எதிர் கோணம்- எம் சங்கர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 75 எதிர் கோணம்- எம் சங்கர்

என்ன மேடம்..இன்னிக்கு வழக்கத்தைவிட அதிகமா காய் வாங்கிரிக்கீங்க எதாவது விசேஷமா ? இரண்டு பை நிரப்பி மூன்றாவது பையில் காய் வாங்கும் லதாவிடம், கௌண்டர் பெண் கேட்டாள்.

“ விஷேசமெல்லாமில்லை..நான் ஒரு மாசம் ஊருக்கு போறேன். வீட்டுக்கரருக்காக கொஞ்சம் சமச்சி வச்சுட்டுபோலம்னுதான்” என்ற லதாவை பின்னால் நின்றவர் ஆச்சர்யமா பார்த்து ,” பரவயில்லையே..எங்க வீட்டில ஒரு நாள் சமைக்கிறதுக்கே ஏக போராட்டம்.. நீங்க ஒரு மாசத்துக்கு சமைக்கறீங்களா? உங்க ஹஸ்பண்ட் ரொம்ப லக்கிதான்” என்றவரிடம் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு வீட்டுக்கு விரைந்தாள்..ஒரு மாதம்வரை கெடாத சிலவற்றை சமைத்து ஃபிரிஜ்ஜில் அடுக்கிவைக்கும்போது அவள் கணவன் வாசுவிடமிருந்து போன் வந்தது.

“ லதா உன்னோட ஃபிளைட் நாளைக்கு காலை 9 மணிக்குத்தானாம்..ஒரு மணி நேரம் லேட்”

லதா ஒரு கணம் துணுக்குற்றாள்..

“ ஏய் என்னாச்சு..சத்தத்தையே காணோம்..”

“ இல்லே.. 9 மணிக்கு எமகண்டம் அதான்..” டிக்கெட் வாங்கும்முன் பஞ்சாங்கத்தை வைத்து அலசி முடிவெடுத்தாள். கடைசியில் இப்படி ஆனதில் அவளுக்கு ஒரு வருத்தம்.

“ சீ சீ இதெல்லாம் மூட நம்பிக்கை..ரொம்ப யோசிக்காம மள மளன்னு பாக் பண்ண ஆரம்பிச்சுடு..”

எதிர் முனையில் பதில் வராததை கண்ட வாசு பேச்சை மாற்ற எண்ணி” “யூ நோ லதா என் அசிஸ்ட்டன்ட் ஹேமா சொல்றா நீ ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்”

“ ஏனாம்?”

“ நான் உன்னை ஒரு மாதத்திற்கு உங்க அம்மா வீட்டிற்கு அனுப்பறேனாம்..அவ ஹஸ்பன்ட் அவளை ஒரு வாரத்துக்குகூட அனுப்பமாட்டானாம்..”

“ நா ஊருக்கு போற விஷயத்தையெல்லாம் கூட அவ கிட்ட சொல்லுவீங்களா? ஆஃபீஸ்ல வேலை பாக்கறீங்களா இல்ல சும்மா அக்க போர்தானா?”

“ ஹே ஹே பொறாமையா?”

“ சே சே சான்ஸே இல்ல.. இந்த அசட்டு மூஞ்சிய என்ன தவிர வேற யாருக்கு பிடிக்கும் பை தி வே என்கிட்டகூடதான் உங்க ஹஸ்பென்ட் ரொம்ப லக்கின்னு ஒருத்தர் சொன்னார்”

“ சரி சரி நம்ப ரெண்டு பேருமே லக்கிதான்  சாயந்திரம் நான் சீக்கிரம் வந்துடறேன்.. காலையிலே சீக்கிரம் கிளம்பணுமே..”

அன்று இரவு லதாவிற்கு வெகு நேரம் தூக்கம் வரவில்லை..எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் அசந்தவள் திடீரென்று ஏதோ சொப்பனம் கண்டு பக்கத்திலிருந்த வாசுவை எழுப்பினாள். திடுக்கிட்டு எழுந்த வாசு “என்ன ஆச்சு என்ன ஆச்சு ?” என்று பதறினான். மணி பார்த்தான்.. விடியற்காலை 4..

வியர்வை வழிய கண் கலங்கி உட்கார்ந்திருந்த லதாவைப் பார்த்து

“ உடம்பு சரியில்லையா “ என்றவாறே அவள் நெற்றியை தொட்டு பார்த்தான்

“ இல்ல இல்ல ஏதோவொரு பயங்கரமான சொப்பனம்..தூக்கிவாரி எழுந்து பார்த்தா நா நெஜமாவே விசிச்சு விசிச்சு அழுதிண்டிருக்கேன்.. உடம்பெல்லாம் தொப்பலா வேர்த்திருக்கு..”

“ அப்பிடி என்ன சொப்பனம்?”

“ என்னன்னு தெளிவா தெரியல.. ஆனா எதோ குழப்பமா கூட்டமா இருக்கு..எதோ ஆக்ஸிடெண்ட் மாதிரி தெரியறது.. மனசில எதோ பெரிய துக்கம் அழுத்தறது”

“ சரி சரி கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு தூங்கு.. கார்த்தாலே சீக்ரமே கிளம்பணும்..வீக்டேஸ்னால ட்ராபிக் ஜாஸ்தியா இருக்கும்..”

“ நா.. நா வேணா இந்த ட்ரிப்பை கான்ஸல் செஞ்சுடட்டுமா?” தயக்கத்துடன் கேட்டாள்

“ வாட் நான்சென்ஸ்..இந்த சொப்பனத்துக்கு பயந்து ட்ரிப்பை கான்ஸல் பன்றயா? பைத்தியம் பிடிச்சிடுத்தா?”

“ இல்ல இப்போ கொஞ்ச நாளாவே ப்ளைட்ஸ் எல்லாமே அடிக்கடி ஆக்சிடென்ட் ஆயிண்டுருக்கு.. என்ஜின் கோளாறு.. கண்ட்ரோல் ரூம் தப்பு, பைலட்டின் கேர்லெஸ்னஸ்..எத்தனை கேஸ்கள் பார்க்றோம் தினம் பேப்பர்ல.. ”

“ ஏய்..கமான்.. ஸ்டுப்பிடா பேசாதே.. இதெல்லாம் ஒன்னும் புதிசில்லையே.”

“ ஆனா இப்போ என்னவோ ஜாஸ்தி மாதிரி தோணறது.. போறாதுக்கு இந்த விடியகால சொப்பனம் வேறே.. எமகண்டத்தில் கெளம்பறது..சொன்னா நம்ப மாட்டீங்க..என் மனசை சோகம் ரொம்ப அழுத்துது..”

 “லுக் லதா இந்த சொப்பணம்கிறதெல்லாம் நம்முடைய சப்கான்ஷியஸ் மைன்ட்ல உள்ள எண்ணங்களின்…”

“ஸ்டாப் இட் வாசு நானும் ஃப்ராயடின் இன்ட்டர்பிரட்டேஷன் ஆஃப் ட்ரீம்ஸ் படிச்சிருக்கேன்.. இதையே ப்ரீமானிஷன், கிளையர்வாயன்ஸ் னு ஸ்டைலா சொன்னா ஒத்துப்பீங்க”

“ஒகே ஒகே லதா ரிலாக்ஸ். படுத்து தூங்கு பிள்ளையாரை வேண்டிக்கோ எல்லாம் சரியாயிடும்”

அவள் மௌனமாக படுத்துக்கொண்டு விட்டாலும் அவள் சமாதானமாகவில்லை என்று அவள் முகம் காட்டியது.

காலையில் வாசு அவளுக்குமுன் எழுந்து காபி போட்டுவிட்டு அவளை எழுப்பப்போகும்போது ஹாலில் கிடந்த அன்றைய பேப்பர் அவன் காலில் இடறியது. எடுத்து மேலோட்டமாக மேய்ந்தபோது அந்த செய்தி அவன் கண்ணில் பட்டது “Indigo flights narrowly escaped mid-air collision”. பேப்பரை மடித்து பழைய பேப்பர்களுக்கு அடியில் சொருகிவிட்டு, அவளை எழுப்பினான். அவள் முகம் அப்போதிலிருந்து இதோ இப்போது ஏர்போர்ட்டின் உள் செல்லும்வரை அரண்டே இருந்தது.

அவளுக்கு ஆறுதலாக இருக்க வாசு அவளுடன் வாசலில் சிறிது நேரம் அமர்ந்து ஏதேதோ பேசி அவளை நார்மலாக்க முயன்று கொண்டிருந்தான்  ஒவ்வொரு வருடமும் அவள் பெற்றோர்களை பார்க்க மும்பை போவாள் அவள் அண்ணன் குடும்பம் துபாயிலிருந்து வரும் எல்லோரும் ஜாலியாக சுற்றுவார்கள் இந்த பிரயாணத்திற்காக அவள் ஒரு மாதமாக ப்ளான் பண்ணி ரொம்ப உற்சாகமாக கிளம்புவாள் இன்றுதான் இப்படி கலக்கமாக இருக்கிறாள் 

“சென்னையிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானம் 6E 621 இப்போது புறப்பட தயாராக…. -மூன்றாவது முறையாக அறிவுப்பு வந்தவுடன், வாசு எழுந்து “ சரி லதா லேட் ஆயிடுத்து நீ உள்ளேபோய் செக்கின் பண்ணிடு” என்றவாறே லதாவை இருக்கையிலிருந்து கைத்தாங்கலா எழுப்பினான். சற்றே கலங்கிய கண்களுடன் லதா எழுந்து “ ஓகே..” என்று நடுங்கிய குரலுடன் சொன்னாள்.

“ கம் ஆன் லதா..உனக்கென்ன ஏர் டிராவல் புதிதா? ரிலாக்ஸ்.. எல்லாம் சரியாய் இருக்கும்”

“ ஐ நோ.. நானும் அதத்தானே சொல்றேன்..எப்போதும் இப்பிடியா இருந்தேன்..இந்த தடவே தான் என்னமோ மனச பண்றது..எதோ ஒரேடியா பிரியற மாதிரி..” இப்போது லதாவின் கண்களிலிருந்து குபு குபு என்று கண்ணீர் வழிந்தது.

“ சீ..சீ..ஸ்டாப் இட் ஐ சே..கார்த்தாலே ஏதோ சொப்பனம் கண்டுட்டு அதையே நினைச்சு.. எல்லாம் சரியாயிடும்..இன்னும் 3 மணி நேரத்திலே உங்க அம்மா அப்பா அண்ணாகூட  ஜாலியா என்ஜாய் பண்ணபோறே..இந்த ஹஸ்பன்டை மறந்துட்டு..ஓகே ..சீர் அப்” என்று அவள் கண்களை துடைத்து உள்ளே அனுப்பினான்.

அவள் செக்கின் செய்து செக்யூரிட்டி கேட் உள்ளே சென்று கண் மறையும் வரை விசிட்டர்ஸ் கேலரியிலிருந்து வாசு எட்டிப்பார்த்து கையாட்டிக்கொண்டே இருந்தான். அவளும் கையசைத்து கண்களை துடைத்துக்கொண்டே சென்றாள். என்னதான் லதாவிற்கு சமாதானம் சொன்னாலும் வாசுவிற்கும் மனசு லேசாக கலங்கித்தான் இருந்தது

ஏர்போர்ட்டை விட்டு வெளியறும்போது, ஃப்ளை ஓவரிலிருந்து தென்படும் விமானங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் சிலரை கவனித்து தானும் நின்று பார்த்தான் விமான நிலையத்தின் பரபரப்பான காட்சி தெளிவாக தெரிந்தது சிறிதும் பெரிதுமாக பல விதமான விமானங்கள்..இடையிடையே பஸ்களும், ஜீப்களும் பெட்டிகள் அடுக்கியிருக்கும் கண்ட்டெய்னர்களை இழுத்து கொண்டு போகும் ட்ராக்டர்களும் பெட்ரோல் டாங்கர்களுமாக ஒரே அமளியாக இருந்தது  இதில் லதா விமானம் எதுவாக இருக்கும் என்று எண்ணியவாரே    பார்க்கும்போது ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது ஒரு வேளை இது லதா போகும் விமானமாக இருக்கலாமென நினைத்தான்  வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ஒருவர் மற்றவரிடம் “ இப்பெல்லாம் எல்லாமே ஆட்டோ பைலட்தான் . டேக் ஆஃப் லேன்டிங் மட்டும்தான் மேனுவல் அதனாலதான் முக்காவாசி க்ராஷஸ் டேக் ஆஃப் லேன்டிங்ல மட்டும்தான் ஆறது” என்று சொல்லி பலமாக சிரித்தார் ஏற்கனவே கலக்கத்தில் இருந்த வாசுவிற்கு இது அச்சானியமாக பட்டதால்  அந்த விமானம் டேக் ஆஃப் ஆகும்வரை இருக்கலாமென நினைத்தான்

அந்த விமானத்தில் எல்லா பயணிகளும் ஏறிய பிறகு பேப்பர் கத்தைகளுடன் க்ரவுன்ட் ஸ்டாஃப் வெளியெறி கட்டை விரலை உயர்த்தவும் அந்த விமானத்திலிருந்த படிக்கட்டுகளை கழட்டி நீக்கினார்கள்  பின் என்னென்னவோ சைகைகள், கையாட்டல்களை தொடர்ந்து அது மெதுவாக ஊர்ந்து நீண்ட ரன்வேயை அணுகிக்கொண்டிருந்தது  அதே சமயம் அந்த ரன்வேயின் கோடியில் ஒரு விமானம் இறங்க எத்தனித்து கொண்டிருந்தது ‘அய்யய்யோ அவன் இறங்கற சமயத்தில இவன் போறானே’’ என்று வாசு பதறினான் ஆனால் இந்த விமானம் ரன் வே முனைக்கு சற்று முன்பே நின்று அந்த விமானம் இறங்கி ஓடி நிற்கும்வரை காத்திருந்து பின் கிளம்பி வேகமெடுத்து ஜிவ் என்று ஏறி ஒரு வட்டமடித்து வானில் ஒரு புள்ளியாக மறைந்தது நல்லபடியாக போய்சேரவேண்டும் என்று எண்ணியவாறே ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினான்

வீட்டுக்கு சென்று லதா செய்து வைத்திருக்கும் லஞ்ச்சை சாப்பிட்டு விட்டு ஆபிஸ் செல்லலாம் என முடிவு செய்தான்  இவன் வீடு மாம்பலம் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஒரு குறுக்கு தெருவில். ஸ்டேஷனில் இறங்கி தண்டவாளத்தை ஒட்டி ரங்கராஜபுரம் லெவல் கிராஸிங் பக்கம் கொஞ்சம் நடந்தால் ரெண்டு நிமிஷத்தில் வீட்டுக்கு போய்விடலாமே என்று அவனுள் இருந்த கஞ்சத்தனம் மேலெழுந்ததால் எதிரிலிருக்கும் திரிசூலம் ஸ்டேஷனுக்கு சென்றான்.. உடனே வந்த டிரெய்னில் கூட்டமில்லை. சௌகரியமாக ஜன்னலோரம் உட்கார்ந்தான். எதிரில் இருவர் பங்கு சந்தை பற்றி அலசிக்கொண்டிருந்தனர்  மேலே தெரிந்த வானத்தில் ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. ஒரு வேளை இது லதாவின் ஃப்ளைட்டாக இருக்கலாம் என்று தோன்றியவுடனே ‘நல்லபடியா போய் சேரணுமென்று மனதுக்குள் மீண்டும் வேண்டிக்கொண்டான். கூடவே அவனுக்கு லதாவின் கனவும் அவளுக்கு அது ஏற்படுத்திய பாதிப்பும் நினைவுக்கு வந்தது. திடீரென அவனுள்ளும் கொஞ்சம் பயமெழுந்தது. ஒரு வேளை லதாவின் உள்ளுணர்வை மதிக்கவில்லையோ என்று ஒரு குற்ற உணர்ச்சி எழும்பியது. எண்ணச்சுழலை திசை திருப்ப பையிலிருந்த எட்வர்ட் டிபோனோவின் ’லேட்ரல் திங்கிங்’ புக்கை பிரித்தான்.

எந்த ஒரு பிரெச்சினயையும் ஆப்வியஸ்ஸான கோணத்திலிருந்து பார்க்காமல் ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து பார்க்கும்போது ஒரு புதிய தீர்வு கிடக்கும். இந்த வித்யாசமான சிந்தனைதான் லேட்டரல் திங்கிங்.. உதாரணமாக…”  

அவன் இருந்த மனநிலைக்கு இது ரொம்ப ஹெவியாக இருந்ததால் பிறகு படிக்கலாமென மூடிவிட்டு வேடிக்கை பார்க்கலானான்.

மாம்பலம் ஸ்டேஷன் வந்தது. வாசு பிளாட்பாரத்திலிருந்து கீழிறங்கி தண்டவாளத்தை ஓட்டிய ஒற்றை அடி பாதையில் நடையை வீசினான். இடது பக்கத்து ரங்கரஜபுரத்திலிருந்த டீ கடையிலிருந்து ரேடியோ அலறி கொண்டிருந்தது. “ ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம். செய்திகள். முதலில் தலைப்பு செய்திகள்…” உப்பு சப்பில்லாத செய்திகள் என்று வாசு நினைத்துகொண்டிருக்கும்போதே ‘ இண்டிகோ ஏர்வேஸ்..” என்று ஆரம்பித்த செய்தியை முழுவதும் கேட்க விடாமல் குறுக்கே தடதடவென ஒரு ட்ரைன் பாய்ந்தது. வாசுவிற்கு உடெலெல்லாம் நடுங்கியது. “இண்டிகோ ஏர்வேஸ்” என்று ஆரம்பித்த செய்தி என்னவாக இருக்குமென என கதி கலங்கியது. ஒரே பாய்ச்சலில் நாலு ட்ராக்கையும் தாண்டி இடது பக்கம் அடைந்து செய்திகளை பதபதப்புடன் கேட்டான். தலைப்பு செய்தி முடிந்து விரிவான செய்திகள் ஒலிபரப்பிக்கொண்டிருநதது. கடைசியில் அவன் எதிர்பார்த்த செய்தி வந்தது. “இண்டிகோ ஏர்வேஸ், வெளி நாட்டு சேவையை தொடங்கியது”

“ தேங்க் காட்..” என்று வாசு பெருமூச்சு விட்டான். சில நொடிகளில் எப்படி ஆடிபோய்விட்டான். நிம்மதியடைந்த மனதுடன் திரும்பி ரயில்வே ட்ராக்சை கிராஸ் செய்யும்போதுதான் அதை கவனித்தான். சப்தமேயில்லாமல் வழுக்கிக்கொண்டு படு வேகமாக அவன் நின்றுகொண்டிருக்கும் ட்ராக்லேயே அவனுக்கு எதிரில் ஒரு எலெக்ட்ரிக் ட்ரைன் வந்துகொண்டிருந்தது.  கண்கள் பார்த்த அதிர்ச்சியை மூளை ஒரு கணம் ஸ்தம்பித்து உணர்ந்து, அவசர அவசரமாக ‘கால்களே அந்த பக்கம் ஓடு என்று கட்டளையிடுவதற்குள் காலம் கடந்துவிட்டது… ட்ரைனும் அவன் மீது கடந்து விட்டது ! ஆஷ்டவக்ரனின் சில வினாடி ஸ்பரிசத்தில் ஒரு யுகத்தின் நிகழ்வுகளை ஜனகன் நினைவு கூர்ந்தாற்போல் தன்னுடைய கடைசி சில வினாடிகளில் ஓராயிரம் எண்ண அலைகள் மின்னல் கீற்றுகளாய் உள்ளே பாய்ந்ததை வாசு உணர்ந்தான். அவற்றில் கடைசியாக ‘லதா கனவில் கண்ட ஆக்ஸிடன்ட் இப்படியும் இருக்கலாமென்று ஏன் தோணவில்லை’ என்ற கேள்வி எழுந்தது..அதற்கு அவனுக்கு விடை காண அவகாசமில்லை..எட்வர்ட் டிபோனோ வின் “லேட்ரல் திங்கிங்’ மோதலின் விளைவால் சுக்கு நூறாக கிழிந்து பறந்து, அவனருகில் அவனைப்போலவே கூளமாக குவிந்துகொண்டிருந்தது

************

Exit mobile version