மாற்றம் கொணற வா மகளே! – ஆண்டாள் வெங்கட்ராகவன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 62 மாற்றம் கொணற வா மகளே! – ஆண்டாள் வெங்கட்ராகவன்

செங்காந்தள் பூங்கொத்தை சூடிக்கொண்டு கிழக்கே கால் வைத்துத் தாண்டிக் குதித்தது, பகலவன். மெல்லிய கதிர்வீச்சு இருளெனும் தாளை கிழித்தெறிய, சுற்றிலும் இருந்த செடி கொடிகளின் பூக்கள் பகலவனை கண்டு மலர்ந்து சிரித்தன. அந்த அழகிய வீட்டின் பால்கனியில் கையில் குழம்பியுடனும், காதில் ஹெட்செட்டும் என அமர்ந்திருந்தாள், நுதலழகி. ‘கன்னத்தின் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே.. கண்களில் ஏன் இந்த கண்ணீர்? அது யாராலே? கன்னியின் கழுத்தை பார்த்தால், மணமாகவில்லையே.. காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூ போலே..’ என்று காதில் விழுந்த தேனை இதழில் நிறுத்தி அவள் சுவைத்துக் கொண்டிருக்க, அலைபேசி சிணுங்கியது. மணி ஆறு என சுட்டிக் காட்டியது.. மென் புன்னகையுடன் எழுந்தாள். பாவையின் கட்டிலின் மேல் அத்தனை பெரிய புகைப்படம். குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் இருக்க எடுத்த படம். மனதில் முனுக்கென வலி உண்டாகியது. இத்தனை சொந்தங்களிடமிருந்து விலகியிருக்கும் வேதனை. கண்களை மூடித் திறந்த பெண் குளியலறைக்குள் புகுந்தாள். குளித்து முடித்து வந்த பெண் சமையலறையில் சில மணித்துளிகள் போராடி காலை உணவை உண்டு, மதிய உணவை எடுத்துக் கொண்டு சென்றாள். சலசலப்பான சாலையிலும் கூட கவனம் சிதறுமா? ஆகும் போலும்.. அந்த சத்தம் கூட அவளுக்கு பல சிந்தனைகளை எழுப்பி அவள் கவனத்தை உள்ளிளுத்துக் கொண்டது. அதிலிருந்து போராடி வந்தவள் சாலையில் கவனம் செலுத்திச் சென்றாள். அந்த உயர்ந்த கட்டிடம் வந்தது. அவளின் கனவல்லவா அது! வண்டிகள் தரிக்கும் இடம் சென்று பாவை நிற்க அவளது தோழி பவித்ரா வந்தாள். “ஏ! நுதல்.. ஹாப்பி பர்த்டே..” என பவி அவளை கட்டியணைக்க மெல்லிய புன்னகையுடன் “தாங்க்ஸ் டி” என்றாள். சற்று தயக்கத்துடன் “ய.. யாரும் ஃபோன் பண்ணினாங்களா நுது..?” என பவி கேட்க அதே புன்னகையுடன் ‘இல்லை’ என தலையசைத்தாள். அதில் பவிக்கு சங்கடமாகிவிட “சாரி டி..” என அவள் மனதை புண் படுத்திவிட்டோமோ? என்ற எண்ணத்தில் கேட்டாள். “ச்சி! என்னடி..? இதுலாம் தெரிஞ்சு தானே வந்தேன்? அப்றம் என்ன? வா” எனக் கூறிய நுதல் தோழியின் தோளில் கரம் போட்டபடி உள்ளே சென்றாள். நுதல் பவி இருவரும் வானொலி அறிவிப்பாளர்கள் (radio jockey). நீலகிரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் கிண்ணக்கொரை என்னும் ஊரே நுதலின் ஊர். அப்பா அருள்மொழி, ஊர்த் தலைவர். அம்மா, ஆதிரை. உடன் , அக்கா மலரழகி. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். செந்தாமரை, மணிமேகலை. இருவரும் தங்களை போன்றே அண்ணன் தம்பிகளான மாணிக்கம் மற்றும் பார்த்திபனைத் திருமணம் செய்து கொண்டனர். செந்தாமரை மாணிக்கத்திற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இளஞ்சேரன், இகல்வழுதி. இளைய தம்பதியினருக்கு ஒரு ஆண் பின் பெண். மூத்தவன் ஆதவன், இளையவள் வான்மதி. இத்தனை பெரிய குடும்பம். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து இங்கு, கோவையில் இருக்கிறாள். இருவரும் உள்ளே செல்ல உடன் பணிபுரியும் யாவரும் அவளை அணைத்து தங்கள் வாழ்த்தைத் தெரிவிக்க, புன்னகையாக அவற்றை ஏற்றுக் கொண்டாள். பாவை தனது வானொலி நிலையத்தினுள் நுழைந்தாள்.  ஏனோ.. அவளுக்கு அது தான் சொர்க்கம். கவலைகள் மறந்து, மலர்ந்த புன்னகையுடன் அந்த பெரிய ஹெட்செட்டை காதில் மாட்டிக் கொண்டாள். கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருக்கும் பவிக்கு கட்டைவிரல் காட்டியவள், அதிர்வெண்களை சரிசெய்துவிட்டு தனது கலகல பேச்சை தொடங்கினாள். “ஹாய் எவ்ரிவொன்.. நான் உங்க ஆர். ஜே. நுதலழகி.. நீங்க கேட்டுட்டு இருக்குறது பாட்டுடன் வேட்டு, இனி தினமும் மார்னிங் ஸ்வீட்டு. நம்ம ஷோக்குள்ள போகும் முன்ன எப்பவும் ஒரு கருத்தோட போவோம். சோ இன்னிக்கி கருத்து என்னனா, அடுத்தவங்க வாழ்க்கை பத்தின விஷயம் ஒன்னு, நம்ம தெரிஞ்சுக்க நினைச்சு, எப்படி கேட்கனு அப்டினு தயங்ககுறவங்களுக்காக தான் இந்த வாசகம். நீங்க கேட்க நினைக்கும் விஷயத்த அவங்களே சொன்னா தெரிஞ்சுக்கோங்க, சொல்லலைனா புரிஞ்சுக்கோங்க” என கூறினாள். இடைவிடாமல் பேசுபவள் “சோ இப்ப நம்ம முதல் காலர் யாருனு பாப்போம்” எனக் கூறி ஒரு பொத்தானை அழுத்தியவள் “ஹலோ” என்க மறுமுனையில் ஒரு பெண் “ஹலோ” என்றார். “ஹலோ மேம்.. சொல்லுங்க உங்க பேர் என்ன?” என அவள் கேட்க அவளோ “வான்மதி” என்றாள். அந்த பெயரை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தமானவரின் குரலை அவள் மூலை ஆராய்ந்து அது அவர் இல்லை என துவண்டு போனது. “மேம்.. நா உங்க பெரிய ஃபேன்” என அவள் கூற சுயம் வந்தவள் “தாங்க் யு நித்திலா.. என்ன நீங்க நுதல்னே கூப்பிடலாம்..” என கூறினாள். பின் தானே தொடர்ந்தவள் “சொல்லுங்க நித்திலா உங்க லைஃப்ல உங்களுக்கு மறக்கமுடியாத விஷயம் என்ன?” என நுதல் கேட்க அவரோ “எங்கப்பாவ முதல் தடவை பார்த்தது தான்..” என்றாள். “அப்பாவ முதல் தடவை பார்த்தது.. ஓகே உங்க அப்பா எங்க இருக்காங்க நித்திலா?” என நுதல் கேட்க “என்னோட அப்பா ஒரு ஆர்மி ஆஃபிசர். எனக்கு பத்து வயசு இருக்கும்போது தான் நான் எங்கப்பாவ முதல் தடவை பார்த்தேன். அ.. அவர் இப்போ இல்ல..” என்று அந்தப் பெண் கூற இருபுறமும் சில வினாடிகள் அமைதி நிலவியது. அப்பெண் “இன்னிக்கி எங்கப்பா பிறந்தநாள். அவருக்கு பிடிச்ச பாட்டு, எஸ். பி. பி அவர்களோட கேளடி கண்மணி.. அந்த பாட்ட எனக்காக பிளே பண்ண முடியுமா?” என கேட்க “கண்டிப்பா நித்திலா.. உங்களுக்காக, உங்கப்பாவுக்காக இந்த பாட்டக் கேட்டு ரசிச்சு நாங்க எல்லாரும் எங்க அஞ்சலிய செலுத்துறோம்” என நுதல் கூறினாள். அப்பெண் கேட்ட பாடலும் போடப்பட்டது. அடுத்தடுத்து அழைப்புகள் வரவும் பேசவுமாக நேரம் சென்று மதியம் வந்தது. உணவு வேலையில் யாவரும் உண்டு கொண்டிருக்க, பாவையின் கவனம் அலைபேசியில் இருந்தது. யாரேனும் ஒருவராவது அழைத்துவிட மாட்டனரா என்ற ஏக்கம். சலிப்புடன் திரையைத் தேய்த்துக் கொண்டிருந்தவளது விரல் பட்டு புகைப்படங்கள் அடங்கும் செயலியினுள் நுழைந்தது. புது மஞ்சள் கயிரும் நெற்றியில் பளபளக்கும் சிவப்பு குங்குமமும் என கணவனுடன் இருக்கும் புகைப்படம். அதைக் கண்டவுடன் பாவையின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. ‘உனக்கு புடிச்சத செய்.. நா எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன்’ என்ற அவளவன் குரல் இன்றும் அச்சரம் பிசகாமல் காதுகளில் விழ, கண்களை அழுந்த மூடித் திறந்தவள் மதிய உணவை எடுத்து உண்டாள். அப்படியே பொழுது கழிய, வானொலி நிலையத்தில் ‘நன்றாய் பேசுவோம், நல்லதே பேசுவோம்’ என்று அவள் நடத்தும் நிகழ்ச்சி துவங்க இன்னும் சில மணித்துளிகளே இருந்தது. விரல் அலைபேசியை இயக்கி இயக்கி அணைத்துக் கொண்டிருந்தது. சிறு தயக்கம்.. மீண்டும் ஆள மூச்சிழுத்துவிட்டாள். கண்கள் தழும்பி நிற்க கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருந்த பவியிடம் ‘ஒரு நிமிடம்’ என விரல் காட்டிவிட்டு வெளியே வந்தாள். கண்களில் கணவனின் முகம் மின்னி மறைய, அழைத்துவிட்டாள். வெகு நேரம் அழைப்பு சென்று இறுதியில் எடுக்கப்பட்டது. “நு.. நுதல்..” என திக்கித் திணறி அப்பெண் அழைக்க “வீட்டுல எல்லாரும் இருக்காங்களா?” என இறுகிய குரலில் கேட்டாள், நுதல். “ம்..ம்ம்.. இருக்காங்க” என அவள் கூற “எல்..” என ஏதோ கூற வந்தவள் “உங்க குடும்பத்து ஆட்கள் எல்லாரும் ஃப்ரீயா இருந்தாங்கன்னா, ஒரு அரைமணி நேரம் செலவழிச்சு என் ப்ரோக்ராம் கேளுங்க” எனக் கூறினாள். “ஏ.. ஏன்டி இப்..” என வான்மதி கூறிமுடிக்கும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஆழ்ந்த மூச்சை விட்டவள் வெளியே வந்து “நுதல் ஃபோன் பண்ணினா” என கூற யாவரும் அதிர்ந்து பார்த்தனர். அதுவும் சில வினாடிகளே.. “இப்போ என்னவாம் அந்தக் கழுதைக்கு?” என நுதலின் தந்தை அருள்மொழி கூற கண்ணீருடன் “ஏங்க.. அ.. அவளுக்கு இன்னிக்கி பிறந்தநாள்..” என ஆதிரை கூறினார். “மதனீ.. பிறந்த நாள் எல்லாம் வீட்டில இருந்திருந்தா கொண்டாடிருப்போம்..” என செந்தாமரை கூற, “இப்ப அவளுக்கு பிறந்தநாள் ஒன்னு தான் கேடு” என கண்ணீரை முந்தியில் துடைத்தபடி மணிமேகலை கூறினார். “ம்மா.. சும்மா இருங்க” என்ற இளஞ்சேரன் “பாப்பா.. நுதல் என்ன சொன்னா?” எனக் கேட்க “இந்த குடும்பத்து ஆட்களுக்கு நேரம் இருந்தா ஒரு அரைமணி நேரம் அவளோட ப்ரோக்ராம் கேட்க சொன்னா” என கண்ணீருடன் மதி கூறினாள். சில நிமிடம் ஒரு மயான அமைதி. “போடு டா..”  என இகல் கூற மதியும் தனது கைபேசியை இயக்கி வானொலி செயலியை இயக்கினாள். சரியான நேரத்தில் இயங்கப்பட்டதில் பாவையின் பேச்சு சலசலவென்று கேட்டது. “ஹாய் எவ்ரிவொன். நா உங்க ஆர். ஜே. நுதலழகி. இப்ப நீங்க கேட்குறது நன்றாய் பேசுவோம் நல்லதையே பேசுவோம். இன்னிக்கி நம்ம பேச போகுறது மக்கள் கிட்ட பெரும்பாலும் பரவியிருக்கும் சில அநாவசியமான கருத்துக்கள் பத்தி தான். இன்னும் புரியும்படி சொல்லணும்னா மூடநம்பிக்கை பத்தி பேசப் போறோம். இந்த மாதிரி மூடநம்பிக்கையின் பிடியில் கல்யாணம் ஆன புதுப் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப் படுவாங்க. வீட்டுக்கு வர்ற அன்னிக்கி கரண்ட் போச்சு.. மருமக வந்த நேரமே சரியில்லனு பேசவேண்டியது. ஏன் வீட்டுக்கு விளக்கு அணஞ்ச நேரம் ஒளி கொடுத்தவனு கூட சொல்லலாமே? கல்யாணம் ஆகி ஒரு வாரத்துக்குள்ள வீட்டுல யாருக்கும் எதுவும் ஆச்சுனா பொண்ணு வந்த நேரமே சரியில்ல, ஜாதகம்லாம் பாத்து தான் பண்ணீங்களா க்கா? அப்டினு கேட்க வேண்டியது. மருமகள் நம்மல எப்படிலாம் பாத்துக்குறானு காட்ட கடவுள் நடத்தினதுனு சொல்லலாமே? புதுப் பொண்ணு எதையாவது கொட்டிட்டா வந்த நாளே கீழ கொட்டுறியே வீட்டுல செல்வம் தங்குமானு கேட்க வேண்டியது. கொட்டிக்கிட்டவளுக்கு என்னனு ஒரு வார்த்த கேட்கலாமே? அத்தனைலயும் கொடுமை, கல்யாணம் ஆன கொஞ்ச மாசத்துலயே கணவன இழக்குறது. இதே கல்யாணமான புதுசுல ஒரு பொண்ணு இறந்தா அது ஒரு பொருட்டே இல்லை. ஆதங்கமும் அழுகயும் தான் வரும். மாப்பிள்ளை ராசி சரியில்லனு எங்கயாவது பேச்சு வந்திருக்கு? ஆனா இங்க..? அந்த பொண்ணு ராசி சரியில்ல, ஜாதகம் சரியில்ல, அப்பவே மூக்கு சரியில்லனு சொன்னேன், முழி சரியில்லனு சொன்னேன், நீ கேட்கலை நா கேட்கலைனு நூறு பேச்சு. அதுக்கப்றம் அந்த பொண்ண எந்த சடங்குலயும் சேக்குறது கிடையாது. உன்னால எப்படி செய்ய முடியும்? நீயே ராசியில்லாதவ, இப்ப தான் புருஷன் போய்ருக்கான் அதுக்குள்ள எப்படி சுத்துரா பாரு. அப்டி இப்டினு நூறு பேச்சு. அப்படி சொல்றதுக்கு முன்ன ஒரே ஒரு நிமிஷம் கல்யாணம் ஆன புதுசுலயே புருஷன இழந்த பொண்ணு மனசு என்ன பாடுபடும்னு ஒரே ஒரு தடவை யாராவது யோசிச்சிருந்தா அந்த பொண்ணு இழந்ததை எண்ணி எண்ணி மருகாம அவ வாழ்க்கையோட அடுத்த நிலைக்கு போய்ருப்பா. எந்த ஒரு விபத்துலயும் இவன் ராசிகெட்டவன், இவள் ராசிகெட்டவள்னு யாருக்கும் முத்திரை குத்தி ஒதுக்காதீங்க. அனைவரும் சமம்னு சொல்லும் சமுதாயத்துக்கு நம்ம வந்துட்டோம். இன்னும் பழய மூடநம்பிக்கைகளை பிடிச்சு தொங்கும் பெற்றவர்களை நம்ம மாத்தலாம். லெட்ஸ் பி தெ சேஞ்ச் (மாற்றமாக இருக்கட்டும்)” என்றாள். அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த இலட்சக் கணக்கான மக்களின் கண்களிலும் கண்ணீர். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மட்டுமல்ல படித்துக் கொண்டிருந்த நேத்ராவின் விழிகளிலும் கண்ணீர். அந்த நாட்குறிப்பை மூடியவள் அதில் முகம் புதைத்து அழ, அவள் சத்தம் கேட்டு உள்ளே விரைந்தார், ஆதிரை. “நேத்து குட்டி.. எதுக்கு டா அழர?” என அந்த இருபத்தி இரண்டு வயது பேத்தியை அவர் கேட்க அவரை நிமிர்ந்து பார்த்தவள் “அ.. அம்மா ரொம்ப பாவம் பாட்டி..” என்றாள். ஆதிரையின் கண்கள் குளம் கட்டிவிட்டது. கொள்ளை கொள்ளையாய் காதலுடன் மாமன் மகளின் கரம்பிடித்த ஆதவன் திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தித்தான். கணவன் இறந்த கவலையில் இருந்த பெண்ணை உற்றார், உறவினர்கள் வார்த்தையின் வால்வீச்சில் விலாச, பொறுக்க முடியாதவள் ஒரு நாள் ஆதவனின் தாய் பேசிய பேச்சுகளில் பொங்கிவிட்டாள். “நானா உங்க புள்ளைய கொன்னேன்? எனக்கு மட்டும் அவர் போனதுல என்ன சந்தோஷமா? அதுக்குனு முழுநேரமும் ஒப்பாரியா வைக்க சொல்றீங்க? அவர் செத்து ஒரு மாசம் ஆச்சு.. ஒரு எட்டு மன நிம்மதிக்கு கூட வெளிய போக முடியலை. புருஷன் செத்துட்டான்னு கவலை இருக்கா? ஊர சூத்திட்டு திரியுறானு உயிர எடுக்குறீங்க?” என பாவை கத்திவிட அருள்மொழி “பெரியவங்கள இப்டி தான் எதுத்து பேசுவியா? இது தான் நான் உன்ன வளர்த்த வளர்ப்பா?” என்றார். “உங்க பொண்ணு படுறதுலாம் உங்களுக்கு பெருசு இல்லை? ஊர் தலைவர நாலு பேர் நாலு விதமா பேசுறது தானே உங்களுக்கு பிரச்சனை..? நா இங்க இருந்தா தானே உங்களுக்கு அந்த கவலை? நா கிளம்பிடுறேன்” எனக் கூறி கோவை சென்றவளை அன்று வானொலி பேச்சு தான் மாற்றியது. அருள்மொழி மற்றும் மணிமேகலை மட்டும் அப்படியே தான் இருந்தனர். அதுவும் நான்கு மாத சூழ் தாங்கிய வயிற்றுடன் அவள் வந்ததில் மறைந்து தான் போனது. ஆனால் அங்கு தான் விதியின் விளையாட்டு.. மகவை ஈன்ற மாதரசிக்கு அடுத்த நாளே குளிர் காய்ச்சலில் உடல் தூக்கி போட்டது. வீடே பதற்றத்துடன் மருத்துவமனை கூட்டிச் செல்ல, தந்தையின் கையை இறுகப் பிடித்துக் கொண்டவள் கண்ணில் மரணம் எட்டிவிட்டதன் படபடப்பு. “அ.. அப்பா..” என அவள் கூற கண்ணீருடன் “சொல்லு டா” என்றார். “அ.. அப்பா.. ந.. நா சாக தான் போறேன்.. அ..அது பிரச்சனை இல்லை.. அ.. ஆனா.. புருஷன இ.. இழந்த ராசிகெட்டவனு எனக்கு குடுத்த பட்டத்த ப.. ப.. பெத்தவங்கள இழந்த ராசி கெட்டவனு என்.. என் பொண்ணுக்கும் தந்துடாதீங்க ப்பா..” என கண்ணீருடன் கூறினாள். அதில் ஒரு தகப்பனாக மனதால் மடிந்து போனவர் “இ.. இல்ல டா.. உனக்கு ஒண்ணும் ஆகாது டா” என கூற அவளுக்கு மூச்சு வேகமாக இழுத்து வாங்க ஆரம்பித்தது. “எ.. என் பொண்ண ப.. பத்திரமா பாத்துக்கோங்க ப்பா..” என பயத்துடம் கலங்கி உடைந்த குரலில் கூறிய மாதரசி தன் கணவன் சென்ற இடம் தேடி தஞ்சம் அடைந்தாள்.  நேத்திராவின் தலை கோதியவர், “உ.. உங்க அம்மா ரொம்ப தைரியமான பொண்ணு டா.. அவளுக்கு பொண்ணா இருந்து நீ இப்டி அழலாமா?” என்க “நானும் முயற்சி பண்றேன் அம்மம்மா.. அ.. ஆனா அம்மா பேசின அந்த பேச்சு.. அத படிக்கும்போது ஒவ்வொரு தடவையும் அழுகை வருது..” என கதறும் குரலில் கூறினாள். “எதுக்கு டா காலைலயே இத படிக்குற? எப்பவும் காலைல எவ்வளவு கவலை இருந்தாலும் சிரிச்சுக்கிட்டே எழணும். அதுவும் இன்னிக்கு உன் பிறந்த நாள்..” என ஆதிரை அவள் கண்ணீர் துடைக்க “அதனால தான் அம்மா வாழ்த்தோட எழலாம்னு படிச்சேன்” என்றாள். அதன் கடைசி பக்கத்தில் அவளின் அழகிய கவிதை..

‘பயம் என்று கூறி ஓடி ஒளியாதே..

தேடி வரும் ஆளுக்காக காத்து மருகாதே..

வாழும் வாழ்வு ஒன்று, அதை அடுத்தவர் வாழ விடாதே..

உன்னை ஈன்ற என் வலிகளை அவமதித்து மடியாதே..

இன்று ஒரு பொன்னான நாள்..

அதிலும் நீ பிறந்த நாள்..

என் வாழ்த்தை கேள் மகளே,

நீ வாழப் பிறந்தவள்,

உலகை ஆளப் பிறந்தவள்…’ அதைக் கண்ணீர் திரை மின்ன பார்த்தவள் “நா வாழ பிறந்திருக்கேன் அம்மம்மா. எங்கம்மா சொன்னது போல இந்த உலகை ஆளும் வல்லமையும் என் கையிலயே.. உலகை அடக்கும் இணையத்தின் வழி அத்தனை பேர் செவிக்கும் என் பேச்சு விருந்தாகணும். என் பேச்சால பலர் நல்ல வழிக்கு போகணும்.. அப்போ தான் எங்கம்மா சொன்னது பழிச்சதாகும்” எனக் கூறினாள்.

Exit mobile version