அங்கும் இங்கும் – எஸ் வீ ராகவன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 36 அங்கும் இங்கும் – எஸ் வீ ராகவன்

வேலு சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்… வயது நாற்பத்தைந்து ஆகிறது. இருபது ஆண்டுகள் அனுபவம். அதனால் எந்த இடத்தில் கூட்ட நெரிசல் இல்லையோ அங்கு வேகமாக செல்வார்.‌ பேருந்து நிறுத்தம் மற்றும் சிக்னல்களில் நின்று செல்வார். அதனால் பிரயாணிகளிடம் நல்ல பெயர். போலீஸ் தொல்லை இருக்காது. மிக நீண்ட தூரமுள்ள ஆவடி_ தாம்பரம் எண்:70. வழித்தடத்தில் இரண்டு மணி நேரம் பயணம்.

இன்று பாண்டி தான் நடத்துநர்..‌ முதல் முறையாக இந்த வழித்தடத்தில் வருவதால் பதட்டம்.

வேலு “பாண்டி வழியில் நான் நிறுத்தங்களில் சரியாக நிறுத்தி செல்கிறேன். நீ பதட்டப்படாமல் டிக்கெட் தந்தால் போதும்” என்றார்

வேலு ஆறு டயரை தட்டி பார்க்க பாண்டிக்கு ஆச்சர்யம்.‌ “எதற்கு தட்டி பார்க்கணும்” என கேட்டார்

வேலு “டயரில் உள்ள கற்கள் எடுத்து கொண்டே.. கற்கள் இருந்ததால் எடுக்க வேண்டும். இல்லை டயர் விரிசல் ஏற்பட்டு சீக்கிரம் பழுதாகும்.‌ டயர் பஞ்சர் ஆகாது இருக்கிறதா? காற்று இருக்கிறதா? என் பார்க்க வேண்டும்.‌ இதனால் பயண இடையில் பிரச்சினை வராது டீசல் செலவு குறையும். வண்டி வேகம் அதிகமாகும்” என்றார்.

வேலு அடுத்து வண்டியில் ஏறி டீசல் எவ்வளவு இருக்கிறது?. அத்தோடு ஆயில் அளவு செக் செய்தார்.

வேலு பாண்டியிடம் ”இன்னும் பத்து நிமிடத்தில் வண்டி கிளம்பும். அதற்குள் நீ டிக்கெட் கொடுத்தால் சீக்கிரம் போகலாம். நான் முன் டயர் அருகே உள்ள காந்தம் (மேக்னட்) செக் பண்ணி விட்டு வண்டி கிளம்புகிறேன்” என்றார்

பாண்டி “எதற்கு காந்தம்?” என கேட்க

வேலு “சாலையில் விழுந்து உள்ள ஆணி இரும்பு குத்தினால் டயர் பஞ்சர் ஆகும் அதை தடுக்க இந்த காந்தம். என் தனிப்பட்ட செலவில் வாங்கி போட்டு உள்ளேன்” என்றார்

பாண்டி சிரித்து கொண்டே “இது உன் சொந்த வண்டியாக? அரசு வண்டி.. அவ்வப்போது வண்டி மாறும். உள்ளே உள்ள ரேடியோ செலவுகள் எவ்வளவு?” என கேட்க

வேலு..” காந்தம் இருநூறு ரூபாய்.. ரேடியோ ஆயிரம் ரூபாய்.‌ காலை வரும் போது கொண்டு வருவேன் .‌மாலை வேலை முடிந்து செல்லும் போது எடுத்து செல்வேன். அத்தோடு முன்னால் கடிகாரம் உள்ளது. பலருக்கு நேரம் பார்த்து கொள்ள உதவும். அதையும் இரவு போகும் போது கழட்டி சென்று விடுவேன். இந்த பேருந்து அரசுக்கு சொந்தமானது இருந்தாலும் நான் ஓட்டும் வரை என் பொறுப்பு. இதில் பயணம் செய்யும் பயணிகள் உயிருக்கு உத்தரவாதம்.. இது தான் எனக்கு மாதாந்திர சம்பளம் தருகிறது. அது மக்கள் வரிப்பணம்.‌ அவர்கள் மகிழ்ச்சி அடைய சிறிய ஏற்பாடு.‌இதில் நஷ்டம் இல்லை..வீட்டுக்கு போய் இரவில் பாட்டு கேட்பேன்” என்றார்

மாணவர்கள் ஏறும் பள்ளி கல்லூரி இடங்களில் டபுள் விசில். தருவது எனக்கு பிடிக்காது. எல்லோரிடமும் கோபமாக பேசுவது பாண்டி இயல்பு.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் வண்டி நிரம்பி விட்டது. பாண்டி பத்து நிமிடத்தில் டிக்கெட் கொடுத்த பிறகு விசில் அடிக்க வேலு வண்டியை கிளம்பினார். வலது பக்கம் பார்த்து எந்த வண்டி வரவில்லை என்று உறுதி செய்தபின் முன்னால் ஒட்டி இருந்த முருகன் படத்தை வணங்கி விட்டு வேகம் எடுத்தார். கதவை மூட நினைக்கையில் இரண்டு இளைஞர்கள் ஓடி வந்து ஏறினார்கள்.‌ அவர்கள் நூறு ரூபாய் தந்து பல்லாவரம் டிக்கெட் கேட்க பாண்டி சில்லரை கேட்க சண்டை ஆரம்பம் ஆனது. அவர்கள் வடமாநில இந்திகாரர்கள்.. அதனால் பதில் பேசாமல் இருந்தனர்.

பாண்டி “இந்தா..டிக்கெட் முப்பது ரூபாய் போக எழுபது ரூபாய் தந்து.. படி அருகே நிற்காதே மேலே வா…” என்றார் ஆனால் சில்லறை தரவில்லை.. கடிகாரத்தில் காலை மணி எட்டு என்று காட்டியது.‌

பள்ளி கல்லூரி அலுவலகம் செல்லும் நேரம்..அன்று முகூர்த்த தினம்.. அதனால் நெரிசல் அதிகமாக இருக்கும் என நினைத்து பொறுமையாக ஓட்டினார்.‌ மெப்ஸ் வர பாண்டி விசில் அடிக்க.‌ பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தினார்.‌

பத்து பேர் இறங்க ஆறு பேர் ஏறியவுடன் பாண்டி விசில் வந்ததும் இடதுபுறம் பார்த்து கதவை மூடிவிட்டு வண்டி வேகமாக சென்றது. அதில் ஒரு அம்மா “கோயம்பேடு” என கேட்க டிக்கெட் சில்லரை கொடுத்து விட்டு அம்மா கூடையில் இருந்த ஒரு வெள்ளரிக்காயை உடைத்து சாப்பிட்டான்.. “விலைவாசி ஏறி போச்சுன்னு..” பேச்சை ஆரம்பித்தான். அந்த அம்மாவுடன் பேசியபடி வந்தான். விசிலடக்க மறந்து விட்டான்

பல்லாவரம்.. விமான நிலையம் என கூட்டம் ஏற பேருந்து நிரம்பி வழிந்தது. ஏர்போர்ட்டில் முன்னால் எறியவர் “அண்ணா நகர்..” என டிக்கெட் கேட்டு நூறு ரூபாய் கொடுத்தார். ஆனால் வெளிநாட்டு சென்று திரும்பும் ஆசாமிக்கு பதில் ஏதும் பேசாமல் பாண்டி டிக்கெட் கொடுத்தார்.‌ வேலுவுக்கு அங்கும் இங்கும் எத்தனை மாற்றங்கள்.. தராதரம் என்று பாண்டியை பற்றி மனதுக்குள் எண்ணினார். முன்னால் சென்ற கார் விமான நிலையம் பக்கம் திரும்ப ஆட்டோ டக்கென ஓரம் கட்ட வேலு பஸ் சடன் பிரேக் அடிக்க பயணிகள் குலுக்கினார்கள். மயிரிழையில் ஆட்டோ விபத்து தவிர்க்கப்பட்டது வேலுவுக்கு திருப்தி. ஆனால் சில பயணிகள் டிரைவர் சரியில்லை என திட்ட எதையும் பார்க்காமல் சொன்னதை கேட்டு வேலுவுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரிப்பு வந்தது. முன்வரிசையில் இதையெல்லாம் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்த வயதான பயணி “விடுங்க சார்.. இதெல்லாம் சகஜம்” என வேலுவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

வேலு.. “ஒருகாலத்தில் இருச்சக்கர வண்டி ஓட்டிகள் இப்போது காரை வாங்கி ஓட்டும் போது அதே போல் அடித்து ஒடித்து ஓட்டுவதால் பிரச்சினை.. பின்னால் வருபவர்களை கவனிப்பதே இல்லை..” என்றார் வருத்தத்துடன்

கத்திபாரா நிறுத்தம் வந்தது. இரு ஜோடி கல்லூரி மாணவர்கள் என சொல்வதை விட காதலர்கள் என சொல்லும்படி கைகளை பிடித்து கொண்டு வண்டி முன்புறம் வழியாக ஏற வேலு.. அவர்களிடம் “கையை விட்டு கைபிடியை பிடிங்க.. பேருந்து கிளம்பினால் விழுந்து விடுவீர்கள்..” என சொல்ல ஒரு பெண் வெட்கப்பட்டு பின்புறம் சென்று விட்டாள். ஆனால் இன்னொரு பெண்.. அவள் காதலனுடன் சேர்ந்து அமர்ந்து இடித்து கொண்டு பேசியபடி வந்தாள். “பிஞ்சில் பழுத்தது” என நினைத்தபடி வண்டி ஓட்டி கொண்டு ஒலிம்பியா நிறுத்தம் வந்தது. அங்கே நவநாகரீக மக்கள் ஏற வண்டி வாசனை ஆனது. தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலம் மட்டுமே பேசும் மக்கள் அவர்கள்.. “வடபழனி 3 டிக்கெட்” என வாங்கி கொண்டார்கள்

வேலு பஸ்சை திருப்பி பார்த்தார். நிரம்பி வழிகிறது.. தொழிலாளர்கள் சினிமா பற்றிய விமர்சனங்கள் பேச.‌ ஒருசிலர் பேப்பரை வைத்து கொண்டு அரசியல் இலங்கை கொரோனா என விவாதம் நடந்தது. ஒரு பயணி பக்தி பாடல்.. ஒருவர் திரைப்பட பாடல்.. பலர் காதுகளில் இயர் போன்… எல்லாரும் பிசி… அடுத்து அம்பாள் நகரில் தொழிலாளர்கள் இறங்கினார்கள்.‌

எத்தனை விதமான மனிதர்கள்.. பலவிதமான மொழிகள் ஆனால் அறிவு அனைவரையும் இணைக்கிறது ‌ என நினைத்து கொண்டு வண்டி இயக்கினார். வண்டி மெதுவாக சென்றது. அசோக் நகரிலிருந்து வடபழனி வழியாக கோயம்பேடு தாண்ட ஒரு மணிநேரம் பிடித்தது.. வடபழனி அருகே மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை போக்குவரத்து நெரிசல்..‌சில இடங்களில் ஒரு வழிச்சாலை

பிரச்சினை. கோயம்பேடு நிறுத்ததில் பேருந்து காலி ஆனது. மொத்தம் பத்து பயணிகள் மட்டும் இருந்தனர். அதிகமானோர்.‌..லூகாஸ் மற்றும் அம்பத்தூர் கம்பெனிகளில் பணிபுரிபவர்கள். காய்கறி அம்மா நன்றி சொல்லி விட்டு இறங்கி சென்றாள்.

பாண்டி “இனிமே கட் பஸ்..மினி பஸ் அதிகம் கூட்டம் வராது” என்றார்

வேலு “கவலை படாதே.. பாண்டி இன்னைக்கு முகூர்த்த நாளு..‌கூட்டம் வரும்” என்றார்

கோயம்பேடு பேருந்து நிலையம் வெளியே வரும் போது ஐந்து ஆறுபேர் குழந்தை பைகளுடன் கைகாட்டி வேலு நிறுத்தி அவர்களை ஏற்றி கொண்டு சென்றார். வெளியூர் சென்று விட்டு அந்த பேருந்தில் இருந்து இறங்கி இந்த பேருந்தை பார்த்து மூட்டையுடன் குழந்தைகளுடன் ஓடி வந்ததால் மூச்சு வாங்கியது. பேருந்து காலியாக இருந்ததால் நிம்மதியாக அமர்ந்தனர். “பாடி ஐந்து டிக்கெட்” என சொல்ல..

பாண்டி. “குழந்தைகளுக்கு அரை டிக்கெட் இல்லை முழு டிக்கெட் தான் இது டவுன் பஸ் இந்தாங்க. ஆறு டிக்கெட்..” என தந்தார்.

பேருந்து அண்ணா நகர் வந்த போது.. டிரைவர் சீட்டில் பின் அமர்ந்து இருந்த வெளிநாட்டு ஆசாமி சீட்டில் தூங்கி விட்டவரை வேலு எழுப்பி விட்டு இறங்க சொல்லும் போது புன்னகையில் நன்றி தெரிவித்து இறங்கி கொண்டார்..

பஸ் லூகாஸ் வரும் போது கல்யாண கூட்டம் அலுவலக மக்கள் என இருபது டிக்கெட் என பாண்டிக்கு மகிழ்ச்சி. “வேலு அண்ணே.. நீங்கள் சொல்வது ரொம்ப சரி..” என்றான்.

இரு வயதானவர்கள் காலில் கட்டோடு ஏறினார்கள்.‌ தெலுங்கில் “செட்போர்டு ஆஸ்பத்திரி போயிந்தா” என கேட்க

வேலு “அங்கு நிற்காது.. அம்பத்தூர் இறங்கி நடந்து போங்கள். இல்லை திருமுல்லைவாயல் டிக்கெட் வாங்கி கொள்ளுங்கள்… நான் இறக்கி விட்டு செல்கிறேன்..” என்றார் மனிதாபிமானத்துடன்

வேலு. .”இந்த வழித்தடத்தில் ஐந்து வருஷமாக ஓட்டுகிறேன்

தெரியாதா..” என்றார் சிரித்தபடி…

பாடியில் வெளியூர் கூட்டம்‌ டாடா காட்டிவிட்டு இறங்கி சென்றது.. குழந்தைகளுடன் பைகளை இறக்க நேரமானது. ஆனால் வேலு பொறுமையாக பொறுப்புடன் வண்டி ஓட்டி என வாழ்த்தி சென்றார்கள். சில பள்ளி குழந்தைகள் ஏறினார்கள்.

“அம்பத்தூர்..” என பஸ் பாஸ் காட்டி முன்னால் சென்று டிரைவர் சீட்டுக்கு எதிரில் அமர்ந்தனர்.

வேலு “பாண்டி..” என அருகே அழைத்து ”ஒரு காலத்தில் இந்த இடத்தில் பிரிட்டாணியா பிஸ்கட் வாசனை மூக்கை துளைக்கும் இப்ப அந்த இடமே தரைமட்டம் ஆகிவிட்டது..” என்றார் சோகமாக..

பாண்டி காலி இடத்தை பரிதாபமாக பார்த்தான்..

வேலு..”இதே போல அம்பத்தூர் அருகே டன்லப் பெரிய தொழிற்சாலை..இப்ப மூடி இருக்கு பல நூறு பேர் வேலை செய்தனர்… இப்ப மூடி குப்பை அதிகமாக.. செடிகள் வளர்ந்து இருப்பது பார்ப்பதற்கு கஷ்டம் ..என் அப்பா அதில் வேலை பார்த்தார் நல்ல சம்பளம். இப்ப ஆட்டோ ஓட்டுனர்..” என்றார்

பாண்டி.. நீங்கள் திறமையாக வண்டி ஓட்டும் போது தெரிகிறது.. உங்க அப்பா டிரைவிங் பயிற்சி..” என்றார்

பஸ் அம்பத்தூர் வரும் போது மூன்று பயணிகள் மட்டுமே இருந்தனர்.  

வேலு பாண்டியிடம் “செக்கிங் இருக்கும்.. டிக்கெட் விபரம் சரியாக எழுது..இல்லே செக்கிங் பிரச்சினை செய்வார்கள். பணத்தை எண்ணி வை.. எல்லாரும் டிக்கெட் தந்து விட்டாயா?.. சில சமயங்களில் ஆவடிக்கு கூட்டம் ஏறும்..” என்றார்

வேலு சொன்னது போல் அம்பத்தூரில் செக்கிங் ஏறினார். கூட்டம் இல்லை என இறங்கி.. பாண்டி எழுதிய லிஸ்ட் சரிபார்த்தார். அங்கே ஆறு பேர் ஏற பாண்டிக்கு மகிழ்ச்சி.

செட்போர்டு ஆஸ்பத்திரி அருகில் எதிரில் காலில் அடிபட்ட ஆந்திரா மக்களை இறக்க “தேவுடு.நல்லா இரு”..என் வாழ்த்தி இறங்கி கொண்டார்கள்

பாண்டி.. “ வேலு அண்ணே நீங்கள் சொன்னது போல எல்லாம் நடக்குது.. ஆவடிக்கு இன்னும் எத்தனை ஸ்டாப்..” என கேட்டான்

வேலு.‌ “திருமுல்லைவாயல் ஒரே ஸ்டாப்.. அடுத்து நேரே ஆவடி பஸ் ஸ்டாண்ட் தான். திருமுல்லைவாயல் சிவன் கோயில்.. பச்சை அம்மன் கோயில் பிரபலம். நான் காலை ஷிப்ட் அடுத்த நடையுடன் டுயூட்டி முடிந்தது.. அதனால் பத்து நிமிடத்தில் ஆவடியில் கிளம்ப வேண்டும்..” என்றார்

பஸ் பத்து இருபதுக்கு ஆவடி போய் சேர்ந்தது..

சிறிது நேரமானாலும் நிம்மதியான பயணம். விபத்தில்லாமல் காலை நெரிசல் நேரத்தில் பேருந்து ஓட்டுவது கடினம்.அதற்கு பொறுமை நல்ல திறமை அவசியம்.. பதட்டம் மற்றும் வேகம் காரணமாக விபத்தும் சண்டை ஏற்படுகிறது.. சிலர் அரசு பேருந்து என கவனக்குறைவாகவும் அகம்பாவத்தோடும் ஒட்டுவது தவறு நாலு பேர் வாழ்த்து நன்றி வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் என்பது வேலு கருத்து.

நன்றி வணக்கம்

Exit mobile version