வாழ்க்கை!!!- ஆதிமாரிமுத்து தங்கசாமி

One life hand lettering calligraphy. Black background.

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 87 வாழ்க்கை!!!- ஆதிமாரிமுத்து தங்கசாமி

மல்லிகைப்பூவும் மரிக்கொழுந்தும்  மணம் மணக்க ரோசாப்பூ கலந்து சம்பங்கி கோர்த்து  பச்சை மூங்கிலை  பரத்தி நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய அழகிய தேர்  மயில் நேரில் வந்து  நிற்பதுபோல். பார்ப்பதற்கு மிக அழகான தோற்றத்தை தருகிறது அந்த தேர்.

பல மணி நேரம் செலவிட்டு செய்த தேர் ஒருவழியாக இறுதி வடிவமைப்பை நெருங்கும் தருவாயில் “என்ன தம்பி வேலை முடிந்ததா? சீக்கிரம் ஆகட்டும் வானம் கருக்குது “ என்ற குரலுக்கு “இதோ முடிந்துவிடும் ஐயா,,,” என சொல்லிக்கொண்டு அவர் மகனை விரட்டுகி்றார் “ஐயா சொன்னது கேட்டுச்சுல்ல சீக்கிரம்  ஆகட்டும் நல்லா இழுத்து கட்டு ஊர்வலமா போகிறப்ப கட்டவிழ்ந்து விடக்கூடாது,,,, நல்லா கட்டு” என கூறிக்கொண்டே தானும் விரைந்து முடிக்கிறார். ஒருவழியாக தேர் இறுதி வடிவம் பெற்றது. அங்கே இருக்கையில் இருந்த வெள்ளை வேட்டி ஒருத்தர் உடன் அமர்ந்திர்ப்பவரிடம் “ அட அங்கே பாருப்பா சும்மா தேரை செதுக்கிருக்கான்பா நம்ம மணியன்” என சொல்லிகொண்டிருக்கும் போதே இன்னொரு குரல் குறுக்கிட்டு அண்ணே நேரம் ஆகிட்டே போகுது தேர் தயாராகிடுச்சு அடுத்து ஆகவேண்டியதை பாக்கலாமேன்னு சொல்லிக்கொண்டு வீட்டின் உள்ளே செல்ல…அவரைதொடர்ந்து சிலர் ஆமாம்ப்பா வாங்க நாம பார்த்தால் தான் உண்டு என கூறிக்கொண்டு துண்டை தோலில் போட்டபடி உள்ளே செல்ல…. அவர்களை பார்த்தஉடன் ஒரே 

 சத்தம் வீடே ரெண்டு படும் அளவிற்கு!!!,,,

 இருக்காதா என்ன இத்தனை ஆண்டுகள் நம்முடன்  இருந்த பெரியவர் இன்னிக்கு இந்த வீட்டைவிட்டு (உலகை விட்டு) போவதை நினைத்தால் சும்மாவா இருப்பாங்க?!!!

ஆமாங்க இவ்வளவு நேரம் செலவிட்டு நேர்த்தியாக வடிவமைத்த தேர் நம்ம ஊர் பெரியவருக்குத்தான்….வயது கிட்டத்தட்ட 70 கடந்திருக்கும்,,,,, “நேற்று வரையில் நல்லா இருந்த மனுசன் பாவம் இப்படி” ….

என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே துக்கம் தாங்காது தேம்ப ஆரம்பித்தார் வாயில் துண்டை வைத்துக்கொண்டு ஐயாவின் பெரிய மகன் வந்திருந்த உறவுக்காரரிடம். “ஆமாங்கய்யா பாவம் வயலுக்கு போய்விட்டு வந்த மனுசன் வீட்டிற்கு நுழையும் போதே “ஆத்தா மீனாட்சி குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொண்டுவாத்தா” என தன் மனைவியிடம் கேட்டுவிட்டு திண்ணையில் சாய்ந்து உட்காந்தவர் தண்ணீர் கொண்டுவந்த மனைவியிடம் “செத்த இங்கு உட்காரு மீனாட்சி” என சொல்லும் பொழுதே நா தழுதழுத்து போயிருந்தது,,, “என்னங்க என்னாச்சு?” என பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே பக்கத்தில் அமர “ஆத்தா நம்ம வயலில் நெல் இதுவரை இப்படி சாவி அடிச்சதில்லை (சரிவர விளையாது பொக்கு நெல் – *அரிசி உள்ளே இருக்காது*) தண்ணீர் இல்லாமல் நெல் எல்லாம் செத்துப்போச்சு” என சொல்லி் தன் நெஞ்சை பிடித்துக்கொண்டு மனைவியின் மடியில்  சாய்ந்தவர்தான் மனுசன் மறு வார்த்தை பேசவில்லை மீனாட்சி அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு நான்  ஒடி வந்து பார்க்கும் போது…” ஐயா… ஐயா,,,,என ஓ என அழுக ஆரம்பித்தான் வேலைக்காரன் வீராச்சாமி!!!…..

(வீட்டில் வேலைக்காரன் போல வாழவில்லை ஐயாவின் மகன்களை போலதான் இருந்தான் வீராச்சாமி அதனாலோ என்னவோ அவனால் கட்டுப்படுத்த முடியாத அழுகை….) 

 எங்க அப்பாவ தூக்காதீங்க….இங்கவே இருக்கட்டும் என்று என அரட்டி அழும் ஐயாவின் மகள் அலமேலுவை இழுத்து பிடித்துக்கொண்டு அவளது கன்னத்தில் கன்னம் வைத்து அம்மா அழாதே என தோற்றிக்கொண்டு இருக்க அமைதியாய் நடப்பதரியாது தடுக்கவும் இயலாத நிலையில் மீனாட்சி அம்மா சுவரோடு சுவராக,,,,,,,ஐயாவை தேரில் அமர்த்தியாகிவிட்டது,,, இதுவரை வாழ்ந்த வீடு மனைவி மக்கள் அனைத்தையும் விட்டு ஐயா…..

உறவுகள் சிலர் தொலைதூரம்போகனும் எனவே சொல்லிக் கொல்லாமல் செல்ல ஆரம்பித்தனர் (வீடு வரை உறவு!!).

தப்பாட்டம் இசைக்க இடியிடையே சங்கு சத்தம் என ஊரே ஒன்று கூடி தேர் முக்கிய வீதிககளை கடந்து செல்ல அந்த ஊர் இளைஞர்கள் ஐயா பிரிவினை தாங்காது இரவெல்லாம் குடித்த மது போதையில் குத்தாட்டம் ஆட ஆட்டத்தினூடே தேர் அசைந்து அசைந்து  மெல்ல ஊரின் எல்லையை அடைந்தது.

கொல்லி உடைக்கணும் மூத்த மகளை கூப்பிடுங்க என ஒரு பெரியவர் அழைக்க ஏனோ அலமேலு அழுது அழுது சோர்ந்து போய் அப்பாவின் முகத்தை பார்த்து நின்றிருக்க தலையில் மண்கலையம் நீரால் நிரப்பபட்டு…மூன்று சுற்று சுற்றி முச்சந்தியில் உடைக்கபட்ட மண்கலசம். உடைந்தது கலசம் மட்டும் அல்ல அலமேலுவின் மனசும்தான்…..அதுவரை இல்லாதா தெம்பு எப்படி வந்ததோ தெரியவில்லை அப்படி ஒரு அழுகை,,,,,,

இதுவரை வாழ்ந்த ஊரை நோக்கி ஐயாவின் முகம் இருக்கும்படி தூக்கிவந்த தேர் இப்பொ திசை மாற்றி தெற்கே திருப்ப கொல்லி உடைக்கும் இடம் வரை முகம் வாழ்ந்த ஊரை நோக்கி இருக்கும்… கொல்லி உடைத்தபின் ஊருக்கு முதுகைக்காட்டியபடி தேர் திசை திருப்பி பயணிக்கும் ( ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு தெற்கு திசையில் தான் இருக்கும்) மனைவி மகள் பெயர்த்தி மற்றும் உறவு பெண்கள் அனைவரும் வடக்கு நோக்கி வீட்டுக்கு நடக்க…

(வீதி வரை மனைவி!!!) (பெண்கள் சுடுகாடு செல்வது அவர்களது இறப்பில் மட்டுமே!!!)

ஆண்கள் மட்டுமே இப்போ அய்யாவின் பின்னே செல்ல அழுகை சப்தம் சற்றே ஓய்ந்திருந்தது…பெண்கள் வீட்டை நோக்கி நடக்க அய்யாவின் ஊர்வலம் வெடி முழங்க ஆட்டம் அமர்க்களமாக சற்றும் குறையாத வேகத்தில் ஆடிய இளைஞர்கள்,,,,, ஆங்காங்கே அமைதியாகவும் சிலர் அய்யாவின் புகழ் பேசிகொண்டும் நடக்க,,, மூத்த மகன் கையில் புகை மூட்டப்பட்ட கொல்லிப்பானை புகையை கசியவிட்டுகொண்டு செல்ல கண்கள் சிவந்து ஏங்கி ஏங்கி அய்யாவை பார்த்தவாறு நடக்க,,, மற்ற நான்கு மகன்களும் கவிழ்ந்த தலை நிமிராமல் தத்தம் மனதில் ஐயாவின் நினைவை அசைபோட்ட வண்ணம் செல்ல…. (ஐயாவின் மகன்கள் ஐவரும் பஞ்சபாண்டவர்களுக்கு நிகரானவர்கள்) 

ஒருவர் மட்டும் தன் கையில் இருக்கும் பையில் இருந்து நவதானியத்தை ஒவ்வொன்றாக விதைத்துக்கொண்டு வருகிறார்,,,, ( பாரம்பரியமாக செய்யப்படும் செயல் இது) *காரணம் கேட்டவரை  பலர் பல்வேறு சொல்ல கேட்டதுண்டு* 

இறந்தவர் ஆவியாக இரவில் வீட்டை நோக்கி வருவாராம்… வரும்போது நம்ம வீட்டு சொத்து வீணாக கிடப்பது கண்டு அதை தன் குடும்பத்தில் ஒப்படைக்க  ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து முடிக்கும்முன் விடிந்து விடும் மீண்டும் அவர் ஊருக்குள் வரமாட்டார்**

என சொல்கிறார்கள் (எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை) 

ஒருவழியாக ஊர்வலம் சுடுகாட்டை அடைந்ததும் ஆர்ப்பரித்த ஆட்டம் அடங்கியது,,,கொட்டிய மேளமும் முழங்கிய சங்கும் முடங்கியது….அழகாக அலங்கரிக்கப்பட்ட தேர் இப்போது வெறும் மூங்கில் வளைவுகளும் மாலை கோர்க்கபட்ட வாழை நார்களும் என காட்சிதர ஐயா மட்டும் அப்படியே அயர்ந்து உறங்குவதுபோல முறுக்கிய மீசையுடன் ஒய்யாரமாக இன்னும் தேரில்……

“என்னப்பா ஐயாவிற்க்கு நல்ல சந்தன கட்டை நிரப்பி அருமையா எரிமேடை போட்டிருக்க போல” என வெட்டியானை பார்த்து கூட்டத்தில் பெரியவர் ஒருவரின் குரல் கேட்டு 

வெட்டியான் “ஆமாங்க நம்ம ஐயா மணக்க மணக்க போகனும்ல அதனாலதான் என சொல்லி வேலையை தொடர,,,,

ஐயாவின் மகன்கள் தலைமுடி காணிக்கை செலுத்த சொல்லுங்கப்பானு ஒரு குரல்.  ஐவரும் வரிசையில் அமர தலைமுடி மழிக்கப்பட்டு  தயாராகினர்

 (கோவிலுக்கு நேர்த்திக்கடன் செய்து மொட்டை போட்ட சிலர் – உயிரை கொடுத்த சாமிக்கு தன் தலை மயிரை காணிக்கை கொடுத்தேன் – என சொல்வதுண்டு) ஆனால் இப்போ எடுத்திருக்கும் மொட்டைதான் அந்த சொல்லுக்கு சரியான பொருள்.

“அட என்னப்பா அது பக்கதில புகையுது யாருப்பா?” அது என வெட்டியானை நோக்கி ஒருவர் கேட்க “ அதுவாய்யா… நம்ம கடைத்தெருவில ஒரு வயதான பிச்சைக்காரர் செல்வமுத்து இருந்தார்ல அவர் இறந்து அனாதையா கிடந்தார்ங்கய்யா ராத்திரி நானும் என் மகன்களும் தான் இவர கட்ட வண்டில போட்டு கொண்டுவந்து எரித்தோம்” அந்த களைப்பில்தான் ஐயாவின் மேடைக்கு கொஞ்சம் தாமதமாகிடுச்சு”. என சொல்லிக்கொண்டு விரைந்து பணி செய்யலானார்.  (சமரசம் உலாவும் இடம் இதுதான்! ஆண்டியும், அரசனும் இங்கே ஒன்றுதான்!!).

சந்தன மரங்கள் நிரம்பிய தகன மேடையில் ஐயாவின் தலை வடக்கே கிடத்தப்பட்டு விண்ணை நோக்கி முகம் பார்க்க முழுவதுமாக மறைக்கப்பட்டு முகம் மட்டுமே தெரிய வாய்க்கரிசி போடுங்க என வெட்டியான் சொல்ல ஐந்து பிள்ளைகளும் வரிசையில் நின்று ஐயாவிற்க்கு அனைத்து சடங்குகள் செய்திட்ட பின்  “ஐயாவின் முகத்தை கடைசியாக பார்ப்பவர்கள் பாத்துகோங்க” என்ற வெட்டியான் குரல் கேட்டு ஆங்காங்கே அமர்ந்திருந்த அனைவரும் வரிசையாக அமைதியாக ஐயாவின் முகம் கண்டு கண்கள் குழமாகி கைகொண்டு வாய்மூடி மவுனமாக நிற்க ”ஐயா மூத்தவர் இங்க வாங்க” என வெட்டியானின் குரலுக்கு ஐயாவின் மூத்த மகன் முன் செல்ல தோலில் ஒரு மண்பானை கொடுத்து மூன்று முறை சுத்திவாங்க என சொல்ல ஒவ்வொரு சுற்றுக்கு ஒரு துளை என அரிவாள் கொண்டு வெட்டியான் துளையிட வழிந்தது நீர் மண் பானையில் இருந்து மட்டும் அல்ல அங்கே இருந்த அனைவரது கண்களிலும் தான்…!!! 

அதே வேலையில் 

வானில் இருந்து புழப்பட்ட ஒரு ஒளி மின்னல் அந்த மாலை இருளை சற்று அகற்றி பிழக்க  இடித்தது இடி (வானம் தன் நெஞ்சில் அடித்து கொண்டது போல இருந்தது!) அழ ஆரம்பித்து மழையாக,, ஐயாவின் மறைவு அந்த வானையே அழவைத்துவிட்டது என ஒருவர் சொல்ல.. இருக்காதாபின்ன கடைசிகாலம்வரை யாருக்கும் தொல்லைதராத ஆத்மா தர்மகர்த்தா நம்ம ஐயா என மற்றொருவர்  சொல்ல அடக்கமுடியாத அழுகையுடன் 

 மூன்றாம் சுற்று முடிந்ததும் அந்த பானையை அப்படியே போட்டுடைக்க., ஐயாவின் முகம் முழுவதும் மறைக்கப்பட்டு மூத்தமகன் கையில் எரிகின்ற கொல்லி கட்டையை கொடுத்த வெட்டியான் “ தாய்மாமன் வந்து பக்கதில நில்லுங்கள் என்றார்…” சிதைக்கு முதுகை காட்டியபடி தன் கையில் இருந்த கொல்லியை கிடத்தப்பட்ட ஐயாவின் சந்தன மேடைக்கு உணவாக்க கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து சந்தன மேடை. அதே கணம் ஓடி வந்து அரவணைத்து மாப்பிள்ளை நான் இருக்கேன் உனக்கும் உன் தம்பிகளுக்கும் என் சகோதரிக்கும் என ஆறுதல் கூறுவது போல அந்த தாய்மாமனின் இறுக்கிய அரவணைப்பில் சற்றே ஆறுதல் அடைந்தாலும் ஏனோ ஏறி விளையாடிய தன் தந்தையின் உடல் இன்று தகனத்தில் எரிவதை தாங்காது துடிக்கலானார்.

(தாய்மாமன் உறவு கடைசி வரை அவசியம் என சொல்வது சரிதான்)

சடங்குகளை முடித்து விட்டு வீட்டை நோக்கி கொட்டும் மழையில் நனைந்து கொண்டே செல்லும் வழியில் ஊர் பொதுக்குளத்தில் குளித்து முடித்து வீட்டையடைந்ததும் வாயிலில் வைத்திட்ட நீரில் கால் கழுவி உலக்கையை தாண்டிவிட்டு கொல்லிவைத்த மூத்த மகன் கையில் வேப்பிலை கசாயம் கொடுக்க அதை அருந்தி விட்டு., இன்னும் பல சம்பிரதாயங்கள் என்று நடந்தேரின அங்கே அம்மாவின் முகம் காண முடியாத நிலையில் மகன்கள்…

அடுத்தநாள் காலையில் பால் தெளிக்க சுடுகாடு சென்று எரிந்த ஐயாவின் சிதையில் சாம்பலாகிய உடலில் மிஞ்சிய சில எலும்பு துண்டுகளை எடுத்து சாத்திரங்கள் செய்து ஓடும் நதியில் கலந்து விட்டு விடைதெரியா வாழ்க்கைக்கு விதி முடிந்தது. என மனதை தேற்றிக்கொண்டு அவரவர் தத்தம் பணியை தொடரலானர்…..

தண்ணீர் குடத்தில் பிறந்து..

நிலத்தில் வாழ ..

காற்றை சுவாசித்து ; மூச்சு  நின்றதும்

தீக்கிறையாகி உடலைவிட்டு பிரிந்த ஆத்மா

விண்ணை நோக்கி பயணிக்கும்…!!!

இப்படி பஞ்சபூதங்கள் தான் நம்மை ஆட்கொள்கிறது என்பதை அறியாமல் வாழும் காலத்தில் எத்தனை அட்டகாசம் ஆணவம் திமிர் நான் என்ற மமதை…கொண்டு வாழும் மனிதா!!

 சற்றே சிந்திப்போம்  இதுவரை வாழ்ந்த காலம் எப்படியோ… இனிமேல் வாழப்போகும் காலத்திலாவது மற்றவர்கள் பயன்படும்படி வாழ்வோம். இயற்கையை எஞ்சி என்னால் ஒன்றும் ஆகாது!!! என எவனொருவன் சிந்திக்கின்றானோ அதுவே ஒரு நல்ல மாற்றமாக அமையும். நண்பர்களே! வாருங்கள் வாழ்ந்து காட்டலாம். பயனுள்ளவர்களாக…

*************

Exit mobile version