எனக்கென்று ஒரு வாழ்க்கை – லீலா ராமசாமி

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 74 எனக்கென்று ஒரு வாழ்க்கை – லீலா ராமசாமி

வீட்டுக்கு வந்த விருந்தாளிகள்  எல்லாரும் கிளம்பிச் சென்றார்கள். அவர்களுக்குப்  பிரயாணத்தின் போது தேவையான நொறுக்குத்தீனி, தண்ணீர் முதற்கொண்டு  கொடுத்து வழியனுப்பிவிட்டு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டாள் நளினி. அவளுக்குப் போதும் போதும் என்றிருந்தது. உடம்பு கெஞ்சியது. ஆயாசமும் சலிப்பும் மேலிட்டது. ஜன்னலுக்கு வெளியே பார்வை சென்றது.

அவள் தோட்டத்தில் பதியன் போட்டிருந்த பன்னீர் ரோஜாச் செடி பூந்திருந்தது. பார்த்ததும் மனம் சிறுபிள்ளையாய்க் குதூகலித்தது. ஆவலாய் தோட்டத்திற்குச் சென்று அந்த ரோஜா மலரைப் பார்த்த கணம் நினைவுகள் பின்னோக்கிப் பயணித்தன.

‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு?’ என்று பாடித் திரிந்த காலம் எவ்வளவு மகிழ்ச்சியானதாக இருந்தது! ஆனால் இப்பொழுது?  இந்த வீடு என்ற தங்கக் கூண்டில் அடைபட்டு வீட்டு வேலை, சமையல், ஓயாமல் கடலலை போல் வரும் விருந்தினர், மாமியார், மாமனார், கணவர், குழந்தைகள்…ஒரே இயந்திரத்தனமான வாழ்க்கை!

‘எங்கே நான் கண்ட கவிதை மயமான கனவு வாழ்க்கை?’ ஏக்கமும் ஆயாசமும் தோன்றித் தன்மீதே கழிவிரக்கம் மேலிட்டது.

ஒரு தீர்மானத்துடன் அவளுடைய சித்தியைப் பார்க்கக் கிளம்பினாள். அவர்தான் அவள் நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு அவளது முடிவை அலசி ஆராய்ந்து, அதன் சாதக பாதகங்களைக் கூறக் கூடியவர்.

**

“சித்தி!” என்றபடியே சித்தியின் வீட்டுக்குள்ளே நுழைந்தாள் நளினி.

“அடடே நளினி! வா! வந்து உட்கார். ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து.”

“எங்கே சித்தி வரமுடியுது? அந்தக் குடும்பம்ங்கற ஜெயில்ல போய் நான் மாட்டிக்கிட்டேன். அது ஆயுள் தண்டனையா மாறுறதுக்குள்ளே நான் வீட்டைவிட்டு வெளியே வந்துடப் போறேன். போதும். இனி எனக்குன்னு ஒரு வாழ்க்கையை நான் வாழப் போறேன்”

“ரொம்பக் கோபமாக வந்திருக்கே. முதல்லே இந்தத் தண்ணியைக் குடி. காபி போட்டுத் தர்றேன். குடிச்சிட்டுப் பேசலாம்.”

சித்தி எழுந்து காபி போட்டு நளினிக்கு ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டுத் தானும் ஒன்று எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தார்.

“உங்க கை காபியே தனி ருசி சித்தி”

காலிக் கோப்பைகளை உள்ளே  வைத்துவிட்டு வந்தார் சித்தி.

“நளினி! இப்ப நீ சொல்ல வந்ததைச் சொல்லு. ஏன் திடீர்னு இந்த முடிவுக்கு வந்தே?”

“சித்தி உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பி.காம்.  முடிச்ச உடனேயே எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. என் புகுந்த வீடு எவ்வளவு பெரிய குடும்பம்! நான் கல்யாணம் பண்ணிப் போகும் போது மூணு நாத்தனார்களும் ரெண்டு கொழுந்தனாரும் இருந்தாங்க. நான் போனப்புறம்தான் அவங்களுக்கெல்லாம் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் நடந்தது.

இத்தனைக்கும் நடுவுல நானும் இவரும் எங்கே தனியா மனம்விட்டுப் பேசிக்கிறது? வேலை முடிஞ்சி ராத்திரி பத்தரை, பதினோரு மணி ஆகும் தூங்கப் போக. அப்போ அவர் தூங்கி இருப்பார்.

ஏதோ குருட்டுக் காக்கா இருட்டில விழுந்த மாதிரி ரெண்டு பிள்ளைகளைப் பெத்துக்கிட்டேன். புருஷனோட ஆத்மார்த்தமான ஒரு பேச்சு இல்லை.”

“ஏம்மா! உனக்கு வேண்டிய  பட்டுப் புடவைகள் நகைகள் எல்லாம் வாங்கித் தந்திருக்காரே!”

“சித்தி! அம்மாதான் அப்படிக் கேக்குறாங்கன்னா நீங்களுமா? நகைகளும் பட்டுப் புடவைகளுமா வாழ்க்கை?

கல்யாணத்துக்கு முன்னால  என் கணவர், குழந்தைகளோட எப்படியெல்லாம் இருக்கணும்னு ஒரு கவிதை மாதிரியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டேன்! எல்லாமே கனவாப் போச்சு சித்தி.”

“இப்போ உன்கிட்ட உன் புருஷன் அன்பாத்தானே இருக்கார்? வசதியான வாழ்க்கை..ரெண்டு  குழந்தைங்க.. என்ன கஷ்டம் உனக்கு?”

“என் குடும்பத்திலே எப்பவுமே திருவிழாவுக்கு வந்த மாதிரி உறவுகாரங்க கூட்டம்.

வந்தவங்களது தேவைகளைக் கவனிச்சி, சமைச்சி, பரிமாறி,  குழந்தைகளைத் தயாராக்கி,   இவருக்கும் மாமனார் மாமியாருக்கும் வேண்டியதெல்லாம் செய்து கொடுத்து… இது எனக்குத் தினமும் ஏதோ டைம் டேபிள் போட்ட மாதிரி வாழ்க்கை ஆயிடுச்சு சித்தி!

காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்குற வரைக்கும்  யாரையாவது நர்ஸ் மாதிரி கவனிச்சிட்டே  இருக்க வேண்டியிருக்கு.

நடுவுல இவருடைய வியாபாரக் கணக்கெல்லாம் எழுதணும். அன்பா ஆதரவா நான் செய்ற வேலைக்கு ஒரு அங்கீகாரமோ, அன்பான ஒரு பேச்சோ, பார்வையோ, எனக்குன்னு  கொஞ்சம் நேரமோ கிடைக்கலை..!”

“நளினி! இவங்கெல்லாம் உன் சனங்க. நீ செய்யறது எல்லாமே உன்னுடைய வேலை தான். உன்னை விட்டா அவங்களுக்கும் யாரு இருக்கா? உனக்கு அப்படி என்னதான் ஆசை?”

“எனக்குக் கதை, கவிதை எழுதணும். முன்னப்போல பத்திரிகைகள்லே என்னோட படைப்புகள் வரணும்… இதுக்கெல்லாம் நேரமே இல்லையே? என்னோட சங்கீத ஞானம் துருப்பிடிச்சு போச்சு… 

சமூக சேவை செய்யணும்,

எங்கேயாவது ஆசிரமங்களுக்கு போய் தியானமும் யோகமும் கத்துக்கிட்டு அங்கேயே இருந்து சேவை செய்யனும்னு ஆசை கூட இருக்கு. பேசாம துறவியாப் போயிடலாமாங்கிற எண்ணமே வந்துடுச்சு.”

“சரி நளினி! நீ தனியா வந்தா, எந்த வருமானமும் இல்லாமே உன் சாப்பாட்டுக்கும் மத்த தேவைகளுக்கும் என்ன பண்ணுவே?”

“நான்தான் பி.காம். படிச்சிருக்கேனே சித்தி! ஏதாவது கணக்கு எழுதற வேலையாவது கிடைக்காதா? என் ஒருத்திக்கு அது போதாதா?”

“இந்த காலத்துல வேலை கிடைக்கிறது பெரிய குதிரைக் கொம்பாச்சே!”

“சரி, நான் தான் இங்க டெய்லி வர்றவங்க போறவங்களுக்கு எல்லாம் சமைச்சுக் கொட்டி சமையல் எக்ஸ்பர்ட் ஆயிட்டேனே! யார் வீட்டிலயாவது சமையல் பண்ணிப் போட்டு அங்கேயே தங்கிக்க மாட்டேனா?”

“யார் வீட்டிலேயோ வேலைக்காரியா போய் அவங்க சொல்றத சமைச்சு கொடுக்கறதுக்கு பதிலா, இங்கே உன் வீட்ல நீ எஜமானியா இருந்து எல்லாருக்கும் சமைச்சி போடுறது எந்த விதத்தில குறைஞ்சு போச்சு?

அதோட இப்பல்லாம் உனக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா 45 வயசு இருக்குமா? இந்த வயசுல நீ இன்னும் அழகாத்தான் இருக்கே. எந்த வீட்டுல போய் நீ நம்பி தங்கிக்க முடியும்?”

“அப்பன்னா ஏதாவது ஆசிரமத்துக்குப் போய் தங்கி, அங்கேயே சேவை செய்யலாம் இல்லையா?”

“துறவியாப் போயிட்டா எல்லாரும் வந்து கொண்டாடுவாங்கன்னு நினைக்காதே. நீ அப்பவும் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு யாரையாவது எதிர்பார்க்க வேண்டி வரும்.

ஆசிரமத்துக்குப் போய் அங்கே வர்றவங்க போறவங்களுக்குச் சேவை செய்யறேன்னு சொல்றியே, அதைத்தானே இப்ப நீ உன் குடும்பத்தில செஞ்சிட்டு இருக்கே?

மத்தவங்களுக்கு சமூகசேவை செய்றேன்னு சொல்றியே, இங்கே உன் குழந்தைகளுக்கும் உன் கணவருக்கும் நீ செய்யறதுக்கு பேர் என்ன? இதுக்கு நீ அங்கீகாரம் யாருகிட்ட இருந்து எதிர்பார்க்கிறே?

அவங்க உன் உயிரில பாதி! ஒரு மரம் தன் இலைகளுக்கும் கிளைகளுக்கும் தண்ணீரையும் சத்து நீரையும் உறிஞ்சிக் கொடுத்து வளர்க்கிறதுக்கு ஏதாவது எதிர்பாக்குதா?

உன் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுத்து உன் பொண்ணை ஒரு டாக்டராவும், உன்  பையனை ஒரு என்ஜினீயராவும் உருவாக்கி, இந்தச் சமுதாயத்துக்குக் கொடுத்திருக்கிறே! இது ஒரு பெரிய சமூக சேவை.

அதேபோல உன் கணவருடைய அத்தனை தேவைகளையும் நீ பூர்த்தி செய்யறதாலே அவருடைய கடமையை அவர் சரியாச் செய்ய முடியுது. இது எவ்வளவு பெரிய சேவை!

இதைவிடப் பெரிய சேவையை நீ வெளியில வந்து என்ன செய்திட முடியும்? உன்னால ஒரு டாக்டரை வெளியில வந்து உருவாக்க முடியுமா?

நீ இப்போ உன் கணவருக்கு எழுதற கணக்கை வெளியே வந்து எழுதினா அவங்க உன்னை ஒரு கணக்குப் பிள்ளை அளவுலதானே வச்சிருப்பாங்க? அங்கே வேறென்ன பெரிய அங்கீகாரம் உனக்குக் கிடைக்கும்?

உனக்கு இப்போ ‘மெனோபாஸ்’ டைம். ஹார்மோன்கள் தாறுமாறா சுரந்து, மென்சஸ் ஒழுங்கில்லாமே வந்து உன் உடம்பைப் படுத்துது.

நீ வேலை செஞ்சு செஞ்சு களைக்கும் போது யாராவது அன்பா, ஆதரவா இருக்கணும்னு உடம்பும் மனசும் எதிர்பாக்குது. அதனாலதான் அதிலிருந்து எல்லாம் தப்பி வெளியே வரணும்ங்கிற எண்ணம் உனக்குத் தோணி இருக்கு.

கொஞ்சநாள் இதையெல்லாம் பொறுத்துக்கோ. பிற்பாடு உனக்கே இது எப்படிப்பட்ட அபத்தமான எண்ணம்னு தோணும். அதனால தனியா வர்ற எண்ணத்தை விட்டுடு. வீட்டில இருந்து நீ இப்ப செய்றியே, அதுக்குப் பேருதான் சேவை!

துறவறம் பற்றி நீ பேசுறியே, பெரியவங்க என்ன சொல்லியிருக்கிறாங்க? ‘இல்லறம் அல்லது நல்லறம் அன்று’ னு தான் சொல்லி இருக்காங்க. கதை, கவிதை எழுத ஆசையா? உனக்கு முடிஞ்சப்போ   உக்காந்து எழுது. அதுக்கு ஒரு காலம் வரும். அங்கீகாரம் கிடைக்கும். உன் கணவர் கிட்ட தனியா இருக்கும் போது மெல்ல உன்னுடைய சின்னச்சின்ன எதிர்பார்ப்பைச் சொல்லு. அவர் புரிஞ்சிப்பார்.

எல்லாருக்குமே தெரியும் நீதான் அந்தக் குடும்பத்துக்கு அச்சாணிங்கறது! அது உனக்குக் கிடைச்ச மிகப்பெரிய மகுடம்! 

உன்னாலதான் இந்தக் குடும்பம் நல்லபடியாக இயங்கிக்கிட்டு இருக்குங்குற உண்மை அவங்களுக்குத் தெரியும். இதை ஒவ்வொரு நாளும் உன்கிட்ட எல்லாரும் தனித்தனியா வந்து சொல்லிக்கிட்டே இருக்க மாட்டாங்க.

அதனால தனியா வர்ற எண்ணத்தை விட்டுட்டு, போய் உன் குடும்பத்தைக் கவனி. மனப்பூர்வமா உன் குடும்பத்தை நேசி. அவர்கள் உன்னுடையவர்கள்.”

“நான் உள்ளே வரலாமா?” என்று நளினியின் கணவர் குரல் வெளியில் இருந்து கேட்டது.

சித்தி எழுந்து சென்று கதவை இன்னும் நன்றாகத் திறந்து, “வாங்க மாப்பிள்ளை! வாங்க கண்ணுங்களா! நீங்களும் அம்மாவைத் தேடி வந்துட்டீங்களா?” என்று நளினியின் கணவர், மகள், மகனையும் உள்ளே அழைத்தார். நளினியின் மகளும் மகனும் ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டார்கள்.

“அத்தை! நீங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டிருந்ததை நாங்க வெளியிலிருந்து கேட்டோம். எங்களுக்கு நளினியை விட்டா யார் இருக்கா? நளினி தான் எங்களுக்கு எல்லாமே. ஆனா என்ன, அதை நாங்க வெளியே சொல்லாமல் இருந்தது எங்களுடைய தப்புதான். நளினி இந்த அளவுக்கு ஏங்கி இருக்கிறது எனக்குத் தெரியாமப் போச்சு. அவளை இப்ப நான் புரிஞ்சுகிட்டேன்.

உன்னுடைய இந்த உடல் நிலையில நாங்க உனக்குத் துணையா இருப்போம். கொஞ்ச நேரம் நீ இல்லாத வீடு ரொம்ப வெறுமை ஆயிடுச்சு நளினி.  அத்தை! எங்களுக்கும் இந்த அளவுக்குப் புரிய வச்சதுக்கு ரொம்ப நன்றி.”

“ஆமா சித்தி! ஏதோ என்னுடைய உடல்நிலை, மனநிலையில தப்பு தப்பா யோசனை பண்ணிட்டேன். நீங்க எனக்கு நல்லாப் புரிய வச்சுட்டீங்க.

உங்களைப் பாக்க வந்தது ரொம்ப நல்லதாப் போச்சு.

நாங்க கிளம்புறோம் சித்தி. இவங்க மூணு பேருக்கும் ஏதாவது டிபன் பண்ணனும். நிறைய வேலை இருக்கு சித்தி.”

சித்தி சிரித்துக் கொண்டே கையசைத்து விடை கொடுத்தார்.

Exit mobile version