தீபாவளி ரிலீஸ்

தீபாவளிக்கு வெளியான படங்கள், பொன்னியின் செல்வனின் தாக்கம் இன்னும் நீடிப்பது ஆகிய காரணங்களால் இந்த வாரம் பெரிய அளவில் திரையரங்கில் படங்கள் வெளியாகவில்லை.

இருந்தபோதும் ஓடிடிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் படங்களும் சீரிஸ்களும் வெளியாகியிருக்கின்றன.

  1. காலங்களில் அவள் வசந்தம்: ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக் ராம், அஞ்சலி நாயர் நடித்திருக்கும் படம் இது. திரைப்படங்களில் வருவதுபோன்ற காதல் வாழ்க்கையை விரும்பும் இளைஞன், உண்மையான காதலை எப்படிப் புரிந்துகொள்கிறான் என்பதுதான் கதை. குறைந்த செலவில் புதுமுக நடிகர்களை வைத்து ஓரளவுக்கு சிறப்பாகவே எடுத்திருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது.
  2. Thank God (Hindi): ஈகோ நிரம்பிய ஒரு ரியல் எஸ்டேட் தரகரான அயான் கபூர் ஏகப்பட்ட கடன். விபத்தில் சிக்கிவிடுகிறார். அவர் முன்பாக கடவுள் தோன்றுகிறார். தன்னுடன் ஒரு விளயாட்டை விளையாடும்படியும் வெற்றிபெற்றால் பூமிக்கு அனுப்புவதாகச் சொல்கிறார். அந்த விளையாட்டை விளையாடும்போதுதான், வாழ்வை உண்மையாகப் புரிந்துகொள்கிறார். அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா நடித்த இந்தப் படம் குறித்து ‘ஓகே, பார்க்கலாம்’ என்பது மாதிரியான விமர்சனங்கள் வெளியாகியிருக்கின்றன. தீபாவளிக்கு வெளியான படம் இது.
  3. Har Har Mahadev (மராத்தி): அபிஜித் தேஷ்பாண்டே இயக்கத்தில் வெளியாகியுள்ள மராத்தியத் திரைப்படம் இது. 12,000 முகலாய வீரர்களுக்கு எதிராக 300 வீரர்களுடன் சிவாஜியின் தளபதியான பாஜி பிரபு தேஷ்பாண்டே நடத்திய பவன்கிந்த் யுத்தத்தை பின்னணியாகக் கொண்ட கதை இது. இந்தப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் வெகு சில திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டிருக்கிறது.
  4. The Invitation (ஆங்கிலம்): ஜெஸிகா தாம்ப்ஸன் இயக்கிய திகில் படம் இது. தனது உறவினர்கள் அனைவரும் இறந்த பிறகு டிஎன்ஏ சோதனை மூலம் தூரத்து உறவினர் ஒருவரைத் தேடிப் பிடிக்கிறாள் கதாநாயகி. அந்த உறவினர் திருமணம் ஒன்றுக்கு அழைக்கிறார். அங்கே போன பிறகுதான் பயங்கரம் புரிகிறது. அதிலிருந்து தப்ப முடிந்ததா என்பதே கதை.

ஓடிடி வெளியீடுகள்

  1. நானே வருவேன்: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இந்தப் படம் செப்டம்பர் மாத இறுதியில் திரையரங்கில் வெளியானது. தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
  2. Kotthu (Malayalam): இயக்குநர் சிபி மலயில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம். ஆஸிப் அலி, நிகிலா விமல், ரோஷன் மாத்யூ, சங்கர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்த இந்தப் படம் வடக்கு மலபாரில் அரசியல் தொண்டர்களின் வாழ்வைப் பற்றிப் பேசுகிறது. செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற படம் இது.
  3. Barbarian (ஆங்கிலம்): ஏற்கனவே திரையரங்கில் வெளியான திகில் படம். நேர்காணல் ஒன்றுக்காக ஒரு புதிய இடத்திற்குச் செல்லும் பெண் ஒருவர், செயலி மூலம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்குகிறார். ஆனால், அந்த வீட்டில் வேறு யாரோவும் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு பயங்கரமான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. இந்தப் படம் இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
  4. ஜான்சி (வெப்தொடர்): அஞ்சலி நடித்திருக்கும் இந்தத் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. உளவியல் த்ரில்லரான இந்தத் தொடர் குறித்து கலவையான விமர்சனங்களே வெளியாகிவருகின்றன.

_5. The Good Nurse: இது ஒரு மருத்துவத் த்ரில்லர். தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியர் ஓருவர் 16 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்டவர்களைக் கொலைசெய்கிறார். 2013ஆம் ஆண்டில் இதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.’

தெலுங்குப் படங்களான ஸ்வாதி முத்யம் ஆஹா ஓடிடியிலும் கிருஷ்ணா விருந்த விஹாரி நெட்ஃப்ளிக்சிலும் வெளியாகியுள்ளன.

Exit mobile version