அருவா- கல்யாண் ஆனந்த் (கல்யாணசுந்தரம்)

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 88 அருவா- கல்யாண் ஆனந்த் (கல்யாணசுந்தரம்)

பகல் நேரத்தில கூட இந்த அடர்ந்த காட்டு வழியா யாரும் தனியா போக மாட்டாங்க. இங்க இருக்கிற பெரிய பெரிய காட்டு மரங்களும் ஆள் நடமாட்டம் இல்லாததால் நிலவுர அமைதியும் எல்லாரையும் ரொம்ப பயப்படுத்திடும். இந்த காட்டுல எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலும் ஆபத்து வரலாம். எல்லாம் தெரிஞ்சும் நான் என் உயிர கைல பிடிச்சுட்டு மூச்சிரைக்க ஓடுறதுக்கு காரணம்… என் உயிருக்கு இதைவிட பெரிய ஆபத்து வந்துருக்கு. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி அந்த அய்யனார் சாமி மட்டும் தான். எங்க ஊர்லயிருந்து இந்த காட்டு வழியா ரொம்ப தூரம் நடந்து வந்தா அய்யனார் சாமி கோயில். வேகமாக ஓடிப்போய் அய்யனார் சாமி காலில் விழுந்து என்னை எப்படியாவது காப்பாத்திருன்னு அழுகணும். அவர் ஒருத்தரால மட்டும் தான் இந்த நிலைமையில இருந்து என்ன காப்பாத்த முடியும். அந்த நம்பிக்கைல தான் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாம வேகமா ஓடிட்டு இருக்கேன்.

வெயிலோட தாக்கத்தால் காடு முழுவதும் காஞ்சு போயிருக்கு. வண்டுகளோட சத்தம் மட்டும்தான் கேக்குது. தண்ணி இல்லாம எந்த உயிரும் இங்கு வாழ்றது ரொம்ப கஷ்டம். இதுக்கு முன்னாடி நாலஞ்சு தடவ கூட்டத்தோடு கூட்டமா இந்த வழியா வந்திருக்கேன். ஆனா தனியா வர்றது இதான் முதல் தடவ. இன்னும் கொஞ்ச தூரத்தில் அய்யனார் கோயில் வந்திடும்.

மரங்களுக்கு நடுவுல பெரிய பாறை. அந்தப் பாறையை கடந்தவுடன் தூரத்தில சின்னதா அய்யனார் சிலை  தெரிய ஆரம்பிச்சது. அத பார்த்த உடனே வேகமா ஓட ஆரம்பிச்சேன். கீழே கிடந்த கல்லு முள்ளு மேடு பள்ளம் எத பத்தியும் கவலைப்படாம வேகமாக ஓடுனேன். கொஞ்சம் கொஞ்சமா அய்யனார் என் பக்கத்துல வர்ற மாதிரி இருந்துச்சு.

ஒரு வழியா ஓடி கோயில் கிட்ட வந்துட்டேன். ரொம்ப தூரம் ஓடி வந்ததால மூச்சு இரைக்க கொஞ்ச நேரம் அப்படியே நின்னுட்டேன். அங்க பூசாரி யாரும் இல்லை. அய்யனார் சிலையை சுற்றி மிரட்டலான ரெண்டு மூணு குதிரை சிலைகள். உடைஞ்சு போய் துண்டு துண்டா கீழே கிடக்கும் ரெண்டு குதிரை சிலைகள். கோயில சுத்தி பெரிய பெரிய ஆலமரங்கள்.

முப்பது அடி உயரம், பெரிய மீசை, உருட்டி மிரட்டி பார்க்கும் அந்தக் கண்கள் எல்லாத்தையும் பார்க்கவே பயமா இருந்தது எனக்கு. அவர் கையில இருந்த அருவாள் இன்னும் பீதிய கிளப்பிருச்சு. அந்த இடத்துல இருந்த அமைதி இன்னும் பயத்தை ஏற்படுத்திருச்சு. இருந்தும் அய்யனார் இருக்க தைரியத்துல அப்படியே அங்க உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்த எனக்கு வரப்போற ஆபத்தை நினைக்க நினைக்க அழுகையா வந்தது. சாமி என்னை எப்படியாவது காப்பாத்திடுப்பா… என் உயிருக்கு ஆபத்து வந்துருச்சு. எந்த நேரத்திலும் அவங்க என்ன கொன்றுவாங்க. நான் என்ன தப்பு செஞ்சேன் தெரியல. அவங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன பகைன்னு தெரியல. ஆனா எங்க குடும்பத்துல ஒவ்வொருத்தரையா அவங்க கொன்னுட்டு இருக்காங்க. கடைசியா என்னையும் கொல்ல போறதா இருக்காங்க. எப்படியாவது என்ன காப்பாத்திடு. என் கூட இருக்கிற என் சொந்தக்கார பயலுகளும் சரியான ஆட்டுமந்த கூட்டம். எதுக்கும் துணிஞ்சு என்ன காப்பாத்த வர மாட்டாங்க. அவங்களையும் எந்த தப்பும் சொல்ல முடியாது பாவப்பட்ட ஜென்மங்கள். என் பொண்டாட்டி பிள்ளைகளோட இந்த ஊரை விட்டு வேற எங்கேயாவது போய் வாழலாம்ன்னு நினைச்சா கூட எனக்கு எங்க போறதுன்னு தெரியல. அவங்கள தனியா வெளி ஊருக்கு கூட்டிட்டுபோய் சமாளிக்கிற அளவுக்கு எனக்கு தென்பும் இல்லை. ஆனா வேற வழி இல்ல.  உயிருக்கு பயந்து இந்த ஊற விட்டு போக முடிவு பண்ணிட்டேன்.  என்னோட எதிரிங்க என்ன தேடி அங்கேயும் வராம நீ தான் பா என்ன காப்பாத்தணும்.  உன்ன விட்டா எனக்கு வேற வழி இல்ல. நான் அழுதுட்டு இருக்குறது உனக்கு கேட்கும். எங்க  போனாலும் நிச்சயம் நீ வந்து என்ன காப்பாத்துவேன்னு நம்பி இன்னைக்கு ராத்திரியே இந்த ஊர விட்டு குடும்பத்தோட போக முடிவு பண்ணிட்டேன். 

நான் கோயிலயிருந்து புறப்பட தயாரான போது யாரோ நடக்கிற சத்தம் கேட்டு பயந்துட்டேன். அய்யய்யோ அவங்க தான் வந்துட்டாங்களா? யாருக்கும் தெரியாம இந்த இடத்திலேயே என்ன வெட்டிட்டா?? நான் என்ன பண்ணுவேன்? வேகமா ஓடிப்போய் குதிரைக்கு பின்னால ஒளிஞ்சிகிட்டேன். சிலைக்கு பின்னாடி நின்னு நடுக்கத்தோடு யார் வராங்கன்னு பார்த்துட்டு இருந்தேன். அங்க யாரும் இல்லை. ரெண்டு மாடு மேச்சலுக்கு வந்து அலைஞ்சிட்டு இருந்திச்சு. எங்க ஊரு மாடு தான். இந்த இடத்துக்கு எப்படி வந்ததுன்னு தெரியல. கொஞ்சம் கூட அறிவில்லாம இப்படி இந்த காட்டுக்குள்ள வந்துருக்கு. புலி சிங்கம் ஏதாவது வந்து அடிச்சிருச்சுனா என்ன பண்ணும். மாட்ட பத்தி யோசிக்கிறேன் ஆனா, சிங்கம் புலி வந்தா     என்னோட நிலைமையும் அது தானே. எல்லா பக்கமும் எனக்கு ஏதோ ஒரு வகையில ஆபத்து காத்திட்டிருக்கு. இதுக்கு மேல இந்த இடத்துல தனியா இருக்கிறது ஆபத்துதான்னு வேகமா ஊர் பக்கமா ஓடுனேன்.

வீட்டுக்கு வரும்போது ராத்திரி ஆயிடுச்சு. புள்ளைங்க ரெண்டும் நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. என் பொண்டாட்டி என்ன பாக்கவே முடியாம ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுட்டு இருந்தா. எனக்கும் என்ன செய்யன்னு தெரியல. அன்னைக்கு முழுவதும் இத நினைச்சு சரியா சாப்பிட கூட இல்லை பசி மயக்கம் வேற. அப்படியே நானும் உட்கார்ந்துட்டேன். நேரம் போக போக பயம் கூடிட்டே போச்சு.

காலையிலிருந்து ஓடுன களைப்பில கண்ணெல்லாம் தானாகவே சொருக ஆரம்பிச்சுது. கொஞ்சம் அசந்து தூங்கும்போது திடீர்னு பயங்கர சத்தம் கேட்டு பயந்துபோய் முழிச்சேன். வீடே அதிர்வது மாதிரி சத்தம். வீட்டை சுத்தி அவங்க நிக்கிறாங்கன்னு நினைச்சு பயந்து மெதுவா வெளிய எட்டிப்பார்த்தேன். ரோட்டுல ஒரே சத்தம். நிறைய வண்டிங்க ஊருக்குள்ள போயிட்டு இருந்தது. பைக்ல திமு திமுனு யார் யாரோ ஊருக்குள்ள வந்துட்டு இருந்தாங்க. என்னோட கடைசி நேரம் நெருங்கி கிட்ட வர்ற மாதிரி என் உள் மனசு சொன்னுச்சு.

 கடைசியா ஒரு வண்டியில அவன் போனான். அவனேதான். அவனை பார்த்த உடனே எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. அவன் தான் எங்க அண்ணனையும் எங்க அப்பாவையும் துடிக்க துடிக்க… ரத்தம் வடிய என் கண்ணு முன்னாலே கொன்னவன்…

அவன் வெட்டுன வெட்டுல தல தூண்டா போய் ரத்தம் தெறிச்சு அந்த இடமே ரத்த ஆறா ஓடுச்சு. அந்த சம்பவத்தை இப்போ நினைச்சா கூட என் உடம்பெல்லாம் நடுங்குது. அதையும் இந்த ஊர்காரங்க எல்லாம் சுத்தி நின்னு வெடிக்க தானே பார்த்துட்டு இருந்தாங்க.

ரத்தம்… அருவாள்…. வெட்டு… இத பத்தின சிந்தனை எல்லாம் என் நாடி நரம்புக்குள்ள புகுந்து என்ன ரொம்ப பலவீனப் படுத்திருச்சு.

 அதோட அவங்க பக முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சேன். ஆனா அவங்க இன்னைக்கு ஊருக்குள்ள வர்றதுக்கு என்ன காரணம். நான் தான். நானே தான். இதுக்கு மேல காத்திருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. துணிஞ்சு எதுவா இருந்தாலும் பார்த்துட வேண்டியது தான். மெதுவா என் பொண்டாட்டியும் பிள்ளைகளையும் எழுப்பி அங்கிருந்து கூட்டிட்டு போக முடிவு பண்ணிட்டேன். அதுக்கு முன்னாடி நான் மட்டும் தனியா ஊருக்குள்ள போய் யார் யார் இருக்காங்க? எந்த வழியாக போகலாம்னு பார்த்துவிட்டு வர மெதுவா சத்தம் இல்லாம புறப்பட்டேன்.

ராத்திரி நேரம் ஊரே அடங்கி எந்த சத்தமும் இல்லாம அமைதியா கிடந்தது. உயிர கையில பிடிச்சுட்டு ஒவ்வொரு தெருவா கடந்து வந்தேன்.

யாரும் என்ன பார்த்துடாம இருக்க ஒளிஞ்சு ஒளிஞ்சு போனேன். கடைசியா இருக்கிற அந்த தெரு. அதையும் கடந்துட்டா ஊறவிட்டு ஈஸியா வெளியே போய்விடலாம். விடியிறதுக்கு  முன்னாடி ஊரவிட்டு போய்ட்டா நல்லது.  கொஞ்சம் வெளிச்சம் வந்துட்டா எந்த பயலாவது பாத்துருவான்.  ஒருத்தன் கண்ணுல மாட்டுனா கூட அவ்வளவுதான்.

ஒரு சுவருக்கு பின்னாடி மறஞ்சு நின்னு தலைய மட்டும் வெளியில நீட்டி எட்டி பார்த்தேன். அவர் வீட்டில‌ மட்டும் ரொம்ப கூட்டமா இருந்துச்சு. அந்த கூட்டத்தை கடந்து போறது ரொம்ப கஷ்டம். மறைஞ்சு மறைஞ்சு போனப்ப அங்க ஒரே அலறல் சத்தம். அந்த வீட்டில் இருந்த ஒரு வயசான தாத்தாவ பெரிய பலகைல படுக்க வைச்சு மாலையெல்லாம் போட்டிருந்தாங்க. என்ன நடக்குதுன்னு எனக்கு ஒன்னும் புரியல. அந்த மாலையை பார்த்த உடனே எனக்கு எண்ணம் எங்கெங்கோ போயிருச்சு.

அந்த மாலையோட வாசம் என்ன சுண்டி இழுத்துச்சு. மெதுவா இன்னும் பத்து அடி முன்னால போனேன். யாரும் என்ன பார்த்திரக்கூடாதுன்னு நினைச்ச நேரத்துல ஒருத்தன் என்ன பாத்துட்டான். கொஞ்ச நேரத்துல நாலஞ்சு பேர் வந்து என்ன துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. எட்டி குதிச்சு ஓடுனேன். உயிர கைல பிடிச்சிட்டு ஓடுனேன். அந்த பக்கம் இந்த பக்கம் ஓடுனேன். ஆனா எல்லா பக்கத்தில் இருந்தும் ஆளுங்க வந்து என்ன வளைச்சு பிடிச்சுட்டாங்க. என்ன பிடிச்சு தரதர தரன்னு இழுத்துட்டு போனாங்க. இழுத்துட்டு போய் அவன் முன்னாடி நிறுத்திட்டாங்க. என் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு. ரத்த ஓட்டம் எல்லாம் அடங்கி போயிடுச்சு. மூச்சு காத்து கூட சரியா வெளியே வரல்ல. கடைசியா ஒரு தடவ கண்ண மூடி என் பொண்டாட்டி பிள்ளைங்க அய்யனார நினைச்சிக்கிட்டேன்.

“அண்ணே வெள்ளையன் நடுராத்தில சுத்திட்டு இருக்கான். இவனை என்ன பண்றது. இவன இங்கே கட்டிபோட்டுட்டு காலைல அய்யனார் கோவில் பக்கம் கூட்டிட்டு போய் வெட்டிறலாமா?”

“பூசாரி என்ன சொல்றீங்க?”

“இல்லப்பா… நம்ம வழக்கப்படி கெடா வெட்டு சொன்னதுக்கு அப்புறம் ஊர்ல சாவு விழுந்துட்டா அந்த ஆட்டை கோயிலுக்கு நேர்ந்து விட்டுடனும். அதுக்கப்புறம் அந்த ஆட்டை என்னைக்குமே வெட்டவே கூடாது. வெள்ளையனை கொண்டு போய் கட்டி போட்டுருங்க.”

ரெண்டு பேர் என்னை இழுத்துட்டு போய் பட்டில அடைச்சு வச்சுட்டு போய்ட்டாங்க.

***********

Exit mobile version