பெருந்திணை – ந. செந்தில்குமார்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 71 பெருந்திணை – ந. செந்தில்குமார்

என் பெயர் மகேஷ். மூன்று வருடம் துபாயில் வேலை செய்துவிட்டு இதோ இன்று தான், சொந்த ஊரில் வந்து இறங்கியுள்ளேன். கடந்தமுறை வந்தபோது இருந்ததைவிட பெரும் மாற்றங்களைக் கண்டிருந்தது நான் பிறந்து வளர்ந்த இந்தக் கிராமம். எனக்காகவே இவ்வளவு நாள் காத்து இருந்தது போல என் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இருந்த புளிய மரங்கள் பெருங்காற்றை வீச மார்ச் மாதத்தின் இறுதியில் நன்கு காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்த புளியம்பழங்கள் படபடவெனக் கீழே விழுந்தன.

மரத்தின் கீழே அமர்ந்து கொண்டிருந்த கண்ணம்மா பாட்டி புளியம்பழங்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தாள். கிராமத்தைச் சுற்றி இருந்த உயர்ந்த தென்னை மரங்கள் என்னை வரவேற்கும் விதமாக உஸ் உஸ் என்று சத்தமிட்டன. அந்நிய மண்ணில் மூன்று ஆண்டுகள் இருந்த எனக்குச் சொந்தமண்ணில் வீசிய சுதந்திரக்காற்று புத்துணர்ச்சியைத் தந்தது. கீழே விழுந்த புளியம்பழம் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு நான் படித்த தொடக்கப்பள்ளியின் வழியே நடக்கத் தயாரானேன்.

அன்று, சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை. அதனால், பள்ளியின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. என் சிறுவயதில் டிங், டிங் யாரது?   எனக்கேட்டு நான் துள்ளிக்குதித்து விளையாடிய பள்ளிக்கூடங்களின்  படிக்கட்டுக்கள் என்னை அமரச் சொல்லிக் கட்டாயப்படுத்தின. கையில் கொண்டு வந்திருந்த சூட்கேஸைக் கீழ வைத்துவிட்டு, சுற்றிலும், முற்றிலும் பார்த்துவிட்டு ஒரு முறை படிக்கட்டில் குதித்து விளையாடினேன். யாரோ வரும் சத்தம் கேட்கவே மீண்டும் சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நான் படித்த நூலகம், நின்று பொருள் வாங்கிய மளிகைக்கடை, சீமெண்ணெய் வாங்கிய நியாயவிலைக் கடை என ஒவ்வொன்றும் என்னிடம் ஏதோ சொல்ல விரும்பியது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.

நடந்து செல்லும் வழியில் ஒரேயொரு வீடு மட்டும் இடிந்து குட்டிச் சுவராக  இருந்தது. அந்த வீடு இருந்த இடத்தில் புற்கள் முளைக்க ஆரம்பித்து இருந்தன. இந்த வீடு சாந்தியின் வீடு என்றால் இருபது வருடங்களுக்கு முன்பு எல்லாருக்கும் தெரியும். இடிந்துகிடக்கும் வீடு பல பழைய நினைவுகளை என் மனதில் அசைபோட ஆரம்பித்தது. இந்த வீட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டது சரிதான் என்று என் மனம் அதற்குப் பதில் சொன்னது.  

இந்த வீடுதான், இதோ இதே வீடுதான் அந்தக் கேரளத்துப் பைங்கிளியைச் சிறைபிடித்து வைத்து இருந்தது. இதே வீடுதான் அவளின் கண்ணீரால் தன் தரையைச் சுத்தம் செய்துகொண்டது. இடிந்திருக்கும் இதே சுவர்கள்தான் அவள் பட்டினியோடு இருந்ததைப் பார்த்துச் சாந்தமாக இருந்தது. நல்லவேளை இந்த வீட்டில் சிறைப்பட்டு இருந்த அந்தப் பெண்பறவை வயிற்றில் இருந்த குஞ்சைக்  கூட்டிக்கொண்டு இந்த சிறைச்சாலையை விட்டுப் பறந்துவிட்டது.

அவளால் வேறு என்ன செய்திருக்க முடியும்? எதை வேடந்தாங்கல் சரணாலயமாக நினைத்துத் தன் ஜோடியுடன் சந்தோசமாகக் குடிபுகுந்தாளோ? எது ஒன்றை வசந்தமாளிகையாக நினைத்து மஞ்சள், குங்குமத்துடன் சந்தோசமாக அடியெடுத்து வைத்தாளோ? அதுவே பேய் வீடாக மாறி அச்சுறுத்தியபொழுது அவள் வேறு என்ன தான் செய்திருக்க முடியும்? வேறு வழியே இல்லாமல் தன் குஞ்சுடன் வெளியே சென்றுவிட்டாள்.

எனக்கு என்னவோ நேற்று தான் அந்தப் பறவை இந்த வீட்டிற்குள் வந்தததாக நியாபகம். ஆனால், அது நடந்து இன்றோடு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகிவிட்டது. அந்தப் பெண் பறவை எங்கள் ஊரிற்கு வந்த மூன்றாம் நாள் என் காலைப்பொழுது அப்படித்தான் விடிந்தது.

நான் சிறுவனாக இருந்தபோதெல்லாம் தினமும் இரண்டு அல்லது மூன்று பெண்கள்  விசாலமாக இருக்கும் எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, என் பாட்டியுடன் ஊரின் கதைகளைப்  பேசுவது வழக்கம். ஆனால், அன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு ஆறு, ஏழு பேர் பேசும் சத்தம் என் செவிக்குள் உட்புகுந்து பாடாய்ப்படுத்த அதற்குமேல் தூங்கமுடியாமல், கண்விழித்துப் படுக்கையில் படுத்தபடி நடக்கும் உரையாடலைக் கேட்கத் தொடங்கினேன்.

“எல்லாம் கலிகாலம். இப்படியெல்லாமா நடக்கும்?” இது என் பாட்டியின் குரல்.

“ஆமா, மாரிக்கா அப்படியேதான் நடக்குது. நானும் யார் சொல்லியும் நம்பல. ஆனால், நேத்து நானே நேர்ல போய்ப்பார்த்தேன். சாந்தி அக்கா வீட்டு முன்னாடி ரெண்டும் உட்கார்ந்துட்டு இருந்துதுங்க. என்ன சிரிப்புங்குற? என்ன ஆட்டமுங்குற? ஒருத்தரோட இன்னொருத்தர் ஒட்டி ஒரசிட்டு, கருமம் கருமம். பாக்கவே கண்றாவியா இருந்துச்சு.” இது பக்கத்து வீட்டு அக்கா சிவகாமியின் குரல்.

“ஏன் சிவகாமி?, அவளுக்கும், அவனுக்கும் எத்தன வயசு வித்யாசம் இருக்கும்?” இது பவித்ராவின் குரல்.

“அவளுக்கு இருபது, இருபத்திரண்டு வயசுதான் இருக்கும். ஆனா, அவனுக்கு அம்பது வயசுக்கு மேல இருக்கும்”

“அடக்கடவுளே இது என்ன கொடுமையா இருக்கு? தன் பொண்ணு வயசுல  இருக்குற ஒரு பொண்ணு கூட அவன் எப்படி? தன்னோட அப்பா மாறி இருக்குற ஒரு ஆம்பள கூட அவ எப்படி? ச்சீசீசீ… நினைச்சுப் பார்க்கவே அருவருப்பா இருக்கு” என்றாள் பவித்ரா.

“ஏண்டி சிவகாமி, எந்த வீட்டுல அவங்க தங்கியிருக்காங்கனு சொன்ன?” என்றாள் என் பாட்டி.

“அதான் கா, நம்ம டைலர் சாந்தி இருந்தாலே அதே வீடுதான்” என்றாள் சிவகாமி.

“ஆத்தா, டீ” என்று என் சத்தம் கேட்க,

 “எந்துருச்சுட்டான் டீ எங்க வீட்டுச் சீமபுத்திரன். சரி, சாயந்தரம் பேசுவோம். நான் போயி சமைக்கிற வேலையைப் பார்க்குறேன். மணி எட்டரை ஆகுறதுக்குள்ள, சாப்பாடு இல்லாட்டி அவ்ளோதான். என் வீட்டு மானம் கப்பலேறிரும்.” என்று சொல்லிக்கொண்டு எழுந்தாள் என் பாட்டி.

நான் எழுந்து சாலைக்குச் சென்று, வாய் கொப்பளித்துவிட்டு வந்தேன். “ஆத்தா, என்னாச்சு? ஏதோ குசுகுசுன்னு பேசிட்டு இருந்தீங்க”.

“அதொன்னும் இல்லடா, நம்ம சாந்திக்கா இருந்தாங்கல்ல, அந்த வீட்டுக்கு யாரோ புதுசாய்க் குடிவந்துருக்காங்களாம். அதைப் பத்தித்தான் பேசிட்டு இருந்தோம்”

“ஏதோ, அப்பா, பொண்ணுன்னு காதுல விழுந்துச்சே?”

“வயசுக்குத் தகுந்த பேச்சு மட்டும் பேசு. கண்டதையும் தெரிஞ்சுக்க ஆசைப்படாத. இந்த, டீயக் குடுச்சுட்டு, வெத்தலை, பாக்கு, பொயிலை   வாங்கிட்டு வா. அதுவும் பக்கத்துல இருக்குனு இலட்சுமியின் கடைக்குப் போகாத. பாத்து ரோடு தாண்டி ரவி கடைக்குப் போயிட்டு வா.” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள் பாட்டி.

அரைகுறையாகத் தெரிந்த ஒரு விஷயத்தை நோண்டிப்பார்த்து ஆராய்வதில் அப்பொழுதெல்லாம் என் மனம் அலைபாயும். அதையே தான் இந்த விஷயத்திலும் என் மனம் நினைத்தது. குறுக்கு வழியில் கடைக்குப் போகாமல், சாந்தி அக்காவின் வீடு வழியாகச் சென்றேன். அங்கே அந்த வீட்டின் வாசலில் பெரிய கோலம் போடப்பட்டு இருந்தது. நான் அந்த வீட்டைக் கடக்கவும், ஒரு இளம்வயது அக்கா அந்த வீட்டின் உள்ளிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. நடுத்தர உயரத்தில், பெரிய பெரிய கண்களுடன், அளவான உடம்புடன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தாள்.

என்னால் அதற்குமேல் நிற்க முடியாமல் ஓட்டம் பிடித்தேன். பின் பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் அந்த வீட்டின் வழியே நடக்க ஆரம்பித்தேன். சாணியில் முழுகப்பட்ட வெற்று வாசலில் அவள் போடும் கோலம் ஒவ்வொரு நாளும் நிறைந்து இருக்கும்.

ஒரு வாரம் கழித்து மாலை நேரத்தில் பள்ளியை விட்டு வீட்டிற்கு வரும்பொழுது அந்த அக்காவுடன் வெளியே உட்கார்ந்து கொண்டு இருந்த ஒரு மாமாவைப் பார்த்தேன். அப்பொழுதுதான் ஒரு வாரத்திற்குமுன் எங்கள் வீட்டில் நடந்த பேச்சின் அர்த்தம் சற்றுப் புரிய ஆரம்பித்து இருந்தது. உண்மையில் அந்த மாமா, அந்த அக்காவிற்கு ஒரு அப்பாவைப்போல் தான் இருந்தார். ஆச்சரியத்தில் அவர்களை நான் பார்த்துக்கொண்டே சென்று கல் தடுக்கிக் கீழே விழுந்தேன்.

“மோனே பாத்து” என்று மலையாளம் கலந்த குரலில் அந்த அக்கா சொல்ல, பயத்தில் நான் பிடித்த ஓட்டம் அன்று என் வீடு சென்றுதான் நின்றது.

அதன் பிறகு அந்த வீட்டின் வழியே நடக்க எனக்கு பயமாக இருந்தது. செல்லும் வழியை மாற்றினேன். ஒரு ஐந்து மாதம் கழித்து, மாலை நேரம் பள்ளி முடிந்து நான் வீட்டிற்குச் செல்லும்போது எங்கள் வீட்டின் திண்ணை நான்கு அக்காக்களால் நிரம்பி இருந்தது.

“அடக்கடவுளே, அப்படியா? கேட்கவே கஷ்டமா இருக்கு?” இது என் பாட்டி.

“ம்ம்… ஆமாக்கா” இது சிவகாமி.

“என்ன பாவம்? அப்பா, அம்மாவுக்குத் தெரியாம ஓடி வந்தப்போ, கைகோத்துச் சிரிச்சப்போ எல்லாம் நல்லா இருந்துச்சோ? உப்பத் தின்ன நாயி தண்ணியக்குடுச்சுத்தான் ஆகணும்.” இது பவித்ரா.

“அப்படியெல்லாம் சொல்லாத பவி. அவளுக்கு என்ன அப்பக் கெட்ட நேரமோ? வயசானவனுக்குக் கழுத்த நீட்டிட்டா? இது என் பாட்டி.

“ஆமா, மாசமா வேற இருக்கானும் சொல்றீங்க. வீட்டை விட்டும் வெளிய வரதில்லைன்னும் சொல்றீங்க?  அப்போ சோத்துக்கு என்ன பண்றாலாமா?”

“என்ன பண்றாளோ? என்ன கெரகமோ? கைல இருக்குற கொஞ்சக் காசுல வெறும் தேங்காயை மட்டும் சாப்டுறாலாமா?” இது சிவகாமி.

“ஐயோ பாவம். வயித்துப் புள்ளத்தாச்சி. உள்ள அந்தக் கொழந்த என்ன பாடு படுதோ?” இது என் பாட்டி.

என்னால், அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை. பள்ளிப்பையைத் திண்ணையில் வைத்துக்கொண்டு சாந்தி அக்காவின் வீட்டினருகே ஓடினேன். ஐந்து மாதத்திற்கு முன்னால் இருந்த கலையை அந்த வீட்டின் வாசல் இழந்து இருந்தது. அந்த வீட்டின் வாசல் சாணியால் முழுகப்படவில்லை. ஐந்து மாதத்திற்கு முன்னால் இருந்த பெரிய இரங்கோலிக்கோலத்தை அந்த வீட்டின் வாசல் இழந்து இருந்தது.

வீடு மட்டுமா? வாசல் மட்டுமா? அந்த வீட்டின் திண்ணையின் தூணில் சாய்ந்தபடி கலையிழந்து அமர்ந்திருந்தாள்  அவள்.

“அக்கா”

“பர… அச்சோ சொல்லு மோனே. எந்த வேணும்?”

“சாப்டீங்களா அக்கா?”

“ம்ம்… மதியமே கழிச்சு”

“தேங்காயா அக்கா?”

“எவரு பரஞ்சு.  சோறு பொங்கிச் சாப்ட்டு.”

“பொய் சொல்லாதீங்க அக்கா. எல்லாரும் பேசிக்கறாங்க?”

“என்னன்னு? சித்த தெளிவாப் பர”

“அந்த மாமா எங்க அக்கா?”

“மாமா ட்ரிசூர் போயி. அடுத்த வாரம் வருமென்று பரஞ்சு”

“பொய் சொல்லாதீங்க அக்கா. அந்த மாமா உங்கள விட்டுட்டுப் போய்ட்டாருன்னு பேசிக்கறாங்க? அப்பறோம், நீங்க தினமும் தேங்காய் சாப்பிடுறீங்களாம். உங்க வயித்துல இருக்குற பாப்பா பாவமாம்”

முட்டிக்கொண்டு வந்த அழுகையை அவள் போட்டிருந்த சுடிதாரின் துப்பட்டாக்கள் சுத்தம் செய்தன. 

“ஆமா, அக்கா உங்க பேரு என்ன?”

“பார்வதி”

“நல்ல பேரு அக்கா”

அவள் சிரித்தாள். கண்ணில் ஒட்டிக்கொண்டிருந்த ஒருசில கண்ணீர்த்துளிகள் அவளின் கன்னத்தைத் தாண்டி கழுத்தை நோக்கிப் படை எடுத்தன.

 “இந்தாங்க அக்கா முறுக்கு.”

“நீ சாப்டு. எனக்கு வீட்டுக்குள் இருக்கு?”

“பிடிங்க அக்கா. நைட்டு, ஆத்தா சோறு பொங்கும். நான் கொண்டு வர உங்களுக்கு.”

“அதெல்லாம் வேணாம்…..”

அவள் சொல்லி முடிப்பதற்குள் என் கால்கள் எட்டடிப் பாய்ச்சலில் வீட்டை நோக்கிப் படை எடுத்தது.

“ஆத்தா, ஆத்தா..”

“சொல்லுடா”

“நான் சாந்திக்கா……”

“ம்ம்ம் சொல்லு சாந்திக்கா?”

நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தேன்.

“பாவம் ஆத்தா, நாம நைட்டு சோறு செஞ்சா ஏதாச்சும் கொடுப்பமா?”

“ஏண்டா, உங்க அம்மா வேலைக்குப் போயிக் கொடுக்கறது உனக்கே பத்தல. இதுல பார்வதி, பூர்வதினு”

“ஆத்தா, பாவம்த்தா. நான் வேணும்னா, கம்மியா சாப்ட்டுக்குறேன்.”

“சரி, இன்னைக்கு ஒருநாள் கொடுக்றேன். பத்தரமா, வீட்டுக்குத் தூக்குப் போசி வந்தரனும்.”

“சரித்தா”

அன்று நான் உணவு கொண்டு சென்று கொடுத்தபோது, முதலில் வேண்டாம் என்றவள், பிறகு அள்ளித்தின்னும்  வேகத்தில் பசியெனும் கொடும்பிணி என் கண்ணுக்குத் தெரிந்தது. அதன் பிறகு எப்பொழுதெல்லாம் கையில் தின்பண்டம் கிடைக்குமோ கொண்டு சென்று கொடுப்பேன்.

அவளின் நிலை அறிந்து நிறைய உள்ளூர் மக்கள் உணவு கொடுத்து உதவினர். கரு வளர, வளர பலூன் போன்று அவளின் வயிறு முன்னே நீட்டியது. அதற்குள், முழு ஆண்டுப் பரீட்சை லீவு விட ஊருக்குக் கிளம்பினேன். விடுமுறை முடிந்து ஊருக்கு வருகையில் அவள் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது.

“ஆத்தா, பார்வதிய வீட்டுல காணோம். அந்த வீடு பூட்டிருக்கே.”

“ம்ம்.. அவளோட அப்பா, அம்மா வந்து அவளக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க”

“ஏத்தா”

“டேய், அவ இருக்குற இடம் கேரளால இருக்குற அவங்க அப்பா, அம்மாக்கு பத்து நாளுக்கு முன்னாடிதான் தெரிஞ்சுது போல.”

“பார்வதி எப்போ வருவாங்க?”

“பாவம்டா, நம்பி வந்த கெழட்டுப்பையன் கைவிட்டுட்டான். மொழி தெரியாத ஊருல நிறைமாசக் கருவ வயித்துல வெச்சுட்டு ஒரு வயசுப்பொண்ணு எப்படி இருப்பா. இனி அவ வரமாட்டா”.

“சரித்தா” என்று சொல்லிவிட்டு எழுந்தேன்.

அதன்பிறகு சில நாட்கள் அந்த வீட்டின் வழியே நடக்கும்பொழுதெல்லாம்,  பார்வதியின் முகம் எனக்கு நியாபகம் வரும். பிறகு காலப்போக்கில் மறந்துவிட்டது.

“டேய் எப்போடா துபாய்ல இருந்து வந்த? ஏண்டா, இங்கயே நின்னுட்ட?” என்று என் நண்பன் விக்னேஷ் எழுப்பச் சற்று நினைவுக்கு வந்தேன்.

“இப்போதான்டா வரேன். ஆமா, நீ எப்படிடா இருக்க?”

“நான் நல்லா இருக்கன்டா. உங்க ஆத்தா, உன்னத்தான் எதிர்பாத்துட்டு இருக்கு. சீக்கிரம் போடா. சாயந்தரம் வீட்டுக்கு வரேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் விக்னேஷ்.

நானும், என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த இடிந்த சுவரின் அருகே பார்வதியக்கா இளமை மாறாமல் வயிற்றில் குழந்தையோடு நின்று எனக்கு டாட்டா காட்டினாள்.

Exit mobile version