டாஸ் மாக் கடைகளும் செல்போன்களும்! – துடுப்பதி ரகுநாதன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 22 டாஸ் மாக் கடைகளும் செல்போன்களும்! – துடுப்பதி ரகுநாதன்

இன்று நாட்டில் பல முதிய அறிஞர்களின் பேசும் பொருளாக இருப்பது மது விலக்கு கொள்கை தான்!

 காந்தி, காமராசர் காலத்திற்குப் பிறகு, பிற்காலத்தில் வந்த அரசியல் தலைவர்களுக்கு மது விலக்கு கொள்கையில் அக்கறை இல்லாமல் போய் விட்டது!

 அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் இரண்டு! ஒன்று சட்டங்களை எவ்வளவு கடுமையாக்கிச் செயல் படுத்தினாலும் கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பவர்களை அரசால் கட்டுப் படுத்த முடியவில்லை!

 இரண்டு மதுவை அரசே விற்பனை செய்வதால் அரசுக்கு  அதில்  வருமானம் பல ஆயிரம் கோடி எளிதில் கிடைக்கிறது! அதை வைத்து நிறைய மக்கள் நல திட்டங்களை செயல் படுத்த முடியும் என்று  அவர்கள் நினைக்கிறார்கள்!

 மது விலக்கை  மீண்டும் அமுல் படுத்த வேண்டும் என்று இன்றும் சில அறிஞர்கள்  சொல்லுவதற்கும் அவர்கள் சொல்லும்   காரணங்கள் கூட இரண்டே தான்!

 அனைத்து கட்டுப்பாட்டையும் மீறி குடிப்பவர்களின் எண்ணிக்கை 5% க்கு மிகாமல் தான் இருக்கும்! ஆனால் அரசே மதுவை விற்க தொடங்கிய பிறகு அந்த எண்ணிக்கை 60% க்கு மாறி விட்டது! உயர் நிலை பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்குப் போகும் பெண்கள் வரை குடிக்கப் பழகி வருகிறார்கள்! ஆசிரியர்கள் குடித்து பழகியதால், பள்ளி மாணவிகளுக்கு அவர்களிடமிருந்தே  பாதுகாப்பு  கொடுக்க வேண்டிய சூழ் நிலையை  தினசரி வரும் பத்திரிகை செய்திகள் சொல்கின்றன! நம் நாட்டில்  அரசு அதிகாரிகள் நிறைய பேர் குடித்து பழகி விட்டதால், நம் நாட்டில் ஏற்கனவே லஞ்சம், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் தற்பொழுது லஞ்சம், ஊழலை 30%, 40% என உயர்த்தி  நாட்டில் எந்த திட்டங்களும் சிறப்பாக செய்ய முடியாமல் செய்து விடுகிறார்கள்!

 எதிர்கால தலை முறை ஒழுக்கம் கெடுவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கும் அரசே   காரணமாக  இருப்பது நியாயமல்ல என்பது அவர்கள் சொல்லும் இரண்டாவது காரணம்!

 சரி, அதை விடுங்க!…நாம கதைக்கு வருவோம்! டாஸ் கடைகளைப் பற்றி இந்தக் கதையில் ஏன் இவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் இந்தக் கதைத் தலைவன்  ராகவன் அவர்கள் பெரியவர்கள் கெட்டுப் போனதற்கு டாஸ்மாக் கடைகள்  எப்படி காரணமாக இருக்கிறதோ அது போல் இன்று இளைய தலைமுறை டீன் ஏஜ்  மாணவர்கள் கெட்டுப் போவதற்கு இந்த செல்போன்கள் தான் காரணம் என்று  அவர் அடித்துச் சொல்கிறார்!  

   ராகவனுக்கு நல்ல வசதி.  தன் ஒரே மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தார்.  அதனால்  மகன் சதீஷ் எதை கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுவார்! அவன் ஆசைப் பட்டான் என்று  பதினைந்து  வயசிலேயே சகல வசதிகளும் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய் விலையில் ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்தார். சதீஷின் உற்ற தோழனே அதன் பின் அந்த செல்போன் தான்!  அந்த செல்போன் பயன்பாட்டால் அவனுக்குத் தெரியாத விஷயமே உலகத்தில் இல்லை!

   இருபது வயசு வந்தவுடன், அப்பாவுக்கு என்ன தெரியும் என்று அவன் வயசுத் தோழர்களைப் போலவே சதீஷும் நினைக்கத் தொடங்கி விட்டான்!

 சதீஷ்  டிகிரி முடித்து விட்டு. வீட்டில் அவன் ரூமில் படுத்துக் கொண்டு, செல்போனில் வேண்டாத படங்களைப் பார்த்து    நேரத்தை போக்கிக்  கொண்டிருந்தான்.  அவனாக எந்த வேலைக்குப் போகவும் முயற்சியும் செய்யவில்லை! தந்தையின் சொந்த கம்பெனிக்குப் போய்  அவருக்கு உதவியாக இருக்கவும் விரும்பாமல் வீணாக நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தான்!  

  ராகவனுக்கு கோவையில் மிகவும் நல்ல பெயர் உண்டு! பிரபல பம்ப் செட் கம்பெனி உரிமையாளர் மட்டுமல்ல, சேவை மனப்பான்மையோடு  நிறைய பொதுக் காரியங்களை கோவையில் செய்திருக்கிறார். கோவையில் அவர் பெயரைத் தெரியாதவர்களை இருக்க முடியாது! அவருக்கென்று ஒரு அடையாளம் இருந்தது! நேர்மையான மனுஷன்! எந்த வம்பு தும்புக்கும் போகாத ஒழுக்கமான மனுஷன் என்ற பெயர் வாங்கியிருந்தார். ராகவன் சதீஷ் வயசில் கல்லூரியில் படிக்கும் பொழுது,   அவர்கள் வீட்டுக்கு குடும்பத்தோடு  வரும் நெருங்கிய உறவினர்கள்,  படிப்பு விஷயத்திலும் சரி, ஒழுக்கத்திலும் சரி, எப்படி  இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக ராகவனை தங்கள் பையன்களிடம் காட்டிச் சொல்வார்கள்!  அந்தக் காலத்தில் உறவினர்கள்  ஒழுக்கமுள்ள மாணவனுக்கு அடையாளமாக தன்னைக் காட்டுவது  ராகவனுக்குப் பெருமையாக இருக்கும்!

 தன் ஒரே மகன் சதீஷும் தன்னைப் போல் தான் வருவான் என்று நம்பியிருந்தார்! அவன் பதினைந்து வயசு வரை அவனும் ஒழுங்காகத்தான் இருந்தான்.  அவர் செய்த பெரிய தப்பு, அவன் ஆசைப் பட்டான் என்று பதினைந்து வயசு டீன் ஏஜ் பருவத்தில் பத்தாவது படிக்கிற பொழுது, தன் செல்லமகனுக்கு  நிறைய வசதிகள் உள்ள  அந்த செல்போனை வாங்கிக் கொடுத்தது தான்!

  ஆண்ராய்ட் போன் ஒரு மாணவன் கைகளில்  இருந்தால் அறிவியல் உலகம், மருத்துவ உலகம் எல்லாம் அவன்  கைக்குள் வந்து விடும் என்று  சொல்கிறார்கள்!  ராகவன் அனுபவம் வேறு மாதிரி இருந்தது! தன் மகன் மட்டுமல்ல, இன்று நிறைய மாணவர்கள் ஒழுங்காகப் படிக்காமல் தங்கள் கவனத்தை சிதற விடுவதற்குக் காரணம் அவர்கள் கைகளில் இருக்கும் இந்த செல்போன்கள் தான், என்று முழுமையாக அவர்  இப்பொழுது நினைக்கிறார்!

  தவறான வழிக்குப் போன நூறு டீன் ஏஜ் மாணவ மாணவிகளை எடுத்துக் கொண்டால், அதில் என்பது பேர் கெட்டுப் போனதற்கு, இந்த  நவீன செல்போன்கள் தான் காரணம் என்று   எந்தக் கோயிலுக்கு வந்தும்  சத்தியம் செய்ய இன்று ராகவன்  தயாராக இருக்கிறார்! அவர் அனுபவம் அப்படி!

  ஒரு மாணவனோ, மாணவியோ எந்த நேரமும் செல்போனும் கைகளுமாக இருந்து கொண்டு,  பாத் ரூமுக்கு குளிக்கப் போகும் பொழுது  தன்னைப்  பெற்ற தாய் கூட, தன் போனை எடுத்துப் பார்த்து விடக் கூடாது என்று, எப்ப உஷார் நடவடிக்கை  செய்து விட்டுப் போகிறார்களோ அப்பொழுதே அவர்கள் கெட்டுப் போய் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!

 பெரியவர்கள் கெட்டுப் போக டாஸ் மாக் கடைகள் எப்படியோ, அது போல் இந்த டீன் ஏஜ் மாணவர்கள் கெட்டுப்போக இந்த ஆண்ராய்ட் செல்போன்கள் தான் காரணம் என்பது ராகவனின் அசைக்க முடியாத நம்பிக்கை! அமைதியாக இருப்பதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை!  

 ரு நாள் காலையில் –

“அப்பா!…. ஊட்டியில் இருக்கும் என் கல்லூரித் தோழனும் நானும் சேர்ந்து  ஒரு புதிய தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளோம்!  அது தொடர்பாக ஒரு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளது! அதற்காக என்னை நண்பன் ஊட்டிக்கு வரச் சொல்லியிருக்கிறான். நான் போய் விட்டு வர நான்கு நாட்கள் ஆகும். என் செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் வேண்டும்!”  என்று  திடீரென்று  கேட்டான்.

அப்படியாவது அவன் தனக்கென்று ஒரு தொழிலை மகன் உருவாக்கிக் கொண்டால் போதும் என்று, தன் பாரின் காரையும் கைச் செலவுக்கு பத்தாயிரமும் கொடுத்து ஊட்டிக்கு அவனை சந்தோஷமாக அவர் அனுப்பி வைத்தார்!

சதீஷ் ஊட்டி போன மூன்றாவது நாள். குன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு போன்!

“ யார்  பாரத் எலெக்ரானிக்ஸ் கம்பெனி ராகவன் சாரா?….”

“ ஆமாம்  நீங்க….”

“ சார்!…உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன்!.. நானும் கோவை தான்…இங்கு குன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. ஆக இருக்கிறேன்! இங்கே உங்க பையன் வந்த கார்  ஊட்டியிலிருந்து கீழே இறங்கும் பொழுது விபத்துக்கு உள்ளாகி விட்டது!. உங்கள் மகனை மருத்துவ மனையில் சேர்த்துள்ளோம்! ..நீங்க உடனே புறப்பட்டு குன்னூர் மருத்துவ மனைக்கு வாங்க!…”

 உயிரை பிடித்துக் கொண்டு  ராகவன் குன்னூருக்கு விரைந்தார். மருத்துவ மனையில் இன்ஸ்பெக்டர் ராகவனை வரவேற்றார்.

 “சார்!…உங்கள் பையன் பிழைத்துக் கொண்டான். பயமில்லை!…இன்னும் இரண்டு மணி நேரத்தில் கண் விழித்துக் கொள்வான்….ஆனா பாவம் அவர் கூட வந்த பெண் தான் இறந்திட்டாங்க!…தகவல் சொல்ல……அந்தப் பெண்ணோட அப்பா..அம்மா பற்றி  விபரம்  கேட்டேன்… சொல்வதற்குள் அவர் மயக்க நிலைக்குப் போய் விட்டார்… நீங்க பாடியைப் பார்த்தா நிச்சயம் உங்களுக்கு அடையாளம் தெரியும்!….உங்களுக்குத் தெரிந்த பொண்ணாகத் தான் இருக்கும்! நீங்க  மார்சுவரிக்கு வந்து அந்தப் பெண்ணின் அடையாளத்தைக் காட்டினா… அவங்க பெற்றோர்களுக்கும் உடனே தகவல் கொடுத்து விடலாம்!……”

 விபத்து நடந்த இடத்தில் கிடந்த  சதீஷின் பர்ஸை கொண்டு வந்து ராகவனிடம் கொடுத்து விட்டு, இன்ஸ்பெக்டர் ராகவனை மார்சுவரிக்கு அழைத்துக் கொண்டு போனார். 

 ராகவன் பர்ஸை பிரித்துப் பார்த்தார். அதில் ஒரு ஐநாறு ரூபாயும், ஊட்டியில்  ஒரு ஹோட்டலில் டபுள் ரூமில் மூன்று நாட்கள் தங்கியிருந்தற்கு  ஒரு ரசீதும் இருந்தது!

 மார்சுவரியில் உயிர் பிரிந்த அந்தப்  பெண் நாகரிகமாகவும், அழகாகவும் இருந்தாள்! அந்தப் பெண்ணை அவர் இதற்கு முன்பு எப்பொழுதும் எங்கும் பார்த்ததில்லை! அந்தப் பெண் யாராக இருக்கும் என்று ராகவனுக்கு சதீஷ் பர்ஸில் இருந்த ஓட்டல் பில் புரிய வைத்திருந்தது!

 ஒழுக்கத்திற்கு பெயர் சொல்ல அவரை அடையாளமாக மற்றவர்  காட்டிய காலம்  எல்லாம் போய், இன்று ஒழுக்கம் இல்லாத  ஒரு பெண்ணை அடையாளம் காட்ட தன்னை கொண்டு வந்து நிறுத்திய தன் மகனை நினைத்து, அழுகையை கட்டுப் படுத்த முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு, தலையில் அடித்துக் கொண்டு “ஓ!….”வென்று சத்தம் போட்டு கதறி அழுதார் ராகவன்! 

  இன்ஸ்பெக்டர் பாவம், பெண்ணும் ராகவனுக்கு ரொம்ப வேண்டிய  உறவுப் பெண்ணாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு ராகவனைப் பரிதாபமாகப் பார்த்தார்!

அந்தக் காலத்தில் கூடா நட்பு கேடாய் முடியும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்! இந்தக் காலத்து டீன் ஏஜ் இளைஞர்களுக்கு  இந்த உயிர் இல்லாத செல்போன்கள் தான்கூடா நட்பாக மாறிவிட்டதாக  ராகவன் நினைக்கிறார்!

 நம் அரசியல் தலைவர்கள் நிதி ஆதாரத்திற்காக டாஸ்மாக் கடைகளை மூடாமல் மௌனம் சாதிக்கிறார்கள்!  

  இன்றைய டீன் ஏஜ் இளைஞர்களை ஆண்ராய்ட் செல்போன்கள் தான் கெடுக்கின்றன என்று  பல நடுத்தர குடும்பத் தலைவர்கள் கூச்சல் போடுகிறார்கள்!

 இது தான் இன்றைய நாட்டு நடப்பு –

  நாம் எல்லாம் சிந்திக்க தெரிந்தவர்கள்!  நம் அறிவை பயன் படுத்தி நாட்டிற்கு பயன்படும் ஒரு நல்ல கருத்தை ஒருமுகமாக இது விஷயத்தில் சொன்னால் என்ன?..

***********

Exit mobile version