முள்ளும்-மலரும் பெண்ணாகடம் பா.பிரதாப்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 69 முள்ளும்-மலரும் பெண்ணாகடம் பா.பிரதாப்

நாகர் கோவில் !

திரையரங்கில் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.அது ஒரு ஹாலிவுட் ஹாரர் திரில்லர் மூவி என்பதாலும், ‘6’ மணி காட்சி என்பதாலும் திரையரங்கில் கூட்டம் அவ்வளவாக இல்லை.திரையரங்கின் பால்கனியில் அமர்ந்துக் கொண்டு ‘நந்திதா’வும்  ‘நறுமுகை’யும் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

நந்திதாவும் நறுமுகையும் சகோதரிகள்‌.நறுமுகை மூத்தவள்.நந்திதா இளையவள்.நந்திதாவும் நறுமுகையும் திட்டத்திட்ட ஒரே மாதிரி தோற்றம், உயரம்,எடை கொண்டவர்கள். அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசம் நிறம் மட்டுமே ! ஆம்.நறுமுகை சிவப்பு.நந்திதா மாநிறம்.அதனால் நந்திதாவுக்கு சற்று தாழ்வு மனப்பான்மை உண்டு‌.அதனால்,அவள் பெரும்பாலும் ‘நத்தைப போல’ தன் உணர்ச்சிகளை தனக்குள் சுருக்கிக் கொள்வாள்‌.

அவர்களின் பெற்றோரான கற்பகம்-செல்வம் ஆகியோர் நந்திதாவும் நறுமுகையும் சிறு வயதாக இருக்கும் போதே ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டனர்.அதனால் அன்று முதல் இன்று வரை நறுமுகையையும் நந்திதாவையும் அவர்களின் தாய்மாமனான போலீஸ்  இன்ஸ்பெக்டர் ‘ராஜ ரத்தினம்’ தான் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.ராஜ ரத்தினம் தன் அக்கா மகள்களை வளர்ப்பதற்காகவே திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

திரைப்படத்தை நந்திதா மட்டும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்‌.நறுமுகை திரைப்படத்தை பார்க்காமல் தன் கல்லூரி வகுப்பு தோழன் ‘மகிழன்’ என்பவனுடன் வாட்ஸப்பில் சேட் செய்துக் கொண்டிருந்தாள்‌‌.

நறுமுகை நந்திதாவை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே மகிழனுடன் சேட் செய்துக் கொண்டிருந்தாள்.

“நறுமுகை அப்படி என்னதான் அந்த ஃபோன்ல இருக்கோ எனக்கு தெரியல” என்று நந்திதா நறுமுகையின் செயலைக் கண்டு அவள் மேல் ஒரு பொய் கோபம் கொண்டாள்.

“அது ஒண்ணுமில்லடி…சும்மா வாட்ஸப்ல ஸ்டேட்ஸ் பார்த்துட்டு இருக்கேன்” என்று நறுமுகை சமாளித்தாள்‌‌.

“ஏய் ! நீ என்கூட படம் பார்க்க வந்தியா இல்ல ஃபோனை நோண்ட வந்தியா?” என்று நந்திதா மீண்டும் சீறினாள்.

“ஏன்டி நீ வேற…’பேய்’ படம்னாலே எனக்கு பயம்.அதுமட்டுமில்லா இது ஹாலிவுட் ஹாரர் திரில்லர் படம் வேற…ஏதோ உனக்காக தான் வந்தேன்” என்று நறுமுகை தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி அப்படியே ஒப்புவித்தாள்.

“ஓகோ ! உனக்கு விருப்பம் இல்லாமல் தான் என் கூட படம் பார்க்க வந்தியா?” என்று நந்திதா நறுமுகை மீது மெய் கோபம் கொண்டாள்.

“ஏய் ! நான் அப்படி சொல்லலடி.நான் சும்மா யதார்த்தமாக தான் சொன்னேன்.எதை சொன்னாலும் குத்தமமாக எடுத்துக்காதடி” என்று நறுமுகையும் பட்டாசு கணக்காக வெடித்தாள்.

திரையரங்கில் திரைப்படம் நிறைவடையும் வரை அவர்களுக்குள்ளும் ஒரு பனிப்போரே நடந்து முடிந்துவிட்டது. இல்லையில்லை,பனிப்போர் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

இருவரும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்களான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ மாதிரி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர்.

திரைப்படம நிறைவடைந்து விட்டது.

“ஏம்மா,அடுத்த ஷோவுக்கு டைம் ஆச்சு.ரெண்டு பேரும் கொஞ்சம் இடத்தை காலி பண்றீங்களா?” என்று திரையரங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறவும் தான் அவர்களுக்கு திரைப்படம் நிறைவடைந்ததே நினைவுக்கு வந்தது.

இருவரும் பல்லை நறநறவென கடித்துக் கொண்டு,திரையரங்கின் ஊழியர் முன் அசடு வழிந்த மாதிரி ஒரு போலி புன்னகை புரிந்து விட்டு திரையரங்கை விட்டு வெளியேறினர்.

இருவரும் ஒருவராக அவர்களின் நீல நிற ஸ்கூட்டரில் தங்கள் வீடு நோக்கி பறக்க ஆரம்பித்தனர்.

நறுமுகை ஸ்கூட்டரை தேரின் சாரதி ‘பார்த்த சாரதி’ போல தங்கள் இல்லத்தை நோக்கி செலுத்த பின் இருக்கையில் நந்திதா ‘பார்த்தன்’ போல ஜம்பமாக அமர்ந்திருந்தாள்.

இந்த காலக்கட்டத்தில் சக்கரங்களே கால்களாகி போனதால் பெரும்பாலோனோர் நடக்க மறந்து போய் சர்க்கரை வியாதியை சாபம் பெற்ற வரமாக வாங்கி வருகின்றனர்.

இதுவே, இந்த நவீன யுகத்தின் மிகப்பெரிய கசப்பான உண்மையாகும்.

இருவரும் இருபது நிமிட பயணத்தில் ‘கணேசன்’ நகரில் உள்ள தங்கள் இல்லத்தை அடைந்தனர்.

கணேசன் வீதி ஆள் அரவமற்று பேரமைதியுடன் காணப்பட்டது.வீதியில் அங்கங்கே இருந்த சில தெரு நாய்கள் நறுமுகையின் ஸ்கூட்டரைக் கண்டதும் வாலை குழைத்துக் கொண்டே அவளருகே வந்து நின்றன.

நறுமுகை தன் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து நாய்களுக்கு அமுது படைத்தாள்.அவைகளும் பிஸ்கட்டை விழுங்கி விட்டு அவளின் வீட்டின் வாயிலருகே தெருவோரமாக நந்தி மாதிரி அமர்ந்துக் கொண்டன.ஆனால், நந்திதாவோ ஒரு திரைப்படத்தைக் கூட தன்னால் முழுமையாக பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற விரக்தியுடன் ஒரு இயந்திரம் போல காட்சியளித்தாள்.

மணி இரவு பத்து பத்து ஆகியிருந்தது.

நறுமுகைக்கு பசி வயிற்றை கிள்ளியது.நந்திதாவுக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது,அவர்களின் தாய் மாமனான இன்ஸ்பெக்டர் ராஜ ரத்தினம் ஒரு வெள்ளை நிற முண்டா பனியனும்,நீல நிற கைலியும் அணிந்துக் கொண்டு ‘சைக்கோ கில்லர்கள்’ பற்றி கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய ‘மனிதனுக்குள் ஒரு மிருகம்’ என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தார்.அவர் முன் இருந்த மேஜை மீது வேறு சில புத்தகங்களும்,ஒரு டைரியும் குவியலாக கிடந்தன.

அது அந்த மேஜையில் ஒரு வரிசையில் இல்லாமல் கண்ணா ! பின்னா ! என்று இருந்தது.

இந்த டிஜிட்டல் யுகத்திலும் ஒருவர் புத்தகம் வாசிப்பாளராக இருந்தால் பெரும்பாலும் அவர் ஐம்பது அல்லது அறுபது வயதை கடந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி !

இந்த காலத்து பிள்ளைகள் எல்லாவற்றையும் கையடக்கத்தில் உள்ள கைப்பேசியிலே தெரிந்துக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றனர்.ஆனால், சமூக வலைதளங்களில் உலா வரும் பெரும்பாலான தகவல்கள் ஆதாரம் அற்றவை மற்றும் முழு தகவல்கள் இல்லாதவை என்பதே நிதர்சனமான கசப்பான உண்மை.

இதைப்போலவே சில மீடியாக்களும் ஒரு விஷயத்தைப் பற்றி தலையும் புரியாமல் காலும் புரியாமல் சமூக பொறுப்பின்றி சகட்டமேனிக்கு எதை எதையோ தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்புகின்றனர்.

அவை அத்தனையும்  உண்மை என்று நம்பும்  மக்கள் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.

இதை எல்லாம் என்னவென்று சொல்வது?காலத்தின் கட்டாயம் என்பதா?

புத்தகம் வாசிப்பு என்பது நம் கண் தசைகளுக்கும் மற்றும் கண் நரம்புகளுக்கும் நல்ல பயிற்சியாக இருந்து பார்வையை வளப்படுத்தும் என்று எழுத்தாளர் திரு.ராஜேஷ் குமார் கூட ஒரு தொலைக்காட்சி அலைவரிசை பேட்டியில்  கூறியுள்ளார்.

இதையெல்லாம் இக்கால இளவட்டங்கள் அவ்வளவு எளிதாக உணர்ந்து விடப் போவதும் இல்லை.

நந்திதாவும் நறுமுகையும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்கள் உள் நுழையவும் ராஜ ரத்தினம் இருவரையும் உற்று நோக்கினார்.

அவர் என்ன நினைக்கிறார் என்று யாராலும் கணிக்க முடியாது.ஆள் வாட்ட சாட்டமாக மதுரைக்காரர் மாதிரி சற்று கரடு முரடாகத்தான் தோற்றம் அளிப்பார்.ஒரு போலீஸ்காரர் அப்படி இருப்பதும் ஒரு நியாயமாகத்தான் தோன்றுகிறது.

“மாமா ! நீங்க சாப்டிங்காளா?” என்று நறுமுகை, ராஜ ரத்தினத்தை பார்த்து வினவினாள்‌.

அவர் தன் தொண்டையை அடி வயிற்றில் இருந்து கனைத்துக் கொண்டே அமரர் நடிகர் திரு.மேஜர் சுந்தர் ராஜன் மாதிரி,”நான் சாப்டேன்மா.உங்க ரெண்டு பேருக்கும் இட்லியும் பூண்டு சட்னியும் செஞ்சி ஹாட் பாக்ஸில் வச்சிருக்கேன்.நீங்க சாப்டுட்டு நேரத்துலே தூங்குங்க” என்று கூறினார்.

“உங்களுக்கு ஏன் மாமா கஷ்டம்‌?” என்று நந்திதா தன் பங்கிற்கு தன் மாமாவிடம் கேள்வி எழுப்பினாள்‌‌.

ராஜ ரத்தினம் நந்திதாவை புதிதாக பார்ப்பது மாதிரி ஊடுருவி ஒரு பார்வை பார்த்துவிட்டு,”இருக்கட்டும். எனக்கு இத்தனை வருஷமாக நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி  சமைச்சு போட்டீங்க.இன்னைக்கு ஒரு நாள்,ஒரு வேளை உங்களுக்காக நான் என் கையால சமைச்சதை எண்ணி ரொம்ப சந்தோஷப் போடுறேன்” என்று ஆனந்தம் பொங்க கூறினார்.

அவர் அப்படி கூறும் போது அவரை அறியாமலே அவர் கண்கள் பனித்தன.

“மாமா ! அம்மா-அப்பா இல்லாத எங்க ரெண்டு பேருக்கும் நீங்க தான் எல்லாமே” என்று நறுமுகை கூறினாள்‌.

“உங்களை காப்பாத்தறது என் கடமை.எனக்கு மட்டும் யாரும்மா இருக்காங்க.நீங்க ரெண்டு பெரும் தான் என் சொத்து” என்று ராஜ ரத்தினம் உருக்கமாக பேசினார்.

சோஃபாவில் அமர்ந்திருந்த ராஜ ரத்தினத்தின் முன் மண்டியிட்டு அவர் மடியில் தலைசாய்த்து நறுமுகை கண்ணீர் சிந்தினாள்‌‌.

நந்திதா அவர்கள் இருவரையும் கூர்ந்து கவனித்தாள்‌‌.

அவளுக்குள் ஒரு வெறுமை தோன்றியது.

“அம்மாடி ! நேரம் ஆச்சு போய் சாப்பிடுங்கம்மா” என்று கூறிவிட்டு ராஜ ரத்தினம், தன் மேஜை முன் இருந்த புத்தகங்களையும் டைரியையும் புரட்ட ஆரம்பித்தார்.

நந்திதாவும் நறுமுகையும் இரவு உணவை உண்டுவிட்டு அவரவர்களின் அறையில் உறங்கச் சென்றனர்.

நறுமுகை நித்திரையில் மூழ்கிப் போனாள்‌.

நந்திதா தனிமையில் இனிமையின்றி, வெறுமையோடு உறக்கமின்றி தவித்தாள்‌.அலுப்பின் காரணமாக பின்னர்,தன்னை மறந்த நிலையில் உறங்கவும் செய்தாள்.

நடுநிசி நேரம் !

ராஜ ரத்தினம் நந்திதாவின் அறைக்குள் நுழைந்தார்.அவர் நந்திதாவை ‘உச்சி முதல் பாதம்’ வரை பார்த்துவிட்டு,நந்திதாவின் கேசத்தினை தன் வலது கரத்தில் கோதிவிட்டு சில நிமிடங்கள் அங்கையே இருந்துவிட்டு பின்னர், தன் அறைக்கு சென்று உறங்க ஆரம்பித்தார்.

சுவர் கடிகாரம் நேரத்தை விழங்கிக் கொண்டிருந்தது.

திடீரென நறுமுகையின் அறைக் கதவை யாரோ ‘டக்…டக்…டக்’ என்று மூன்று முறை தட்டும் சப்தம் கேட்டது.

அறைக் கதவை தட்டும் சப்தம் கேட்டு ஆழ்ந்த துயிலில் இருந்த  எழுந்த நறுமுகை தன் செல்போனை எடுத்து நேரம் பார்த்தாள்.

மணி சரியாக ‘3’ என்று காட்டியது.

‘காஞ்சுரிங்’ என்ற ஹாலிவுட் ஹாரர் திரைப்படத்தில் ‘பேய்’ நள்ளிரவு நேரம் ‘3’ மணிக்கு தான் வந்து அந்த வீட்டில் இருப்பவர்களை அச்சமூட்டும்.அதைப் போல ஒரு பேய் தன்னை அச்சமூட்டுகிறதா? என்று நறுமுகை நினைத்து பயந்தாள்‌.

ஒருவேளை, தன் அறைக் கதவை தன் மாமாவோ அல்லது தன் தங்கையோ சட்டி இருப்பார்களோ என்ற ஐயமும் அவளுக்குள் எழாமல் இல்லை.

“மாமா…நந்திதா…யார் கதவை தட்டுனது?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் அறைக் கதவை மெதுவாக திறந்தாள்.

அவள் அறைக்கு வெளியே யாரும் காணப்படவில்லை. அவளுக்கு சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது.

அவள் தன்னை திடப்படுத்திக் கொண்டு தன் மாமா அறையையும்,தன் தங்கை அறையையும் திறந்து பார்த்தாள்‌.அவர்கள் இருவரும் தங்கள் அறையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்‌.

கதவு தட்டும் சப்தம் கேட்டது ஒருவேளை பிரமையாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டே நறுமுகை நினைத்துக் கொண்டு தன் அறை நோக்கி சென்றாள்‌.

அவள்,தன் அறைக்குள் சென்று அறைக்கதவை  சாத்தியதும் அவள் அறைக்கு வெளியே யாரோ எதையோ முணுமுணுக்கும் சப்தம் கேட்டது.அவள் மீண்டும் அறைக் கதவை திறந்து பார்த்தாள்.ஆனால்,வெளியே யாரும் காணவில்லை.

நறுமுகைக்கு பய உணர்வு ‘பூரானைப் போல’ அவள் உடலெங்கும் ஊர ஆரம்பித்து.பின்னர் அவள் அறையை தாழிட்டுக் கொண்டு உறங்க முயற்சி செய்தாள்‌.ஆனால், அவளால் உறங்க தான் முடியவில்லை.

இரவு கரைந்தது.

அதிகாலை நேரம் !

நறுமுகை வழக்கம் போல காலையிலே எழுந்து ‌தன் தினசரி கடமைகளை முடித்துவிட்டு எதிர் வீட்டில் ‘நாட்டு மாட்டு’ பால் வாங்கி காபி போட்டுவிட்டு தன் மாமாவை எழுப்ப அவர்கள் அறைக்கு சென்றாள்‌.

ராஜ ரத்தினம் தன் பணி நிமித்தம் காரணமாக அதிகாலையிலே காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டார் என்பதை அவரின் அறைக்கு சென்று பார்த்த போது தான் நறுமுகையும் உணர்ந்துக் கொண்டாள்.

அதனை அவரின் அலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசி நறுமுகை உறுதியும் செய்துக் கொண்டாள்.

பின்னர், வழக்கம் போல நறுமுகையும் நந்திதாவும் தாங்கள் பயிலும் தனியார் கல்லூரிக்கு சென்றனர்.

கல்லூரி வளாகத்தில் வழக்கம் போல வகுப்புகள் நடந்தேறியது.

மதிய உணவு இடைவெளியில் கல்லூரி வளாகத்தில் உள்ள வேப்ப மரத்திற்கு அடியில் நந்திதாவும் நறுமுகையும் அமர்ந்து தங்கள் மதிய உணவான வெஜிடபிள் பிரியாணியை சுவைத்துக் கொண்டிருந்தனர்.

வெஜிடபிள் பிரியாணி நந்திதாவின் கைவண்ணத்தில் உருவானது.

நந்திதாவின் முக்கியமான பொழுதுபோக்குகள் புத்தக வாசிப்பு,சமையல் செய்வது,டைரி எழுதுவது மற்றும் தனிமையில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது.

நந்திதாவும் நறுமுகையும் உணவு உண்டுக் கொண்டிருக்கையில் அங்கே மின்னல் வேகத்தில் ‘மகிழன்’ வந்தான்.

மகிழனை பார்த்ததும் நந்திதாவும் நறுமுகையும் மகிழ்ச்சி அடைந்தாள்‌.

நந்திதாவை பார்த்து ஒரு “ஹாய் !” மட்டும் கூறிவிட்டு, நறுமுகையிடம் மகிழ்நன் மிக இயல்பாக பேச ஆரம்பித்தான்‌.

நறுமுகையின் லஞ்ச் பாக்ஸில் இருந்த வெஜிடபிள் ரைஸை மகிழன் உரிமையோடு எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

அந்த காட்சியைக் கண்ட நந்திதாவின் வயிற்றில் அமிலத்தை ஊற்றியது போல இருந்தது‌.

அவள் கூனி குறுகி போனாள்.தான் அழகாக இல்லாததால் தான் மகிழன் தன்னிடம் பேச மறுக்கிறான் என்று எண்ணி எண்ணி வருந்தினாள்.

“நறு…உன்கிட்ட தனியா பேசணும்”  என்று மகிழன் நறுமுகையை தனியாக பேச அழைத்தான்.

நறுமுகையும் அவனுடன் சென்றாள்‌.

இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்‌.

அந்த காட்சியைக் கண்ட நந்திதாவுக்கு ரத்தக் கண்ணீரே வருவது போல இருந்தது.கோபம் கோபமாக வந்தது.

இருவரும் பேசி முடித்ததும் மகிழன் நந்திதாவிற்கு டாட்டா காட்டி விட்டு தன் வழியில் சென்றான்.

அங்கே மெளனம் மட்டுமே பேசியது.

சுமார் அரை நேரத்திற்கு பிறகு நந்திதா நறுமுகையிடம் பேச ஆரம்பித்தாள்.

“நறுமுகை, எனக்கு மனசு சரியில்லடி ஒரு சேஞ்சுக்கு ‘லெமூர் பீச்’ போயிட்டு வரலாமா?”

“என்னடி திடீர்னு?”

“ஒண்ணுமில்லடி பீச்சுக்கு போயிட்டு வந்தா மனசுக்கும் உடம்புக்கும் ஒரு ரீ ஃப்ரெஷ் மெண்ட் கிடைக்குமுன்னு தோணுது.”

“சரிடி போகலாம்.மாமாவுக்கு ஒரு கால் பண்ணி சொல்லிடுறேன்‌.”

“ம்” என்றாள் நந்திதா.

சரியாக சிக்னல் கிடைக்காததால் கால் போகவில்லை.எனவே,ராஜ ரத்தினத்தின் செல்ஃபோனுக்கு தாங்கள் லெமூர் பீச்சுக்கு செல்லும் தகவலை குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு பீச்சுக்கு ஸ்கூட்டியில் நந்திதாவுடன் நறுமுகை பறந்தாள்.

லெமூர் பீச் !

லெமூர் பீச்சை ஒரு ‘குட்டி மாலத்தீவு’ என்று செல்லமாக அழைப்பது நாக கோயில் வாசிகளின் வழக்கம்.

நாகர் கோவிலில் இருந்து லெமூர் பீச் பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது.

கணபதிபுரத்தின் இருபக்கமும்  தென்னந்தோப்பு சூழ்ந்த வழியில் பயணித்தால் அதன் இறுதியில் லெமூர் பீச்சை அடையலாம்.

பயணத்தின் வழி நெடுகிலும் நந்திதா இறுக்கமாகவே காணப்பட்டாள்.

அவர்கள் லெமூர் பீச்சை அடையும் போது மணி மாலை நேரம் நான்கு ஆகியிருந்தது.

பொதுவாக லெமூர் பீச்சில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கூட்டம் சற்று அதிகாரமாக இருக்கும்.மற்ற நாட்களில் பெரும்பாலும் கூட்டம் இராது.

அவர்கள் பீச்சுக்குள் நுழையும் போது விரல் விட்டு எண்ணும் வகையில் ஒரு சில நபர்களே காணப்பட்டனர்.

அதில் அதிகப்படியானோர் காதலர்கள்.

அவர்களை பார்க்கும் போது நந்திதாவுக்கு மகிழன் நினைவுகள் எழுந்தன.அவள் தன்னை அறியாமல் கண்ணீர் சிந்தினாள்.தான் அழகாக இல்லை.தன் மேல் அன்பு காட்ட யாருமில்லை.தன்னிடம் யாரும் உண்மையாக இருப்பதில்லை என்று அவள் என்னென்னவோ எண்ணிக்கொண்டாள்.

“ஏய் லூசு ! ஏன்டி உம்மன்னு இருக்க?உனக்காக தான் இங்க வந்தேன்” என்று நறுமுகை உரிமையோடு பேசினாள்.

“நறுமுகை நீ தான் ரொம்ப அதிஷ்டசாலி.சிவப்பாக அழகாக இருக்க.நம்ம மாமாக்கூட உன் மேல தான் அதிக அன்பும் அக்கறையும் செலுத்துறார்.நம்ம காலேஜ்ல படிக்குற மகிழனும் உன்கிட்ட தான் அன்பாக பழகுறான்” என்று தன் உள்ளத்தில் உள்ளதை கூறினாள்.

“ஹேய் ! அப்படியெல்லாம் நினைக்காத.உனக்காக நான் இருக்கேன்” என்றாள் நறுமுகை.

இருவரும் சிறிது நேரம் கடல் அலைகளையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

மணி ஐந்தே முக்கால் ஆகிப்போனது.

“நந்திதா வீட்டுக்கு போகலாமா?”

“ஏய் ! எனக்கு ஒரு ஆசைடி நீ நிறைவேத்துவியா?” என்று நந்திதா நறுமுகையிடம் கண்ணீர் பொங்க கேட்டாள்.

“ஏய் ! ஏன்டி அழற உனக்காக எது வேணும்னாலும் செய்வேன்.என்னன்னு சொல்லுடி” என்றாள்.

“எனக்கு இந்த கடல்ல நம்ம ரெண்டு பேரும் கொஞ்ச தூரம் படகுல போகனும்னு ஆசையாக இருக்குடி” என்றாள் நந்திதா.

முதலில் சற்று தயங்கினாலும் நந்திதாவின் மனதை தேற்றுவதற்காக நறுமுகை ஒப்புக் கொண்டாள்‌.

அவர்கள் இருவரும் அந்த கடற்கரையில் சற்று தூரம் தள்ளி இருந்த ஒரு படகுக்காரரிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு ஒரு படகை எடுத்துக் கொண்டு பயணிக்க தொடங்கினர்.

படகு கடலில் செல்ல ஆரம்பித்தது.

படகிற்கு நந்திதா தான் துடுப்பு போட்டாள்.

கடலுக்குள் செல்ல செல்ல நந்திதாவின் முகமும் பேச்சும் செயலும் மாற ஆரம்பித்தது‌.

“ஏன்டி கழுதை ! உன்னை ஏன் இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்தேன் தெரியுமா? உன் கதையை முடிக்க தாண்டி”  என்று நந்திதா கர்ஜித்தாள்.

“நீ…நீ…என்ன சொல்றடி?” என்று நறுமுகை அதிர்ச்சி கலந்த பயத்தோடு வினா எழுப்பினாள்.

“ஆமாண்டி நாயே ! நம்ம அப்பா-அம்மா இறந்ததுக்கு அப்புறம் நம்ம மாமா தான் நம்மல வளர்த்தாரு.அவர் என்னை விட உன் மேல அதிக அன்பும் அக்கறையும் காட்டுறாரு.நான் ஆசை ஆசையாகு விரும்புற மகிழன் கூட உன் ஆசை வலையில விழுந்துட்டான்.இனி இந்த உலகத்துல எனக்கு எந்த சந்தோஷமும் இல்ல.நீ சாகுறதுல தான் சந்தோஷம்.நீ கடல்ல இருந்து தவறி விழுந்து இறந்துட்டன்னா இந்த உலகம் நம்பாமல் இருக்க போறது இல்லை.சாவுடி” என்று கூறிக்கொண்டே நறுமுகையை நந்திதா படகில் இருந்து கீழே தள்ள முயற்சித்தாள்‌. இருவருக்குள்ளும் போராட்டம்.

நறுமுகையின் குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு ராஜ ரத்தினம் நறுமுகை அலைபேசி எண்ணிற்கு முயற்சித்தார் இணைப்பு கிடைக்கவில்லை. நந்திதாவிற்கும் முயற்சித்தார்.ஆனால்,அவள்தன் ஃபோனை அட்டண்ட பண்ணவில்லை.பீதி அடைந்த ராஜ ரத்தினம் மின்னல் வேகத்தில் லெமூர் பீச்சிற்கு தன் ஜீப்பில் தனி ஆளாக வந்திறங்கினார்.

லெமூர் பீச் முழுவதும் தேடிவிட்டு,பின்னர் பீச்சின் கரையில் இருந்த படகோட்டியிடம்  விசாரித்தார்.

“தம்பி ! இங்க யாராவது ரெண்டு பொண்ணுங்களை பார்த்தியா?” என்று மிரட்டும் தோரணையில் கேட்டார்.

“ஆ…ஆ…ஆமாங்க”  என்று பயத்துடன் படகோட்டி இளைஞன்,நறுமுகை மற்றும் நந்திதா கடலுக்குள் சென்றுக் கொண்டிருக்கும் படகை சுட்டி காண்பித்தான்.

நந்திதாவிற்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது.அவளின் டைரியை நேற்று இரவு வாசித்த ராஜ ரத்தினம் அவளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அவள் ஒரு மன நோயாளி ஆகி இருப்பதை உணர்ந்துக் கொண்டார்‌.நேற்று இரவுக்கூட நந்திதாவின் அறைக்குள் சென்று  அவளின் இந்த நிலையை அறிந்து அவர் வருத்தப்பட்டு அவள் தலையை கோதினார்.

இன்று காலை, முதல் வேலையாக நந்திதா எழுதிய டைரியுடன் ‘சைக்கார்ட்டிஸ்ட’ மாதவன் நாயர் அவர்களை சந்தித்துவிட்டு;நந்திதா நோய் பற்றி கலந்து ஆலோசித்து விட்டு தான் ராஜ ரத்தினம் தன் அலுவலகம் சென்றார்.

டாக்டரும் நந்திதாவை விரைவில் தன் கிளினிக்கிற்கு அழைத்து வருமாறு ராஜ ரத்தினத்திடம் அறிவுறுத்தியிருந்தார்.

அதற்குள் விஷயம் இப்படி விபரீதமாக மாறும் என்று அவர் கனவிலும் நினைக்க வில்லை.

நறுமுகையையும் நந்திதாவையும் காப்பாற்றும் எண்ணத்தோடு ராஜ ரத்தினம் நீச்சல் அடித்தே கடலின் உள் சென்றார்.

அவர் படகை நெருங்கினார்‌.

ராஜ ரத்தினத்தை பார்த்ததும்,” மாமா ! என்னை காப்பாத்துங்க” என்று நறுமுகை அழுது புலம்பினாள்.

ராஜ ரத்தினத்தை பார்த்ததும் நந்திதாவின் ஆவேசம் மேலோங்கியது.

“மாமா ! நீங்க ஏன் மேல தான் உங்க முழு அன்பையும் அக்கறையையும் காட்டணும்.அதுக்கு இவ தடையாக இருக்கக் கூடாது.இவளை இதோ உடனே குளோஸ் பண்ணிடுறேன்.நீங்க இந்த விஷயத்துல குறுக்க வராதீங்க” என்று எச்சரித்தாள்‌‌.

ராஜ ரத்தினம் படகின் ஒரு பகுதியை தன் கைகளால் பற்றிக் கொண்டு படகில் ஏற முயற்சித்தார்‌.

கோபத்தின் உச்சிக்கே சென்ற நந்திதா படகில் கிடந்த ஒரு உருட்டுக்கட்டையை எடுத்து தன் மாமா ராஜ ரத்தினத்தின் தலையில் ‘நச்’சென்று அடித்தாள்.

அவர் “ஆ…” என்று வலியால் துடித்தார்.

அப்போது நறுமுகை நந்திதாவை படகில் இருந்து கீழே தள்ளி விட்டாள்.

நிலை தடுமாறிய நந்திதா படகில் இருந்து தவறி கடலில் விழுந்தாள்.

அவள் நிறைய கடல் தண்ணீர் குடித்ததில் அவள் மூச்சு முட்டி மூர்ச்சையாகி போனாள்.

ராஜ ரத்தினம் தன் தலையில் ரத்தம் கசிந்த போதும் நந்திதாவை காப்பாற்றி படகிற்குள் தூக்கி போட்டார்.அவரும் படகில் ஏறிக்கொண்டார்.பின்னர், மூவரும் கரையை அடைந்தனர்‌.

மூன்று மாதங்களுக்கு பிறகு !

சைக்கார்டிஸ்ட் மாதன் நாயர் சிகிச்சையாலும்,நறுமுகை மற்றும் ராஜ ரத்தினத்தின் அன்பாலும் நந்திதா பூரண குணமடைந்தாள்‌‌.

மகிழன் நந்திதாவை தான் விரும்புகிறான்‌ என்பதையும் அதனை அவளிடம் சொல்ல தயங்கிக் கொண்டிருந்தான் என்ற உண்மையையும் நறுமுகை நந்திதாவிடம் கூறினாள்.

ஆனந்தக் கண்ணீர் பொங்க நந்திதா நறுமுகையை கட்டி அணைத்துக் கொண்டாள்.

நறுமுகை புன்னகை புரிந்தாள்‌.

-சுபம்-

Exit mobile version