சத்துணவு- ஏ.வெங்கடேசன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 76 சத்துணவு- ஏ.வெங்கடேசன்

மதிய உணவுக்கு மணி அடித்தது. நானும்,பொன்னுசாமியும்,முரளி மூவரும் வட்டியை எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடினோம். அத்தொடக்கப்பள்ளியை ஒட்டி ராசிபுரம் பிரதான சாலை அமைந்திருந்தது. ரோட்டுக்கு அந்தப்புறம் கிராம பஞ்சாயத்து போர்டின் அலுவலகம் இருந்தது. அதன்  வேலியாக சீமை கருவேலஞ் செடி செழித்து வளர்ந்திருந்தது. அதன் முன்புறம் சாலையை ஒட்டியபடி, போர்பைப் ஒன்றிருந்தது.சாலையின் எதிர்முனை தம்மம்பட்டியை நோக்கி அமைந்திருந்தது.

பள்ளி வளாகத்தில் பூவரச மரம் ஒன்றிருந்தது. மேற்கே பாழடைந்த கட்டிடமொன்றுமிருந்தது. அதில் புல் புதர் மண்டியிருந்தது. அது ஒரு வகுப்பறைதான் என்பதன் அடையாளமாக சிதிலமடைந்த கரும்பலகையின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. அதற்கு நேரெதிர், சாலையைத் தாண்டி செட்டியாரின் பெட்டிக் கடையிருந்தது.

எனக்கு எப்பொழுதும் மதியம் சத்துணவுதான். சோற்றின் நெடி எனக்கு அவ்வளவு பிடிப்பதில்லை. அதிகமாக சாம்பார் ஊற்றமாட்டார்கள். எப்போதாவது அங்கம்மா ஆயா இருந்தா சற்று சாம்பார் அதிகமாக கிடைக்கும்.போதுமான சாம்பாரில்லாத சோற்றை, திண்ண மனமில்லாமல் நிறையமுறை கீழே கொட்டியிருக்கிறேன். சாம்பாரை மிச்சப்படுத்துவதற்காக, வெறுஞ்சோற்றில் ஊறுகாயை பிசைந்து சாப்பிடுவது எங்களின் வழக்கமாகயிருந்தது. பின்னிருக்கும் குறைவான சோற்றில் நிறைய சாம்பார் வாங்கி வயிற்றைக் கழுவுவோம். ஊறுகாய் என்றால் வீட்டு ஊறுகாய் அல்ல. செட்டியார் கடை ஊறுகாய். அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மிகவும் கண்டிப்பானவர் ஆனால் நேர்மையானவரல்ல. ஊறுகாய்க்கு காசு சேர்ப்பதே பெரும்பாடாக இருக்கும்.எப்போதா வரும் மாமாவிடமும், தாத்தா, பாட்டியிடமும் காசு வாங்கி தெரியாமல் வீட்டில் வாங்கி வைப்போம்.

முரளி, பொன்னுசாமிக்கெல்லாம் சத்துணவில் முட்டை உண்டு. எனக்கில்லை. எனக்கு வசதி வாய்ப்பு இருக்கிறதாம். சத்துணவு அமைப்பாளர் அப்படித்தான் கூறுவார். சில தினங்கள் முட்டைக்காக காத்திருந்திருக்கிறேன். முட்டை பாத்திரம் கிட்ட வந்து சேர்ந்துவிடும். ஆனாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல அமைப்பாளர் கெடுத்து விடுவார். அப்பள்ளியில் ஓரிருவர் தவிர வேறு யாரும் வசதி படைத்தவர்களில்லை.பெரும்பாலானோர் வீட்டில் நல்ல சாப்பாடு சாப்பிடுவோரல்ல.சில சமயங்களில் வீட்டில் பழைய சாதம் சாப்பிடுவதற்கு சத்துணவு எவ்வளவோ தேவல என்றிருக்கும்.அவர்கள் போடும் சத்துணவு, அம்மாவின் வீட்டு சோறு போலிருக்காது.சில சமயங்களில் சத்துணவு குமட்டக்கூடச் செய்யும்.யாரேனும், இரண்டொரு நாள் சாப்பிட்டால் போதும் அலுத்துவிடும். எப்பொழுதாவதுதான் முட்டை வழங்குவார்கள். அம்மாவிடம் எத்தனையோ முறை புகார் செய்திருக்கிறேன். தன்னால் மதிய உணவு வழங்க முடியாதென்றும்,அதற்கு காரணமாக அவள் காட்டு வேலைகளுக்கு செல்வதை சொல்லுவாள். ஆனால் எல்லா சமயங்களிலும் வேலை இருப்பதில்லை. தோராயமாக ஆண்டுக்கு ஐம்பது நாட்களுக்கும் மேலாக அவளுக்கு வேலையில்லாமல் வீட்டில்தான் பொழுதை களிப்பாள்.அப்பொழுதும் கூட எனக்கு சத்துணவிலிருந்து விலக்கு அளிப்பதில்லை. எனக்கு சனி, ஞாயிறு எப்போது வரும் என்றிருக்கும்.

அப்பாவுக்கு பால் வியாபாரத்தில் மேல் ஓரளவு வருமானம் இருந்தாலும், நான் செல்வந்தன் போல, அச்சிறுவயதில் வளர்ந்ததில்லை. வறுமையை உணர்ந்தவனாகவே இருந்தேன்.எங்கள் வீட்டில் என்னைத்தவிர யாரும் நாக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவில்லையென்றே கருதுகிறேன்.என்னைவிட செல்வந்தனான முரளிகூட மதிய சத்துணவைத்தான் சாப்பிடுகிறான் என்பதை என் அம்மா ஒப்பிட்டு பேசும்போது சற்று எரிச்சல் படுவதை சொல்லித்தான் ஆக வேண்டும்.இருந்தாலும் எதிர்த்து விவாதம் செய்வதில்லை. என்னறிவுக்கு அது நியாயம் என்றே பட்டது.

மதியம் சாப்பிடும்போது, சத்துணவு அமைப்பாளர் சில சமயங்களில் வருவார்.குழந்தைகளின் வருமானப் பட்டியலை நினைவில் வைத்தும்,உள்லூரில் யார் யார் வசதி படைத்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும் “ஏய் நீயெல்லாம் எதுக்கு வர்ற? உங்க வூட்ல ஒண்ணுமேயில்லியா? இனிமே உன்னையெல்லாம் இங்க பார்க்கவே கூடாது” என்பார்.முக்கியமாக,முட்டை வழங்கும் தினத்தில் தவறாமல் ஆஜராகி விடுவார். நானும்,முரளியும் அடிக்கடி இப்பிரச்சினைக்கு உள்ளாவதுண்டு.எங்களுக்கு முட்டைகள் கிடைப்பது அரிதிலும் அரிது.

வீட்டுக்குச் சென்றவுடன், அம்மாவிடம் புகார் செய்தால், “அப்படியா சொன்னான்;. ராஸ்கல். இருக்கட்டும் அவனைப் பார்த்துகிறேன். அரிசி, பருப்பு, முட்டையில்லாம் ஊருல வித்திக்கிட்டு திரிகிற நாய்க்கு, லொள்ளப் பாத்தியா” என்பாள்.

“உண்மையிலேயே அதெல்லாம் விப்பாங்களா” என்றேன் நான். பின்ன, அதான் மெத்த வீடு கட்டிக்கிட்டிருக்கானே தெரியல. ஊரே அவனைப் பத்தி சொல்லுதே.

“ஏம்மா, அதுவே வாடை வந்த அரிசி. அதைப்போய் யாரும்மா வாங்குவா” என்பேன் திகைப்புடன்.

“ம்-ம்ம.உனக்கென்னத் திமிரா.அவனவன் இதுவே இல்லையெனத் திரியறான். உனக்கு மூணுவேலயும் சோறு கிடைக்குதுல்ல” என்று சொல்லும் போதெல்லாம் அமைதி காப்பேன். தனிமையில் நாமெல்லாம் உணவுக்கு கூட இல்லாதவர்களாக இருப்பதென்பது நம்ப முடியாததாக இருக்கும். எல்லாவற்றையும் எண்ணி மௌனித்திருப்பேன்;.

அன்றொரு நாள்:

               என்னிடம் ஊறுகாய் வாங்க  காசு எதுவும் இருக்கவில்லை.அந்த சாதம் என்னை ஏதோ செய்தது.சாம்பார் எப்பொழுதும் நன்றாக இருக்கும்.ஆனால் சாம்பார் நிறைய ஊற்ற மாட்டார்கள். உணவை வாங்கி கொண்டு மெல்ல பள்ளியின் மைதானத்திற்கு வந்தேன்.ஒரு சில மாணவர்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தனர்.சாப்பிடத் தோணவில்லை.மெல்ல சாம்பாரை சுவைபடக் குடித்தேன்.

முழுவதும் தீர்ந்தபின் சுற்றும்,முற்றும் பார்த்தேன்.உணவை அந்தப் பக்கம் கொஞ்சம்,இந்த பக்கம் என சுற்றியும் வெறுப்புடன் வீசினேன்.அப்பொழுது எதிர்திசையை நோக்க மறந்தேன்.பிரச்சனை அதில்தானிருந்தது.

மாலை பள்ளி விட்டதும் வீட்டிற்கு சென்றேன். தாத்தாவுடனும், அப்பாவுடனும் வழக்கமான சம்பாஷனைகள் நடந்தன.ஆனால் அம்மா ஏதோ என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை.அவள் உம்மென்று மௌனித்து கவலையுடன் கவலைப்பட்டாள்.நான் காரணம் கேட்டேன்.அவள் பதிலலிக்கவில்லை.பால் வியாபாரம் பார்த்துவிட்டு தந்தை வீட்டிற்கு வந்தார்.சைக்கிள் மணி,கேனையெல்லாம் வழக்கம்போல் நானும் அண்ணனும் கழற்றி வைத்தோம். சாப்பிடும் நேரமானது. நான் வெளியில் வாசலில் தாத்தாவுடன் பேச சென்றிருந்தேன். அப்பா அழைப்பதாக அண்ணன் வந்து அழைத்தான்.நானும் வீட்டிற்குள் நுழைந்தேன். நான் அவர் முகத்தை பார்த்ததும்,அவர் ஏதோ கோபமாய் இருப்பதை உறுதிபடுத்தியது.

“வாங்க துரை சத்துணவு உங்களுக்கு இரக்கம் போவாதுங்களோ. நான் சொல்வதறியாது திரு, திருவென்று விழித்தேன்.என் பார்வையை அம்மாவின் திசையை நோக்கி திருப்பினேன். “நான்  பார்த்ததும் இவன் அந்த சோத்த இந்தாண்ட கொஞ்சம் வீசுறான்….அந்தாண்ட கொஞ்சம் வீசுறான்” என்று ஆவேசமானாள்.

     “நீயென்ன பெரிய ராஜ ராஜ சோழன்னு நினைப்பா.அவனவன் ஒரு வேலை சோத்துக்கு அல்லாடுகிறான்.உன்னையெல்லாம் கட்டிவச்சி தோலை உரிக்கணும்.படுவா…டேய் நா பேசிகிட்டுருக்கேன் என்னைப்பாரு என் கண்ணப் பாத்து பேசுடா” என்று அதட்டினார்.

வார்த்தை ஏதும் வரவில்லை நான் மவுனமானேன்.என் சொற்கள் கண்ணீராக மாறின.

“என்னடா பேசிக்கிட்டே இருக்கேன்.சிலை மாதிரி நிக்கிற” என்று பேசிக்கொண்டே கன்னத்தில் பளாரென்று அறைந்தார்.

வழக்கமாக அம்மாவிடம் தான் அடிக்கடி,வெவ்வெறு காரணங்களுக்காக நானும், அண்ணனும் அடி வாங்குவோம்.அப்பா நினைவு தெரிந்து அடித்ததே இல்லை.இவ்வளவு கோவமடைந்து பார்த்ததும் இல்லை.என் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.

“சோறு போடாத நாய்க்கு பட்டினியா கிடந்து சாகட்டும்” என்றார்.போ கண்ணு முன்னாடி நிக்காத.நாய்…நாய்…அறிவுகெட்ட நாய்…

நான் போய் வெளியில் அமர்ந்து கொண்டேன்.தாத்தா என்னாச்சு என்று திரும்பத் திரும்ப கேட்டார். யாரையும் நான் அருகில் அண்டவிடவில்லை.சாலையில்போய் கொண்டிருந்த வாகனங்களின் ஓசை கேட்கவேயில்லை.

மணி ஒன்பதரைக்கும் மேலானது. தூங்கும் நேரம் வந்தது. அம்மாவோ,அப்பாவோ இன்னும் சாப்பிடவில்லை.அவர்கள் முகம் வாடியிருந்தது. தாத்தா காட்டுக் கொட்டாய்க்கு போனார். மாடுகளை பார்த்துக் கொள்ள சென்றுவிட்டார்.

“அவனை கூப்பிட்டு சோறு போடு” என்றார் அப்பா.அதை என் காதில் விழுமாறு சத்தமாக கூறினார்.

(முற்றும்)

Exit mobile version