பல்கலைக்கழகம் நோக்கி மகிழனோடு சென்றனர் கூடவே மாதவியும் சென்றார்.
“ என்ன டா இரண்டு பேரும் பதற்றமா இருக்க மாறி இருக்கு என்னாச்சு “ அனுசரணையாய் மாதவி கேட்க, அவரின் தோளில் சாய்ந்து “ எங்க ஆசை நிறைவேற போதுங்கற மகிழ்ச்சி அதோட சேர்த்து எங்க ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமாங்கற பயம்னு ஒரே தவிப்பா இருக்குமா “ அல்லி கூற, நன்விழியும் தலையை ஆட்டினாள். “ அவள அம்மா சொல்லுங்க என்ன மட்டும் சார்னு சொல்லுங்க “ அவர்களை இயல்பிற்கு கொண்டுவரும் நோக்குடன் எப்பொழுதும் கோவித்துக்கொள்வது போல் மகிழன் முகத்தை சிறு குழந்தை போல் வைத்து கொண்டு கூறினார்.
அவர் முகத்தை கண்டு சிரிப்பு வர மூவரும் சிரித்தனர். சிரிக்கும் அவர்களை கண்டு இன்னும் முறைத்தார். “ அதென்னவோ உங்களை சார்னு தான் கூப்பிட வருது வாத்தியாரே “ அல்லி கேலியாய் கூறினாள். குழந்தை வரம் இல்லா அத்தம்பதியர் அல்லி நன்விழியை தங்கள் மகள்களாகவே கருதினர். தங்களை அம்மா அப்பா என்றே அழையுங்கள் என ஆசையாய் மாதவி கேட்க, இருவரும் மகிழ்வுடன் அவர் ஆசையை நிறைவேற்றினர். மகிழனை மற்றும் அப்பா என்றழைக்காமல் சார் என்றே அழைத்து கடுப்பேற்றுவர் அதில் அவர்களுக்கொரு ஆனந்தம், அதனை அறிந்த மகிழனும் அவர்களின் வாலுதனத்தை ரசித்து பொய்யாக கோவிப்பார். “ வாலு “ அல்லியின் தலையை விளையாட்டாக கலைத்தார். நால்வரும் கேலி கிண்டலுடன் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தனர். மாதவியை ஓர் அறையில் உட்கார கூறிவிட்டு மூவரும் ஆராய்ச்சியை சமர்ப்பிக்கும் அறை நோக்கி சென்றனர். சமர்பித்துவிட்டு படபடப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். மகிழன் ஆதரவாக இருவரையும் கண்டு சிரித்தார். இருவரின் பயத்திற்கு அவசியமே இல்லை என்பது போல் இவர்களின் ஆராய்ச்சியை தேர்வு செய்தனர் அதுமட்டுமின்றி சில வினாக்களையும் தொடுத்தனர் ஆராய்ச்சி பற்றி அனைத்திற்கும் தடுமாற்றமின்றி இருவரும் பதில் கூற திருப்தியுற்றவர்கள் இவர்களின் ஆராய்ச்சிற்கு ஒப்புதல் அளித்தனர். இருக்கும் இடம் கருதி தங்களை அடக்கியவர்கள் மாதவியை நோக்கி ஓடி சென்று ஆனந்தத்துடன் குதித்து கொண்டு தங்கள் மகிழ்வை பகிர்ந்தனர். சிறிது அழுகை கூட எட்டி பார்த்தது. எத்தனை போராட்டம் வசவுகள் அடிகள் இதனை சாதிக்கும் முன். இவர்களின் ஆராய்ச்சியில் கவர்ந்த அப்பல்கலைக்கழகத்தின் முதல்வர் அவர்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்பு தருவதாக கூற, அதிர்ச்சியில் சிலை போல் ஆகினர். தங்கள் கிராமத்தின் பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும் என்ற எண்ணத்திலே அனைத்தையும் கடந்து வெற்றி பெற்றவர்களுக்கு இவ்வாய்ப்பு தேனாய் மனதிற்கு இனித்தது.
செம்பியூரை விட்டு வந்தவர்கள் திரும்பி ஒருமுறை கூட அங்கு செல்லவில்லை. மாதவி பல முறை கூறியும் மறுத்து சென்னையிலேயே இருந்தனர். மாதத்திற்கு ஒரு முறை கடிதம் மூலம் தங்கள் நிலையை தங்கள் முன்னேற்றத்தை பற்றி கூறி அனுப்புவர். அதனை அவர்கள் படித்தார்கள் என்று கூட தெரியாது அவர்களிடம் இருந்து பதில் கடிதமோ தகவலோ வராது, இதனை முன்னே அனுமானித்தப்போதிலும் சிறு வருத்தம் அடைந்தனர். இப்பொழுது இவ்வெற்றி மற்றும் வேலை வாய்ப்பை பற்றி நேரில் சென்று கூறி வாருங்கள் என்றே மாதவி அவர்களிடம் கட்டளையாய் கூறினார்.
சரியென்று ஒருமனதாக முடிவெடுத்து செம்பியூரை நோக்கி ஒரு வருடம் கழித்து சென்றனர். அங்கு எதிலும் மாற்றமென்பது இல்லை ஒன்றை தவிர அங்குள்ள பெண்கள் கல்வி கற்கின்றனர் இவர்களை போல் அழுத்தத்துடன், அதனை அறிந்து பெருமையாய் சிரித்தனர் அல்லி மற்றும் நன்விழி. வேலையை பற்றியும் தங்களின் வெற்றியை பற்றியும் குடும்பத்தாரிடம் கூறினர். முன்பு போல் கோவம் இல்லை என்றாலும் இவர்கள் முடிவுக்கு எதிர்ப்பும் இல்லை. அதுவே பெரிய விஷயமென்று எண்ணினர் இருவரும். காலம் அனைத்தையும் மாற்றும் என்பது உண்மை தான் போல என்று கேலியாக எண்ணி உள்ளுக்குள் சிரித்தனர்.
முற்றும்