வஞ்சியவளின் இடர் -செளந்தர்யா P.S

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 92 வஞ்சியவளின் இடர் -செளந்தர்யா P.S

சென்னையின் மையத்தில் அமைந்துள்ள அவ்விடுதியின் ஓர் அறையினுள் அலுவலகத்திற்கு செல்லும் 

பரபரப்பில் அங்கும் இங்கும் நடமாடிய படி தன் கைப்பையினுள் சில கோப்புகளையும் கைபேசியையும் எடுத்து 

வைத்தாள் இசை. அதே அறையில் இவளை தூக்கக் கலக்கத்துடன் கண்டவாறிருந்த  சரிதாவிடம் ” சரிதா 

இன்னைக்கி நா வர நேரமாகும் நீ பத்திரமா கல்லூரிக்கு போயிட்டு வா ” கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் 

அறையை விட்டு வெளியேறினாள். விடுதியிலே காலை மற்றும் இரவு உணவு வழங்கி விடுவர் எனவே 

சாப்பிடும் அறை நோக்கிச் சென்றாள். 

அங்கு ஏற்கனவே பலர் உண்டு கொண்டிருக்க, இசை காலை உணவை பார்சல் கட்டி தருமாறு கூறி 

வாங்கிக்கொண்டு அவசரமாய் பேருந்து நிலையம் நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். இசை வேலை பார்க்கும் 

கே.ஆர் நிறுவனம் இந்நாள் வரை எதிர் நிறுவனமாய் இருந்த எஸ்.எம் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை 

இன்று மேற்கொள்ளப் போகின்றனர். அதற்கான கோப்புகளை இசையை தயார் செய்யும் மாறு கூற, இரவில் 

எல்லா வேலைகளையும் முடித்து தாமதமாகவே தூங்கினாள். பேருந்து நிலையம் வந்தடைந்தவள் தன் கை 

கடிகாரம்தனை ஒருமுறை பார்த்துவிட்டு பேருந்து வரும் திசையை தவிப்பாய் கண்டாள். 

********************************* 

” சிந்து எழுந்திரு இதோட பத்து தடவைக்கு மேல சொல்லிட்டேன் இப்ப நீ எழுந்துக்கல அடுத்தது சுடுதண்ணீ தான் 

எழுடி ” கடாயில் அப்பளம் பொரித்தவாறு தன் மகளிடம் கத்திக்கொண்டிருந்தார் உமா. சுடுதண்ணீர் என்ற 

சொல்லை கேட்டு சடாரென்று எழுந்தவள் கடிகாரத்தை கண்டு ‘ அச்சோ இன்னைக்கி முதல் வகுப்பு என்னைய 

தான மிஸ் பாடம் எடுக்க சொன்னாங்க போச்சு போச்சு ‘ குளியலறைக்குள் சென்று காக்கா குளியல் போட்டு பள்ளி 

சீருடை அணிந்து தலைவாரி இரு பக்கமும் பின்னலிட்டு ரிப்பன் வைத்து மடித்து கட்டி தன் பையின் உள்ளே 

நேற்று படித்த தமிழ் மற்றும் கணக்கு புத்தகங்களை வைத்து மூடி அதனை தோளில் மாட்டி சாப்பிட அமர்ந்தாள் 

சிந்து ” அம்மா சீக்கிரம் சாப்பாடு போடு ”  

” இருடி வரேன் இதுக்கு தான் காலைல சீக்கிரம் எழுந்துக்கனும்னு சொல்றது ” முறைப்புடன் தட்டில் மூன்று 

இட்லி மற்றும் கொத்தமல்லி சட்னியை பரிமாறினார். தாயின் முறைப்பை எல்லாம் தூசி போல் தட்டிவிட்டு 

மூன்று இட்லியையும் ஐந்தே நிமிடத்தில் சாப்பிட்டு எழுந்தாள். ” மெதுவா சாப்பிடுடி தொண்டை அடைச்சுக்கு 

போகுது ” உமா மதிய உணவு பையை கொண்டு வந்து தர,  

” அதுலாம் அடைக்காது நா இரும்பு பொண்ணு ” கைகழுவி உமாவிடமிருந்து பையை பெற்று கண்ணத்தில் ஓர் 

முத்தமிட்டு சிட்டாய் தன் சைக்கிளில் பறந்தாள் ” ஏ மெதுவா போடி ” என்ற உமாவின் சொல் காற்றில் பறந்தது. 

சிந்துவின் தந்தை அவளின் ஒரு வயதில் கேன்சர் நோயால் இறந்து போக, உமா தன் மகளுடன் தையல் வேலை 

செய்து வாழ்ந்து வருகிறார். 

பயந்தபடி இல்லாமல் நேரத்துடன் பள்ளி சென்று முதல் வகுப்பில் கணக்கு பாடம் நடத்தினாள். சிந்து ஆறாம் 

வகுப்பு படிக்கும் மாணவி, படிப்பில் கெட்டிக்காரி குறும்பிலும் தான். அன்றாடப் பாடவேளை முடிந்து மாலை 

எப்பொழுதும் போல் தோழிகளுடன் அரட்டை அடித்தவாறு சைக்கிளில் பயணம் செய்ய, தன் வீட்டிற்கு செல்லும் 

பாதை வந்தவுடன் அவர்களிடம் விடைப்பெற்று சென்றாள். நாட்கள் அழகாய் நகர ஓர் நாள் உமா உறவினர் 

திருமணம் ஒன்றிற்கு செல்ல, சிந்துவை அழைத்தபோது அவள் நாளை பரிட்சை உள்ளதென்று மறுத்தாள். 

சரியென்று பத்திரமாய் இருக்குமாறு அறிவுறுத்தி சென்றார். இவளும் வாசல் கதவினை சாற்றி விட்டு 

படித்துக்கொண்டிருக்க, அரைமணி நேரம் கழித்து கதவு தட்டும் சத்தம் கேட்டது. சிந்து யாரென்று அறிய கதவை 

திறக்க எதிர்வீட்டு லேகாவின் கணவன் வேலு நின்றுகொண்டிருந்தான். ” மாமா ” சிரிப்புடன் அழைக்க, ” பாப்பா 

அம்மா எங்க ” வீட்டினுள் நுழைந்தவாறு கேட்க, ” அம்மா கல்யாணத்துக்கு போயிருக்காங்க ” 

” அப்டியா சரி இந்தா இன்னைக்கி நானே சமைச்சேன் சாப்டுட்டு எப்டி இருக்கு சொல்லு ” கையிலுள்ள டிபன் 

பாக்ஸை அவளிடம் நீட்டினான். ஆசையாய் அதை வாங்கி திறந்து பார்த்தாள் உள்ளே பூரி கிழங்கு இருந்தது. ” 

படிச்சுட்டு இருந்தியா என்ன ” சோஃபாவின் மேல் உள்ள புத்தங்களை கண்டு கேட்க,  

” ம்ம் ஆமா ”  

” தனியா இருக்க வேண்டாம் நம்ம வீட்டுக்கு வந்து இரு அம்மா வந்ததும் கிளம்பு ” கண்டிப்புடன் கூறி அவளை 

அழைத்து சென்றான். உமாவிற்கு துணையாய் வேலு லேகா தம்பதியரின் இருந்தனர். வேலுவை தன் 

உடன்பிறந்த தம்பி போலவே கருதுவார் உமா. ” லேகா அத்து ” கத்தியவாறு உள் நுழைய வீடே நிசப்தமாய் 

இருந்தது. ” லேகா வெளில போயிருக்கா பாப்பா நீ உட்கார்ந்து சாப்பிடு ” சிந்துவின் கையிலுள்ள புத்தகத்தை 

வாங்கி பக்கங்களை திருப்பி பார்த்தான். சிந்து பூரியை ருசித்து உண்ண, வாயின் ஓரம் மசால் ஒட்டியது அதனைக் 

கண்டு தன் கையை அவள் இதழ் ஓரம் கொண்டு சென்று மெதுவாய் துடைத்து அதை அப்படியே தன் வாயில் 

வைத்து சுவைத்தான்.  

நிமிராமல் உண்ணும் சிந்துவை தலை முதல் பாதம் வரை வக்கிர புத்தியுடன் கண்டு மெதுவாய் அவள் பக்கம் 

சாய்ந்தமர்ந்து தொடை மேல் கை வைத்தான். 

*********************************** 

அலுவலகத்திற்குள் நுழைந்தவள் தன் இடம்தனில் அமர்ந்து காலை உணவை வேகமாய் உண்டு மீட்டிங் நடக்கும் 

அறையினை ஒரு தரம் சரிப்பார்த்து கோப்புகளை சரியாய் வைத்து நிமிர, இரு நிறுவனத்தின் சிஇஓ மற்றும் 

எம்.டி அவர்கள் உதவியாளர் அனைவரும் உள்நுழைந்தனர். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் மீட்டிங் நடக்க, 

ஒருவழியாக நிறுவனத்தின் சிஇஓ இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அனைவரும் கைகுலுக்கி 

தங்கள் மகிழ்வை பகிர்ந்து இதனை கொண்டாட மாலை பார்ட்டி எனக் அறிவித்து விடைபெற்றனர். இசை தன் 

இடத்தில் சோர்வாய் அமர்ந்து சக ஊழியர்கள் மாலை நடக்கும் பார்ட்டி பற்றி பேசுவதையும் மகிழ்வாய் 

இருப்பதையும் இதழ் விரியாச் சிரிப்புடன் கண்டாள்.  

” இசை பார்ட்டிக்கு என்ன கலர் ட்ரஸ் வியர் பண்ண போற நாம இரண்டு பேரும் ஒரே கலர்ல வரலாம் ” இசையின் 

கையை பிடித்து ஆட்டியவாறு மகிழ்வுடன் கூறினாள் சீதா. 

” தெரியலை போய் பார்த்தா தான் முடிவு பண்ண முடியும் என்ன ட்ரஸ் போடுறதுனு நீயே சொல்லு என்ன 

கலர்னு ” 

” ம்ம் ரெட் கலர் ஓகேவா ” 

” சிவப்பா ம்ம் சரி டன் ” ஆள்காட்டி விரலை உயர்த்தி கூறினாள். பின் மாலை ஆகியும் கொஞ்சம் வேலை இருக்க 

சீதாவை செல்லுமாறு கூறி வேலைகளை முடித்து தன் விடுதிக்கு சென்றாள். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு 

பார்ட்டிக்கு தயாராகினாள். சரிதா அவளிற்கு உதவிக் கொண்டே ” இசை பேபி நானும் வரேன் ” மூன்றாவது 

முறையாய் கேட்க,  

” முடியவே முடியாது இப்டி தான் போன தடவை கேட்டியேனு கூட்டிட்டு போனேன் அங்க கண்டதையும் தின்னு 

அடுத்த நாள் புட் பாய்சன் ஆகிடுச்சு ” முறைப்பாய் அவள் கையில் இருக்கும் சீப்பை பிடிங்கி தலைவாரினாள் 

இசை. 

” ஏன்டி ஒரு தடவை அப்டி ஆச்சுன்னா அதுக்காக நா சாப்பிடவே கூடாதா எந்த பார்ட்டி ஃபங்ஷன்லையும் 

கலந்துக்க கூடாதா ” 

” ஆமா ” அவளைக் கண்டு பழிப்புக்காட்டி அறையை விட்டு வெளியேறினாள். சரிதா பாவம் இசை சென்ற 

பின்னும் அவளை வசைபாடிக்கொண்டே இருந்தாள் அவளால் அதை மட்டும் தானே பண்ண முடியும். 

******************************** 

சிந்துவின் தொடையில் கை வைத்தவன் மெதுவாய் தேய்த்து கீழிறக்க போக, ” ஏய் வாண்டு இங்க என்ன பண்ற ” 

லேகாவின் குறளில் பட்டென்று கையை எடுத்து முன் அமர்ந்தது போல் தள்ளி அமர்ந்து கொண்டான். ” லேகா 

அத்து மாமா பூரி செஞ்சு தந்தாங்க சூப்பரா இருந்துச்சு ” சப்புக் கொட்டி கூறும் குழந்தையை ரசித்தாள் லேகா. 

” அப்டியா எனக்கு எங்க பூரி ” கணவனை செல்லமாய் முறைத்து கேட்க, ” உனக்கு லாம் பூரி இல்லை மாமா 

அத்துக்கு பூரி இல்லை தான ”  

” ஆமா ஆமா பாப்பா சொல்ற மாறி உனக்கு இல்லை ” தன் குறளை சரிசெய்து கூறினான். இவ்வாறு அரட்டை 

அடித்து சிந்துவிற்கு படிப்பில் உதவினாள் லேகா. உமா வந்தவுடன் சிந்து தன் வீட்டிற்கு செல்ல, செல்லும் 

அவளை மார்கமாய் கண்டான் வேலு. 

நாட்கள் செல்ல தனியாய் சிந்துவுடன் இருக்கும் சமயமெல்லாம் தவறான கண்ணோட்டத்துடன் அவளின் 

அங்கங்களை பட்டும் படாமல் தொட, முதலில் எதுவும் தப்பாய் உணராமல் பழகிய சிந்துவிற்கு அவன் தொடுகை 

ஒரு மாதிரி இருந்தது.  

ஓர் நாள் உமாவும் லேகாவும் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, சிந்து சமையல் கட்டில் தண்ணீர் 

பருகிக்கொண்டிருந்தாள். அவள் மேல் பின்னிருந்து அணைத்தது போல் நின்று ” பாப்பா எனக்கும் தண்ணீ குடு ” 

என்றான் வேலு. திடீரென அவன் குறள் கேட்டதும் பயந்தவள், அவன் கை தன்மேல் படுவதில் அழுகை வரும் 

போல் இருந்தது. அங்கிருந்து செல்ல வேண்டும் என மனம் தவித்தது. அவசரமாய் தண்ணீரை அவன் கையில் 

திணித்து, ஓடி சென்று தன் அம்மாவின் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.  

சிந்துவின் இயல்பில் மாற்றம் வந்தது, சிரிப்பும் குறும்புமாய் சுற்றியவள் ஒருவித அமைதியுடன் வீட்டினுள்ளே 

அடைந்து கிடந்தாள். பள்ளிக்கு சென்றாலும் அங்கும் அமைதியாய் ஒரு மாதிரியே இருந்தாள். இவளின் 

இம்மாற்றம் ஆசிரியர்களின் கண்ணில் பட என்னவென்று கேட்டும் ஒன்றுமில்லை என்றே கூறினாள். தன் 

மகளின் இம்மாற்றம் தாயாய் பயத்தை உண்டாக்கியது உமாவிற்கு. எது கேட்டாலும் ஓரிரு சொல்லில் பதில் 

கூறி தனியாய் சென்று அமர, லேகாவிடமும் இதனை பற்றி கூறி கவலைப் பட்டார். தனக்கு நடப்பதை 

என்னவென்று புரியாமல் யாரிடம் எவ்வாறு கூறுவதென்று புரியவில்லை அச்சிறு குழந்தைக்கு. அழுகையும் 

பயமுமாய் நாட்கள் சென்றது. வேலுவை கண்டால் ஒளிந்து ஓடி விடுவாள். அப்படியும் அவனிடம் மாட்டும் 

பொழுது அழுவாள். உமா இவள் பயத்தை அழுகையை கண்டு என்னவென்று அவரும் அழுகையுடன் கேட்க, 

என்ன கூறுவதென்று தெரியாமல் மேலும் அழுக, பயந்த உமா அவளை அணைத்து ” ஒண்ணுமில்லை 

ஒண்ணுமில்லை அம்மா கூட இருக்கேன் ” தான் அழுதால் குழந்தை பயந்துவிடுமென்று தன் பயம் அழுகையை 

அடைக்கி மறைத்தார். 

******************************** 

பார்ட்டி நடக்கும் ஹோட்டல் முன் நின்றவள் சீதாவிற்காய் காத்துக் கொண்டிருக்க, தாமதிக்காமல் பத்து 

நிமிடத்திலே அங்கு வந்து சேர்ந்தாள் சீதா. இருவரும் பேசியவாறு உள் நுழைந்தனர். அங்கு தங்கள் அலுவலக 

நண்பர்களுடன் சேர்ந்து பேச்சும் சிரிப்புமாய் நேரத்தை கடத்த, அனைவரும் சாப்பிட சென்றனர். பஃபே முறையில் 

ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க தங்களுக்கு பிடித்தவையை பரிமாறிக் கொண்டு ஐவர் அமரும் இருக்கையில் 

அமர்ந்து பேச்சினூடே சாப்பிட்டு முடிக்க, ஆட்டம் பாட்டமென்று நேரம் செல்ல பார்ட்டி முடியும் நேரமும் வந்தது. 

அனைவரும் விடைப்பெற்று சென்றனர், இசை மற்றும் சீதா இருவரும் பேருந்து நிலையம் சென்று நிற்க, அங்கு 

ஏற்கனவே ஒரு பெண்ணும் ஒரு ஆணும் நின்றுக் கொண்டிருந்தனர். 

முதலில் சாதாரணமாய் அவர்களை பார்த்த இசைக்கு ஏதோ தவறாய் பட அப்பெண்ணை கூர்ந்து கவனிக்கும் 

போது தான் தெரிந்தது அவளை உரசியவாறு நிற்பவன் அவளிடம் எதையோ கூற அவள் முகம் அருவெறுப்பாய் 

சுழிந்து கண்கள் கலங்கியது. கோபமாய் அவர்கள் அருகில் சென்று நின்றவள் ” என்ன பிரச்சினை ” நேரடியாக 

அப்பெண்ணிடம் கேட்க, 

” ம்ம் எனக்கு கம்பெனி குடுக்க மாட்றா அதான் பிரச்சினை நீ குடுக்குறியா ” இசையை மோகமாய் கண்டு 

கூறியவனின் வாய் அடுத்த நொடி சடசடவென ரத்தத்தை பொழிந்தது.  

” சொல்லு இவன் என்ன சொன்னான் உன் கிட்ட ” மீண்டும் அப்பெண்ணை காண, பயத்துடன் இருந்தவள் 

இசையின் செயலில் அவள் பின்னே சென்று நின்று ” என்னை பத்தி கேவலமா வர்ணிச்சு சொன்னான் கா ” 

அழுகையோடு கூறி ” அப்றம் இன்னைக்கி படுக்க எனக்கு கம்பெனி குடுனு கேக்குறான் ” தேம்பியவாறு 

கூறுபவளை முறைத்து ” இப்டி அழாம நா குடுத்த மாறி நீ குடுத்திருந்தினா அடுத்த வார்த்தை இவன் பேசி இருக்க 

மாட்டான் ”  

ரத்தத்தை துடைத்தவன் ” எவ்ளோ தைரியம்டி ஆம்பள மேல கை வைக்குற ” இசையின் தலைமுடியை பற்ற 

வரும் முன்னே அவன் கையை வளைத்து பிடித்து அவன் ஆண்குறியில் பலமாய் ஒரு உதை உதைக்க, வலியில் 

கதறி கீழே விழுந்தான். ” சீதா போலிஸ்க்கு கால் பண்ணு ” கீழே விழுந்தவனின் வயிற்றில் இரண்டு உதை 

உதைத்து ” வலிக்குதா வலிக்கட்டும் உன்ன மாறி நாய்ங்களால பாதிக்கப்படுறவங்களோட வலி இதைவிட 

அதிகம் டா பொறம்போக்கு ” கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே விடாமல் உதைத்தாள். சீதாவே 

இசையின் கோவத்தைக் கண்டு அதிர்ந்து அவள் கையை பிடித்திழுத்து ” போதும் விடுடி செத்துக்கித்து 

போயிடப்போறான் ” 

” சாவட்டும் இந்த மாறி ஜென்மங்க செத்தா தான் நிம்மதி ” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூறினாள். என்ன 

முயன்றும் கோபத்தை அடக்க முடியவில்லை அக்கயவனை இசையிடமிருந்து காப்பாற்றவே காவலர்கள் அங்கு 

வந்து சேர, நடந்ததை சீதா விலாவாரியாக கூற,  இசையை வியப்பாய் கண்டு ” யாரையும் எதிர்பாரத்து 

இல்லாமல் எல்லா சூழ்நிலைகளிலும் பெண்கள் இப்படி தைரியமா எதிர்க்கணும் அதே மாறி யாருக்காவது 

பிரச்சினைனா உடனே நம்மால் முடிந்த உதவியை செய்யனும் அதை விட்டுட்டு வீடியோ எடுக்குறது எல்லாம் 

முடிஞ்சதும் மனசுல பரிதாபம் மட்டும் பட்டுட்டு போறதுனு இருக்க கூடாது …. அந்த இடத்துல தங்கள் 

பிள்ளைகள் நினைச்சு பார்த்தா மனிதாபிமானத்தோட நடந்துக்குவாங்க எல்லாரும் ….. உங்களை நினைச்சா 

பெருமையா இருக்கு இசை வெல் டன் ” பாராட்டி விட்டு தன் பங்குக்கு அடிகளை வழங்கி அவனை இழுத்து 

சென்றனர். 

அப்பெண் இசையிடம் கை கூப்பி நன்றி கூற ” எல்லா நேரத்துலையும் எல்லா சூழ்நிலைகளிலும் உதவிகள் 

கிடைக்காது நமக்கு நாம தான் துணையா இருந்து செயல்படனும் ….. நம்ப பயம் தான் இவங்களுக்கு பலம் 

எதிர்த்து பாரு தெரிச்சு ஓடுவாங்க முடியலையா தப்பிக்க உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணு 

பயந்து அழுந்து சகித்துக்கிட்டு இருந்தா அதையே அட்வாண்டேஜா எடுத்துக்குவாங்க ….. இனி உனக்கோ உன் 

கண்முன்னே வேறு யாருக்கோ இப்படி நடந்தா உன்னால முடிஞ்சதை செய் ” மென்மையாய் அவள் கைப்பற்றி ” 

இங்க நடந்ததை கெட்ட கனவா நினைச்சுக்கோ உன் பேர் என்ன வீட்ல யார் லாம் இருக்கா ”  

” புவனா கா வீட்ல அப்பா அம்மா தம்பி இருக்காங்க ” 

” அப்பா அம்மா கிட்ட இதை சொல்லு மறைக்கிறது நல்லதில்லை அவங்களுக்கு தெரியனும் தன் பிள்ளைகளுக்கு 

நடக்கிற நல்லதும் கெட்டதும் ஆனா  இனி இந்த மாறி சூழ்நிலை ஏற்பட்டா தைரியமா எதிர்ப்பேங்குற 

நம்பிக்கையையும் கொடுக்கனும் அப்ப தான் அவங்க பயமும் போகும் சரியா …. இந்நேரம் வரை என்ன பண்ற 

வீட்டுக்கு போகாம எந்த ஏரியா ” 

” ஃப்ரெண்ட்ஸ் பர்த் டே ஃபங்ஷன்க்கு வந்தேன் கா லேட் ஆகிடுச்சு …. இங்க பக்கம் தான் ஒரு ஸ்டாப் தள்ளி ” 

” ம்ம் கொஞ்சம் கவனமா இரு எங்க இருந்தாலும் ” கூற, இசை ஏறும் பேருந்து வந்தது. புவனாவிடம் கூறிவிட்டு 

சீதா முதலில் ஏற பின்னால் ஏற போகும் இசையை கண்டு ” உங்க நேம் சொல்லாம போறீங்களே ” மென்மையாய் 

சிரித்து ” சிந்திசை ” என்று மொழிந்து விட்டு ஏறினாள் இசை என்கிற சிந்து. விடுதிக்கு வந்தும் நடந்த நிகழ்வே 

மனக்கண்ணில் தோன்றின, கூடவே தன் சிறுவயது நிகழ்வுகளும் 

******************************** 

” அம்மா நாம வேற எங்கையாவது போயிறலாமா ” தன் அணைப்பில் தலைத் தூக்கி கேட்கும் மகளை கண்டு ” 

ஏன்டா இப்டி சொல்ற ” 

” எனக்கு இங்க பிடிக்கலை ” 

” ஏன்டா நாம நீ பிறந்தது முதலே இங்க தான இருக்கோம் இப்ப என்னாச்சு ” 

” மா போலாமா ” விசும்பியவாறு கூற, ” சரி சரி அடுத்த வாரம் உனக்கு பரிட்சை முடிஞ்சு விடுமுறை வருதுல 

அப்ப நா நீ வேலு மாமா லேகா அத்தை எல்லாம் டூர் மாறி எங்கையாவது போயிட்டு வருவோம் சரியா ” 

வேலுவின் பெயரை கேட்டு உடல் நடுங்கியவள் ” வேணாம் வேணாம் நா நீ மட்டும் போலாம் ப்ளீஸ்மா ” 

பயத்துடன் கூற, ஒன்றும் புரியாமல் மகளின் நடுக்கத்தை உணர்ந்து ” சரிடா நாம மட்டும் போலாம் இப்ப சிரி 

பாப்போம் ” கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்க பலநாள் கழித்து வாய்விட்டு சிரித்தாள், அவளை கண்டு 

கண்ணீருடன் தானும் சிரித்தார் உமா. 

சொன்னது போலவே உமாவும் சிந்துவும் ஒருவாரம் ஊட்டி சென்று விடுமுறையை மகிழ்வாய் கழித்தனர். அங்கு 

தான் சிந்து சுதந்திரமாய் எந்த பயமும் இல்லாமல் தன் அன்னையுடன் மகிழ்வாய்  வலம்வந்தாள். தன் மகளின் 

பிரச்சினை என்னவென்று தெரியவில்லை ஆயினும் இந்நொடி அவள் மகிழ்வாய் இருப்பதை கண்டு 

நிம்மதியடைந்தார் உமா. ஒருவாரம் முடிந்து வீடு திரும்பிய சிந்து கொஞ்சம் இயல்புடன் இருக்க, வேலுவும் 

அச்சமயம் வேலை விசயமாக வெளியூர் சென்றுவிட, நிம்மதியுடன் பள்ளிக்கு செல்வது வீட்டில் உமா மற்றும் 

லேகாவோடு விளையாடுவதென மகிழ்வுடன் இருந்தாள். 

லேகா ஓர் நாள் சிந்துவிடம் பேட் டச் குட் டச் பற்றி கூறிக்கொண்டிருக்க, சிந்து உடனே ” அப்ப வேலு மாமா என்ன 

பேட் டச் பண்றாரா அத்து ” அப்பாவியாய் கேட்க, ஓர் நிமிடம் அதிர்ந்து சிலை போல் நின்ற லேகா ” எ … என்ன 

பாப்பா சொல்ற ” தொண்டை அடைக்க விழி கலங்க கேட்டாள். இதுவரை வேலு தன்னிடம் நடந்துக்கொண்ட 

முறையை பற்றி சிந்து கூற கூற தலையில் இடி விழுந்தது போல் கீழே சரிந்து உட்கார்ந்தாள். அவ்வாறே இரவு 

வரை இருந்தவளுக்கு சிந்துவின் மாற்றம் பற்றி உமா கூறியது, அடிக்கடி வேலு உமா வீட்டிற்கு செல்வது 

எதனாலென்று இப்பொழுது புரிந்தது.  

கலங்கிய கண்களை அழுத்தி துடைத்து மனதை திடப்படுத்தி சிந்துவை காண சென்றாள். உமா இரவு உணவு 

செய்துக் கொண்டிருக்க சிந்துவிடம் வேறு விசயங்களை பற்றி பொதுவாய் காமெடியுடன் பேசிவிட்டு இரவு 

உணவையும் அங்கேயே உண்டாள். ” வேலு எப்ப ஊருக்கு வரான் லேகா ” பாத்திரம் கழுவியவாறு 

சமையலறையில் இருந்து உமா கேட்க, வேலு என்ற பெயரை கேட்டாலே நடுங்கும் சிந்துவை கண்ட 

லேகாவிற்கு கண்கள் கலங்கியது ‘ இச்சிறு குழந்தையை இவ்வாறு துன்புறுத்தி இருக்கிறானே மனதாலும் 

உடலாலும் ‘ வெறியாய் வந்தது வேலு மேல். 

” இன்னைக்கி வந்துடுவேனு சொன்னாரு அண்ணி இந்நேரம் வந்துட்டு இருப்பாரு ” தன் மனதில் ஒரு 

முடிவெடுத்து அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றாள். ‘ ஒருவேளை சிந்து பொய் சொல்லி இருந்தா இல்லைன்னா 

தப்பா புரிஞ்சிக்கிட்டிருந்தா ‘ மனதில் ஏதேதோ எண்ணமும் கேள்வியும் தோன்றியவாறு இருக்க, தலையை 

பிடித்துக் கொண்டாள். 

வேலு அப்பொழுது வீட்டினுள் நுழைய எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அவனிடம் எப்பொழுதும் போல் 

பேசிவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருக்க, ” அவ்ளோ தூரம் இருந்து வந்தது அலுப்பா இருக்கு நா குளிச்சிட்டு 

வரேன் லேகா நீ சாப்பாடு எடுத்து வை ” கூறியவாறு துண்டுடன் குளியலறைக்குள் நுழைந்தான். போகும் அவனை 

வெறித்தவள் கண்களுக்கு அவனது மொபைல் தென்பட ஏதோ ஒரு உந்துதலில் அதனை இயக்கி பார்த்தாள். 

கேலரியினுள் சென்று பார்க்க தங்கள் இருவரின் படங்களும் சில அலுவல் சார்ந்த படங்களும் இருக்க, அதில் ஒரு 

ஃபோல்டர் மட்டும் வித்தியாசமாய் எஸ் என்ற ஒற்றை வார்த்தை கொண்டு இருக்க, ‘ எஸ் அப்டின்னா சிந்துவா ‘ 

மனதில் எதுவும் தப்பாய் இருக்க கூடாது என்ற வேண்டலுடன் அதனுள்ளே சென்று பார்க்க, கண்கள் சிவந்து உதடு 

துடிக்க இந்நொடியே தான் இறந்துவிட மாட்டோமா என்ற வேதனையுடன் தரையில் தடுமாறி விழுந்தாள். 

அதில் சிந்திசையின் படங்கள் இருந்தது. குளிக்கும் போது எடுத்தது, அவள் அங்கங்கள் தெரியும் மாறு எடுத்தது. 

இதிலே வேலுவின் எண்ணம் குணம் அனைத்தும் வெட்டவெளிச்சமாய் தெரிகிறது. சிறு குழந்தை என்றும் 

பாராமல் இச்செயலை புரியும் இம்மாதிரி மிருகங்கள் உயிரோடு இருப்பதே தவறு. காதல் கணவனின் 

இம்முகத்தை கண்டு துடித்தாள். துக்கம் தாளவில்லை ‘ காதலித்த பொழுது தன்னிடம் கண்ணியமாய் 

இருந்தவனா இவ்வாறு நடந்துகொண்டான் ‘ வாய்விட்டு கதறி அழவேண்டும் போல் இருந்தது. எதனால் 

வழிதவறி போனான். தனக்கு தாய்மை வரம் இல்லாது போன பொழுது கூட ஆறுதலாய் துணையாய் இருந்தானே, 

என்னை தவிர வேறு பெண்ணை என் கண்கள் பாராதென்று கூறுவானே எல்லாம் நடிப்பு முகம் அழுதழுது சிவந்து 

போனது. மகள் வயதுடையவளிடம் என்ன காரியம் செய்தான் அக்குழந்தை முகத்தை கண்டு எப்படி இம்மாதிரி 

கேடுகெட்ட எண்ணம் தோன்றியதோ. மாமா அத்தை என்று அன்பாய் அழைப்பாளே அச்சிறு பெண்ணை 

துன்புறுத்தி இருக்கிறானே. இதை உமா அண்ணி அறிந்தால் இவனின் செயலை எண்ணியே உயிரை 

விட்டுவிடுவாரே. இவனோடு வாழ்ந்ததை எண்ணி அருவெறுத்தாள். 

அவனிடம் பேசி சண்டையிட கூட விருப்பம் இல்லை அவளுக்கு. தீர்க்கமாய் ஒரு முடிவுடன் எழுந்து 

கைபேசியிலுள்ள இசையின் அனைத்து படங்களையும் வீடியோக்களையும் மொத்தமாய் அழித்து விட்டு 

கைபேசியையும் உடைத்து வீட்டின் வெளியே சென்று சாக்கடை தண்ணீரில் போட்டு விட்டு அங்குள்ள மருந்துக் 

கடையில் பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். அக்கடைக்காரன் எதற்கென்று கேட்டதற்கும் 

நம்பும்படி காரணம் கூறி வாங்கிக்கொண்டாள்.  

குளித்து முடித்து வந்தவனிடம் எதுவும் பேசாமல் பேசப் பிடிக்காமல் பூச்சி மருந்து கலந்த சாப்பாட்டை 

பரிமாறினாள். ” என்ன லேகா ஒரு மாறி இருக்க முகம் லாம் சிவந்து இருக்கு உடம்பு சரியில்லையா ” 

அனுசரணையாய் கேட்டு நெற்றியில் கைவைக்க முயல, உடனே விலகி ” கொஞ்சம் தலைவலி அதான் 

காலைக்குள்ள எல்லாம் சரியாகிடும் ‍”   

” முன்னாடியே சொல்ல மாட்டியா மாத்திரை வாங்கி வந்துருப்பேன்ல ” 

” வாங்கிட்டேன் சாப்டுங்க ” 

” நீயும் வா சேர்ந்து சாப்பிடலாம் ” கைபிடித்து அமரவைத்து பரிமாறினான். ‘ கணவன் மனைவி என்ற உறவு வேறு 

உடல் மனதென்று பிரிக்க முடியாது இருவரும் ஒருவரே சரிபாதியே, கணவன் செய்யும் தவறுக்கு மனைவியும் 

தண்டனை அனுப்பவிக்க வேண்டும் அதுமட்டுமின்றி அவன் காதல் எப்படியோ என் காதல் உண்மை, தவறு 

செய்தவன் அவனை கொன்றாலும் அவனில்லாமல் தன்னால் வாழமுடியாது ‘ அவனைக் கண்டு மனதினுள் பேசி 

விரக்தி சிரிப்புடன் அதே விஷத்தை தானும் உண்டாள் தலைகுனிந்து கண்களில் கண்ணீரோடு.  

விடியல் வேலு லேகா இறந்த செய்தியுடன் விடிய, உமா மிகவும் உடைந்து போனார். சொந்த தம்பி போல் 

துணையாய் இருந்தவன், நேற்று வரை தன் முன்னே சிரித்து பேசியவள் இன்று பிணமாய் காட்சியளிக்க அவர் 

கதறிய கதறலில் சுற்றியுள்ளோர் அனைவருக்குமே கண் கலங்கியது. சிந்திசைக்கோ நடப்பதை நம்ப 

முடியவில்லை அழுகை எல்லையை கடந்தது. அவ்விருவரின் மரணம் கொலையா தற்கொலையா என்ற 

சந்தேகத்தில் போஸ்ட் மாடம் செய்ய காவல் துறையினர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, தற்கொலை 

தான் என்று முடிவானதும் அவர்களின் சொந்தங்களிடம் பிணத்தை ஒப்படைத்தனர். தலை உடம்பு அனைத்தும் 

வெள்ளை துணியால் மூடி இருக்க அவர்கள் வழக்கப்படி மண்ணில் அடக்கம் செய்தனர். 

மருந்துக் கடைக்காரன் லேகா நேற்று இரவு பூச்சி மருந்து வாங்கினாள் என்றும் கேட்டதற்கு வேறு காரணம் கூறி 

சென்றுவிட்டாளென்றும் கூற, உமாவிற்கு தலையே சுற்றியது. என்ன பிரச்சினையாய் இருக்கும் இருவரும் 

காதலுடனும் புரிதலுடனும் வாழ்ந்தனரே. தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன நடந்திருக்குமென்று 

யோசித்து யோசித்து பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. இதில் மனதளவில் பாதித்தது சிந்திசையே. எதனால் 

லேகா அத்து தன்னைவிட்டு சென்றாள், நேற்று தன்னுடன் விளையாடி அரட்டை அடித்தவள் இனி என்றும் 

வரமாட்டாளா. நினைக்கும் போது அழுகை வந்தது, உமாவின் மடியில் படுத்து அழுதழுது அவ்வாறே தூங்கி 

விட்டாள். நாட்கள் செல்ல வேலு லேகா நினைவில் உமாவினால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இசையும் 

லேகாவை நினைத்து அழுதவாறே இருக்க, இவ்விடத்தை விட்டு செல்ல முடிவெடுத்தார். அதே ஊரிலுள்ள வேறு 

ஏரியாவில் வீடு பார்த்து அங்கு குடியேறினர்.   

வளர வளர தனக்கு நடந்தது அதனை அறிந்தே லேகா அம்முடிவை எடுத்துள்ளாள் என்பதெல்லாம் இசைக்கு 

புரிந்தது. அதிலிருந்து ஆண்கள் என்றால் ஒரு வெறுப்பு அவர்களை ஓர் எல்லையிலேயே நிறுத்தி பழகுவாள். 

பழைய நினைவுகளில் மூழ்கிய இசையை தோள்தொட்டு நிகழ்காலத்திற்கு கொண்டு வந்த சரிதா ” அப்படி எந்த 

கோட்டையை பிடிக்க யோசிச்சுட்டு இருக்க ட்ரஸ் கூட மாத்தாம ”  

இன்று நடந்ததை சரிதாவிடம் கூறி ” எனக்கு நடந்தது தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சுனு 

சொல்ற மாறி பெருசா எதும் தப்பு நடக்கல அதை நடக்க விடாம பண்ண தன் உயிரையும் மாய்த்துக்கிட்டா என் 

அத்து ” அதரங்கள் துடிக்க கண்ணீரோடு உரைத்து ” என்னை மாறி எத்தனை குழந்தைக்கு இப்டி நடந்ததோ 

நடக்குதோ தெரியலை …. பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் இம்மாதிரி பாலியல் தொல்லைகள் 

நடக்குது. அந்த மாறி மிருகங்களை லாம் துடிக்க துடிக்க கொல்லனும். பக்கத்துவீட்டுகாரங்க, சொந்தக்காரங்க, 

பேருந்துல, கோவில்லைனு எல்லா இடங்களிலும் இந்த கொடுமை நடக்குது, காதலுங்குற பேர்ல தப்புகள் பல 

நடக்குது. சமூக வலைத்தளங்களிலும் இம்மாதிரி தொல்லைகள் நடக்குது ” அழுகையில் சிவந்த நேத்திரங்கள் 

இரண்டும் இப்பொழுது கோபத்தில் செக்கச்செவேலென சிவந்துக் காணப்பட்டது.  

” இந்த மாறி தப்பெல்லாம் குறைய கடுமையான தண்டனைகளை விதிக்கனும் ….. தப்பு செய்றவன் எவனா 

இருந்தாலும் உடனே தண்டிக்க படனும் ….. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நற்குணங்களை சொல்லி 

வளர்க்கனும் எந்த சூழ்நிலையிலும் தப்பான வழியில போகாம பாத்துக்கணும் …. பெண்பிள்ளைகளை விட 

ஆண்பிள்ளைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லனும், பெண்களிடம் எப்படி பழகனும்னு சொல்லி தரனும் ….. 

தப்பான எண்ணத்தோட யாரையாவது பார்க்கும்போது அந்த இடத்துல தன் தாய், தங்கை, தம்பி, மகள், மகனை 

நினைத்துப் பார்த்தா தப்பு செய்ய மாட்டாங்க தன்னையே கேவலமா நினைப்பாங்க அதையும் மீறி தப்பு செய்ற 

நாய்களை உயிரோடவே விடக் கூடாது ‍” மனதில் உள்ள கோபம் ஆதங்கம் அனைத்தையும் சரிதாவிடம் 

வாய்மொழியாய் கூறினாள் சிந்திசை. 

தண்ணீரை கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தி ” உன் கோபம் நியாயம் தான்டி இங்க அவங்கவங்க மனசு வச்சா 

தான் குற்றங்கள் குறையும் நம்மால் முடிந்த நல்லதை செய்வோம் ” ஆறுதலாய் கைப்பற்றி கூறினாள் சரிதா. 

ஏழு வருடங்களுக்கு பிறகு: 

” அம்மா நா பாட்டி கூட கராத்தே பயிற்சிக்கு போயிட்டு வரேன் ” கண்ணத்தை எச்சில் படுத்திவிட்டு தன் பாட்டி 

உமாவோடு குதித்து கொண்டு சென்றாள் சிந்திசையின் புதல்வி இளந்தென்றல். போகும் மகளை ரசித்தவாறு 

நிற்கும் மனைவியிடம் ” பொண்ணோட அப்பாவையும் கொஞ்சம் ரசிக்குறது ” இடையை வளைத்து தன்னுடன் 

நெருக்கியவாறு கூறினான் மதியூரன். 

கைகளை அவன் கழுத்தில் சுற்றி போட்டு ” அப்டி ரசிச்சதால தான் பொண்ணே பொறந்தா ” நாணமாய் மொழிந்த 

மனைவியை ஆசையாய் பார்த்து தன் உயரத்திற்கு தூக்கி இதழ் முத்தம் வைத்தவன் ” நீ என் வாழ்க்கைல 

வந்தோட்டி தான்டி வாழ்க்கையே சந்தோஷமா இருக்கு அதும் தென்றல் குட்டி வந்ததும் முழுமை அடைஞ்ச மாறி 

இருக்கு ” நிறைவாய் சிரித்தான். 

” அப்படி பார்த்தா நீங்க தான் என் வாழ்க்கைல வந்து காதல்னா என்னனு உணர்த்தினீங்க அதும் ஆண்கள் மேல 

இருக்க வெறுப்பை உடைச்சு என் மனசுக்குள்ள சோஃபா போட்டு உட்கார்ந்துட்டீங்க ” சுழிக்கும் உதட்டை கவ்வி 

ருசித்து ” தென்றல் குட்டிக்கு தம்பி பாப்பா வேணுமாம் என் பொண்ணு கேட்டு முடியாதுனு சொல்லலாமா ஸோ 

கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுடி பொண்டாட்டி ” மறுபடியும் முத்தம் வைத்து இதழ் பிரியாமலே மாடிபடி ஏறி 

தங்கள் அறைக்கு இசையை தூக்கி சென்றான் இசையின் மதி

*******************

Exit mobile version