வாய்க்கரிசி – திண்டுக்கல் சதீஸ்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 51 வாய்க்கரிசி – திண்டுக்கல் சதீஸ்

21 வயதில் திருமணமாகி ,இரண்டே வருடத்தில் தன் குடிகார கணவனை இழந்த தாயம்மாள். தன்னுடைய ஒரே மகனான சுண்டுவிற்காக(சுந்தர்) வேறு திருமணம் கூட செய்து கொள்ளாமல் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டுத் துணை ஏதும் இன்றி தனி ஆளாய் சித்தாள் வேலை செய்து  தன்னுடைய குழந்தையோடு வாழ்க்கையை நடத்தி வந்தாள்.

தன் கணவன் விட்டுச் சென்ற அசையா சொத்து எப்ப வேண்டுமானாலும் விழுந்துவிடும் போலிருக்கும் மண் சுவரால் ஆன சின்னஞ்சிறிய வீடு. இத்துப்போன ஓலை குடிசையே மேற்கூரை. மழைக்காலம் வந்தால் ஒழுகும்       மழைநீருக்கு எத்தனை பாத்திரம் வைத்து பிடித்தாலும் பத்தாது. வீட்டு வாசல் நிமிர்ந்து  சென்றால் தலையை தட்டும் , குறுகிப்படுத்தால் மூன்று பேர் படுக்கும் வசதி. முக்கல் சேர்ந்தது அடுப்பு. முள் குச்சிகளும் தென்னை மட்டைகளுமே விறகுகள். கிழிந்து தைத்த கோணிப்பையே வீட்டில் கதவுகள். நிலா ஒளியே வீட்டில் வெளிச்சம்.

அசையும் சொத்து குறும்புத்தனம் செய்யும் எட்டாம் வகுப்பு படிக்கும் தன் ஒரே மகன் சுண்டு. கால் பரீட்சை விடுமுறை என்பதால் சுண்டு மகிழ்ச்சியாக நண்பர்களோடு விளையாடிக்கொண்டும் சுற்றிக்கொண்டும் திரிந்தான்.

தாயம்மாள் அந்த ஊர்ப்பகுதியில் உள்ள மேஸ்திரியிடம் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். வேலையில்லாத நாட்களில் ரேஷன் கடைக்கு செல்வதும் முள்  விறகு வெட்டி எடுத்து வருவதும் வழக்கம்.

ஆண்கள் அதிகமாக வேலை செய்யும் கட்டிடத்தில் ஒரு பெண் அதுவும் கணவனை இழந்த 30 வயதுடைய தாயம்மாள் சித்தாள் வேலைக்கு போகும்போது எத்தனை கஷ்டம் வரும். இந்தப் பொல்லாத ஊர் மக்கள் என்னென்ன சொல்லி பேசுவார்கள். அதனாலேயே தாயம்மாளால் பொதுவெளியில் சிரிக்க முடியாது ,கந்தலான சேலை ,அழுக்கான முகம் என இருப்பார்.

சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசி காலியாகிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு அலமேலு அக்கா ஞாபகப்படுத்தியது போல் இந்த மாதம் வாங்குவதற்கான தேதியும் வந்துவிட்டது. ஆனால் வாங்கி வைக்க தாயம்மாளுக்கோ  நேரமில்லை. அதனால் தன் மகன் சுண்டுவை காலையில் ரேஷன் கடைக்கு சென்று அரிசி வாங்கி வைத்து விடுமாறு முத நாள் இரவே சொல்லிவிட்டார்.

மறுநாள் காலையில் மூணு மணிக்கு எழுந்து முள்குச்சியில் சமைத்து வைத்துவிட்டு தன் மகனையும் எழுப்பி ஒரு முறை ஞாபகப்படுத்தி விட்டு வேலைக்குச் சென்றால் தாயம்மாள். இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே அரிசி இருக்கும் என்பது தாயம்மாள் கணிப்பு.

“டேய் சுண்டு,ரேஷன் கடைக்காரன் வர நேரம்,அரிசி வாங்க போடா” என பக்கத்து வீட்டு அலமேலு அக்கா கத்த சுண்டுவும் மெல்ல எழுந்தான்.

கடவுளே இன்னைக்கு ரேஷன் கடை திறக்க கூடாது அப்ப தான் நான் விளையாட போக முடியும் என மனதிற்குள் சுண்டு வேண்டிக்கொண்டே கடைக்குச் சென்றான் ஆனால் ரேசன் கடைக்காரன் வந்திருந்தான் ஆம்பள வரிசை கூட்டம் தான் அதிகம்.

சுண்டுவும் ஒரு ஆளாய் வரிசையில் நின்றான். ஒரு ஆண் ஒரு பெண் என மாறி மாறி பதிய அதுவும் ஒவ்வொருவரும் இரண்டு மூன்று கார்டுகளை பதிந்து வாங்கி சென்றார்கள்.

வரிசையில் நின்றிருந்த சுண்டுவைப் பார்த்த அவனது நண்பர்கள், டேய் வாடா! விளையாட போகலாம் நாளைக்கு நானும் தான் வாங்கணும்.அப்ப சேர்ந்து  ரெண்டு பேரும் வாங்கிக்கலாம் டா என சொல்ல சுண்டுவும் சரி என சொல்லிட்டு விளையாட ஓடிவிட்டான்.

பொழுது சாய்ந்தது,தாயம்மாளும் வீட்டுக்கு களைப்போடு வந்து ,மகனிடம் என்னையா அரிசி வாங்கியாச்சா என கேட்க மகன் சுண்டுவோ ரொம்ப கூட்டமா இருந்துச்சு மா நாளைக்கு வாங்குகிறேன் எனக் கூறினான்.

தாயம்மாளுக்கோ பயம் எங்கு அரிசி வாங்க முடியாமல் போய்விட்டால் என்ன பண்ணுவது என யோசித்துக் கொண்டே சுண்டுவுக்கு மட்டும் அரை டம்ளர் அரிசிய உலைல போட்டு சாப்பாடு வடிச்சு மகனுக்கு கொடுத்தாள்.

இதை பார்த்த சுண்டுவோ அம்மாவிடம் எம்மா நீ சாப்பிடலையா என கேட்க தாயம்மாலோ பசிக்கவில்லை என கூறிவிட்டு பச்ச தண்ணி மட்டும் குடித்துவிட்டு படுத்து விட்டாள்.

 இதை பார்த்த சுண்டுவுக்கோ நடப்பது புரிந்தது நாளை எப்படியாவதும் ரேஷன் கடையில் அரிசி வாங்கினால் மட்டுமே அம்மா சாப்பிடும் என்று முடிவெடுத்தான்.

காலை வந்தது சுண்டவும் எழுந்தான் ரேஷன் கார்டையும் இரண்டு பிளாஸ்டிக் கோணிப்பைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான். ரேஷன் கடைக்கு வந்து பார்த்தான் அங்கே கோணலாக இரண்டு வரிசை ஒன்று ஆண்களுக்கு மற்றொன்று பெண்களுக்கு. ரேசன் கடையில் அவ்வளவாக கூட்டம் இல்லை.ஆங்காங்கே பிளாஸ்டிக் கோணிப்பைகளும் அதன் மீது அளவான கல்லும் வைத்து இடம் பிடித்து வைத்திருந்தனர் பாமர மக்கள்.இதற்கு முன்னர் சுண்டு  அம்மாவோடு ஒன்றிரண்டு முறை வந்து கார்டை மட்டும் பதிந்து கொடுத்திருக்கிறான்.

சுண்டு வரிசையில் கடைசியில் நின்று கொண்டிருந்தான்.  ரேஷன் கடைக்காரனோ வரவே இல்லை .காத்திருந்த சனம் எல்லோரும் கத்திக் கொண்டிருந்தார்கள் .மணி 11 ஆனது ரேஷன் கடைக்காரனோ எந்தவித பொறுப்பும் இன்றி ஒரு வழியாய் வந்தான். வந்ததும் நேரே ரேசன் கடைக்கு வராமல் அருகில் உள்ள டீக்கடையில் நின்று ஒரு டீயையும் சிகரெட்டையும் மாறி மாறி குடித்துக்கொண்டிருந்தான்.

சுண்டு மட்டும் எப்படா வருவ என மனதிற்குள்ளே திட்டிக் கொண்டிருந்தான். ரேசன் கடைக்காரன் வருவதைப் பார்த்த ஊர் மக்கள் விலகி உள்ளே செல்ல வழி விட்டார்கள் .காலியாக இருந்த ரேசன் கடையில் ரேசன் கடைக்காரன் வந்தவுடன் எங்கிருந்தது இவ்வளவு கூட்டம் என நினைக்கும்படியாய் கூட்டம் அலைமோதியது.

ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுமாய்…கைக்குழந்தையோடு தாய்மார்களும் ,வயதான குச்சி ஊண்டிய தாத்தா பாட்டிகளும் அரிசி வாங்க போராடிக்கொண்டிருந்தனர்.

ரேசன் கடைக்காரனுக்கு ஏத்த மாதிரி, ஜால்ரா அடிக்குற, கூல கும்பிடு போடுற மாதிரி ஒரு எடை போடுற கையாளு  எடை போடும் இடத்தில் இருந்தான். அந்த எடை போடுறவனும் அவனுக்கு தெரிஞ்ச ஒரு பத்து கார்ட சட்டைப் பையில வச்சுருக்கான்.

வேலைக்குச் சென்ற தாயம்மாளோ ,ஐயா! கருப்பசாமி இந்த முறையாவது எங்களுக்கு சாப்பிடற மாதிரி நல்ல அரிசியா கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டாள்.

ரேஷன் கடையில் சுண்டுவோ மல்லு கட்டிக்கொண்டு வரிசையில் ஓரமாய் நின்று கொண்டிருந்தான். ரேஷன் கடைக்காரனின் மேசையும் தெரியவில்லை .அவனின் முகமும் தெரியவில்லை வரிசையும் முன்னே செல்வதாக தெரியவில்லை.

இடையிடையே நான்கு ஐந்து பேர் வரிசையில் வராமல் குறுக்கே புகுந்து இரண்டு மூன்று ரேஷன் கார்டுகளை பதிந்து வாங்கி சென்று விட்டனர் அதற்கு பதில்  டீ ,சிகரெட், புகையிலையையும் லஞ்சமாக வாங்கிக் கொண்டான் ரேசன் கடைக்காரன்.

 என்னடா இது என்று இந்தப் பக்கம் பார்த்தால் எடை போடுபவனும் 10 கிலோ அரிசிக்கு 9 கிலோ மட்டுமே போடுகிறான். பாமர மக்கள் பார்க்கும் முன்னே சாக்க புடி புடி என வேகமாக திட்டிக்கொண்டே திருடுகிறான். நாம் வாங்கும் போது என்ன செய்ய போறேனோ? என சுண்டுவுக்கு பயம் தொற்றிக் கொண்டது. சூரியனும் உச்சிக்குச் செல்ல வெயில் வாட்டி வதைத்தது .வரிசையில் நின்று பெரிசு முதல் சிறுசு வரை கலைத்து விட்டனர் .கை குழந்தைகளும் ஆங்காங்கே பசியில் அழ ஆரம்பித்துவிட்டனர். இதெல்லாம் நடந்த நேரத்திலே வரிசையும் முன்னே சென்றது சுண்டுவும் ஒரு வழியாய் ரேஷன் கடைக்காரனை நெருங்கி விட்டான். மேசையும் அவன் எழுதும் கைகளும் தென்பட்டது. மனதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.

 அடுத்த பதிவு இவனுக்குத்தான் ஆர்வத்தோடு நின்றான். பச்ச குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஒரு அக்கா சுண்டுவிடம் தம்பி புள்ள அழுகுது எனக்கு அப்புறம் பதிஞ்சுக்கப்பா என பாவமாக கேட்க சுண்டுவும் சரி ஒரு கார்டு தானே என சம்மதித்தான். அது முடிந்ததும் தன்னுடைய கார்டை ரேஷன் கடைக்காரனிடம் கொடுத்தான். ரேஷன் கடைக்காரனோ பேனாவை மேசையில் வைத்து விட்டு கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு மணி இரண்டு ஆச்சு சாப்பாட்டுக்கு போறேன் ,வந்து பதிஞ்சிக்கலாம் என சொல்லி எழுந்து கடையை அடைத்து விட்டான் .சுண்டுவுக்கோ ஒன்னும் புரியாமல் படியிலேயே நின்று விட்டான்.

சில பேர் ரேஷன் கடைக்காரனை திட்டிக்கொண்டே சென்று விட்டார்கள். இன்னும் சிலரோ அங்கேயே மரத்தடி நிழலிலும், கருப்பசாமி கோவில் திண்ணையிலும் படுத்து விட்டனர் .சுண்டுவோ அப்படியே வாசல் படியிலேயே உட்கார்ந்து ரேசன் கடைக்காரன் எப்ப வருவான் என காத்துக்கொண்டே இருந்தான்.

மணியும் நான்கு ஆச்சு.சூரியனும் உச்சியில் இருந்து இறங்கி மறைவதற்கு சென்று கொண்டிருந்தது .ஆனால் கடைக்காரனோ வரவே இல்லை .பக்கத்தில் இருந்த டீக்கடைக்காரனிடமிருந்து ஒரு தகவல் வந்தது .ரேஷன் கடைக்காரன் வீட்டிற்குச் சென்று விட்டதாகவும் எல்லோரையும் நாளை வரச் சொன்னதாகவும் கூறினான்.

 மக்கள் எல்லாம் புலம்பிக் கொண்டும் திட்டிக் கொண்டும் மெல்ல கிளம்பினார்கள்.சுண்டு மட்டும் சோகத்தோடு கடையின் சுவரில் எப்போதோ எழுதி வைத்திருந்த அதுவும் சரிவர தெரியாமல் யாருக்கும் பயன்படாத அழிந்துபோன புகார் தெரிவிக்கும் எண்களை பார்த்தபடியே வீட்டுக்கு போனான்.

வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டான். அவன் எண்ணம் முழுவதும் ரேஷன் கடையையே சுற்றிக் கொண்டிருந்தது .தாயம்மாள் வேலை முடிந்து வந்தாள்.வந்ததும் சுண்டுவிடம் கேட்டால் சுண்டு அழுது கொண்டே நடந்ததை விளக்கினான்.

அதற்கு தாயம்மாளோ இது ஒன்னும் புதுசு இல்ல எப்பவும் நடக்கிறது தான் நாளையிலிருந்து எனக்கு வேலை இல்லை சம்பளக்காசும் முதலாளி தர லேட் ஆகும். நாளைக்கு இரண்டு பேரும் போயி அரிசி வாங்கலாம்னு சொல்லி படுக்க வைக்கிறாள்.

 மறுநாள் காலையில் சமைக்க அரிசி ஏதுமில்லை அக்கம் பக்கம் கேட்டாலும் தருவதற்கு யாருக்கும் மனமில்லை ;இருந்தாலும் அலமேலு அக்காவிடம் வீட்டில் அரிசி இல்ல ,மேஸ்திரியும் கூலிய தர மாட்டேங்குறான்.எப்பவும் நாளக்கடத்திக் கொடுக்குறதுல அவனுக்கு அப்படி ஒரு சந்தோசம்.அவன்ட பல்லக்காட்டுற சித்தாளுக்கு காச தூக்கி குடுப்பான் என புலம்பிக்கிட்டே சுண்டுவிற்கு மட்டும் சோறு வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரை மட்டும் தாயம்மாள் குடித்துவிட்டு ,இருவரும் ரேஷன் கடைக்கு சென்றனர்.

அங்கே அதிகமான கூட்டம் தாயம்மாளுக்கோ காய்ச்சலும் வந்துவிட்டது ;அதை வெளியே காட்டிடாமல் வரிசையில் நின்று கொண்டிருந்தாள். மதியம் ஆனது ரேஷன் கடைக்காரன் வரவே இல்லை ,கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்த மக்கள் வீடு திரும்பினர்; அப்போது டீக்கடைக்காரரிடம் இருந்து மட்டும் ஒரு தகவல் இன்று கடை திறக்கப்படாது நாளை வாருங்கள் என்று.

 நம்பிக்கையோடு காத்திருந்த தாயம்மாளுக்கும் சுண்டுவுக்கும் என்ன செய்வதென புரியாமல் சோகத்தோடு வீட்டுக்கு வந்தனர். இரவு முழுவதும் தாயம்மாளுக்கு காய்ச்சல் ,கூடவே பசி மயக்கமும்.

அக்கம் பக்கம் உதவிக்கு கேட்டுப்பார்த்தார்.அலமேலு அக்காவ தவிர மத்த எல்லாப்பையலும் இவ எப்ப காலியாவானு தான் மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருக்கானுங்க.இரவு சுண்டுவுக்கு தூக்கமே வரவில்லை. அதனால் அம்மாவுக்கு தெரியாமல் இரவோடு இரவாகவே எழுந்து ரேஷன் கடையில் முதல் ஆளாய் போய் படுத்து விட்டான் .பொழுது விடிந்தது தாயம்மாள் தன் மகனை காணாம் என அழுதுகிட்டே  தேடுகிறாள் ;எங்கு பார்த்தும் கிடைக்கவில்லை.

 நான்கு ஐந்து நாளாய் சாப்பிடாமல் இருந்த தாயம்மாள் கண்கள் உள்ளே ஒளிந்து கொண்டன, கால்கள் தடுக்கியே நடந்தால், நடுரோட்டில் மயங்கி விழுந்தாள். ஊரார் அவள் வீட்டிற்கு தூக்கிச் சென்றனர், இங்கு சுண்டு ஒரு வழியாய் ரேஷன் கடையில் அரிசியை வாங்கிவிட்டு கோணியை கட்டிக் கொண்டிருந்தான். இந்த முறை தாயம்மாள் பிரார்த்தனை படியே நாற்றமில்லாத வெண்மை நிற பொடி அரிசி அமைந்தது.

தூரத்தில் ஒரு சத்தம், அது பக்கத்து வீட்டு அலமேலு குரல், “சுண்டு வெரசா வாடா”என சொல்லிக்கொண்டு வந்து சுண்டுவையும் அழைத்துக்கொண்டு அரிசி மூட்டையை தன் தலையில் வைத்துக் கொண்டும் மின்னல் வேகத்தில் ஏதும் பேசாமல் நடந்தாள். சுண்டுவுக்கு ஏதும் புரியாமல் வீடு வந்தான். வீட்டின் முன்னே சிறிய கூட்டம், அப்படி ஒரு அமைதி.

அலமேலு சுண்டுவை மெல்ல வீட்டிற்குள் கூட்டிப் போனாள். அங்கே தாயம்மாள் ஒரு உடைந்த மரக்கட்டை நாற்காலியில் சாத்தி வைக்கப்பட்டிருந்தாள். சுண்டுவுக்கு புரியவில்லை அங்கு நடப்பது என்னவென்று. அவளுடைய இரண்டு கால்களின் கட்டை விரல்களும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.சுண்டுவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரும் வரவில்லை.யாரிடமும் அவன் பேசவும் இல்லை.

சுண்டுவிற்கோ,

நம் அப்பா இருந்திருக்கலாமோ,

நாம் அன்று விளையாட போகாமல் இருந்திருக்கலாமோ,

ரேஷன் கடைக்காரன் தன்னுடைய வேலையை சரியாக செய்திருக்கலாமோ,

அக்கம் பக்கத்தினர் இப்பொழுது வந்து பார்ப்பதற்கு பதில் முன்னரே ஏதாவது உதவி செய்திருக்கலாமோ,

அம்மா வேலை செய்யும் இடத்தில் சம்பளத்தை சரியான நேரத்தில் தந்திருக்கலாமோ,

என இன்னும் இது போன்ற ஆயிரம் கேள்விகள் அவன் மனதிற்குள் கேட்டுக் கொண்டே அவன் கண்கள் தன் அம்மாவை பார்த்துக் கொண்டே இருந்தன. சுண்டு அவன் வாங்கி வந்த அரிசியை  எடுத்து ,அம்மா எந்திரிம்மா !எந்துருச்சு பாரும்மா …நான் அரிசி வாங்கிட்டு வந்துட்டேன் மா ,நீ கேட்பீல ….அதே மாதிரி நல்ல பொடி அரிசிம்மா ….வெள்ளை வெள்ளைனு பொன்னியரிசியாட்டம் இருக்குதும்மா …என பிஞ்சு குரலில் கையில் அரிசியை வைத்துக்கொண்டே  அழுக அலமேலு அக்கா சுண்டுவின் கைகளால் எடுத்து தாயம்மாளுக்கு போட்டாள் வாக்கரிசி.          

***************************

Exit mobile version