கடைசி சினிமா -உதயா சக்கரவர்த்தி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 94 – கடைசி சினிமா -உதயா சக்கரவர்த்தி

ஹெட்போனில் அதிகச் சத்தமாய் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த கதிருக்குத் தன் எதிரில் வந்த அம்மாவின் வாயசைப்பைப் பார்த்து அவள் கூறுவதைப் புரிந்துகொள்ளமுடிவில்லை.

ஹெட்போனைக் கழற்றினான். “அவர சினிமாவுக்கு கூட்டிப்போடா” என்றாள் அம்மா.

அம்மாவை முறைப்பது போலப்பார்த்தான்.

“என்னடா மொறைக்கிற, தோசக்கரண்டிய காய வச்சு இழுத்து விட்ருவேன்” என்று நகர்ந்தாள். கதிர் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறான் என்பதைப்பற்றியெல்லாம் அம்மாவுக்குக் கவலையில்லை.

மொபைலைப் படுக்கைமேல் எறிந்துவிட்டு ஹாலுக்கு வந்தான் கதிர். டெட்டாலும் மருந்துகளும் கலந்த நாற்றம் மூக்கில் ஏறியது. அந்த நாற்றத்தை மறைக்க தூவப்பட்ட பவுடரின் வாசம் மிக மெலிதாய் வீசிக்கொண்டிருந்தது. நடமாட்டம் குறைந்த வயதானதொரு மனிதனின் மெல்லிய வீச்சமும் அதில் கலந்திருந்தது. சிங்காரம் படுத்தப் படுக்கையாவதற்கு முதல் நிலையிலிருந்தார். ஹாலின் நடுவிலிருக்கும் ஈஸிச் சேரில் கண்களை மூடியிருந்தார். எப்போதும் ஹாலின் ஓரத்திலிருக்கும் கட்டிலில்தான் படுத்திருப்பார். ஏதோ ஒரு பக்கம் புரண்டுகொண்டிருப்பார். தூக்கத்திலும், விழிப்பிலும் கண்கள் மூடித்தானிருக்கும். லேசான குறட்டைதான் அவரது தூக்கத்துக்கும் விழிப்புக்குமான வேறுபாடுகள்.

தாத்தாவைப் பார்த்துப் பரிதாபத்திற்கு பதிலாகக் கோபமே வந்தது. புதிதாய்ப் பார்ப்பவர்களுக்குத்தான் பரிதாபமெல்லாம். பிரபு அதற்குள்ளேயே இருப்பதால் பரிதாபத்தைக் கடந்து வெறுப்பும், அலுப்புமே மிஞ்சியிருந்தது.

பிரபுவுக்கு நினைவுத் தெரிந்து சிங்காரம் அவனைத் தூக்கி கொஞ்சியதுகூட இல்லை.  சாந்திப் பாட்டி இறந்தபிறகு அவரது இறுக்கம் மேலும் கூடியது. பேசுவதுகூட குறைந்தது. எப்போதாவது அவரது நண்பர்கள் வீட்டுக்கு வரும்போது “இந்த வீடும், பென்சன் பணமும் இல்லைன்னா, நாய்கூட என்ன சீண்டாது” என்பார். அப்போது தண்ணீர் குடிப்பதுபோல அம்மாவைப் பார்க்கப் போவான் பிரபு. அம்மாவின் கண்கள் கலங்கியிருக்கும். அடுப்படியிலிருப்பதால் கண் கலங்கியதற்குக் காரணம் சொல்ல வேண்டியதில்லை. அப்போது பிரபுவுக்குத் தன் அப்பா மேல்தான் கோபம் வரும்.

அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸர். அவர் சம்பளம் சாப்பாட்டுக்கே சரியாய் போய்விடும்.  கொடிபோலப் தாத்தாவைப் பற்றிக் கொண்டிருந்த அப்பாவை நினைத்தபோதெல்லாம் பரிதாபமும், கோபமும் வந்திடும்.

சிலநாட்களாகத் தாத்தாவைப் பார்த்துக்கொள்ள நிரந்தரமாக யாராவது வீட்டிலிருக்க வேண்டியிருந்தது. விஜி மாமாவின் பெண்ணுக்கு நிகழ்ச்சி வைத்தபோது அவசரங்களில் ஆள்மாற்றிப் பார்க்கும் சித்தப்பாகூட, ஏதோ காரணத்தால் வரமுடியாதெனக்கூறிவிட்டார்.

வேறுவழியின்றி அப்பா மட்டும் நிகழ்ச்சியில் தலைகாட்டிவிட்டு வந்தார். அன்றுகூட வீட்டில் சண்டை. “உங்க வீட்டு ஆளுங்களுக்கு நான் மனுசனா தெரியலையா, எல்லாரும் உன்னையே கேக்கறானுக” எனக் காரணமின்றிப் பொறிந்தார். அம்மா அழுதாள். அம்மாவை அப்பா திட்டியபோதே அப்பாவிடம் சண்டை போடவேண்டுமென்று தோன்றியது. அவருக்கு எதிராக மனதி்ற்குள் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான். ஆனால் அந்த வார்த்தைகள் வெளியே கேட்கவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது. அது பயம் என்பதை அவனது மனம் ஒத்துக்கொள்ளவில்லை. அன்றிரவு கதிர் தூங்கவில்லை. 

அடுத்தநாள் காலை “அவரு லூசும்மா, உங்க வீட்டு பங்சன்ல உன்னையதானே கேப்பாங்க” என்று அம்மாவுக்காகத் தானிருப்பதைக் காட்ட நினைத்தான்.

“அகராதி பேசினா வாயக் கிழிச்சு உப்பு தடவிடுவேன்” என்ற அம்மாவைப் புரியாமல் பார்த்தான்.

இதைத்தான் அப்பா செய்திருக்கிறார். தாத்தாமேல் காட்ட இயலாத கோபத்தை அம்மாமேல் காட்டியிருக்கிறார். அதற்குப் பிறகு அவர்கள் சண்டைகளைப் பெரிதுபடுத்துவதில்லை.

அப்பாவுக்கு ஞாயிறு விடுமுறை கிடையாது. சுழற்சி முறையில்தான் வார விடுமுறை கிடைக்கும். தாத்தாவை மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை சினிமாவுக்கு அழைத்துப் போவதென்பது பழக்கமாகியிருந்தது. இதற்கும் அப்பாதான் காரணம். தாத்தாவை டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது ஆர்வக்கோளாறில் “அப்பாவ வெளில கூட்டிப் போலாமா” என்றாபோது.

“ஏங்க அவருக்கென்ன, ஒழுங்கா மெடிசன்ஸ் எடுத்துகிட்டா போதும், வாரம் ஒரு சினிமாவுக்குக்கூடப் போலாம்” என்றார். இதை டாக்டர் பேச்சுக்காகத்தான் சொல்லியிருப்பார். ஆனால் தாத்தா தன் மருத்தவ முறைகளில் அதையும் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டார். இயல்பிலேயே தாத்தாவுக்குச் சினிமா பிடிக்கும்தான், சனிக்கிழமைகளில் சினிமாவுக்கு செல்வதை வழக்கமாகவே வைத்திருந்தார்,  உடல்நிலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பழக்கம் டாக்டரின் வழியாக மீண்டும் தொடங்கியது.

ஊருக்குச் செல்லவேண்டுமென்றால் அதற்காகப் புடவை, நகைகளைத் தாயர்படுத்துதைப் போல, சினிமாவுக்குப் போகத் தாத்தா தன்னைத் தயார் படுத்திக்கொள்வார். முதல்நாளே சாலூன்கடைக்கு சென்று  முடிதிருத்தம் செய்து கொள்வார். அப்பாதான் அழைத்துச் செல்வார். சனிக்கிழமை காலைத் தாத்தா சிரமப்பட்டாவது குளித்துவிடுவார். அவர் கிளம்புவதுதே ஒரு சினிமா போலத்தான் இருக்கும். சனிக்கிழமை அப்பா எப்படியேனும் விடுப்பு எடுத்துவிடுவார். ஒரு ஆட்டோ பிடித்துத் தாத்தாவைச் சினிமாவுக்கு அழைத்துச் சென்று திரும்ப வருவார்.இந்தவாரம் அப்பாவுக்கு விடுமுறையில்லை.   ஈஸிசேரில் கண்மூடி அமர்ந்திருந்தார் தாத்தா.

“தாத்தா போலாமா” என்றான்.

“ம்ம், ஆட்டோ வந்துடுச்சா?” என்றார்.

கதிர் ஆட்டோவுக்குப் போன் செய்தான். அம்மா கிச்சனிலிருந்து அழைத்தாள்.

“இந்தா” என இருநூறுரூவாயைக் கொடுத்து “நீ வச்சுக்கடா, கோவிச்சுக்காத எல்லாம் கொஞ்சநாளைக்குதானே” என்றாள். கொஞ்சநாளில் தாத்தா செத்துவிடுவாரென நம்பினாள் அம்மா.

காலைக்காட்சி என்பதால் அவ்வளவாகக் கூட்டமில்லை. தியேட்டரை அடைந்ததும் தாத்தா அவராகவே குச்சியை ஊன்றி ஆட்டோவிலிருந்து கீழே இறங்கினார். “ஒரு மணிக்கு வந்திடுங்கண்ணா” என்றான் ஆட்டோக்காரரிடம் கதிர்.

போஸ்டரைப் பார்த்த தாத்தா, “இவன் நடிக்க வந்தப்போ யார்ரா இவனையெல்லாம் ஹீரோவாப் போட்டுப் படம் எடுத்தான்னு திட்டிட்டு இருந்தேன், இன்னிக்கு பெரிய ஆளாகிட்டான்” எனச் சொன்னார். தாத்தா இப்படிப் பேசிப் பார்த்ததில்லை என்பதால் புதிதாக இருந்தது. “ஆமா தாத்தா ஹாலிவுட்லகூட நடிச்சிருக்கான்” என்றான். “தெரியும்டா, நம்மூர்ல இருந்து ஹாலிவுட்ல நடிக்கிறதெல்லாம் ஒன்னும் புதுசில்ல, எல்லா பயலும் அங்க போயி ஜூனியர் ஆர்டிஸ்டா நடிச்சிடுவானுக, ஹாலிவுட்ல நடிச்சோம்னு ஒரு பெருமதான்” என்றார்.

கதிருக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. “டிக்கெட் எடுத்துட்டு வரேன்” என நகர்ந்தான் கதிர்.

தியேட்டரில் அவர்களுக்கான இடத்தில் அமர்ந்தார்கள். “அப்போலாம் வாரவாரம் சனிக்கிழமை, நல்ல படமோ, உருப்படாத படமோ தியேட்டருக்கு வந்துடுவோம், நானும் என்னோட கொலிக்ஸும்” தாத்தா வேறொருவாறாக மாறிப் பேசிக்கொண்டிருப்பதுபோலிருந்தது.

“ம்ம்”

“அந்தப் படத்தப் பத்திதான் அடுத்த ஒரு வாரம் பேச்சு”

“ஓஹோ”

“உனக்கு அதோட பீலிங்ஸே தெரியாது?”

“அப்டிலாம் இல்ல தாத்தா, இப்பவும் நாங்க படம் பாத்தா அதப்பத்தி டிஸ்கஸெல்லாம் பண்ணுவோம்”

“கிழிச்சிங்க, எல்லாரும் பக்கத்து பக்கத்துல இருந்தாக்கூட மொபைல நோண்டிட்டுதானே இருப்பிங்க, எங்கடா பேசறிங்க”

கதிர் எரிச்சலடைந்தாலும், தாத்தாவோடு பேசுவது சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

“ஒரு படம் வந்தா அதோட மொத சீன்ல இருந்து என்டு கார்டு வரைக்கும் என்னா ஏதுன்னு அலசி, பேசி…. ம்ம், சினிமான்னா சினிமா இல்லடா இது ஒரு ஆர்ட், ரசிக்கத் தெரிஞ்சவனுக்குதான் அது புரியும்”.

“ம்ம், நம்ம வீட்டுல டிவிலயே பாக்கலாம்ல தாத்தா”

“டேய் குழந்தைக்கு வாய்ல சோத்த திணிக்கிற மாதிரிடா அது, எனக்குப் புடிச்சதோ புடிக்கலையோ நான் பாத்தாகனும் அத”

“அப்படி இல்ல தாத்தா, யூட்யூப், OTTல நமக்குப் புடிச்ச படத்த பாக்கலாம்,  தேவையில்லாதத பாக்கத் தேவையில்ல ஓட்டி ஓட்டி பாத்துக்கலாம்”

“அடப் போடா அப்படிப்பாத்தா நல்லாவா இருக்கும், அதுக்குனு ஒரு நேரம் ஒதுக்கி, நல்லா இருக்கோ இல்லையோ முழுசாப்பாக்கனும், அவன் நல்லா எடுக்கலனு சொன்னா, நீ அத எப்படி நல்லா எடுத்திருப்பனு யோசிக்கனும், அதான் சொன்னனே சினிமாவ அனுப்பவிக்கனும், அத சினிமாவாப் பாத்தா மட்டும்தான் அனுபவிக்க முடியும், நீ சொல்லூற மாதிரி யூட்யூப், OTTனு அதுக்குள்ளயே இருந்தா போரடிச்சிடும், இது எல்லாமே ஒரு அனுபவம், சினிமாவ பாக்கறதவிட அத பாக்கப்போறோங்கிற நினைப்புல அப்டியே ஜாலியா…..” எனும்போது விளக்குகள் அணைந்தது. படம் திரையிடப்பட்டது. அதன் பின் தாத்தா பேசவில்லை. ஒரு சென்டிமென்ட் காட்சிக்குக் கண்களைத் துடைத்துக் கொண்டார். கதிருக்கு எல்லாமே விநோதமாக இருந்தது. இடைவேளை வந்தது. “பாப்கார்ன் வாங்கிட்டுவா” என்றார். “ஒன்னுக்கு வரலியா தாத்தா” என்றான். “இல்லப்பா” என்றார்.

பாப்கார்ன் வாங்கச் சென்றபோது மொபைல் அழைத்தது. அப்பா.

“என்னப்பா பண்ணுற?”

“பாப்கார்ன் வாங்க வந்தேன்”

“அவரு என்ன பண்ணுறாரு?”

“உள்ள இருக்காரு”

“பாத்து கவனம்”

“சரி”

தாத்தா தன்னிடம் இயல்பாகப் பேசியதைச் சொல்ல நினைத்தான். சொல்லவில்லை.

பாப்கார்னை இரண்டு மட்டும் எடுத்துக் கொண்டார் தாத்தா. ஆசைக்காகக் கேட்டிருக்கிறார். மீண்டும் சினிமாவில் மூழ்கிப்போனார். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெளியே வந்தபோது ஆட்டோ நின்றிருந்தது. “தாத்தா படம் நல்லா இருந்துச்சா” என்றான்.

“ம்ம்” என்றார் இறுக்கமாக.

“பாப்கார்ன் கேட்டிங்க, சாப்பிடல” என்றதற்கு மீண்டும் “ம்ம்” என்ற இறுக்கமான பதிலே வந்தது. கதிருக்குப் புரிந்தது. தாத்தாவின் நிஜ முகம் இதுதான். தாத்தாவின் இரண்டாவது முகத்தைக் கொஞ்ச நேரம் காட்டியிருந்தார் அவ்வளவே. தாத்தா மட்டுமா, தாத்தாமேல் காட்ட இயலாத கோபத்தை அம்மாமேல் காட்டும் அப்பாவும், அப்பாமேல் காட்ட முடியாத கோபத்தைத் தன்மேல் காட்டும் அம்மாவும்கூட இரண்டுமுகம் கொண்டிருக்கிறார்கள்.

ஏன்? கதிர் தன் நண்பர்களோடு இருக்கும்போதும், ஜெனியோடு இருக்கும்போதும் காட்டும் முகங்கள் வேறுதானே, சிந்தனையின் முடிவில் தாத்தாவின் இரண்டாம் முகமும் இயல்பாதனதே என முடிவெடுத்தான் கதிர்.

அன்றையநாளின் நிகழ்வுகளை அவன் யாரோடும் பகிர்ந்துகொள்ளவில்லை. அது தாத்தாவின் அந்தரங்கம் எனத்தோன்றியது. ஆனால் அந்த இரண்டாம் முகத்தை மீண்டும் காணவேண்டும்போலிருந்தது கதிருக்கு. அதற்கு அடுத்தமுறை தாத்தாவைத் தானே சினிமாவிற்கு அழைத்துப்போக வேண்டும் என நினைத்திருந்தான்.

இதற்கெல்லாம் அவசியமின்றி சினிமாவிற்கு சென்று வந்த இரண்டாம்நாள் தாத்தா இறந்துபோயிருந்தார். அவரது இழப்பு கதிரைப் பாதிக்கத்தான் செய்தது. அன்றைய சினிமா அனுபவம் அவரோடு நெருக்கத்தை ஏற்படுத்தியது. தன்னை நம்பித் தனது அந்தரங்கத்தை சொன்ன நண்பனின் மேல் வரும் நெருக்கம் தாத்தாவின் மேல் வந்தது.

அப்பாவும், சித்தப்பாவும் வாசலில் நின்று துக்கம் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.

அம்மா ஒரு மூலையில் அழதுகொண்டிருந்தாள் கதிரைப் பார்த்து “கடைசி கடைசினு அவர சினிமாவுக்கு கூட்டிட்டு போனியே கதிரு” என இவனைப் பார்த்துக் கைநீட்டி அழுதாள். கதிருக்கு என்னவோ தன் மேல் பழிபோடுவதுபோலிருந்தது. அப்படியே அவளது அழுகை அடங்கியது, விசும்பிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தான்,  அன்று அம்மா “எல்லாம் கொஞ்சநாளைக்குதானே” என்றது நினைவில் வந்தது. இப்போது அழுவதுகூட அம்மாவின் மூன்றவது முகமோ எனத்தோன்றியது கதிருக்கு.

யாருக்கு எப்படியோ அம்மாவிற்கு இது ஒருவகை விடுதலைதான். மீண்டும் அம்மாவைப் பார்த்தான். அந்தத் துக்கத்திலும் அவளது முகத்தில் கொஞ்சம் நிம்மதி தெரிவதுபோல இருந்தது.

Exit mobile version