உங்களின் நான் -ஸ்ரீ

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 96 உங்களின் நான் -ஸ்ரீ

இதுவரை வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

சூழ்நிலை உணர்ந்தோ உணராமலோ பல நேரங்களில் பாடல்கள் நமக்காகவே ஒலிக்கும்.அப்படிதான் இந்தப் பாடலும் இப்போது தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.கடந்த இரண்டு மணி நேரமாய் பூட்டிய அறைக்குள் வெறித்துப் பார்த்து அமர்ந்து கொண்டிருக்கிறேன்.ஒரு மாதிரியான அமைதி நிலைக்கு மனதளவில் சென்று கொண்டிருப்பதாய் பிரமை.இன்னொரு புறம் உலகப் போர் மாதிரியான போராட்டம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.புறப்படுவதற்கு எல்லாம் ஆயுத்தமாய் இருக்கிறது.

அவசரமாய் கிளம்ப வேண்டிய கட்டாயம்.நான் ரிஷி.பலரின் அன்புக்கு சொந்தக்காரன்.இந்த இருபத்தி ஒன்பது வருட வாழ்க்கையில் நிறைய நிறைய நற்பெயரையும் நல்ல மனதிற்கு சொந்தக்காரர்களையும் சம்பாதித்திருக்கிறேன்.

இப்போது இந்த நொடி கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டிக் கொள்வதற்கு தயாராக இருக்கும் நொடி கூட வாட்ஸ்அப்பில் நண்பர்களின் உரையாடலைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

நாளை விஷயம் தெரிந்த பின் இந்த குறுஞ்செய்திகளில் எத்தனை பேர் என்னைத் தேடுவார்கள்.எத்தனை பேர் என்னைத் தொலைத்து விட்டதாக எண்ணுவார்கள்.எத்தனை பேர் என் ஆன்மா சாந்தியடைய வேண்டுவார்கள் என்றெல்லாம் கோடி முறை சிந்தித்தாகிவிட்டது.

என் அம்மாவின் கைப்பேசி எண் தொடங்கி அத்தனை பேரின் எண்ணிலும் இருக்கும் முகப்பு படத்தைப் பார்த்து முடித்தாயிற்று.அம்மாவின் குறுஞ்செய்திகளை எல்லாம் மேலும் கீழும் தள்ளித் தள்ளிப் படித்துப் பார்த்தேன்.எதோ ஒரு நொடியில் அவர் மடிக்குச் சென்று அழுது தீர்த்துவிட்டு அத்தனை சுமைகளையும் சுமக்க புது உத்வேகம் கிடைத்துவிடாதா என்ற பேரவா!

ஆனால் ஏனோ அதைச் செயல்படுத்தத் தோன்றவில்லை.மிகவும் அசதியாக உணர்கிறேன்.வாழ்வின் மீதான அலுப்பு மீண்டும் போராட வேண்டும் என்ற எண்ணத்தை கீழே தள்ளிவிட்டது.

ஒரு காலத்தில் நானே பேசியிருக்கிறேன்,”தற்கொலையெல்லாம் கோழைத்தனம் வாழ்வின் அருமை தெரியாதவனே அந்த அற்பச் செயலைச் செய்வான்.தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லை.”,இப்படி இன்னும் என்னென்னவோ.

ஆனால் இன்று நானே இப்படியான ஒரு நாளில் வந்து நிற்கிறேன்.மிகவும் ஏழ்மையான பிண்ணனி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவன்.தட்டுத் தடுமாறி ஒரு பட்டப்படிப்பை பெற்றுவிட்டேன்.

ஆனால் அதன் பிறகு??!

வேலை கிடைக்க அரும்பாடுபட்டேன்.இந்த நகரத்தில் நான் படும் அவமானங்கள் எதுவும் என் அன்னையைத் தீண்டாதவாறு பார்த்துக் கொண்டேன்.

எத்தனையோ ஏளனம் எத்தனையோ இழிசொல் கேட்டு கூனிக்குறுகிய காலங்கள் ஏராளம்.

அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொரு படியாய் பிடித்து மேலேற முயற்சித்த காரணம், வாழ்க்கை என்றாவது எனக்கு பிடித்தாற் போல் மாறும் என்ற குருட்டு நம்பிக்கை.

இரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு ஓரளவு பிரச்சனை இல்லாத வேலை.அதன் மூலம் கிடைத்த நண்பர்கள் என வாழ்க்கை நகர ஆரம்பித்தது.நகரத்திற்கே உரிய வாழ்க்கை,வார நாட்களில் நாயாய் உழைத்து வார இறுதியில் நண்பர்களோடு ஆட்டம் பாட்டமென பொழுதைப் போக்குவது.

இதெல்லாம் எதற்காக என்றால் மனஉளைச்சலை குறைப்பதற்காக.அப்படி கூறுவது ஒரு வகையில் மிகப்பெரும் பொய்.மன உளைச்சல் என ஒன்று இருப்பின் அது இத்தகைய ஆடம்பர செலவீனங்களால் மட்டும் குறைந்துவிடப் போவதில்லை.ம்ம்..என்ன செய்வது இந்த தெளிவு அப்போதெல்லாம் இல்லாமல் போய்விட்டது.

நண்பர்களோடு என்னைப் பார்த்தால் யாரும் நினைக்கக் கூடிய ஒரு விஷயம்,”எத்தனை நண்பர்கள் இவனைச் சுற்றி கொடுத்து வைத்தவன்”,என்பதாய் தான் இருக்கும்.உண்மையில் நாம் அனைவருமே யாரிடத்திலும் கூறாத சில கருப்பு பக்கங்கள் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் இருக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பது ஒவ்வொருவருடைய,”உங்களின் நான்”இதை மட்டும் தான்.

அதாவது நானாக விரும்பி எனைப் பற்றி என்ன காட்ட விரும்புகிறேனோ அதை மட்டுமே நீங்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதிலும் இந்த சமூக வலைதளம் ஆகச் சிறந்த மாயை.இதில் நான் பதிவிடும் என் பதிவும், புகைப்படமும், செல்லும் இடங்களுமே என்னை நீங்கள் தீர்மானிக்கும் ஒரு காரணி.

ஆனால் அதையெல்லாம் கடந்த இந்த ரிஷி என்பவன் எதார்த்தம் முகத்தில் அறைய வாழவே தவித்துக் கொண்டிருப்பவன்.இன்னதென வரையறுக்க முடியாத ஒருவித வலி எப்போதுமே உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருக்க வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருப்பவன்.

என் சுற்றமும் நட்பும் என் காதுபடவே பலநேரம் கூறக் கேட்டிருக்கிறேன்,”தங்கமான புள்ள ரிஷி.எப்போதும் சிரிச்ச முகம் தான்.காய்ச்சல் தலைவலினா கூட பொருட்படுத்தாம வேலை வேலைனு ஓடும்.வாழ்க்கையில் சாதிக்கணும்னு மிகப்பெரிய கனவு இருக்கு அவனுக்கு”,எல்லாமே உண்மைதான்.

சொந்தமா சின்னதா ஒரு வீடு வாங்கணும்,அம்மாவுக்கு நிறைய நிறைய பண்ணணும்.வாழ்க்கையில் அவங்க எதுவுமே அனுபவிக்கல.ராணி மாதிரி பார்த்துக்கணும்.அப்பறம் மனசுக்கு பிடித்த மாதிரியான ஒரு வாழ்க்கை.எனக்கே எனக்கான உறவுகள் இப்படி நிறைய விஷயங்கள் கனவுகளாக மட்டுமே மனதில் இருக்கு.

சொல்லப் போனால் இவை மட்டுமே இத்தனை வருடமும் என் வாழ்க்கையை நகர்த்த உதவியிருக்கிறது என்பதே இப்போது தான் புரிகிறது.இத்தனை தெளிவாய் பேசுபவனுக்கு இப்போது என்னவாயிற்று என்று கேட்டால் மனதில் சோர்வு சூழ்ந்துவிட்டது.

போராட்ட குணம் குறைந்துவிட்டது.வலுவெல்லாம் இழந்துவிட்டது போன்ற ஒரு நிலை.என் நண்பனின் தந்தை அடிக்கடி கூறுவார் இன்றைய தலைமுறைக்கு போராடும் குணமே இல்லை.

தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை.எதற்கெடுத்தாலும் உயிரை மாய்த்துக் கொண்டால் தீர்வு கிடைத்து விட்டதாக ஒரு எண்ணம்.உன் தாய் அளித்த உயிரை போக்கிக் கொள்ளும் சுதந்திரத்தை உனக்கு யார் கொடுத்தது என்றெல்லாம் செய்திகளைப் பார்த்துவிட்டு ஆதங்கப்படுவார்.

இன்னொரு விஷயம் கூட கூறுவார்,”தற்கொலை செய்பவனெல்லாம் கோழை”,என ஆனால் இன்று என் நிலைமையில் இருக்கும் போது புரியும் விஷயம் ஒன்று உண்டு,

“கோழையால் இத்தகைய முடிவை எடுக்க முடியாது.வாழ்க்கையை முடித்துக் கொள்ள தனி தைரியம் வேண்டும்”,என்று தோன்றுகிறது.

இந்த நேரத்தில் மனமும் புத்தியும் அப்படியாய் ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.நான் எடுத்திருக்கும் முடிவு முட்டாள்தனமென அறிவு ஆர்பரித்துக் கொண்டிருக்க,மனமோ போதும் நான் இளைப்பாற எண்ணுகிறேன் என்று அழாத குறையாய் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

இன்று நேற்று அல்ல ஒரு மாத காலமாகவே தவித்துக் கொண்டிருக்கிறேன் எனினும் யாரிடமும் எதையும் பேசுவதற்குத் தோன்றவில்லை.

அதற்கான மிகப்பெரும் காரணம் என் நிலையை யாரிடம் கூறினாலும்,”ஏன் டா ரிஷி பைத்தியம் மாதிரி பேசுற,நாங்க எல்லாம் உன்கூட இல்லையா.இதெல்லாம் ஒரு பிரச்சனையா டா.தனியா இருக்காத தேவையில்லாம யோசிக்கத்தான் தோணும்.யார் கூடவாவது பேசு.”

எனக்காக எத்தனை பேர் இருந்தாலும் என் வீட்டிற்குள் எனக்கிருப்பது நான் மட்டுமே.எல்லாரும் சொல்கிறார்களே என்று முயற்சி செய்யலாம் என மிகவும் சோர்ந்து போன நேரத்தில் அன்னையை அழைத்தேன்,”அக்காவோட மாமியார் தீபாவளிக்கு புதுத்துணி கேட்குறாங்க பா..”,என்ற பாவமான குரலைக் கேட்ட பின் வேறென்ன பேச முடியும்.

நண்பன் ஒருவனை அழைத்தேன்,”மச்சி ஆளோட வெளியில் இருக்கேன் டா.நைட் பேசட்டுமா”,இதன் பிறகு யாரையும் தொல்லை செய்ய மனமில்லாமல் போனது. மீண்டும் எனக்கு நானே என்ற நிலை தான்.

இந்த பதில்களெல்லாம் வருவதன் முக்கிய காரணம் “Depression”,என்பது காய்ச்சல் தலைவலி போல சாதாரணமாகிவிட்ட ஒரு வியாதி இப்போது.

நண்பர்களோடு சண்டை காதலியோடு பிரச்சனை கணவன் மனைவி தகராறு பிள்ளைகள் ஒழுங்காய் படிப்பதில்லை இப்படியான விஷயங்கள் கூட இப்போது அனைவரையும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

அதனாலேயோ என்னவோ இதன் உண்மையான தாக்கத்தை யாரும் உணர்வதில்லை.

எனக்கு நன்றாகப் புரிகிறது இந்த உலகத்தில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லையென.என்னைவிட வறுமையிலும் பிரச்சனையிலும் இருக்கும் மக்கள் எத்தனையோ கோடி.ஆனாலும்.,

இதுதான் என் பிரச்சனை என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ள ஆயிரம் வகையில் யோசித்தாலும் இறுதியில் மனம் சென்று நிற்பதென்னவோ வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவில் தான்.

என்னிடம் இல்லாததையும் நான் சாதிக்காததையும் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு இந்த சமூகம் என்னைத் தள்ளி விடுகிறது.

என் வயதில் ஐந்து இலக்க சம்பாத்தியத்தைப் பெறுபவனும்,என் வயதில் சொந்த வீடு வைத்திருப்பவனும்,என் வயதில் திருமணம் குழந்தை என நகர்பவனுமே இங்கு சரியான பாதையில் போவதாக ஒரு பிம்பத்தைச் இச்சமூகம் தீர்மானித்துள்ளது.

பணம் என்ற ஒன்று தான் ஒரு மனிதனின் தரம் குணம் மரியாதை அத்தனையையும் தீர்மானிக்கும் சக்தி.அது இல்லையேல் சொந்தக்காரர் எல்லாம் ஏதோ புழு பூச்சி போன்று நம்மைப் பார்க்கிறார்.

என் அக்காவின் திருமணத்திற்காக நெருங்கிய உறவிடம் வாங்கியிருந்த கடனை இன்னும் என்னால் அடைக்க முடியவில்லை.

கடன்காரன் வெளி ஆளாய் இருந்தால் கூட சில நேரங்களில் நம் நிலைமையை புரிந்து கொள்வான் போலும்.ஒரு மாதம் பணம் கட்ட தாமதமான போது அவர் பேசிய வார்த்தைகள் அந்த இடத்திலேயே பிணமாய் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது.

சொந்தத்திற்க்கோ பந்த பாசத்திற்கோ இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை பெரும்பாலும்.நட்பும் பல நேரங்களில் அதே நிலை தான்.என்னுடைய கஷ்டத்தைக் கூறி எப்போது பார்த்தாலும் பணம் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த நட்பிற்கான மதிப்பென்பது இருக்குமா?!

இத்தனை இத்தனை விஷயங்களை யோசிக்கும்போது தெரிகிறது வாழ்வதற்கான ஆசை இன்னும் மனதின் ஓரம் எங்கோ மண்டிக்கிடக்கிறது என்று.

இந்த நொடி யாராவது வந்து,யாராவது என்ன அந்தக் கடவுளே வந்து உன் பிரச்சனைகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போய் நிம்மதியாய் தூங்கி எழுந்து வா என்று கூறினால் எத்தனை நன்றாக இருக்கும்.பேராசை தான் இருந்தும் என்ன செய்வது அப்படியான அதிசயங்கள் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம்.

மனதில் ஓடிக் கொண்டிருக்கும் இத்தனையையும் யாருக்கும் தெரிவிக்க மனமில்லை.அதேநேரம் என்னைப் போன்று தவிப்பவர்களுக்காகவும் என் அன்னைக்காகவும் சிலவற்றை கூற ஆசை இருக்கிறது..

“ம்மா..உன் வாழ்நாளில் என்றாவது என்னை மன்னிக்க முடியுமானால் தயவுசெய்து மன்னித்து விடு.அப்பாவைப் போலவே நானும் உன்னைப் பாதியிலேயே தவிக்கவிட்டுச் செல்கிறேன்.இப்பிறவியின் என் மிகப்பெரும் பாவம் இதுதான் என்பதை நன்றாக அறிவேன்.இருந்தும் ….என் தவறை எப்படியும் நியாயப்படுத்த விரும்பவில்லை.எப்படியாவது என்னை மன்னித்து விடு.

அக்கா பொறுப்பனைத்தையும் உன்மேல் கொட்டிச் செல்லும் குற்றவுணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது.ஆனால் இந்த வாழ்க்கைப் பந்தயத்தில் என்னால் இதற்கு மேல் ஓட முடியவில்லை.ஓடத் தகுதி இல்லாதவனாய் உணர்கிறேன்.அம்மாவைப் பார்த்துக் கொள்.நீயும் எப்போதாவது மன்னிக்க முடிந்தால் என்னை மன்னித்து விடு.

“நான் போன பிறகும் என் தாய்க்காக என் தமக்கை இருக்கிறாள்.ஆனால் எல்லாருக்கும் அப்படி ஒரு உறவு இருந்து விடாது.என்றாவது உங்களில் யாருக்கேனும் தற்கொலை எண்ணம் தோன்றினால் வசதியுடையவர் எனில் தாமதியாது மருத்துவரைச் சென்று பார்த்து தேவையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தற்கொலை எதற்கும் நிச்சயம் தீர்வாகாது!”

Exit mobile version