காண்பதெல்லாம் பொய்- ஜானு முருகன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 38 காண்பதெல்லாம் பொய்-ஜானு முருகன்
 

தோசையை கல்லில் வார்த்து வைத்துக் கொண்டிருந்தார் சுந்தரவள்ளி. நேரம் ஒன்பதை தொட பத்து நிமிடங்கள் இருந்தன.

“சுந்தரம், சாப்பாடு ரெடியா?” என கேட்டுக் கொண்டே வந்தார் சுந்தரத்தின் கணவர் சொக்கநாதன். நெற்றியில் லேசாக திருநீறு வைத்திருந்தவரின் முடிகள் சற்று நரைத்திருக்க, முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தது.

சொக்கநாதன் ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். அவர் மனைவி சுந்தரவள்ளி வீட்டையும் குடும்பத்தையும் நிர்வகிக்க, அவர்களுக்கு அனிதா என்ற பெண் மகவும் உண்டு. அவள் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.

“இதோ வந்துட்டேங்க!” என்ற சுந்தரவள்ளி உணவை எடுத்து வந்து கூடத்தில் வைக்க, ஒரு சின்ன பாயை எடுத்து விரித்து அமர்ந்தார் சொக்கன்.

“சாப்பிடுங்க, நான் போய் அடுத்த தோசையை ஊத்துறேன்” என்றவர் கணவருக்கு பரிமாறிவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தார்.

கூடத்தின் வலது மூலையில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்திருந்த அனிதா, அலைபேசியில் தலையைப் புதைத்திருந்தாள்.

“அனிதா ம்மா… சாப்பிட வா டா!” ஒரு வாய் எடுத்து வைத்த சொக்கன் மகளை அன்பாக அழைக்க, “ப்பா… நீ சாப்பிடு. நான் இங்க முக்கியமான வேலை பார்த்திட்டு இருக்கேன்!” அவர் முகத்தை கூட பார்க்காதுக் கூறினாள் மகள்.

சொக்கனின் தட்டில் மற்றொரு தோசையை வைத்த சுந்தரவள்ளி, “அப்படி என்ன தான் அந்த போன்ல இருக்கோ? அடங்க மாட்ற டி நீ? எல்லா போன் வாங்கி கொடுத்த உங்க அப்பாவை சொல்லணும்” மகளை ஏகத்துக்கும் முறைத்து விட்டு சென்றார்.

“ம்ப்ச்… ம்மா… சோசியல் மீடியால நான் எவ்ளோ பேமஸான ஆள்னு தெரியுமா? சும்மா என்னை திட்டிட்டே இருக்காத. நியூஸ் எல்லாத்தையும் அழகா ட்ரோல் பண்ணி போட்டு எவ்ளோ லைக்ஸ் வாங்கிட்டு இருக்கேன்னு பாரு” என அவர் முன்னே அலைபேசியை காட்டினாள்.

“என்ன கருமமோ! வந்து சாப்பிட்டு விட்டு எதுனாலும் பண்ணு!” என்றவர் அவளுக்கும் ஒரு தட்டை வைத்து தோசையை பரிமாறினார்.

“சுந்தரம் நான் போய்ட்டு வரேன்” என்ற சொக்கன், “நான் வரேன் டா!” என அனிதாவிடமும் கூறினார். அவரைப் பார்க்காமலே தலையை அசைத்த மகளை சற்றே வருத்தத்துடன் பார்த்தார். மகள் சமூகவலைத்தளங்களின் மீதிருக்கும் மோகத்தில் முகம் கொடுத்து கூட இப்போதெல்லாம் அவரிடம் பேசுவது இல்லை.

“அனிதா அப்பாக்கு கொஞ்சம் தண்ணி கொடு டா!” அப்போதாவது தன் முகம் பார்ப்பாள் என நினைத்து அவர் வினவ, “சாப்பிட்டுட்டு இருக்கேன் பா. அம்மாட்ட சொல்லுங்க” என்று விட்டாள்.

“இந்தாங்க தண்ணி. அப்படியே அவ கிட்ட கேட்டதும் ஓடியாந்து கொடுக்கப் போறா!” என்றவர், “ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்த போனை போட்டு உடைக்க தான் போறேன்” என்று விட்டு தான் நகர்ந்தார்.

எதுவும் சொல்லாத சொக்கன், பணிக்கு கிளம்பி விட்டார். ஆனால், என்றும் இல்லாது இன்று எதோ ஒன்று மனதை உறுத்துவது போல தோன்றியது அவருக்கு. மனதில் என்னவென யோசித்துக் கொண்டே, புறப்பட்டு விட்டார்.

துணிகளை துவைத்து மாடியில் காயப்போட சுந்தரவள்ளி சென்று விட, இன்னும் தலையை நிமிர்த்தவில்லை அனிதா. அன்று எதோ அரசு விடுமுறை தினமாக இருக்க, குளிக்க கூட இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தாள்.

“அனிதா, எப்படி டி இருக்க?” என கேட்டுக் கொண்டே தன் கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார் நளினி.

“அம்மாச்சி, வாங்க.” என்றவள், “ம்மா… அம்மாச்சி வந்து இருக்காங்க பாரு!” என மாடியை நோக்கி குரல் கொடுத்தாள்.

“இதோ வரேன் டி!” என்ற சுந்தரவள்ளி மீதியிருக்கும் துணியை காயப்போட்டு விட்டு முகத்தில் புன்னகையுடன் குரல் கொடுத்தார்.

அவர் கீழே வர, நளினி நின்று கொண்டிருந்தார். “ம்மா… உனக்கு தான் கால் வலி இருக்கு இல்ல? ஏன் இப்படி அங்கேயும் இங்கேயும் கிடந்து அலையுற?” என கடிந்தாலும் சுந்தரவள்ளியின் முகத்தில் தாயை பார்த்த மகிழ்ச்சி இருந்தது.

“அடி போடி..‌. அந்த காலத்துல பஸ் வசதியே இருக்காது. நாங்க எல்லாம் நடந்தே பத்து ஊர் போனவங்க. இங்க பக்கத்து ஊர்ல இருந்து பஸ்ல வர்றதுக்கு என்ன கஷ்டம் எனக்கு?” அங்கலாய்த்தார் பெரியவர்.

“சரி. சரி, நிக்காதம்மா… உட்கார் முதல்ல” என்றவர் சுற்றி முற்றி பார்க்க, கூடத்தில் ஒரே ஒரு நாற்காலி மட்டும் தான் இருந்தது. அதிலும் அனிதா அமர்ந்து பக்கவாட்டாக காலை தூக்கி போட்டிருந்தாள்.

“அனிதா!” என பல்லைக் கடித்த சுந்தரவள்ளி, “அம்மாச்சி வந்திருக்காங்களே! காபி எதுவும் போட்டுக் கொடுக்கணும்னு தோணுச்சா? அவங்க வந்ததுல இருந்து நின்னுட்டு இருக்காங்க. உக்கார வேற சேரை எடுத்துப் போட்டீயா?” என கோபமாக வினவினார்.

‘ச்சு… அம்மா உக்கிரமாகிடுச்சு. செத்த அனிதா!’ என நினைத்தவள், “முதல்ல வந்தவங்களை வான்னு கேட்க மாட்டீயான்னு திட்டுவ. இப்ப காபி போட்டு தரலைன்னு திட்ற மா” என்றவள் எழுந்து சென்று குளம்பியை தயாரிக்க ஆரம்பித்தாள்.

“இந்த காலத்து பிள்ளைகளை ஒன்னு சொல்ல கூடாது. முறைச்சுட்டு இருக்குதுக” என்ற நளினி நாற்காலியில் அமர்ந்தார்.

“ஆமா ம்மா. அதுவும் நான் பெத்தது ரொம்ப பண்ணுது இப்ப எல்லாம். பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு கூட தெரிய மாட்டுது இவளுக்கு. வயசு இருபது ஆகப்போகுது!” கோபமாக தொடங்கிய சுந்தரவள்ளி, கவலையுடன் முடித்தார்.

“சரி விடு வள்ளி. அவளா மாறுவா. எல்லாருக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும். அப்போ அவ மாறுவா!” என்றவர், “மணி ஊருக்குப் போய்ட்டு வந்தான். திண்பண்டம் நிறைய வாங்கிட்டு வந்தான். அங்க நித்திஷை தவிர சாப்பிட யாரு இருக்கா? எல்லாம் வேஸ்ட்டா போகுது. அவன் சாப்பாட்டையே கொறிச்சுட்டு இருக்கான். அதான் எடுத்துட்டு வந்தேன்!” என்று தான் கொண்டு வந்த பையை நீட்டியவர், “எங்க காலத்துல எல்லாம் பிள்ளைக நிறையா இருக்கும். வாங்கிப் போட ஆள் இருக்காது. இப்ப எல்லாம் ஒன்னே ஒன்னு பெத்து போட்டிருக்கீங்க” என்றார்.

“அட நீ வேற ஏம்மா! பத்தை பெத்தாலும் உங்களால வளர்க்க முடிஞ்சது. ஆனால், இங்க ஒன்னை பெத்துட்டே என்னால முடியலை” என்று சுந்தரவள்ளி அங்கலாய்க்க, அவரை முறைத்துக் கொண்டே வந்த அனிதா, நளினியிடம் குளம்பியை கொடுத்தாள்.

“இங்க உக்காரு அனிதா” என்ற நளினி அவித்த வேர்கடலையை உரித்து அவளுக்காக எடுத்து வைத்திருந்தார்.

“இதை சாப்பிடு. உடம்புக்கு ரொம்ப நல்லது. டயட் கியட்டுன்னு மெலிஞ்சு போய்ட்ட பாரு!” என வாஞ்சையுடன் கூறினார்.

‘அட அம்மாச்சி ஓவரா பாசம் காட்டுதே!’ என நினைத்தவள், வேர்கடலையை ஒரு கையில் வைத்து உண்டு கொண்டே மறுகையில் அலைபேசியை வைத்திருந்தாள்.

“அந்த போனை இப்படி வச்சுட்டு, கொஞ்ச நேரம் அம்மாச்சி கிட்டே பேசிட்டு இரு டி” என பட்டென அவள் கையிலிருந்த அலைபேசியை பறித்தார் சுந்தரவள்ளி.

“ம்ப்ச்… ம்மா!” என சிணுங்கினாள் மகள். அதை கண்டு கொள்ளாத சுந்தரவள்ளி தன் தாயிடம் பேச, வேண்டா வெறுப்பாக அவர்கள் பேச்சில் தன்னை நுழைத்துக் கொண்டாள் அனிதா.

“சரிம்மா… நீ இங்கயே இரு. நான் உலையை வச்சுட்டு வரேன் சாதத்துக்கு” என்ற சுந்தரவள்ளி அடுக்களைக்குள் நுழைந்தார்.

“ஆமா அனிதா, அந்த போன்ல என்னத்தை பார்த்திட்டு இருக்க எப்ப பார்த்தாலும்?” கேள்வி கேட்ட நளினியிடம்,

“அதெல்லாம் உங்களுக்கு தெரியாது அம்மாச்சி. சொன்னாலும் புரியாது!” என பதில் இயம்பினாள்.

“ஏன் தெரியாது! அது என்னது வாட்ஸ் ஆப்பு, பேஸ் புக்கு… எல்லாம் எங்களுக்கும் தெரியும்!” என்ற நளினியை ஆச்சரியமாக பார்த்தாள் சின்னவள்.

“எல்லாம் உன்னை மாதிரி அங்க ஒருத்தன் இருக்கானே! அவன் தான் இதெல்லாம் பத்தி அடிக்கடி சொல்லுவான்!” என்றார் நளினி.

“இந்த அளவுக்கு நீங்களாவது தெரிஞ்சு வச்சிருக்கீங்களே! உங்க பொண்ணு 80’ஸ் கிட்ஸ்க்கு ஒன்னும் புரிய மாட்டுது” பேசிக் கொண்டே எழுந்து சென்று தன் அலைபேசியை எடுத்து வந்தவள், இணையத்தை இணைத்ததும், செய்திகளும் குறுஞ்செய்திகளும் குவிந்தது. தொடர்ந்து அலைபேசி அலற, “அது பேஸ்புக் நோட்டிபிகேஷன் அம்மாச்சி” என விளக்கம் கொடுத்தாள்.

முகநூலில் தன்னுடைய பக்கத்திற்கு சென்றவள், “இங்க பாருங்க அம்மாச்சி. இது தான் என் பேஸ்புக் பேஜ். இதுல நான் காமெடியா எதாவது போடுவேன். அப்ப அப்ப நியூஸ் எல்லாத்தையும் ஷேர் பண்ணுவேன். எனக்கு மொத்தம் நாலயிரம் ஃபாலோவர்ஸ் இருக்காங்க” என  காண்பித்தாள்.

“எழுத்து எல்லாம் ரொம்ப சின்னதா இருக்கதால, எனக்கு தெரியலை டி. நீயே வாசிச்சு காட்டு” கண்களை எத்தனை சுருக்கியும் வயோதிகம் காரணமாக அவரால் படிக்க முடியவில்லை.

“சரி அம்மாச்சி, நான் படிக்கிறேன்.

கேளுங்க!” என்றவள், “போதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! போலீஸிடம் கையும் களவுமாக பிடிபட்டார்!” முதல் செய்தியை வாசித்தவள், “அடுத்து ஒன்னு செம்மையா இருக்கு பாருங்க” என்று ஆர்வமாக வாசித்தாள்.

“கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம். கணவன் தட்டிக் கேட்டதால், வீட்டிலே வைத்து கண்டம் துண்டமாக வெட்டிய கள்ளக்காதலன். அவர்கள் ஊட்டியில் குஜாலாக இருந்த போது காவல்துறையில் சிக்கி சின்னா பின்னம். அதை பார்த்த மக்கள் அவர்களை திட்டினர் கண்ணா பின்னமாக!” செய்தியை கூறிவிட்டு பெரிய நகைச்சுவைப் போல கலகலத்து சிரித்தாள்.

“இதுக்கு வந்த கமெண்ட்ஸ் எல்லாம் வேற லெவல் அம்மாச்சி!” என கருத்துகளையும் வாசித்துக் காண்பித்து சிரித்தாள்.

அவளைப் பார்த்த பெரியவர், “அனிதா, இதெல்லாம் நடக்கும் போது நீ கூட இருந்து பார்த்தீயா?” என வினவினார்.

“இல்லையே அம்மாச்சி!”

“அப்புறம் எப்படி உனக்கு தெரிய வந்துச்சு?”

“ச்சு… அது என்ன மாதிரி நிறைய பேர் ஷேர் பண்ணுவாங்க. அப்படியே அதை கொஞ்சம் மாத்தி நம்ம போட்டுக்கலாம். அதான் நீங்க எல்லாம் வாய்வழியாக செய்தியை கடத்துவீங்க. இப்ப நாங்க சோடியல் மீடியால சுத்துறோம்” தோளைக் குலுக்கினாள் அனிதா.

“எங்க காலம் வேற டா அனிதா. இந்த மாதிரி போன் கீனு எல்லாம் இல்லை. நாங்களா சொல்லிக்கிட்டா தான் ஒருத்தர் இல்லைன்னாலும் ஒருத்தர் மூலமா செய்தி போய் சேரும். ஆனால், இப்ப தான் ஒரு போன் பண்ணா போதுமே! அதனால இனிமே இந்த மாதிரி பண்ணாத” தன்மையாக கூறினார்.

“ம்ப்ச்… அம்மாச்சி. இப்ப என்ன பண்ணிட்டேன் நான். பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி பேசுறீங்க?” சுள்ளென கோபமாகக் கேட்டாள் அனிதா.

“அதில்லை அனிதா. கோபப்படாம நான் சொல்றதை கேளு. இந்த விஷயம் எல்லாம் யாரோ ஒருத்தர் கண்ல பார்த்து அப்படியே ஒவ்வொருத்தர் கிட்ட இருந்து வரும் போது மாறி இருக்கும். இப்ப நீ சொன்னீயே, கள்ளக்காதல்னு. ஆனால், அதெல்லாம்  உண்மையா இருக்கும்னு என்ன உத்திரவாதம். கண்ணால பார்க்குறதே இந்த காலத்துல நம்ப முடியுறது இல்லை. நீ போட்றது எல்லாமே பொய்ன்னு நான் சொல்ல வரலை. உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். உண்மையா இருக்க பட்சத்துல யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், அதே சமயம் பொய்யா இருக்கும் போது, அவதூறு பரப்புன மாதிரி ஆகிடாதா? நம்ம போட்ற செய்தியால பாதிக்கப்பட்ற குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும்? நீயே சொல்லு?” நளினி தன் கருத்தை முன் வைத்தார்.

“அம்மாச்சி, ச்சு… அதெல்லாம் இல்லை. தெரியாம எல்லாம் யாரும் நியூஸ் போட மாட்டாங்க!” தன் வாதத்திலே இருந்தாள் சின்னவள்.

“ஒரு விஷயம் நடந்துச்சுன்னா, மூனு விதமா பார்ப்பாங்க அனிதா. ஒன்னு உனக்கு தெரிஞ்சது, நீ சரின்னு நினைக்குறது. ரெண்டாவது

மத்தவங்களுக்கு புரிஞ்சது. மூன்றாவது

உண்மையிலே என்ன நடந்ததுச்சுன்னு. எல்லாத்தையும் யோசிக்கணும் இல்லை, ஒரு செய்தியை போட முன்ன?”

“ஒவ்வொரு நியூஸ் போடும்போது இப்படி நான் தேடி அலைஞ்சுட்டு இருந்தா, அது பழைய நீயூஸ் கேட்டகிரில வந்துடும். அப்புறம் யாரும் லைக் போட மாட்டாங்க. போங்க அம்மாச்சி, சரியான பூமரா இருக்கீங்க!” என்ற அனிதா எழுந்து அறைக்குள் சென்று விட்டாள். நளினி எப்போது இந்த பெண் திருந்தப் போகிறாள் என பார்த்தார்.

மதிய உணவை மூவரும் அமர்ந்து உண்ண, சிறிது நேரம் படுத்து எழுந்த நளினி வீட்டிற்கு கிளம்பினார். இரண்டு ஆண்பிள்ளை மற்றும் ஒரு பெண் அவருக்கு. சுந்தரவள்ளி தான் கடைசி. அவருக்கு முன்னே மணிகண்டன் மற்றும் செல்வம் என இரண்டு அண்ணன்கள். நளினி இப்போது பெரிய மகன் வீட்டில் தான் தங்கியிருக்கிறார். அவ்வப்போது மகளை காண வந்து செல்வார்.

நளினியை அனுப்பிவிட்டு வந்த சுந்தரவள்ளி காயப்போட்ட துணியை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். மதியம் தூங்கச் சென்ற அனிதா இன்னும் எழவில்லை. இரவு தான் அலைபேசியை உபயோகித்துக் கொண்டு உறங்காமல் இருக்கிறாள். இப்போதாவது உறங்கட்டும் என விட்டுவிட்டார் அவர்.

காலை உணவு உண்டதோடு சரி. அன்று வேலை அதிகமாக இருந்ததால், மதிய உணவு உண்ண கூட நேரமில்லாமல் போனது சொக்கனுக்கு. அந்த ஐடி நிறுவனத்திலே மதிய உணவு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று நேரமின்மை காரணமாக உணவு உண்ணவில்லை அவர்.

சொக்கநாதன் ஒரு இரத்த அழுத்த நோயாளி. நேரத்திற்கு சாப்பிட்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று கடந்த முறை மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

வேலை முடிய மாலை நான்காகி விட்டது. இரத்த அழுத்தம், மாத்திரை உட்கொள்ளாதது, காலையிலிருந்து மகிழுந்தில் பயணம் செய்வது, உணவு இன்னும் உட்கொள்ளாமல் இருப்பது என பலவித காரணங்களால் அதிகமாக வியர்க்கத் துவங்கியது. லேசாக கண்களை சுழற்றி மயக்கம் வருவது போல இருந்தது அவருக்கு.

சாலையின் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியவர், தண்ணீர் பொத்தலை எடுத்தார். அது காலியாக இருக்க, சுற்றி முற்றி பார்த்தார். சாலையின் மறுபுறம் ஒரு இளநீர் கடை மட்டும் இருக்க, ‘இப்போதைக்கு ஒரு இளநீர் குடித்தால் கூட போதும்!’ என நினைத்து சாலையை மெதுவாக கடக்க ஆரம்பித்தார்.

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்க, மெதுவாக நடந்தாலும் கண்களை சுழற்றி மயக்கம் வர துவங்க, பிடிமானம் இன்றி நடு சாலையில் கால்கள் தள்ளாட துவங்க, அப்படியே ஒரு முறை சுழன்றார்.

விழுந்து விடுவேன் என கால்கள் வலியுறுத்தும் முன், அந்த வழியே வேகமாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராது அவரை மோத, அது இடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்டார். உதிரம் அதிகமாக வெளியேற, அந்த இடத்தில் மக்கள்  அதிகமாக கூடத் துவங்கினர். அதில் ஒருவர் அவசர ஊர்திக்கு அழைக்க, பத்து நிமிடத்தில் சொக்கன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவருடைய உயிர் பாதிவழியிலே பிரிந்து விட்டது.

மடித்த துணிகள் எல்லாம் தனதறையில் அடுக்கிக் கொண்டிருந்தார் சுந்தரவள்ளி. தூங்கி எழுந்த அனிதா, “ம்மா… காபி?” என வினவினாள்.

“போட்டு வச்சுருக்கேன். போய் குடி டி!” என பதிலளித்தார்.

“ஹம்ம ம்மா!” என அவள் அடுக்களைக்குள் நுழைய, சுந்தரவள்ளியின் அலைபேசி அழைத்தது.

“ஏய் அனிதா! அந்த போனை எடுடி!” என அறையிலிருந்தே அவர் கத்த, “நீயே எடுத்துக்கோம்மா!” என குளம்பியை குடிக்கலானாள் அனிதா.

“உன்னை!” என எதோ கூறியபடியே வெளியே வந்த சுந்தரவள்ளி அழைப்பை ஏற்றுக் காதில் பொறுத்தினார். மறுபுறம் கேட்ட செய்தியில் இதயம் துடிப்பதை நிறுத்தி விட, “என்னங்க…!” என அவர் கதறல் அந்த தெருவையே உலுக்கி இருந்தது. கையிலிருந்த குவளையை நழுவ விட்ட அனிதா ஓடி வந்தாள்.

கீழே அமர்ந்த சுந்தரவள்ளி தலையில் அடித்துக் கொண்டு அழ, “ம்மா… என்னாச்சு மா? ஏன் அழற?” என பதறியபடி அலைபேசியை காதுக்கு கொடுத்தாள். மறுபுறம் சொன்ன செய்தி மகளையும் உலுக்க, சிலையாகி விட்டாள்.  காலையில் உயிருடன் சென்ற மனிதர் வீடு திரும்பும் போது உயிர் நீத்து தான் வந்தார்.

சொந்த பந்தங்கள் அனைவரும் கூடினர். அழுகை சத்தம் மட்டுமே பிரதானமாக கேட்டது. அனிதா அவர் காலடியில் அமர்ந்து கதறினாள், கத்தினாள், அழுதாள். ஆனால், அதை கேட்டு தாயுமானவர் எழவில்லை.

நேரம் செல்ல, அவரை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அனிதா அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, சுந்தரவள்ளி கதறினார். ஆனால், யாருக்காகவும் நேரம் நிற்காதே! அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  சடங்கு சம்பிரதாயங்கள் என மூன்று நாட்கள் வீட்டில் உறவினர்கள் இருந்தனர். நான்காம் நாள், அவரவர் வேலையை கவனிக்கச் சென்று விட்டனர்.

நளினி மட்டும் மகளுக்கு துணையாக தங்கி விட்டார். அண்ணன்கள் இருவரும் கூட தங்கள் குடும்பத்தை பார்க்கச் சென்று விட்டனர்.

அனிதா ஓய்ந்து போய் அமர்ந்து விட்டாள். மேலும் நான்கு நாட்கள் கடந்து விட்டிருந்தது. ஒரு வாரமாக சீண்டப்படாத அவளது அலைபேசி அழைத்து அழைத்து ஒரு கட்டத்தில் ஓய்ந்து போய் மூலையில் ஒடுங்கிக் கிடந்தது.

“சாப்பிடு அனிதா. நடந்ததையே நினைச்சு நீ உடம்பை கொடுத்துக்காத!” என அரட்டி உருட்டி அவளை உண்ண வைத்திருந்தார் நளினி.

அறைக்குள் வந்தவள், அலைபேசி எடுத்து வந்திருந்த அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் பதிலளித்து விட்டு, முகநூலில் நுழைந்தாள். சில பல பதிவுகளை தள்ளிக் கொண்டிருக்கும் போது, “குடி போதையில் ஆசாமி நடு ரோட்டில் நடனமாடியதால், கார் அவரை அடித்து தூக்கி விட்டது! ஆசாமி சம்பவ இடத்திலே பலியானார்!” என செய்தி வர, கடந்து செல்ல முயன்றவள், அதுனுடன் இணைக்கப்பட்ட காணொலியை ஓடவிட்டாள்.

அது சொக்கநாதன் இறந்த சம்பவத்தன்று நடந்த நிகழ்வு, காணொலியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அவருக்கு விபத்து நடந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கருவியில் பதிவாகி இருந்தது.

“இவனுங்க எல்லா எப்போ திருந்தப் போறாங்க?”

“அப்படி என்னய்யா குடி முக்கியமா போச்சு? கண்ணு மண்ணு தெரியாமல் குடிச்சு செத்துட வேண்டியது. பொண்டாட்டி புள்ளய நடு ரோட்ல நிக்க வைக்க வேண்டியது!”

“குடிக்காரரகள் நாட்டுக்கு தேவையும் இல்லை. வீட்டுக்கும் தேவையில்லை!”

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுன்னு கூவி கூவி சொன்னா கூட, காதுல வாங்க மாட்டானுங்க. பட்ட பகல்ல குடிச்சுட்டு வண்டி ஓட்றது?”

பல்லாயிரம் கருத்துக்கள் கருத்துப் பெட்டியில் பதிவாகி இருக்க, ஒரு நிமிடம் மூளை எதையும் ஆராய விழையவில்லை. ஏனென்றால் சொக்கனுக்கு குடிப்பழக்கமே இல்லை. குடி மட்டுமல்ல, வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.

‘எப்படி இவங்க என் அப்பாவை அப்படி போடலாம். என் அப்பா நல்லவர். அவர் குடிகாரர் எல்லாம் இல்லை!’ என கத்த வேண்டும் போல தோன்றியது மகளுக்கு. விழிகள் கலங்கி நீர் வழிந்தது.

இதயம் கனக்க, அந்த பதிவை யார் போட்டது என தேடினாள். நிறைய பேர் பகிர்ந்து இருந்தனர். நிறைய கருத்துக்கள், கேலிகள், கிண்டல்கள். யார் முதலில் துவங்கியது என அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. தலையை கைகளில் தாங்கி அமர்ந்து விட்டாள். மூளை வேலை செய்வதை நிறுத்தி இருந்தது.

“அனிதா, என்ன பண்ற?” என அறைக்குள் நுழைந்தார் நளினி.

“அம்மாச்சி!” என கதறிக் கொண்டே அவரை அணைத்தவள், “அம்மாச்சி… அப்பா குடிகாரர் எல்லாம் இல்லை. இங்க பாருங்க எப்படி போட்டு இருக்காங்க!” என முகநூலை காட்டினாள். புலனத்திலும் அதே சம்பவம் வேறு விதமாக கேலி கிண்டல் செய்யப்பட்டு காணொலி பகிரப்பட்டிருந்தது.

“அம்மாச்சி, எங்க அப்பா நல்லவர்னு எல்லார்கிட்டயும் சொல்லணும். எல்லார்கிட்டேயும் சொல்லணும்!” என அவள் கதற, அவளை ஆசுவாசம் செய்தவர், “நம்ம என்ன செஞ்சமோ, அது தான் நமக்கு வரும். நல்லா யோசி அனிதா!” என கூறிவிட்டு அவர் வெளியேறினார்.

என்ன? என்ன? என பெண் மனம் ஆராய, நளினி கூறிய வார்த்தைகளால், நினைவடுக்கில் நிகழ்வுகள் முகிழ்ந்தது.

‘மூனு விதமா பார்ப்பாங்க. ஒன்னு உனக்கு தெரிஞ்சது, நீ சரின்னு நினைக்குறது. ரெண்டாவது

மத்தவங்களுக்கு புரிஞ்சது. மூன்றாவது

உண்மையிலே என்ன நடந்ததுச்சுன்னு. எல்லாத்தையும் யோசிக்கணும் இல்லை ஒரு செய்தியை போட முன்ன?’

“ஐயோ! ஐயோ!” என தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். “நான் தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன்!” மனம் தன்னிலையில் அடுத்தவரை ஒப்பிட்டு பார்த்து மருகியது. இவள் ஒரு அனிதா. ஆனால், இதற்கு முன்பு அவள் பதிவிட்ட எத்தனை செய்திகள் எத்தனையோ குடும்பத்தை சிதைத்து இருக்குமே! மனம் தான் செய்த செயலில் கூனி குறுகிப் போய்விட்டது. இத்தனை நாட்கள் அவள் செய்த செயலை எண்ணி தன்னையே வெறுத்து விட்டாள்.

இந்த உலகத்திலே இல்லாத ஒருத்தரை இத்தனை அவதூறாக பேச முடியுமா இந்த சமூகத்தால்? எதையும் அறியாது வாயில் வந்ததை பேச முடியுமா? தானும் இத்தனை நாட்கள் அவர்களைப் போல தானே என எண்ண, உடல் கூசிப் போனது அனிதாவுக்கு.

நளினியிடம் சென்றவள், “அம்மாச்சி, என்னை மன்னிச்சுடுங்க!” என கண்ணீர் உகுத்தாள். அவள் முதுகை ஆதரவாக தடவியவர், “இப்பவாவது உன்னோட தப்பை உணர்ந்த இல்ல? அதுவே போதும் அனிதா. அழாத! உங்க அப்பா நல்லவர்னு உனக்கும் உங்க அம்மாவுக்கும் தெரிஞ்சா போதும். உலகத்துக்கு சொல்லணும்னு அவசியம் இல்லை. அதுல கருத்து சொல்ற யாரும் நம்ம கஷ்டத்தை பகிர்ந்துக்க போறது இல்லை. இனிமே இது போல செய்யாதே!” என பெரியவராய் அறிவுரை கூறினார்.

இரண்டு நாட்கள் தான் செய்த தவறை எண்ணி மருகினாள் அனிதா. சொக்கனின் புகைப்படம் முன்பு நின்றவள், “அப்பா என்னை மன்னிச்சுடுங்க பா. இப்படி உங்களை எல்லாரும் பேசுறதுக்கு நானும் ஒரு காரணம் தான் பா. என்னை மன்னிச்சுடுங்க!” என தரையில் அமர்ந்து, கதறி அழுதாள். சில நிமிடங்கள் யோசித்தவள், விறுவிறுவென அறைக்குள் சென்று அலைபேசியில் தனது முகநூல் பக்கத்தை திறந்தாள்.

“ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூன்று பக்கங்கள் உண்டு.

1. உங்களுக்குத் தெரிந்தது.

2. பிறருக்கு புரிந்தது

3. உண்மையில் நடந்தது.

கண்ணால் காண்பது எல்லாம் பொய்! எதையும் பதிவிடும் முன், யாரைப் பற்றி பேசும் முன் ஆராய்ந்து செய்யுங்கள். இல்லையேல் அதன் பின்விளைவுகள் அதிகமாக உங்களை காயப்படுத்த வல்லது!” தட்டச்சு செய்து பதிவிட்டவள், அந்த பக்கத்தை அந்த நிமிடமே மூடி விட்டாள். மூடப்பட்டது முகநூல் பக்கம் மட்டுமல்ல! பல குடும்பங்களின் கதறல்களும் அழுகையும் தான்!

முற்றும்…

Exit mobile version