அவளின் பக்கத்து நியாயங்கள் – ந. செந்தில்குமார்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 84 அவளின் பக்கத்து நியாயங்கள் – ந. செந்தில்குமார்

காலை ஏழு மணிக்கெல்லாம் கோடை வெயில் பல்லைக்காட்ட ஆரம்பித்தது. வாசலுக்கு நீரிறைத்துவிட்டு, கீழே விழுந்து இருந்த புளிய மரத்து இலைகளைக் கூட்ட ஆரம்பித்தாள் பார்வதி.

“அக்கா டீ சாப்டுறேளா?” என்று கேட்டுக்கொண்டே கையில் டீ டம்ளரோடு வந்து திண்ணையில் அமர்ந்தாள் வினோதினி.

“நீ சாப்டு வினோதினி. எனக்கு வேணாம். இப்போதான் குடிச்சிட்டு வெளிய வரேன். இந்த ஒண்டிக்குடித்தன வாடகை வீட்டை விட்டுத் தொலைய ஒரு காலம் வர மாட்டிங்குது. நேத்து நைட் என்ன நடந்ததுன்னு பாத்தயா?” மேல் நோக்கி இருந்த சீமாரின் அடிப்பகுதியைத் தலைகீழாகத் திருப்பிக் கையில் ரெண்டு தட்டுத்தட்டிவிட்டு மீண்டும் சீமாரின் நுனிப்பகுதிகளைக் கோபத்தில் உடைந்து போகும்படிக்கு அழுத்தி வாசலைக் கூட்ட ஆரம்பித்தாள் பார்வதி.

“என்ன பண்றது பார்வதி அக்கா? ஊருல இல்லாத அக்கிரமமெல்லாம் இங்கதான் நடக்குது. நம்ம ஆத்துல வளர்ற குழந்தைங்க இந்தக் கருமத்தைப் பார்த்துத்தான் வளர வேண்டி இருக்கு. அந்த மனுஷன் கிட்ட வீடு மாத்தச் சொன்ன எங்க கேக்குறார்?. நைட்டு யாராச்சும் உதவிக்குக் கதவைத் தட்டினாக் கூடத் திறந்து வெளிய வர  நேக்குப் பயமா இருக்கு” திண்ணையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டே பதில் அர்ச்சனை செய்யத் தொடங்கினாள் வினோதினி.

“வீட்டு ஓனர் கிட்டச் சொன்னா காதுலயே போட்டுக்க மாட்டேங்குறாரு? அவருக்கு வாடகை தான் முக்கியம் போல. அவருக்கும், இவளுக்கும் என்ன தொடர்போ? எதைக்காட்டி எல்லாத்தையும் மயக்கி வெச்சுருக்காளோ?” வாய் கூசாமல் கற்பனை அம்பை ஏவினாள் பார்வதி.

“அந்த ஆளுக்கு இருக்குற வசதிக்கு, இந்தப் பாழுங்கிணத்துல வந்து விழுவாருன்னு நினைக்குறேலா? ச்சான்ஸே இல்ல. இந்த மூஞ்சிக்கெல்லாம் ரெண்டு பரோட்டாவும், இட்லியும் வாங்கிக் கொடுக்கறவாலே போதும். விதி கெட்ட ஈக்கள்தான் வந்து இவளை மொச்சிண்ட்டுபோகும்” சிரித்துக்கொண்டே சொன்னாள் வினோதினி.

“நமக்கு எதுக்கு ஊர் வம்பு. எப்படியோ நாசமாப் போகட்டும். தாயைப்போல பிள்ளை, நூலைப் போல சேலை. ஏதோ பத்தினியாட்டம் பேசிட்டுத் திரிஞ்சா. எனக்கு என்னமோ இவளோட முதல் புருஷன் செத்ததுக்கும், ரெண்டாவது புருஷன் குடிச்சிட்டு வந்து டெய்லியும் அடுச்சதுக்கும் இவ நடத்தை தான் காரணமா? இருக்கும்னு தோணுது”  என்றாள் பார்வதி.

“இருக்கலாம், இருக்கலாம். அது தெரியாம அவன் அடிக்கும் போதெல்லாம் நீங்கதான் பாவம் குறுக்கப் போயி சப்போர்ட் பண்ணிண்டு இருப்பேல்” என்றாள் வினோதினி.

வெளியில் தன்னைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பார்வதி மற்றும் வினோதினியின் வார்த்தைகள் ரோகிணியின் காதுக்குள் கந்தக அமிலமாய் நுழைந்தது. ஃபெட்டை விட்டுக் கீழே இறங்கவோ?  கதவைத் திறந்து வெளியே போகவோ? இப்பொழுது வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு அப்படியே அருகில் தூங்கிக்கொண்டிருந்த தன் மகளின் அருகே அமர்ந்தாள் ரோகிணி.  கடந்த சில மாதங்களாகத் தினமும் காது கூசப் பேசும் இவர்களின் பேச்சைக் கேட்டுக்கேட்டுச் சலித்துப் போயிருந்தது அவளின் மனது.

எது ஒன்று வேண்டாம் என்று இத்தனை நாள் ஒதுங்கி இருந்தேனோ? எது ஒன்று தன் வாழ்நாளில் நடக்கவே கூடாது என்று இத்தனை நாள் நீரின்மேல் மேலிட்ட தண்ணியாய் விலகி விலகி இருந்தேனோ? அதுவே என் வாழ்க்கையில் தேடி வந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டே கட்டிலில் மீண்டும் படுத்து யோசிக்க ஆரம்பித்தாள் ரோகிணி.     

எந்த ஒரு வார்த்தையை என் அம்மாவைப் பார்த்து ஊர் சொன்னதோ?, எந்த ஒரு வார்தையைத் தன் வாழ்நாளில் கேட்கக் கூடாது என ஆசைப்பட்டேனோ? அதையெல்லாம் கடந்த ஆறு மாதங்களாகக் சகஜமாய்க் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் நான்.

எந்த ஒரு வேலையைத் என் அம்மா என்னிடம் முதன்முதலில் தயக்கத்துடன் கொடுத்தாளோ? அதே வேலையை இன்னும் அதிகப் பதட்டத்துடன், தயக்கத்துடன் என் மகளிடம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன் நான்.

எந்த ஒரு பெயர் எடுக்கக்கூடாது என முதல் திருமணத்தின் தோல்விக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டேனோ? அதையும் தாண்டித் துரத்தி வருகிறது இந்த வாழ்க்கை. எதை எதிர்ப்பார்த்தேனோ? அது கிடைக்காமல் அல்லல்படும் என் துயரம், நினைத்தது எல்லாம் நன்றாகக் கிடைத்துப் போன பக்கத்து வீட்டு அக்கா பார்வதிக்கும், வினோதினிக்கும் புரிய வாய்ப்பில்லை.

எதற்காக என் அம்மா இந்த வார்த்தைகள் இடம் கொடுக்கும் இடத்திற்கு வந்தாள். எதற்காக இன்று அதே இடத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன். எதிர்பார்த்த ஒரு வாழ்க்கை கிடைக்காமல் போய்விட, தனித்து வாழத்தொடங்கும் பொழுதினில் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளப் போராடும் மனதிற்குள் தென்றலாய் வந்து சேரும் அரவணைப்புகளில் பெண்மைகள் சிக்கிக் கொள்ள வந்து சேர்ந்து விடுகிறது இந்த அவலப்பெயர்.

என் அப்பா, அதாவது என் அம்மாவின் மாமன் மகன் செவிடனும், ஊமையனுமாகப் பிறந்ததில்  என் அம்மாவின் தவறு என்ன இருக்கிறது? பதினாறு வயதில், வயதிற்கு வந்த இரண்டே வருடத்தில் ஆயிரம் கனவுகளோடு பாவாடை, தாவணியுடன் பருத்தி மில்லுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த அவளின் எதிர்பார்ப்பைச் சற்றும் புரிந்து கொள்ளாமல், நிசப்தம் நிறைந்த ஒரு வாழ்க்கைக் கட்டமைப்பிற்குள் அவளைத் தள்ளிவிட்டது யார்?

அந்த நிசப்தம் நிறைந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அரைகுறையாக அவள் வாழக் கற்றுக்கொள்ள நினைக்கும் போது, வறுமையின் கோரம் வயிற்றைக் கிள்ள, வாழ வழியைத் தேடி வீட்டுவேலைக்கு அவள் ஓட ஆரம்பித்த நாட்களில், ஊமையனுக்கும், செவிடனுக்கும் சொந்தமான அவளின் அழகைச் சுற்றி உள்ள கைகள் அள்ளத் துடித்தபோது, துண்டிலின் கூர்மையில் சிக்கிய மீனாய் முதன்முதலில் அவள் அகப்பட்டபோது அவளைக் காப்பாற்ற அங்கு யார் இருந்தார்கள்?

போராடி மீண்டும் குளத்தில் குதிக்க அவள் அன்று  முயன்று இருந்தால், துண்டிலின் கூர்மையில் அவளின் உடல் சிதைக்கப்பட்டு இருந்திருக்கும். வாழ முடியாதபடி அவளின் வாய் இரண்டாகக் கிழிக்கப்பட்டு இருக்கும். அடக்கமாக இருந்ததால் அள்ளிய ஒருவனிடம் தொட்டி மீன் ஆகிப்போனாள் என் அம்மா. என்ன? நிரந்தரமாக ஒரே தொட்டியில் இருக்க அவளுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தொட்டிக்குச் சொந்தமான மீன் வந்து இடையூறு செய்த போதெல்லாம், வேறொரு தொட்டிக்கு உயிர் பிழைக்கத் தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டாள்.  காற்றில் கரைந்த ஊதுபத்தியின் மணம், மீண்டும் வா என்று சொன்னால் உருவான இடத்தில் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ளுமா என்ன? விழுந்த சேற்றில் அன்று அவள் உழல காவல் காக்கும் நாயாக மாறிப்போனவள் நான்.

பாவக்காசு கடையில் செல்லாதா என்ன?, இலஞ்சப் பணத்தில் வாங்கிய இனிப்பு வகை கசக்குமா என்ன? சேற்றில் முளைத்த செந்தாமரை துர்நாற்றம் வீசுமா என்ன? கற்பு நெறியோடு வளர ஆரம்பித்தேன் நான். பள்ளி, கல்லூரி என ஒழுக்கமாய்ச் சென்று வந்த என்னை, அன்பு எனும் போர்வையில் மூடி, காதல் எனும் வலையில் விழவைத்தான் ஒருவன். அவனை நம்பிக் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு திருமண வாழ்க்கையில் ஆசையாய் அடியெடுத்து வைத்தவள் நான்.

இன்று என்னைக் கரம் பிடித்தவன் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், நீதான் உலகம் என்று என்னைச் சுற்றிச் சுற்றி வந்த என் காதலன் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், என்னைத்தான் நிலவெனச் சுற்றி வந்து கொண்டிருந்த அந்த பூமியின் சுழலை அந்த திடீர் விபத்து நிறுத்திவிடாமல் இருந்திருந்தால், கட்டிய அவன் மட்டும் அகால மரணத்தில் செல்லாமல் இருந்திருந்தால் நானும் இன்று கண்ணகி தான்.

இனி எதுவும் வேண்டாம் என அமைதியாக இருந்த என்னை “ஏண்டி, உனக்கென்ன வயசா ஆயிடுச்சு?”, “இதுக்கப்புறம் வாழ்க்கை முழுக்க இப்படியேவா தனியா இருக்கப் போற?”, “உனக்குன்னு பேர் சொல்ல ஒன்னு வேணாமாடி” எனச் சொன்ன இதே பார்வதி அக்காவின் வாய், இரண்டாவது திருமணம் நிச்சயிக்கும்போது என் அருகில் தோழியாக நின்று வாழ்த்துத் தெரிவித்த வினோதினியின் வாய் இன்று இப்படிப் பேசுவதில் நிறைந்து இருக்கிறது ஆச்சரியம்.

‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்ற வார்த்தைக்கு ஏற்ப, போய் விழுந்த இரண்டாவது கேணியும் சாக்கடையாய் மாறிப்போக உள்ளே இருந்து துர்நாற்றம் பிடித்துச் சாக விருப்பம் இல்லாமல்,  குதித்த கடனுக்கு மேனியில் ஒட்டிக்கொண்ட சேற்றைப்போல் பிறந்த ஒரேயொரு பெண் குழந்தையுடன்  மீண்டும் பழைய தொட்டிக்கே திரும்ப வந்தவள் நான். இங்கும் துர்நாற்றம்தான். ஆனால், வாக்குப்பட்டுப் போன தொட்டிக்கு, இவ்வளவு நாள் வாழ்ந்து பழக்கப்பட்ட தொட்டி பரவாயில்லை என்று நினைத்து தனித்து வாழப்பழகினேன்.

பம்பரமாய்ச் சுழலும் பகல் பொழுதிலும் சரி, களைப்புற்றுச் சுருண்டு படுக்கும் இரவுப் பொழுதிலும் சரி, முப்பதின் தொடக்கத்தில் மீதம் இருந்த என் இளமையை அபகரிக்கப்போராடின  சில கயவஞ்சகர்களின் கூட்டம்.

பெற்ற ஒன்றுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து தனித்து வாழ நான் தொடங்கினாலும், பாழாய்ப்போன இந்தத் தனிமை என்னைப் பாடாய்ப்படுத்தியது. தன் வீட்டில் உள்ள தங்கச்சியின் மீதுள்ள பாசம், அவளுடன் சிறு வயதில் இருந்து விளையாடும் என் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காமமாய் மாறிப்போனது என் தோழியின் அண்ணனுக்கு. எத்தனை முறை காரி முகத்தில் துப்பினாலும் விரட்டிக்கொண்டு வரும் அவனின் பிடியில் இருந்து தப்பிக்க நான் போராடிய போராட்டத்தில் வெற்றி கண்டுவிட்டேன்.

கறிக்குழம்பு வைக்கத் தடியைக் கையில் தூக்கிக்கொண்டு விரட்டும்போது தப்பித்து உயிர்பிழைத்த கோழிகளை, ஆசையாய் அழைத்து உண்ணக் கம்பும், அரிசியும் போட்டு பிடிப்பதுபோல், அன்பு காட்டிய ஒருவனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன் கடந்த ஆறு மாதங்களாக.

செய்வது எல்லாம் தவறு என்று தெரிந்தாலும், என் மகளையே யாரவது வருகிறார்களா? என்று பார்க்கக் காவலுக்கு வைப்பது மகாபாவம் என்று தெரிந்தாலும் கேட்க மாட்டேன் என்கிறது இந்த பாழாய்ப்போன உணர்ச்சிகள். முதலில் அங்கும் இங்கும் ஒதுங்கிப்  பயந்து பயந்து செய்தது அரசல், புரசலாக ஒரு சிலருக்குத் தெரிந்து, இன்று காட்டுத்தீபோல்  பரவிக்கிடக்கிறது ஊர் முழுவதிலும்.

இரண்டு வருடத்திற்கு முன்பு என்னை அள்ளத் துடித்த என் தோழியின் அண்ணனின் கைகள் கண்ட தோல்விக்கு இன்று தினமும் நெருப்பை உமிழ்ந்து வெற்றி காண்கிறது அந்த உத்தமனின் நாவுகள்.  

“ஆம்பளைக்குத்தான் அறிவில்ல பொம்பளைக்கு எங்க போச்சு புத்தி?”, “அவன்தான் ஆம்பள அப்படியிருக்கான் இவளுக்குக் கொஞ்சமாச்சும் அறிவு வேணாமா?” என எதுக்கெடுத்தாலும் பெண்மையின் கற்பை மட்டும் குறை சொல்லும் அனைவரது நாவுகள், விதிமீறும் எந்தவொரு ஆணின் திமிரை அடக்கவும் துணிவது கிடையாது. இரண்டு வருடத்திற்கு முன்பு  தனியாக நடந்து வரும்போது, என் தோழியின் அண்ணன் என்மேல் கைவைக்கும் போது “ஐயோ என்னைக் காப்பாத்துங்க” என்று நான் அலறிய போது, வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த சுற்றுப்புறம் இது. 

எல்லாரும் கேட்கலாம் ஒரு வயசுப்பையனின் வாழ்க்கையைக் கெடுக்கலாமா? ரெண்டு கல்யாணம் முடுச்ச உனக்கு அறிவில்லையா? என.  நான் அவனை என்றும் என்னை நாடி வர வற்புறுத்தியதில்லை, அன்பு காட்டு எனக் கேட்டதில்லை, எனக்கு அதைக்கொடு, இதைக்கொடு என்று அவனிடம் ஒருநாளும் யாசகம் பெற்றதில்லை.

இப்பொழுதும் சொல்கிறேன் என்னைக் கைவிடமாட்டேன், உன்னை ஆயுள் முழுக்கப் பாதுகாப்பேன் என அவன் கொடுத்த வாக்குறுதியில் எனக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லை. அவன் விரும்பி மூன்றாவதாக ஒரு வாழ்க்கை கொடுத்தால் அவனுடன் நான் சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போகிறேன். இல்லையென்றால் விரும்பும் வரை அவன் உண்ணும் பலகாரமாகக்கூட நான் இருந்துவிட்டுப் போகிறேன். நான்கு நாய்கள் வந்து வீட்டின் வாசலில் முன்னால் குறைப்பதைவிட, காவலுக்கு ஒரு நாயை வைப்பதாக அவனை நான் நினைத்துக்கொள்கிறேன். 

இது உங்கள் பக்கத்தில் அநியாமாகத் தெரிந்தால் எனக்குக் கவலை இல்லை. இதெல்லாம் உங்களின் பார்வையில் பாவமாகத் தெரியலாம், அருவருப்பானதாகத் தெரியலாம், நான் ஒரு கேவலமான பிறவியாகத் தெரியலாம். “இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை நீ வாழ வேண்டுமா?” என நீங்கள் கேள்வி கேட்கலாம், என் பெண் குழந்தையின் வாழ்க்கையை நினைத்துக் கவலைப்படலாம்.   நீங்கள் இதெல்லாம் அநியாயம் என்று ஆர்ப்பரிக்க வேண்டாம், கலிகாலம் என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டாம், என்னைப்பற்றியும் என் குழந்தையைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

நான் இரண்டாவது கணவனிடம் தினமும் அடி வாங்கும் போது எப்படி வேடிக்கை பார்த்தீர்களோ? அவன் அரிவாள் எடுத்து என்னைத் துரத்திய போது நான் உள்ளே வந்தால் உங்களுக்குப் பிரச்சனை என்று எப்படி உங்களின் வீட்டின் கதவைத் தாளிட்டுக் கொண்டீர்களோ? அப்படியே இப்பொழுதும் செய்யுங்கள்.  

இவன் இல்லையென்றால் இன்னொருவனைத் தேடுவாயா? என்று கேள்வி கேட்காதீர்கள். என்னிடம் அதற்குப் பதில் இல்லை. முதல் திருமணம் நடந்த போது என் காதலன் இறந்து, நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இரண்டாவது திருமணம் செய்யும்போது எத்தனையோ கனவுகளோடு அந்த வாழ்க்கைக்குள் உள்ளே நுழைந்தவள் நான்.

நான்கு பேர் ஆகா, ஓகோ, என்று சொல்லி நடந்த திருமணங்கள் எனக்கு நிலைக்காத போது நீங்கள் அநாகரிகமாக நினைக்கும் இந்த மூன்றாவது உறவு நிலைக்குமென எனக்கு நம்பிக்கை எனக்கில்லை.  இது எல்லாம் அநியாயம் என்று தெருவில் நின்று கூச்சல் போடாதீர்கள். இது என் வாழ்க்கை. இது என் பக்கத்திற்கான நியாயம் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு கட்டிலை விட்டுக் கீழே இறங்கிய பொழுது “அம்மா” என்று கூப்பிட்ட தன் மகளின் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டு “நில்லு தங்கம் அம்மா டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சமையல் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ரோகிணி.

******************

Exit mobile version